விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2017 ஆகஸ்ட்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : புரோகிதர் ஒருவர் அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில், சுன்னத்தை பேணும் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறினார் அதற்கு அவர் கூறிய குற்றச்சாட்டு களும், அதற்கு நம் விளக்கமும்.

விளக்கம் :
முதல் குற்றச்சாட்டு :
“அவர் ஒரு பித்அத்வாதி”

(மார்க்கத்தில் இல்லாத நூதன அனாச்சாரங்களை செய்தவர் பித்அத்வாதியாக கருதப்படுவார்) காலமெல்லாம் பித்அத்களை மார்க்கமாக, மக்களிடம் அறிமுகம் செய்த புரோகிதர்களை அடையாளம் காட்டியதால் அவரும் “”பித்அத்”வாதியாக சேர்க்கப்பட்டார் போல் தெரிகிறது.

அபூ அப்தில்லாஹ் அவர்கள் கடைசியாக வெளியிட்ட ஜூலை 2017 நஜாத் இதழில் அட்டையை திறந்தவுடன் அவர் பதிவிட்ட முதல் வாக்கியமே “”முஸ்லிம்களே நடுநிலையோடு சிந்திப்பீர்! என்று கூறி “”பித்அத் அனைத் தும் வழிகேடு-நரகிற்கு இட்டுச் செல்லும்” என்று இஸ்லாம் கூறுகிறது. (பார்க்க:7:3, 33:36) என்றே சொல்கிறார்.

“”இல்லை அவைகளில் (பித்அத் ஹசனா) நல்ல பித்அத்களும் உண்டு. அவை வழி கேடல்ல” என்று தர்ஹா, தரீக்கா, மத்ஹபு மவ்லவிகள் சுய விளக்கம் தருகிறார்கள். பார்க்க. அந்நஜாத் ஜூலை, 2017 பக்கம் 2) என்று ஆலிம்களை சாடுவது தான் பித்அத் என்று அந்த புரோகிதர் நினைக்கிறார் போலும்.

அபூ அப்தில்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் புதிதாக எதையும் மார்க்கமாக்க வில்லை. அனாச்சாரங்களை மார்க்கமாக்கிய ஆலிம்களை கடுமையாக எதிர்த்தார் என்பதே உண்மை நிலை. ஆலிம்கள் கூறும் பித்னா பித்அத்களை மார்க்கமாக்காமல் எதிர்ப்பதால் அவர் பித்அத்வாதியாக புரோகிதர்களுக்கு தெரிகிறது.

இரண்டாம் குற்றச்சாட்டு :
“ஹதீஃத்களை விமர்சனம் செய்பவராக இருந்தார்.”
அபூ அப்தில்லாஹ் கூறுவது என்ன?
1200 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ் “உலில் அல்பாப்’ என்று கூறும் சில உண்மையான அறிஞர்கள், இந்த ஹதீஃதுகளை பெரும் முயற்சி செய்து தரம் பிரித்து தந்தார்கள். அதற்காக அவர்கள் கைக்கொண்ட முறை, நபித் தோழர்களுக்குப் பிறகு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் நபர்களின் அறிமுகம், நம்பகத்தன்மை, ஞாபகத்தன்மை பொய்யரா, கேட்ட நபித்தோழரை மறைத்துச் சொல்கிறாரா, யாரிடமிருந்து கேட்டதாக சொல்கிறாரோ அவரை சந்திக்கும் வாய்ப்பு இருந்ததா?

இப்படி பல கோணங்களில் விசாரித்தறிந்து, ஆய்ந்தறிந்து, ஹதீஃத்களை தரம் பிரித்து எழுதிப் பாதுகாத்தார்கள். இப்படி ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் தரமான, தரமற்ற நிலைகள் “அஸ்மாவுல் ரிஜால்” என்ற நூலில் பதிந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. (பார்க்க : அந்நஜாத், மே, 2017 பக்கம், 8)

அபூ அப்தில்லாஹ் அவர்களின் ஹதீஃத் விமர்சனம் “”அஸ்மாவுல் ரிஜாலில்” இமாம்கள் தரம் பிரித்த அடிப்படையில் எடுத்துச் சொன்னதே தவிர, தாமாக எந்த ஒரு ஹதீஃதையும் லயீப் என்றோ, ஸஹீஹ் என்றோ தரம் பிரித்ததில்லை.

மூன்றாம் குற்றச்சாட்டு :
“ஸஹீஹான ஹதீஃத்களை மறுப்பவராக இருந்தார்”
அபூ அப்தில்லாஹ் அவர்கள் என்றுமே சொந்த சிந்தனையை ஹதீஃத்களில் புகுத்திய தில்லை. முன் சென்ற இமாம்கள் ஆய்வு செய்து அளித்த “”அஸ்மாவுல் ரிஜாலில்” கூறியதைத் தான் எடுத்துச் சொல்லுவார். எந்த ஒரு ஹதீஃதையும் லயீப், ஸஹீஹ் என்று தான் இஷ் டத்திற்கு கூறுவதில்லை. ஆய்வு செய்து அன்றைய இமாம்கள் கூறிய விமர்சனத்தை எடுத்துச் சொல்வது எப்படி தவறாகும்?

அவர் எந்த ஸஹீஹான ஹதீஃத்களை மறுத்தார்? ஆதாரம் சொல்ல முடியுமா? லயீப் ஆன ஹதீஃத்களை ஸஹீஹ் என்று மெளலவிகள் கூறும்போது, அதை “”அஸ்மாவில் ரிஜால்”படி அது தவறு என்று நிரூபிப்பதை ஹதீஃத் மறுப்பு என்று கூற முடியுமா?

நான்காவது குற்றச்சாட்டு :
“எல்லா மார்க்க அறிஞர்களையும் கடுமை யாக விமர்சனம் செய்தார். மார்க்க கல்வி கற் றோரையும், கல்வியாளர்களையும் புரோகிதர் என்று கூறி வந்தார்.”
“”மார்க்கத்தை சொல்வதற்கு கூலி வாங்கக் கூடாது” என்று அல்லாஹ் சொல்கிறான். (10:72, 11:29, 11:51) இதுபோன்ற வசனங்கள் ஏராளம் உண்டு. இந்த வசனங்களுக்கு மாறாக, கூலிக்கு மார்க்கம் பேசும் ஆலிம்களை புரோகிதர்கள் என்று அழைப்பதில் என்ன தவறு உள்ளது? அல்லாஹ்விடம் வாங்க வேண்டிய கூலியை, அவாம் முஸ்லிம்களிடம் வாங்கும் புரோகிதர்களுக்கு கோபம் வருவது இயற்கை தான். ஆனால் அல்லாஹ்வை அஞ்சும் உண்மையான ஆலிம்கள் மக்களிடம் கை நீட்ட மாட்டார்கள். இந்த புரோகிதர் அல்லாஹ்வுக்கு அஞ்சும் ஆலிமா? இல்லை ஐந்துக்கும், பத்துக்கும் ஆளாய் பறக்கும் கூலி பேசும் ஆலிமா?

ஐந்தாவது குற்றச்சாட்டு :
“பிறை விசயத்தில் ஹதீஃத்கள் தாம், பிரிவுக்கும், பிளவுக்கும் காரணம் என்று கூறி வந்தார்”.
அபூ அப்தில்லாஹ் அவர்களின் மீது இட்டுக் கட்டி கூறப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். உண்மையில் பிறை விசயத்தில் மக்களைப் பிரித்து கூறு போடுவது தரீக்கா, தக்லீது மற்றும் தவ்ஹீது ஆலிம்களே!

சூரியனும், சந்திரனும், துல்லிய கணக்கின் படி, அல்லாஹ்வின் அனுமதியுடன் சுழல்கின்றன என்று கூறும் பல குர்ஆன் வசனங்களை புறக்கணித்துவிட்டு, நபி(ஸல்) அவர்கள், புறக் கண்ணால் பார்த்து பிறையை தீர்மானிக்கச் சொன்னதாக ஒருபொய்யை சொல்லி, சுமார் 1200 வருடங்களாக போதித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். உண்மையில் பிறை விசயத்தில் மக்களை பிளவு படுத்துவது, தக்லீது, தவ்ஹீது மெளலவிகளே!

நபி(ஸல்) அவர்கள், கண்ணுக்குத் தெரியும் மூன்றாம் பிறையை முதல் பிறையாகக் கொள்ள கட்டளையிடவேயில்லை. இது இந்த மெளலவிமார்கள் கூறும் பச்சைப் பொய்! யூதர்களே, மூன் றாம் பிறையை முதல் பிறையாக கணித்தனர். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் தினசரி பிறையின் தோற்றத்தை அவதானித்து வந்தார்கள். மாத இறுதியில்,

அல்குர்ஆன், 36:40 வசனப்படி, உர்ஜுனுல் கதீம் என்ற கண்ணுக்குத் தெரியும் இறுதிப் பிறையை சங்கமத்திற்கு முதல் நாள் பார்த்து வந்தார்கள். அடுத்த நாள் சந்திர ஒளி முற்றிலும் (கும்மிய, குப்பிய) மறைக்கப்படும். அதை தொடர்ந்து வரும் அடுத்த நாளை புதிய மாதத் தின் முதல் நாளாகக் கொண்டு மாதத்தை ஆரம்பித்தார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்கள் காலத்து சரியான நடைமுறையாகும். (பார்க்க : அந்நஜாத், செப். 2016, பக். 28)

ஆறாவது குற்றச்சாட்டு :
“ஸலபி மன்ஹஜ்படி மார்க்கத்தை பின்பற்று வோரை பித்அத்வாதிகள் என்றும், நரகவாதிகள் என்றும் கூறுவோராக இருந்தார்”
ஸலபி மன்ஹஜ்படி தான் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. அல்குர்ஆன் என்ன கூறுகிறது. மனிதர்களில் எவரைப் பின்பற்றினாலும் அது வழிகேடு. அவன் காபிர், நிரந்தர நரகம் என்று எச்சரிக்கிறது. (பார்க்க: அல்குர்ஆன் : 18:102)

மேலும், 18:103-106, 33:30 வசனப்படி அல்லாஹ்வும், அவனது தூதரும் முடிவு செய்துள்ளதற்கு மாறாக, வேறு கருத்து கொள்வது பகிரங்கமான வழிகேடு என்று கூறுவது ஸலபு மெளலவிகளுக்கு விளங்கவில்லையா? முழுமையடைந்து விட்ட மார்க்கத்தில், புதிதாக சேர்ப்பதற்கு அணுவளவும் அனுமதியில்லை என்பதை அறிந்த “”ஸலபி புரோகிதர்” வழிகெட்ட பிரிவை தூக்கி சுமப்பது ஏன்?

“இறைத்தூதரைப் பின்பற்றுவது பற்றி “”அத்தீவுர் ரசூல்” என்று அல்லாஹ் பல இடங் களில் கூறி இருப்பது போல் “”அத்தீவுர் முஹாஜிர் வ அன்ஸார்” என்று குர்ஆனில் அல்லாஹ் எங்கேயாவது கூறியிருக்கின்றானா? இல்லாத ஒன்றை ஸலபிகள் ஏன் கற்பனை செய்கின்றனர். புதிதாக கற்பனை செய்கிறவர்கள் நாளை மறுமையில் பெரும் நஷ்டம் அடைந்தோரில் இருப்பர் என்று எச்சரிப்பது ஸலபி பிரி வினரின் கண்களில் படவில்லையா? பார்க்க: அல்குர்ஆன் : 7:146, (அந்நஜாத் ஜூலை 2017, பக். 20)

ஏழாவது குற்றச்சாட்டு :
“ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற புதிய கூட்டத்தை உருவாக்கி, அதில் இணையாதவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்ற கொள்கை உடையவராக இருந்தார்.
அடுக்கடுக்கான பொய்யையும், அவதூறையும் அள்ளித் தெளித்து, அவரது ஸலபுக் கொள்கையை தூக்கிப் பிடிக்க இந்த புரோகிதர் அரும்பாடுபடுகிறார். அபூ அப்துல்லாஹ் உருவாக்கிய புதிய ஜமாத்தாம் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” இதோ அபூ அப்தில்லாஹ் பேசுகிறார்.

“1987ல் இருந்து பொய்யன் பீ.ஜை. கற்பனை செய்த “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் பிரிவு ஜமாஅத்துதான் என்று தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்க் கூற்றை கூறி வருகிறார். அப்படியே உள்வாங்கிக் கொண்டு நீங்களும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்கிற தமிழ்நாடு பிரிவின் அமீராகிய அபூ அப்தில்லாஹ்வை தலைமையை ஏற்பவர்தான் உண்மையான முஸ்லிமா என்று கேட்டு எழுதி இருக்கிறீர்கள்.

அப்படி கடந்த 33 ஆண்டுகளில் ஒரு முறை யாவது எம்மை அமீராக ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்று நான் எழுதியதாகவோ, நான் பேசியதாகவோ ஆதாரம் இருக்கிறதா? ஜமாஅத்துல் முஸ்லிமீனில் இருக்கும் நேர்வழி நடக்கும் பிரிவு, ஒரு போதும் யாருக்கும் அவர்கள் எப்படிப்பட்ட குஃப்ர், ´ஷிர்க், வழிகேடுகளில் இருந்தாலும், குஃப்ர் ஃபத்வா கொடுக்க மாட்டார்கள்.

அப்படி ஃபத்வா கொடுப்பவர்கள், தங்களை ஜமாஅத்துல் முஸ்லிமீனில் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் நரகம் செல்லும் வழிகேட்டு பிரிவுகளில் இருப் பவர்களே! இப்படி நரகம் புகும் 72 பிரிவினரும் ஒருவருக்கொருவர் குஃப்ர் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தை பிளவுபடுத்தத்தான் செய்வார் கள். நேர்வழி நடக்கும் உண்மை முஸ்லிம்கள் மட்டுமே “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று அல்லாஹ் இட்ட பெயரில் மட்டுமே செயல் படுவார்கள்.” (அந்நஜாத், செப். 2016, பக். 30,31)

எட்டாவது குற்றச்சாட்டு :
“ஹதீஃத்களுக்கு மன இச்சைப்படி விளக்கம் அளிப்பவராகவும், அறிஞர்களின் விரிவுரைகளை படிப்பதே தவறு என்று கூறுபவராக இருந்தார்.
அபூ அப்தில்லாஹ் பதிலளிக்கிறார் :
1984ல் இருந்து இன்று 2017 வரை கடந்த 34 வருடங்களில் எனது பேச்சிலிருந்து, எழுத்திலிருந்து, குர்ஆன், ஹதீஃத் கூறும் நேரடிக் கருத்துக்கு முரணாக நாம் வெளிப்படுத்தியதாக ஒரே ஒரு கருத்தையாவது இந்த மெளலவிகளால் காட்ட முடியுமா? காட்டி இருக்கிறார்களா? இல்லையே! அதற்கு மாறாக, அபூ அப்தில்லாஹ் முன்னோர்களை மதிப் பதில்லை, பெரியார்கள், சாதாதுக்கள், அகாபிரீன்கள், இமாம்கள், அவ்லியாக்களை மதிப்பதில்லை. அவர்களை திட்டுகிறார், அவர் வஹ்ஹாபி, நஜாத் என பூச்சாண்டி காட்டி, இம் மவ்லவிகளை முழுமையாக நம்பி, அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி, வஞ்சித்து அவர்களை நரகை நோக்கி இட்டுச் செல்கிறார்கள். (பார்க்க. அல்குர்ஆன் : 7:35, 33:36, 34:31) (அந்நஜாத் : மே, 2017, பக். 28)

ஒன்பதாவது குற்றச்சாட்டு :
“அபூ அப்தில்லாஹ் அவர்கள் பல வழி கேடான கொள்கைகள் உருவாக காரணமாக இருந்தார்.”
அபூ அப்தில்லாஹ் என்ன வழிகேடான கொள்கையை உருவாக்கினார்? என்று ஆதாரத்துடன் சிந்தித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை புரிகிறது. அபூ அப்தில்லாஹ் அவர்கள் உருவாக்கிய கொள்கை இது ஒன்றுதான். புதிதாக ஒன்றும் இல்லை. எல்லா நபிமார்களும் சொன்ன அதே கொள்கைதான், எல்லா காலத் திலும் வழிகேட்டு ஆலிம்களும் எதிர்த்த கொள்கைதான். ஆம்!

மூஸா(அலை) அவர்கள் உம்மத்தை வழி கெடுத்த ஸாமீரி, ஈஸா(அலை) அவர்களின் உம்மத்தை வழிகெடுத்த சவுல் என்ற பவுல் இறுதி உம்மத்தை வழிகெடுக்கும் தர்கா, தரீக்கா, தப்லீக், தக்லீத், தவ்ஹீத், ஸலபீ ஆலிம் புரோகிதக் கொள்கைக்கு எதிராக, அபூ அப்தில்லாஹ் அவர்களின் கொள்கை முழக்க மாக ஒவ்வொரு இதழிலும் இடம் பெறும் அல்லாஹ்வின் கொள்கை வாசகம்.

* இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அணுவின் முனையளவும் அனுமதி இல்லை.
* புரோகிதம் பஞ்சமா பாவங்களை விடப் பெரும் பாவம், கொடிய ஹராம்.
* இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் திருட்டுத்தனமாக இடைத்தரகர்களைப் புகுத்துவது புரோகிதமே.
* பல பொய்க் கடவுள் வழிபாட்டை திணிப்பது புரோகிதமே.
* மூட நம்பிக்கைகளை வளர்ப்பது புரோகிதமே.
* ஜாதி, மதம், மத்ஹபு, தரீக்கா, இயக்கம் போன்ற புரிவுகளை கற்பிப்பது புரோகிதமே.
* நாத்திகத்துக்கு வித்திட்டு நீர் பாய்ச்சி உரமிட்டு வளர்ப்பது புரோகிதமே.
* மனித நேயத்திற்கு முட்டுக்கட்டை புரோகிதமே.
* புரோகிதம் ஒழிந்தால் மனிதம் மலரும். மனித நேயம் வளரும்.
* புரோகிதம் ஒழிந்து, மனிதம் மலர, மனித நேயம் வளர, அனைவரும் பாடுபடுவோம்.

 

Previous post:

Next post: