- எஸ்.ஹலரத் அலி, – திருச்சி
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம். எனினும் அவர்கள் அவற்றியுள்ள அத்தாட்சிகளைக் புறக்கணித்து விடுகிறார்கள். அல் குர்ஆன். 21;32
இதுபோன்ற இன்னும் சில வசனங்களில் பூமிக்கு பாதுகாப்பான கூரையை, முகட்டை அமைத்திருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்தான் இப்பூமியைத் தங்குமிடமாகவும்; வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்,…. அல் குர்ஆன். 40:64
நம் தலைக்கு மேல் தெரியும் வானத்தை ஒரு பாதுகாப்பான விதானமாக – கூரையாக – முகடாக அமைத்து, அல்லாஹ் சகல உயிர்களையும் பாதுகாக் கின்றான்.மனிதன் வசிக்கும் வீடுகளுக்கு மேற்கூரை விதானம் இல்லாவிட்டால் என்ன நிகழும்? நான்கு பக்க குட்டியச்சுவற்றிக்கு இடையில் வசிக்கும் மனிதனை, புயல், மழை, காற்று, வெப்பம், தூசு என அனைத்து தீங்குகளும் மேலிருந்து தாக்கும். இது போன்றே நாம் வசிக்கும் பூமி வீட்டிற்கும் வானம் எனும் விதானக் கூரை தேவையாக உள்ளது.
இந்தப் பூமிக்கு விதானக் கூரை இல்லாவிட்டால், விண்வெளியிலிருந்து வரும் கடும் ஆபத்தான காஸ்மிக் கதிர்களும், சூரியனிடமிருந்து வரும் கடும் வெப்பமும் மற்றும் புற ஊதா கதிர்களின் தாக்கமும் உயிரினங்களை கொன்றுவிடும். அத்துடன் இல்லாது விண்வெளியில் வலம் வரும் ஆஸ்ட்டிராய்டு எனும் குறுங்கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் மனிதன் அனுப்பிய செயற்கைக்கோள்கள் போன்றவை பாதை மாறி வந்து பூமியில் வீழ்ந்து உயிரினங்களை அழித்து விடும்.
விண்வெளி தீங்குகளிலிருந்து பூமியை கூரையாக போர்த்திப் பாதுகாக்க அல்லாஹ் ஏராளமான ஏற்பாடுகளை ஏற்ப்படுத்தி வைத்துள்ளது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மைகளே! முதலாவதாக, சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்களை தடுக்க “ஓஷோன்” வாயு மண்டலத்தை அமைத்துள்ளான். மேலும் பிற நட்சத்திர பிரபஞ்சக் கூட்டத்திலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களை (Ultrarelativistic electrons) வடிகட்டுவதற்காக “வான் ஆலன் கதிர் தடுப்பு வளையத்தை” (Van Allen Radiation Belt) அமைத்துள்ளான்.
ஒளி வேகத்தில் வரும் எலக்ட்ரான் கதிர்களை, பாதுகாப்பு கவசம் கொண்டு தடுக்காவிட்டால்,அவை ஐந்தே நிமிடத்தில் உலக உயிரினங்களை கொன்று விடும். ஆகவே அல்லாஹ் பூமியில் இருந்து 11000 K.M.உயரத்தில் மின்காந்த கதிர் தடுப்பு வலையத்தை இரண்டடுக்கு பாதுகாப்பில் அமைத்துள்ளான்.1958 ல் அமெரிக்க ஆய்வாளர் வான் ஆலன் என்பவர் இப்பாதுகாப்பு தடுப்பை கண்டு பிடித்ததால் இவர் பெயரிலேயே (Van Allen Radiation Belt) அழைக்கப்படுகிறது.
93 மில்லியன் மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனிலிருந்து வரும் உயர் சக்தி வெப்ப காற்று (Violent solar flares and corona) பூமிக்கு வராதவாறு இடையிலேயே மேக்னோஸ்பியர் மற்றும் அயநோஸ் பியர் (Magnetosphere and Ionosphere) மண்டலத்தில் தடுக்கப்படுகின்றன.
நமது வளிமண்டலத்தில் (Earth Atmosphere) பலவிதமான வாயுக்கள் கலந்துள்ளன,குறிப்பாக நைட்ரஜன் 78% மற்றும் ஆக்சிஜன் 21% அளவில் பூமியை சூழ்ந்துள்ளது. இந்த வாயு மண்டலம் இல்லையெனில், விண்வெளியில் இருந்து அதி வேகத்தில் வரும் விண்கற்கள் பூமியில் விழுந்து பலத்த சேதத்தை ஏற்ப்படுத்திவிடும்.இந்த வாயு மண்டலம் இருப்பதால் அதி வேகத்தில் வரும் விண்கற்கள் வாயு மண்டலத்தில் உராய்ந்து 1650 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிந்து சிறு சிறு துணுக்குகளாக தூசியாக மண்ணில் வீழ்கின்றன.
பல அடுக்குகளாக உள்ள பூமியின் வளி மண்டலம், மின்காந்த மண்டலம் போன்ற பாதுகாப்புத் தடுப்புகள், பூமியிலுள்ள உயிரினங்களை கூரை போன்று பாதுகாக்கின்றன. இந்த அறிவியல் உண்மைகள் முன்பே அனைவரும் அறிந்த ஒன்றே! ஆயினும், இப்படி பூமியின் வளி மண்டலத்தில் நுழையும் விண்கற்கள் எரிந்து அப்படியே முழு கற்களாக மண்ணில் வீழ்ந்தால் அதன் அதிர்ச்சி அணுகுண்டு வெடிப்பை விட மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.
பொதுவாக விண்வெளியில் இருந்து வரும் விண்கற்கள் அப்படியே பூமியில் விழுந்து பேரழிவை ஏற்படுத்துவதை தடுக்க அல்லாஹ் ஒரு பாதுகாப்பை வளிமண்டலத்தில் அமைத்துள்ளான். வளி மண்டலத்தில் நுழைந்தவுடன் விண்கற்கள் வெப்பமடைந்து நொறுங்கி சிறு துகள்களாக மண்ணில் விழுகின்றன. இந்த நிகழ்வு எப்படி நடக்கிறது என்ற உண்மை இதுவரை அறிவியல் உலகம் அறியாமல் இருந்தது.
கடந்த 2013 ம் ஆண்டில் ரஷ்யாவில் செர்பியான்ஸ் நகரில் விழுந்த விண்கல்லின் மொத்த எடை 10,000 டன்கள். ஆனால் மண்ணில் வீழ்ந்த துகள்களின் எடை
2000டன் மட்டுமே, மிகுதியான எட்டாயிரம் டன் கற்கள் விண்ணிலே உடைந்து சிதறி எரிந்து விட்டன. இந்த ஒட்டுமொத்த பத்தாயிரம் டன் எடை கொண்ட விண்கல் பூமியில் நேரடியாக விழுந்திருந்தால்… மிகப்பெரும் அணுகுண்டு அழிவை அந்நகரம் சந்தித்திருக்கும். விண்கல் வாயு மண்டலத்திலேயே வெடித்து சிதறியதால் பேரழிவு தடுக்கப்பட்டது.
விண்வெளியில் இருந்து வரும் விண்கற்கள் வாயு மண்டலத்தில் வெடித்து சிதறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து, அமெரிக்கா கொலராடோ, புருது பல்கலைக்கழக (Purdue University) பேராசிரியர் ஜெ மேலோஷ் ஆய்வு செய்து அவ்வுண்மையை (December 11,2017 Meteoritics & Planetary Science) ஆய்வு இதழில் வெளியிட்டார்.
அதாவது தன் சுற்றுப்பாதையை விட்டு பிறழ்ந்து பூமியை நோக்கிவரும் விண்கற்கள், புவியின் காற்று மண்டலத்திற்குள் அதி வேகத்தில் நுழைததும், அவ்விண்கல்லிற்கு முன்னுள்ள காற்று விசையுடன் கல்லினுள் உள்ள சிறு துளைகளில் ஊடுருவி விண்கல்லை வெடித்துச் சிதறச் செய்கிறது. விரைந்து வரும் விண் கல்லின் முன்னால் விசையுடன் காற்று… அதேசமயம் விண்கல்லின் பின்புறம் வெற்றிடம். ஆக இந்த காற்றழுத்த மாறுபாட்டால் சுமார் 25 கி.மீ உயரத்திலேயே விண்கல் வெடித்து துகள்களாக மண்ணில் வீழ்கிறது. பேரழிவு தடுக்கப்படுகிறது.
https://www.purdue.edu/newsroom/releases/2017/Q4/research-shows-why-meteroids-explode-before-they-reach-earth.html
Read more at: https://phys.org/news/2017-12-meteroids-earth.html#jCp
பூமியுலுள்ள மனிதர்களை பாதுகாப்பதற்காக, அல்லாஹ் வானத்தில் பல பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை அமைத்துள்ளான். ஆனாலும் மனிதன், அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்டும் காணாமல் புறக்கணித்துச் செல்கின்றான். அல்லாஹ்வின் மீது அச்சமில்லாத மனிதர்களைப் பார்த்தே அல்லாஹ் கூறும் எச்சரிக்கை!
வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும்,அவர்களுக்கு பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து ஒரு துண்டை விழச் செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
அல் குர்ஆன்.34:9