தேர்தல் சூதாட்டம் கலை கட்டுகிறது!

in 2016 பிப்ரவரி

பிப்ரவரி 2016 ரபீவுல் ஆகிர்-ஜ.அவ்வல் 1437

FEBRUARY 2016

தேர்தல் சூதாட்டம் கலை கட்டுகிறது!

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஜனநாயக முறைப்படி அமைந்த தேர்தல் சில மாநிலங்களில் சமீபத்தில் வருகிறது. இத்தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடப்பதாக இருந்தால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாகச் சிந்தித்து, ஆய்வு செய்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தங்களை ஆளும் தகுதி படைத்தவர்கள் யார் என்பதை முடிவு செய்து அவர்களுக்கு வாக்களிப்பதாகும்.

சுயமாகச் சிந்தித்து விளங்கும் ஆற்றல் மிக்கவர்கள் நம்நாட்டில் மிகமிகக் குறைவு. அதுவும் இல்லாமல் ஜனநாயகம் என்ற பெயரால் அது பணநாயகமாகி இன்று ரவுடிகள் ராஜ்யமாகிவிட்டது. ஒரு காமராஜரைப் போன்றவரோ, ஒரு கக்கனைப் போன்றவரோ இன்று எம்.எல்.ஏ. ஆக முடியுமா? பின் எப்படி அப்படித் தொண்டு செய்யும் உள்ளம் கொண்டவர்கள் முதன்மந்திரி, மந்திரி ஆக முடியும். நூறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்துக் குவிக்கும் மிதமிஞ்சிய பேராசைக்காரர்களே, வாக்காளர் களை விலைக்கு வாங்கி, எம்.எல்.ஏ. ஆக முடியும், முதன் மந்திரியாக முடியும், ஏழை மக்களைச் சூரையாடி, அவர்களை இலவசம் என்ற பெயரால், யாசகம்-பிச்சை கேட்க வைத்துவிட்டு, அரசியல் வியாபாரிகள் நூறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்க்க வழிவகுக்கும் முறைதான் இன்றைய ஜன நாயக தேர்தல் முறை.

இது காலம்வரை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்களைத்தான் தங்கள் கட்சியின் பக்கம் இழுக்க குதிரை பேரம் நடந்தது. இப்போது சில கட்சிகளையே தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் குதிரை பேரம் படு ஜோராக நடந்து வருகிறது. கிரிக்கெட் சூதாட்டம் போல், தேர்தல் சூதாட்டமும் கலை கட்டி வருகிறது. சிறு சிறு கட்சிகள் எங்கே அதிக நோட்டும், சீட்டும் கிடைக்குமென்று அலை மோதுகின்றன. இந்தப் போக்கு நீடித்தால் நாடு சுடுகாடாகவும், மக்கள் கையேந்தும் பிச்சைக்காரர்களாகவும் ஆகும் நிலையே ஏற்படும்.

இறைவன் மீதும், மறுமை மீதும், சுவர்க்கம், நரகம் மீதும், விசாரணை மீதும் நம்பிக்கையுடைய முஸ்லிம்களே இந்த நாசகார ஜனநாயகத் தேர்தல் வழிகேட்டில் விழுந்து, ஒன்றாக இருந்தவர்கள் இன்று இரண்டாகி பரம எதிரிகள் போல் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து இன்று நாடே கை கொட்டிச் சிரிக்கிறது. இந்த நிலையில் இறைவனையும், மறுமையையும் மறுப்பவர்கள், இந்த எம்.எல்.ஏ. பதவியையே சதம் என நினைப்பவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

இத் தேர்தலில் பணம் பாதாளம் வரை பாயும். ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் வரை கொடுக்கப்படும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படியானால் 5 வருடங்களுக்கு அதாவது 5மு365=1825 நாட்களுக்கு 5000/- என்றால் ஒரு நாளைக்கு 2 ரூபாய் 74 பைசா மட்டுமே. ஒரு நேர டீ கூட வாங்க முடியாது. குடிக்க முடியாது. இந்த அற்பக் காசுக்காக, அவர்கள் பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தைச் சுருட்ட நாம் துணை போகலாமா?

ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டு களாக தேர்ந்தெடுத்த மக்களை அறவே மறந்து விட்டு, இன்று உங்கள் வாக்கை சில ஆயிரம் கொடுத்து அபகரிக்க உங்கள் வீடு தேடி வருகிறார்கள். அவர்களிடம் ஏமாறாதீர்கள். மீண்டும் மோசம் போகாதீர்கள். அவர்களை உங்கள் வாசல்படி ஏற அனுமதிக்காதீர்கள். நீங்களும் வேண்டாம். உங்கள் தவறான பணமும் வேண்டாம். நீங்கள் மக்களை ஏமாற்றித் தவறான முறையில் சுருட்டிய பல்லாயி ரம் கோடி ரூபாயிலிருந்து நாய்க்கு எலும்புத் துண்டைக் காட்டி ஏமாற்றுவது போல் சில நூறோ, ஆயிரமோ கொடுத்து எங்களை இதுவரை ஏமாற்றி யது போதும். இனிமேலும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை என்று தைரியமாகக் கூறி அவர்களை வழியனுப்புவதே நமது எதிர்காலத்தை வளம்பெறச் செய்யும். நாம் அவர்களுக்கு வாக்களித்து அவர்களைப் பதவியில் அமர்த்தினால் அவர்கள் செய்யும் அத்தனைப் பாவச் செயல்களிலும் நமக்கும் ஒரு பங்குண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். சுதாரித்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜனநாயக தேர்தல் முறை பொதுமக்களுக்குப் பெருங் கேட்டையே விளைவித்து வருகிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை எதிரிக் கட்சியாகவே பார்த்து வருகிறது. இதில் கட்சி பேதமில்லை. எந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி முறையை நாம் காப்பி அடித்துச் செயல்படுத்தி வருகிறோமோ அந்த இங்கிலாந்து நாட்டில் இந்த விரோத குரோத நிலை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களும் அந்த அளவு விவரம் கெட்டவர்களாக இல்லை. அதனால் அங்கு ஜனநாயக ஆட்சி முறை பெரும் பாதிப்பைத் தரவில்லை.

அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் வாக்கு வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் போல் இருப்பதில்லை. ஆளும் கட்சிக்கு 50% பிரதிநிதிகள் கிடைத்திருந்தால் எதிர்க்கட்சிக்கு 40 அல்லது 45% பிரதிநிதிகள் கிடைத்திருக்கும். ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக இருந்தாலும் எதிர்க்கட்சியின் தேவை நிச்சயம் இருக்கும். எனவே ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை மதித்து நடக்கும் நிலை இருக்கவே செய்யும்.

எந்தக் கட்சியும் பொதுமக்கள் நலனைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, மக்கள் சொத்தை அராஜக வழிகளில் சூரையாட, இலட்சம், இலட்சம் கோடியாக நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் வாய்ப்பு அங்கு இல்லவே இல்லை. அப்படி அபகரிக்க ஆளும் கட்சி முற்பட்டால், எதிர்க்கட்சி அதை முறியடிக்கப் பிரதிநிதிகள் பலம் இருக்கவே செய்யும். அதனால் ஜனநாயக ஆட்சி முறையை அமுல்படுத்தும் இங்கிலாந்து நாட்டில் நம் நாட்டில் இடம் பெறும் அராஜக அட்டூழிய செயல்கள், மனிதனை மனிதன் இழிவாகக் கருதும் மிருகச் செயல்கள், இன இழிவு நிலைகள், ஆக மனித குலத்திற்கே இழிவைத் தரும் பகுத்தறிவுக்கு முரணான செயல்கள் காணப்படுவது மிகக் குறைவு. அதே ஜனநாயகம் நம் நாட்டில் பணநாயகம், குண்டர் நாயகம், ரவுடிகள் ராஜ்யமாகி விட்டதால் நடுத்தர ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள், வறுமையில் வாடுகிறார்கள்.

இந்தப் பரிதாப நிலை மாற வேண்டுமா? வாக்குகளைத் தவறான வழியில் விலைக்கு வாங்க வரும் அரசியல் வியாபாரிகளை மக்கள் தங்கள் வாசல்படியில் ஏறவே அனுமதிக்கக் கூடாது. விரட்டோ விரட்டென்று விரட்டியடிக்க வேண்டும். அவர்களை மனிதனாகவே மதிக்கக் கூடாது.

ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் கணக்கிலடங்கா அநியாய அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டதால், அடுத்து வரும் தேர்தலில் அவர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, எதிர்க்கட்சியை மிருக பலத்துடன் ஆட்சியில் அமர வாக்களிக்கக் கூடாது. இதுவே அவர்களை அசாத்தியத் துணிச்சலுடன், யார் எங்களைக் கேட்பது என்ற ஆணவத்துடன், அனைத்துத் துறைகளிலும் லஞ்சத்தைப் பெருக்கெடுத்து ஓட விடுவதுடன் ஆயிரம், லட்சம் கோடி என மக்கள் பணத்தைச் சுருட்டும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. திமுக, அதிமுக மாறி மாறி மிருக பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறியதால் தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களைக் கணக்கிட்டுப் பாருங்கள். இது ரவுடிகள் ராஜ்யம்தானே!

ஆட்சியாளர்கள் 2/3 பெரும்பான்மை மிருக பலத்துடன் ஆட்சியில் அமர வாய்ப்பளிக்கும் வகையில் மக்கள் வாக்களிப்பது அவர்களே அவர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போலாகும். ஆட்சியில் அமரும் கட்சியினருக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையில் விரல் விட்டு எண்ணும் அளவில் மிகச் சொற்ப அளவிலேயே பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்குக் கடிவாளம் போடும் அளவிற்கு எதிர்க் கட்சியினருக்கும் பலம் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி யாளர்கள் அநீதங்களையும், அட்டூழியங்களையும், லஞ்ச லாவண்யங்களையும் ஓரளவாவது கட்டுப்படுத்த முயல்வார்கள். சட்டத்திருத்தம் கொண்டு வந்து முன்னைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை, அக்கட்சிக்கு மக்கள் செல்வாக்குப் போய்விடும் என்ற குலை நடுக்கத்தில் சட்டம் கொண்டு வந்து முடக்கும் நிலை ஏற்படாது. சேது சமுத்திரத் திட்டம், உழவர் சந்தை திட்டம், இன்னும் இவை போன்ற பல திட்டங்கள் கிடப்பில் போடுவதற்கு இதுவே காரணம். அடுத்து திமுக ஆட்சிக்கு மிருக பலத்துடன் வந்தால் அம்மா பெயரிலுள்ள அனைத்து நலத்திட்டங்களும் முடக்கப்படும். இவையே ஜனநாயகக் கேடுகள் ஆகும்.

2/3 பெரும்பான்மை பலத்துடன் எந்தக் கட்சியும் ஆட்சியில் அமர மக்கள் வாக்களிக்கக் கூடாது. ஒருபோதும் தங்கள் பொன்னான வாக்கை அற்பக் காசுக்கு விற்கக் கூடாது. அரசியலை வியாபாரமாக்கி கொள்ளை அடிக்க முற்படும் அரசியல் வியாபாரிகளுக்கு நமது வாக்குகளை அளித்து அவர்கள் மக்கள் சொத்தைக் கோடி கோடியாக கொள்ளை அடிக்க இடம் தரக்கூடாது. இந்தளவு மக்கள் கவனித்து அக்கறையுடன் வாக்களித்தால் மட்டுமே மக்கள் ஓரளவாவது பலன் அடைய முடியும். இல்லை என்றால் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதான்.

இன்னொன்றையும் இந்த இடத்தில் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். மனிதகுல வாழ்க்கை நெறி நூல் குர்ஆன் 17:85 இறைவாக்குக் கூறுவது போல் மிகமிக அற்பமான அறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதன் என்னதான் தனது அறிவைக் குடைந்து சட்டம் இயற்றினாலும் அவை தோல்வியைத்தான் தழுவும். மேலும் எந்த அறிஞனாக இருந்தாலும் அவன் அமைக்கும் சட்டங்கள் அவன் சார்ந்த நாடு, மதம், ஜாதி, இனம், மொழி, கொள்கை என்ற அடிப்படையில் ஓரவஞ்சனையாகத்தான் அமையும். மனி தனை மட்டுமல்ல, அனைத்துப் படைப்புக்களையும் படைத்துப் பரிபாலிக்கும் சர்வசக்தனான மனிதகுலம் அனைவருக்கும் உரிய ஒரே இறைவன் மனித குலத்திற்கென்றே இறக்கியருளிய வேதங்கள், தோரா, பைபிள் வரிசையில் இறைவன் அருளிய இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் கூறும் சட்டங்களை மனிதகுலம் என்று அமுல்படுத்த முன்வருமோ அப்போதுதான் மனித குலத்திற்கு விடிவு காலம் பிறக்கும். மறுமையிலும் வெற்றி கிடைக்கும். அதற்காக உழைப்போம்.

Previous post:

Next post: