தொடர் ஆரம்பம்
முன்னுரை
இறைவனால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் தங்கள் பிரசார பணியை அல்லாஹ்வுக்காக, மறுமைக்காக மட்டுமே செய்தனர். தங்கள் பணியைக் கொண்டுஇவ்வுலக ஆதாயம் அடைய அவர்கள் முயலவே இல்லை. தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக-இறுதித் தூதராக இவ்வுலகிற்கு வந்த முஹம்மது(ஸல்) அவர்களும் அல்லாஹ்வுக்காகவே, மறுமைக்காகவே பணி புரிந்தார்கள் தங்கள் பிரசார பணியை வியாபாரமாக்கவில்லை. இவை இறுதி நெறிநூல் குர்ஆனைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.
ஆனால், இறுதித் தூதரின் வாரிசுகள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் மவ்லவிகள் மார்க்கப் பிரசாரத்தை வியாபாரமாக்கி விட்டார்கள். வைத்தியத்திற்கு தலை சிறந்த டாக்டரை அணுகி வைத்தியம் பார்க்கிறோம். வழக்கு என்றால் திறமை வாய்ந்த வக்கீலைப் பார்க்கிறோம். கடிகாரம் ரிப்பேர் என்றால் ஆற்றல் மிக்க கடிகார ரிப்பேரைப் பார்க்கிறோம். இதுபோல் மார்க்கப் பிரச்சினை என்றால் மவ்லவிகளாகிய எங்களிடம் தான் வரவேண்டும். அரபி மொழி தெரியாதவர்கள் மார்க்கம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இந்த மவ்லவிகள் அடிக்கடி சொல்லி வருவதை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள்.
ஆக டாக்டர்கள், என்ஜினியர்கள் தொழில் செய்வது போல் நாங்களும் மார்க்கத்தை தொழிலாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்பதற்கு அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் இது. சமூகத்திலுள்ள அனைவரும் டாக்டராக, என்ஜினியராக, கடிகாரம் ரிப்பேராக ஆக வேண்டியதில்லை, ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் மார்க்கம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், மார்க்கத்தை வியாபாரமாக்கக் கூடாது என்ற குர்ஆன், ஹதீஸ் போதனையையும் இந்த மவ்லவிகள் புறக்கணித்து விட்டார்கள்.
சரி மார்க்கத்தை வியாபாரமாகத்தான் ஆக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்திலாவது அவர்கள் நேர்மையைக் கடைபிடிக்கிறார்களா? நாணயமான வியாபாரிகளாக இருக்கிறார்களா? அதுவும் இல்லை. அப்படி நடந்து கொண்டாலாவது அதனை நாம் ஜீரணித்துக் கொள்ளலாம். அதனைக் கண்டு கொள்ளாதும் விட்டுவிடலாம். ஆனால் தரங்கெட்ட வியாபாரிகளைப் போல் இவர்கள் மார்க்கத்திலும் கலப்படம் செய்து விட்டார்கள். பேராசை கொண்ட வியாபாரிகள், மக்களின் உடல் நலனில் அக்கறை இல்லாமல் தங்கள் பெருத்த லாபத்தையே குறியாகக் கொண்டு அரிசியில் கல்லைக் கலப்பது போல பல மாபாதகச் செயல்களைச் செய்வது போல், இந்த மார்க்க வியாபாரிகளான மவ்லவிகளும், முஸ்லிம்களின் மறு உலக வாழ்க்கையில் அவர்கள் நரகையடைவதையும் பொருட்படுத்தாமல் தூய இஸ்லாம் மார்க்கத்தில் ஷிர்க்குகளையும்,(இறைவனுக்கு இணைவைத்தல்) பித்அத்துகளையும் (புதிய வழிகேடுகள்) கலப்படம் செய்து, தங்களின் இந்த அற்ப உலக பேராதாயத்திற்கே வழிவகுத்து வைத்துள்ளனர்.
நாணயமான வியாபாரிகளே தங்களது வியாபாரப் பொருட்களை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதைத் தங்கள் வாடிக்கையாளர்களிடம் காட்ட விரும்ப மாட்டார்கள். அதற்குக் காரணம் தங்களுக்குக் கிடைக்கும் நியாயமான ஆதாயம் கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சமே. இந்த நிலையில் தரங்கெட்ட வியாபாரிகள் அதனை விரும்ப முடியுமா? கொள்ளை லாபத்தை இழக்கத் துணிவார்களா? காரணம் வாடிக்கையாளர்கள் கலப்படமில்லாத பொருட்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிந்து கொண்டால், அதன் பின் ஈவிரக்கமில்லாத, இந்த ஈனப்பிறவிகளான கலப்பட வியாபாரிகளை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். அவர்களின் உலக வாழ்க்கை மண்ணாகிப் போகும்.
இதே போல் மார்க்கத்தை வியாபாரமாக்கி அதில் ´ஷிர்க், பித்அத்தை கலப்படம் செய்து உலகில் கொள்ளை லாபம் அடித்து வரும் இந்த மார்க்க வியாபாரிகளான மவ்லவிகள், தங்கள் வாடிக்கையாளர்களான முஸ்லிம்கள் நேரடியாக குர்ஆன், ஹதீஸை நெருங்கவிடாமல் மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டு வருகிறார்கள். காரணம் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்த்து விளங்க ஆரம்பித்து விட்டால் கலப்படம் செய்து, மோசடி செய்து மார்க்கத்தை வியாபாரமாக்கியுள்ள இந்த மவ்லவிகளை மக்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். சமுதாயத்தை விட்டு விரட்டியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே மக்கள் குர்ஆன், ஹதீஸை நெருங்கவிடாமல், பல தவறான சட்டங்களை இவர்களாக வகுத்து வந்துள்ளனர்.
குர்ஆனை ஒளு இல்லாமல் தொடக்கூடாது. குர்ஆனை மாற்று மதத்தினருக்குக் கொடுக்கக் கூடாது. குர்ஆனை விளங்க அரபி மொழி படித்திருக்கவேண்டும். அதுவும் அரபி மதரஸாவில் ஓதி இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. 16 கலைகள் கற்றிருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த மவ்லவிகள் கரடி விடுவது வாடிக்கையாகி விட்டது. இவை அத்தனையும் பச்சை பொய்யாகும். இவர்களின் இந்தக் கூற்றுகள் உண்மை என்றால் அதற்கு இவர்கள் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனிலிருந்தும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரம் தரவேண்டும். அவர்களால் தரவே முடியாது.
ஆனால், நாம் குர்ஆனை முயற்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த மொழியிலுள்ள மொழிபெயர்ப்பையும் படித்து விளங்க முயற்சி எடுக்கும்போது அவர்கள் குர்ஆனை கண்டிப்பாக விளங்கிக் கொள்ள முடியும். அந்த அளவு அல்லாஹ்வின் நெறிநூலான குர்ஆன் எளிதானது, தெளிவானது, சந்தேகத்திற்கிடமில்லாதது என்பதற்கு அந்த குர்ஆனிலிருந்தே ஆதாரங்கள் கொடுத்து விளக்கி இருக்கிறோம். ஆர்வமுடன் படிப்பவர்களுக்கு அல்லாஹ் தெளிவைத்தர துஆ செய்கிறோம்.
எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் எமக்கிட்ட பணியை உறுதியாகவும், தெளிவாகவும், எவர்களின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமலும், மனத்தூய்மையுடனும், அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்ற அருள் புரிய துஆ செய்ய வேண்டுகிறோம்.
திருச்சி-620 008.
1.12.92 அபூ அப்தில்லாஹ்.