இறையடியார்
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? திருகுர்ஆன் : 39:9
அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஃத்களுக்கும் ஆதாரமாக இருப்பவர்கள் அறிஞர்கள் எனப்படும் ஆலிம்கள். இன்றைய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கு, குறிப்பாக படித்தவர் பாமரர்களுக்கு அவர்கள்தான் வழிகாட்ட வேண்டும். இஸ்லாமின் பக்கம் வழி நடத்திச் செல்ல வேண்டும்.
நிச்சயமாக அறிஞர்கள் இறைத்தூதரின் வாரிசுகளாவர். அவர்கள் அறிவைத்தான் விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைய பாக்கியம் பெற்றவாராவார். நூல் : புகாரி
இந்த நபிமொழியைக் கூறி அவர்கள் தங்களைத் திருத் தூதர்களின் வாரிசுகள் என்ற மார் தட்டிக் கொள்கிறார்கள். திருத்தூதர்களின் பணியை நாங்கள் செய்து வருகிறோம் என்றும் கூறிக் கொள்கிறார்கள். தற்காலத்தில் மார்க்க அறிஞர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் முற்றிலும் மாறுபட்ட வழியில் பயமின்றி சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சிந்தனை, சொல், செயல், அன்றாட நடவடிக்கைகள் மாறி விட்டன. காலம் மாறி விட்டது. நாமும் மாறித்தானே ஆக வேண்டும் என்கிறார்கள். வேடதாரிகளாக இருக்கிறார்களே தவிர, கடமையை உணர்ந்து செயல்படுபவர்களாக காணப்படவில்லை.
தீய உணர்வுகளுக்கு-அற்ப எண்ணங்களுக்கு -உலக ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு இறைமறை-நபிவழி சுட்டிக் காட்டாத தீய வழியில் பிரவேசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் உலக இச்சையில் மூழ்கி இம்மைக்காகப் பாடுபடுகிறார்கள். மறுமையைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி எண்ணிப் பார்ப்பதும் இல்லை. நல்லதை கெட்டது என்றும், கெட்டதை நல்லது என்றும் அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதன்படியே செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் மக்களிடம் மார்க்க அறிவு படிப்படியாக மறையத் தொடங்கி விட்டது. அவர்கள் தம்மைப் பற்றி பெரிதாகவே எண்ணிக் கொள்கிறார்கள். தாம் பெற்றிருப்பது யாருக்குமே கிடைக்காத பேரறிவு என்று வாதிடுகிறார்கள். உண்மையிலேயே அறவழிக்கு ஒளி காட்டிய-கலங்கரை விளக்காகத் திகழ்ந்த நமது முன்னோர்களையோ-இறை மறையையோ- நபிமொழியையோ இவர்கள் பின்பற்றுவதில்லை.
அறிவைத் தேடி அடைவது முஸ்லிம்களில் ஆண், பெண் அனைவரின் கடமை என்பார்கள். ஆனால், குர்ஆன், ஹதீஃத் தவிர்த்து பயன் படாத அறிவைக் கற்று அதில் மூழ்கித் திளைப்பார்கள்.
“பயன்படாத அறிவில் இருந்து இறைவன் காப்பானாக” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
உண்மையான அறிவை மறந்து, கானலைத் தொடர்ந்து திரியும் இந்த அறிஞர்களைப் பற்றி என்ன கூறுவது?
அறிவை இரு வகையாகப் பிரிக்கலாம். குர்ஆன், ஹதீஃத் சம்பந்தமான நல்ல அறிவு. தீய அறிவு, பிந்தியதைப் பற்றிக் கவலை இல்லை. முந்தியதே நம் சிந்தனைக்கு உரியது. நல்ல அறிவையும் இரண்டாகப் பிரிக்க முடியும். ஒன்று சமூக வாழ்க்கைக்குத் தேவையான நடை முறை அறிவு. மற்றொன்று அனைத்தையும் படைத்தாளும் இறைவனைப் பற்றிய அறிவு. இத்தகைய அறிவைப் பெற இன்றைய மார்க்க அறிஞர்கள்-ஆலிம்கள் பாடுபடுகிறார்களா? இல்லையே!
உலகில் உள்ள அனைத்தையும் விட மனிதன் உயர்ந்தவன். சிறந்தவன். இந்த உயர்வு-சிறப்பு எப்படி-எதனால் கிடைத்தது. பெருத்த உடலும் வலிமை மிக்க கரங்களும் அவனுக்கு இருக்கின்றன என்பதுதான் காரணமா?
இருக்க முடியாது.
ஒருவேளை அவனது வீரம்தான் காரணமா?
அதுவும் இல்லை!
ஏனெனில், யானை, ஒட்டகம், புலி, சிங்கம், கரடி, முதலை போன்றவை பலத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்குகின்றன. மனிதன் செய்யத் துணியாத பல காரியங்களை அவை தினமும் சர்வ சாதாரணமாகச் செய்கின்றன.
மனிதனுக்கு அவன் பெற்றிருக்கும் அறிவினால் தான் பெருமை சேர்கிறது.
எப்போதும் மனிதனின் உள்ளத்திற்கு குர்ஆன், ஹதீஃத் சம்பந்தப்பட்ட அறிவு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அந்த உள்ளம் நோயுற்று விடும். மக்களில் குறிப்பாக அறிஞர்கள் என்று தம்பட்டம் அடித்துத் திரியும் மவ்லவிகளில் பலர் உள்ளத்தில் நோயாளியாகவே இருக்கின்றனர். அவர்கள் தமது எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காமல், மறுமை வாழ்வை மறந்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மரணம் வரும் போது தான் அவர்களுக்குத் தெளிவு பிறக்கும்.
மனிதர்கள் அனைவருக்கும் குர்ஆன், ஹதீஃத் பற்றிய அறிவு எப்போதும் தேவை. இதனை அலட்சியம் செய்துவிட முடியாது. நமக்கு அத்தகைய நல்லறிவு கிடைத்து விட்டால், நாம் பெற்ற நல்லறிவு நமக்கு அழகைக் கொடுக்கும்.
எனவே, குர்ஆன், ஹதீஃத் அறிவு பெற்றுள்ள அறிஞர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். ஏனெனில், அவர்களிடம் இம்மை, மறுமைக் கான நல்ல அறிவு இருக்கிறது. அது நம் உள்ளத்திற்குப் புத்துயிர் பூத்திடச் செய்திடும்.
அந்த குர்ஆன், ஹதீஃத் அறிவைக் கொண்டு உலக மக்களுக்கு, ´ஷிர்க், பித்அத், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவுறுத்த வேண்டும். நல்லவை ஏவி, தீயவைகளைத் தடுத்திட வேண்டும் என்பதற்காக, யாருக்கு வேத ஞானம் வழங்கப்பட்டதோ அவர்கள், மறுமையில் விசாரணை செய்யப்படுவார்கள்.
அறிவைப் பெற்ற அறிஞர்கள், ஆலிம்கள் அந்த அறிவை மட்டரகமான வழிகளில், தன் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அறிவு பெற்றவர்கள் அனைவரும் தமது அறிவின் ஒளியில் முன்னேறிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் மட்டும் இருளில் தவிக்க, தடுமாற நேரிடும்.
உலகத்தையும் அதனைப் படைத்த இறைவனையும் ஏக காலத்தில் தாம் விரும்புவதாக ஒருவர் கூறினால், அவர் பொய் கூறுகிறார் என்பதே பொருள். ஆசையின் தூண்டுதலால் முகஸ்துதி உருவாகிறது. மற்றவர்களைப் போல் மவ்லவிகளின் இதயங்களிலும் அது இடம் பிடித்துக் கொண்டு தன் கைவரிசையைக் காட்டுகிறது. அவர்கள் ஆவலோடு அதனை ஏறிட்டுப் பார்க்கிறார்கள். அதனால் அது அவர்கள் செய்யும் வேலைகளின் புனிதத் தன்மையைக் கெடுத்து விடுகிறது.
ஒவ்வொரு மனிதனும் மறுமையை மனதில் கொண்டு செயலாற்றினால், எந்த வம்பும் தேவையில்லை. எந்த வழக்கும் பிரச் சனையும் உருவாகப் போவதில்லை. இப்படி ஒரு சூழல் உருவானால், உலகத்திற்கு சட்ட நிபுணர்களும் தேவையில்லை. நீதிபதிகள், நீதிமன்றங்கள், காவல்துறைகளும் தேவையில்லை.
மனித இனத்தை மறுமைக்காக ஈடேற்றும் பெரும் பொறுப்பை முஸ்லிம்கள் சுமக்கிறார்கள். அவர்கள் எத்தனை விரைவில் விழித்துக் கொள்கிறார்களோ, அத்தனை விரைவில் உலகத்திற்கு நன்மை கிட்டும். ஆனால், அவர்கள் விழித்துக் கொள்வது எப்போது? இன்றைய மவ்லவிகள் எனப்படுவோர் பள்ளியிலும், வீட்டிலும் முடங்கி விடுகிறார்கள். ஐந்து வேளை தொழ வைத்தோம். ஜும்ஆ உரை நிகழ்த்தினோம். இஸ்லாத்தை தூக்கி நிறுத்தி விட்டோம். மாதா மாதம் சம்பளம் வாங்கினோம். குடும்பத்தை கவனித்தோம். இத்துடன் நம் பணி முடிந்தது. தெருவில் வசிப்பவர்கள், மஹல்லாவாசிகள், ஊரார், யார் எப்படி போனால் நமக்கு என்ன?
இஸ்ஸாத்திற்கு, முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் கவலை இல்லை. அதனை அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் கண்டு கொள்ளும். கவனித்துக் கொள்ளும். நமக்கு இதில் வேலை இல்லை என்று ஒதுங்கி நின்று கவனிக்கும் நிலைதான் தம்மை அறிஞர் என்று கூறிக் கொள்ளும் மவ்லவிகளிடம் காண முடிகிறது.
தீமைக்கு எதிராக-விதவைகள், முதியோர்கள், அநாதைகள், சமுதாயத்தில் பாதிக்கப்பட் டோருக்காகப் பாடுபடுவோர், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்போர் மிகவும் குறைவு. மாறாக, கத்தம், பாத்திஹா, மவ்லீது, சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொண்டு வழி கேட்டில் செல்லும் பணியை செவ்வனே செய்து வருகிறார்கள். இதனை கண் கூடாகவே கண்டு வருகிறோம்.
“”வேலியே பயிரை மேயலாமா? மக்களும் மேயவிடலாமா?” அறிஞர் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஆலிம்கள் தங்களுக்கு இடப்பட்டிருக்கும் இஸ் லாமிய கடமைகளை மட்டுமே சரி வர செய்ய ஆரம் பித்து விட்டால், உலகம் அவர்களுக்குத் தன்னு டைய கடமையைக் கட்டாயம்-தாமதம் ஆயினும் தவறாமல் செய்தே தீரும்.
தற்கால மவ்லவிகள் தவறும் பட்சத்தில் வாசகர்களாகிய நீங்கள் இஸ்லாமிய, குர்ஆன், ஹதீஃத் சம்பந்தப்பட்ட அறிவைத் தேடிப் புறப் படுங்கள். அது எங்கிருந்தாலும் சரியே! மதர ஸாக்களில் புகுந்து தேடாதீர்கள். அது விழலுக்கு இறைத்த நீராகிப் போகும். தற்காலத்தில் புற்றீசல்களாக உருவெடுத்த மதரஸாக்கள், மக்களின் பொருளாதாரத்தையும், படிக்கப் போகும் மாணவர்களின் ஏழு ஆண்டுகளையும் மற்றும் ஈமானையும் பறித்துக் கொண்டு இவர்களின் சுய விருப்பங்களை(?) பூர்த்தி செய்யவும். குர்ஆன், ஹதீஃத் தவிர அனைத்தை யும் கற்றுத் தரும்.
இஸ்லாம் கூறும் அறிவு எங்கு கிடைத்தாலும் சரி, அதனை நெஞ்சிலே பூட்டி வைத்துப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது உங்களின் ஈருலக முன்னேற்றத்திற்கு, மறுமை வாழ்விற்கு, நரக நெருப்பிற்கு முன் கேடயமாக, தடுமாறும் இருளில் ஒளி விளக்காக மாறி விடும்.
குர்ஆன், ஹதீஃத் சுட்டிக்காட்டிய வழியில் நடப்பது ஒன்றே அனைவர் மீதும் கட்டாயமாகும். அது இறைவன் அவன் தூதரின் மீது காட்டும் உண்மையான அன்பு ஆகும்.
“நிச்சயமாக! அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர் கள் தாம்!” திருகுர்ஆன் : 29:43