அபூ அப்தில்லாஹ்
ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆதார பூர்வமான ஹதீஃத்கள் :
1. ஸைத் பின் ஸாபித்(ரழி) கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி(ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து, உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங் கள்! கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும் என்று கூறினார்கள். புகாரீ(ர.அ)731
2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ரமழான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள் :
யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!
இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள் :
(ரமழானின் இரவுத் தொர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள் அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட் சிக் காலத்திலும் உமர்(ரழி) அவர்களுடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது! என்று இமாம் இப்னு ´ஹாப் ஹுஹரீ (ரஹ்) கூறுகிறார்கள். புகாரீ (ரஅ) 2008 & 2009
அப்துர் ரஹ்மான் பின் அப்துல் காரீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான் உமர்(ரழி) அவர்களுடன் ரமழான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்த னர். சிலரைப் பின்பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரழி) அவர்கள் இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே! என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅபு(ரழி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கி விட்டுப் பின்னர் (இரவின் பிற் பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும் என்று கூறினார்கள். மக்கள் இரவில் முற்பகுதியில் தொழுது வந்தனர்.
இரவில் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள். புகாரீ(ர.அ) 2010
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் ரமழானில் (இரவுத்) தொழுகை தொழுதார்கள்!
நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள்; (மறுநாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளி வாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுபஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, நான் இறைவனைப் போற்றிப் புகழந்து கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன் எனக் கூறினார்கள்.
நிலைமை இப்படி இருக்க, (ரமழானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்! என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். புகாரீ:(ரஅ) 2012
அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறிய தாவது :
நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமழானில் எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா(ரழி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர், ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழ மாட்டார்கள். நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்,
அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறினார்.
மேலும் ஆயிஷா(ரழி) கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதரே! வித்ரு தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே? (உளூ நீங்கி விடுமே) என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆயிஷாவே! என் கண்கள்தான் உறங்குகின்றன, என் உள்ளம் உறங்குவதில்லை எனக் கூறினார்கள். புகாரீ (ரஅ) 2013
இந்த ஹதீஃத்கள் அனைத்தும் இந்த மவ்லவிகளே சஹீஹ் என்று சிறப்பித்துச் சொல்லும் புகாரியில் எழுதப்பட்டுள்ளவையாகும். இவற்றில் நபி (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத இதர 11 மாதங்களிலும் 8+3=11 ரகாஅத்துக்களுக்கு மேல் தொழுததே இல்லை என்று உறுதிபட அறிய முடிகிறது. மேலும்அல்லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த (பார்க்க 52:48) இறுதித் தூதர் அவர்கள் ரமழான் மாதம் முழுவதும் தொழுததாகவோ, 20+3=23 ரகாஅத்துகள் தொழுததாகவோ இஷாவுக்குப் பின் முன்னிரவில் ஜமாஅத்தாகத் தொழ வைத்ததாகவோ எவ்வித ஆதாரபூர்வ மான ஹதீஃதும் இல்லவே இல்லை. அதற்கு மாறாக தங்கள் தங்கள் வீடுகளில் பின்னிரவில் 8+3=11 ரகா அத்துகள் தொழுது கொள்வதே சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளதை புகாரீ 731வது ஹதீஃது உறுதிப்படுத்துகிறது.
புகாரீ 2010 ஹதீஃதில் உமர்(ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் ரமழான் முன்னிரவில் இஷாவுக்குப் பின் பள்ளியில் தனித்தனியாகவும், சிறுசிறு ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தவர்களை உபை பின் கஅபு(ரழி) அவர்களுக்குப் பின் ஒரே ஜமாஅத்தாக ஆக்கியதோடு, இப்போது தொழு வதை விட உறங்கிவிட்டுப் பின்னர் இரவின் பிற் பகுதியில் தொழுவதே சிறப்பு எனத் தெளிவாக அறிவித்தும் உள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் நான்கு நாட்கள் பின்னிரவில் ரமழான் இரவுத் தொழுகையைத் தொழுததை ஆதாரமாகக் காட்டியும், உமர்(ரழி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் பள்ளியில் இஷாவுக்குப் பின்னர் தனித்தனியாகவும், சிறு சிறு ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தவர்களை ஒரே இமாமுக்கு பின் ஒரே ஜமாஅத்தாக ஆக்கியதையும் ஆதாரமாகக் காட்டி ரமழானில் பள்ளிகளில் இஷாவுக்குப் பின் தராவீஹ் என்ற பெயரால் 20+3=23 ரகாஅத்துகள் தொழுது வருகிறார்களே இதற்கு என்ன அர்த்தம்? ஒவ்வொரு இரண்டு ரகாஅத்திற்கும் இடையில் ராஹத்தாக உட்கார்ந்து துஆவான ஸலவாத் தைப புகழாகத் தவறாக நினைத்து பஜனை பாடுவதற்கு ஆதாரம் என்ன? ரமழான் இரவுத் தொழுகைக்கு தராவீஹ் எனப் பெயர் சூட்டியது யார்? ஜமாஅத்தாரிடம் பேரம் பேசி தொழ வைத்தற்காக பெருந்தொகை கூலி-சம்பளம் வாங்க ஆதாரம் என்ன?
பின் இரவில் நான்கு நாட்கள் தொழ வைத்த நபி(ஸல்) அவர்கள் அதற்காக மக்களிடம் கூலி- சம்பளம் வாங்கி வழிகாட்டினார்களா? இல்லையே! சிறு, சிறு ஜமாஅத்தாகத் தொழுதவர்களை ஒரே ஜமாஅத்தாக ஆக்கித் தொழவைக்க ஏற்பாடு செய்த உமர்(ரழி) தொழ வைத்தவருக்குக் கூலி-சம்பளம் மக்கள் கொடுக்க ஏற்பாடு செய்தார்களா? இல்லையே! அப்படியானால் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித்தராத, இம்மவ்லவிகளால் மட்டும் மறுமையில் பெரும் நன்மைகளை ஈட்டித் தரும் நற்செயல்கள் எனக் கூறிச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் 33:36 இறைக்கட்டளைப் படி பகிரங்கமான வழிகேடு, நாளை நரகில் கொண்டு சேர்க்கும் தீய செயல்கள் என்பதை அறியாத மூடர்களா இம்மவ்லவிகள்.
பகிரங்கமான வழிகேடுகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயம் இம்மவ்லவிகளுக்கு ஏன் ஏற்படுகிறது? கேவலம் ஒரு ஜான் வயிற்றை கொடிய ஹராமான வழிகளில் நிரப்ப முற்படுவது தானே இதற்குக் காரணம். அழிந்துபடும் அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் மோகம் கொண்டு பகிரங்க மான பித்அத்களை மார்க்கமாகக் கொண்டு 8+3=11 ரகாஅத்களை அதிகப்படுத்தி 20+3=23 ஆக்கி, அதிலும் ஒவ்வொரு இரண்டு, ரகாஅத்திற்கிடையிலும் ராஹத்தாக உட்கார்ந்து பஜனை பாடுவதும் எதற்காக? ஆம்! அப்படியானால்தான் அதிக நேரம் எடுத்து அதைக் காரணம் காட்டி ஜமாஅத்தாரிடம் பெருந்தொகை கூலியாகப் பெறலாம் என்ற எண்ணம் தானே காரணம்.
36:21, 2:41,42,44,174,175,176 இந்த குர்ஆன் வசனங்களோடு மேலும் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி எவ்வித நியாயமோ, உண்மையோ இன்றி வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகளை அல்லாஹ் குர்ஆன் வசனங்களை விட்டும் அவனது பல அத்தாட்சிகளை விட்டும் அவர்களால் விளங்க முடியாமல் திருப்பி விடுகிறான். குர்ஆன் வசனங்களை எடுத்து நேரடியாகக் காட்டினாலும் அதை நம்பி ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்று அவர்களை நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் தள்ளி ஜின் இன ஷைத்தானுக்குத் துணை போவதே இந்த மனித இன ஷைத்தான்களான (தாஃகூத்) இம் மவ்லவிகளின் இழிந்த வேலையாகும். தூய மார்க்கத்தைக் கொடிய ஹராமான வழியில் வயிற்றை நிரப்ப வழி வகை செய்யும் மதமாக்கி அதனால் பெருமை பேசும் அனைத்துப் பிரிவுகளின் அனைத்து மவ்லவிகளினதும் நிலை இதுதான்.