சொர்க்க தோழி மாத இதழ் ஆசிரியர் சா.அப்துர்ரஹீம்
தமிழக முஸ்லிம்களிடையே புரையோடிக் கிடந்த மூட நம்பிக்கைகளையும், அனாச்சாரங்களையும் முதன் முதலாக எடுத்துச் சொல்லி எச்சரித்தவர். ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடியுங்கள் என்று எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தபோது, குர்ஆனாகிய அல்லாஹ்வுடைய கயிற்றை எல்லோரும் ஒற்றுமையாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று ஆதாரத்துடன் விளக்கியவர். அவதூறுகளையும், எதிர்ப்பு களையும் காலடியில் போட்டு மிதித்தவர். குர்ஆனும், நபிவழியும் மட்டும்தான் இஸ்லாம் என்று முப்பது வருடங்களாக ஓங்கி ஒலித்தவர். சமாதி வழிபாடும், இயக்க வழிபாடும் சமமே என்று மூச்சுவிடாமல் எச்சரித்தவர். மூன்றாம் பிறையை முதல் பிறையாக்கி கொண்டிருந்த மடமைத்தனத்தை அடையாளம் காட்டியவர்.
அந்நஜாத்தை பத்திரிகையாக கருதாமல் சமுதாயத்தில் பிணைந்து கிடந்த சடங்குச் சங்கிலிகளை உடைத்து நொறுக்கிடும் கோடாரியாக பயன்படுத்தியவர். அபூ அப்தில்லாஹ் பெரம்பூருக்கு வருகிறார் என்பதற்காகவே எனக்கு நூற்றுக்கணக்கான கொடுமைகள் இழைக்கப்பட்டதென்றால், அவர் சந்தித்த கொடுமைகளை எண்ண முடியாது.
அபூ அப்தில்லாஹ் அவர்கள் உண்மையான தப்லீக்காரர். அவர் தனி நபராகவே போராடி உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிற தப்லீக் ஜமாஅத்தார்களை ஹதீஃத் நூல்களை படிக்க வைத்தவர். இன்று தப்லீக் ஜமாஅத்தில் ஏற்பட் டுள்ள சீர்திருத்தங்களுக்கு அபூ அப்தில்லாஹ் முக்கிய காரணம்.
அவர் பிரிவினைவாதியல்ல, முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதற்காக ஓடி ஓடி உழைத்தவர், அவர் பித்அத்வாதியல்ல, ஒன்பது பித்அத்களில் ஒரு சுன்னத் வீதம் காந்த மாய் பிணைந்து கிடந்ததை படாத பாடுபட்டு பிரித்தறிவித்தவர், அவர் பேச்சாளர் அல்ல, நாவால் மயக்கி குண்டர்களாகவோ, அடிமை களாகவோ, ரசிகர்களாவோ எவரையும் மாற்ற வில்லை. இந்த நூற்றாண்டின் சிறந்த சீர்திருத்த வாதி அவர் அழுகி நாற்றமெடுத்து கிடந்தவர் களை படிப்படியாக சீர்படுத்தி ஒழுங்குபடுத்தி யவர். அவர் குர்ஆன் வியாபாரி அல்ல, குர்ஆனை படியுங்கள், பொருளறிந்து படியுங் கள் என்று இறுதி மூச்சு வரை உபதேசித்தவர். அவர் திட்டியது திட்டல்ல, அது ஒரு தாயின் உள்ளுணர்வு, அதனால்தான் அவரிடம் திட்டு வாங்கிய ஏராளமானோர் அவருடைய ஜனா சாவுக்கு திரண்டு வந்தார்கள். அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஒருபோதும் தன்னை அறிஞர் என்று சொல்லிக் கொண்டதில்லை.
ஆனால் அவர் மிகச் சிறந்த சிந்தனையாளரா கவும், ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். அவர் குர்ஆனையும், சுன்னாவையும் அழகாக ஆய்வு செய்து முஸ்லிம் சமுதாயத்தின் முன்னோடியாய் இருந்தவர். பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற அவர், எல்லா ஜமாஅத்தார் களுக்கும் கண்டிப்பான ஆசிரியராய் திகழ்ந்தவர், அல்லாஹ்வுடைய அற்புதமான மார்க்கத்தை ஆளாளுக்கு குழப்பி வைத்திருந்த போது, இதுதான் இஸ்லாம்! என்று கம்பீரமாக தெளிவுபடுத்தியவர்.
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் தலை சிறந்தவர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் தான். அவரின் சிந்தனையும், செயல் விளக்கமும் வருங்கால சமுதாய மக்களுக்கு பெரும் பயன் அளிக்கும். கடந்த காலத்தில் எல்லா நல்லோர்களின் வாழ்விலும் இதுதான் நடந்தது.
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்வே! புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்லாஹ், அபூ அப்தில்லாஹ்வின் பாவங்களை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருளட்டும்.
***********************************************
அபூ அப்துல்லாஹ் பற்றி… சிராஜுல் ஹஸன்
இன்னாலில்லாஹி…
இரண்டு வரியில் மறைவுச் செய்தியை தெரிவித்து விட்டுக் கடந்து செல்லக் கூடிய ஆளுமை அல்ல அவர்.
இஸ்லாம் எனும் பெயரிலும் மார்க்கம் எனும் பெயரிலும் மக்கள் உருவாக்கி வைத்திருந்த அத்தனை மூடக் கருத்துக்களையும் எதிர்த்தவர்.
“”ஆத்திகச் சிந்தனையாளர்”’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு முஸ்லிம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த அநாச்சாரங்கள் அனைத்தையும் எதிர்த்துப் போராடியவர். எந்த ஒரு செய்தியையும் குர்ஆன், நபிமொழி ஆதாரம் இல்லாமல் துளியும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்.
முஸ்லிம் சமுதாயச் சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் மார்க்கத்தை முறையாக மக்களுக்கு எடுத்துச் சொல்லாத ஆலிம்கள்தான் என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் இறுதி வரை சொன்னவர்.
“”புரோகிதர்கள்” என்றே ஆலிம்களைக் கடுமை யாகச் சாடியவர். தவ்ஹீது இயக்கங்கள் தமிழகத்தில் காலூன்ற தொடக்க காலத்தில் அடியுரமாய் இருந்தவர்.
பின்னாளில் அதே தவ்ஹீத் இயக்கத்தை குறிப்பாக அறிஞர் பீ.ஜே. அவர்களை எந்தச் சமரசமும் இன்றி கடுமையாக எதிர்த்தவர்.
பிரிவினைப் பெயர்கள் அனைத்தையும் நீக்குங்கள் என்று முழங்கியவர்.
முஸ்லிம் எனும் ஒரே அடையாளம் நமக்குப் போதும் என்று வலியுறுத்தியவர்.
தமிழக ஆலிம்களில் பெரும்பாலோர் இவரைத் தங்களின் எதிரியாகவே கருதினர்.
தமக்கு வரும் எதிர்ப்புகள் குறித்தும் மிரட்டல் குறித்தும் சற்றும் அச்சமின்றி தம் கருத்தில் இறுதி வரை உறுதியாக இருந்தவர்.
அவர் பயன்படுத்தும் சில சொற்களை, சொல்லாடல்களை நாம் ஏற்றுக்கொள்ள வில்லை. பல நேரங்களில் கண்டித்தும் இருக்கிறோம் என்றாலும் சுயம்புவாக குர்ஆனையும், நபிமொழியையும் ஆய்வு செய்யும் அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மை பாராட்டுக்குரியது.
அபூ அப்தில்லாஹ்வின் பாவங்களை இறைவன் மன்னித்து, அவரைத் தன் நல்லடியார்கள் குழுவில் சேர்ப்பானாக. மறுமைப் பேறுகளை வாரி வழங்கு வானாக. அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.