எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு, 9842696165
தமிழகத்தில் ஏராளமான இயக்கங்கள் தங்களுக்கென்று சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு நாங்கள் மட்டும்தான் தூய்மையான முறையில் இஸ்லாத்தை போதிக்கிறோம் என்று சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இத்தகைய இயக்கங்களில் ஒன்றுதான் TNTJ, இந்த TNTJ, இயக்கத்தினர்கள் வகுத்துக் கொண்ட கொள்கைக்கு எதிராக யாராவது மாற்றுக் கருத்து கூறினால் உடனே இவர்கள் எங்களது ஜமாஅத்தோடு இது தொடர்பாக விவாதிக்கத் தயாரா? திராணியிருந்தால் எங்களோடு விவாதிக்க வாருங்கள் என்று ஆணவமாகக் கூறி வருகிறார்கள். மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கும், கருத்து வேறுபாடுள்ள வசயங்களில் தெளிவு கிடைப்பதற்கும் விவாதம் மட்டும்தான் மிகச் சிறந்த வழிமுறை என்பதைப் போன்ற போலித்தனமான தோற்றத்தை TNTJ, மதகுருமார்கள் ஏற்படுத்தியதன் விளைவாக எளிமையாக விளங்க வேண்டிய வசயங்களை கூட விவாதம் செய்து தான் விளங்குவோம் என்று TNTJ, தொண்டர்களும் அடம் பிடித்து வருகிறார்கள். இவர்களின் இந்த அணுகுமுறை குர்ஆன் ஹதீஃதிற்கு உட்பட்டதுதானா என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நல்லோர்களின் வழிமுறை :
கருத்து வேறுபாடுள்ள வசயங்களின் மூலமாக பிரச்சனைகள் ஏற்பட்டால் விவாதம் செய்து தான் அந்த பிரச்சனையின் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும் என்று அல்லாஹ்வோ அவனுடைய தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களோ நமக்குச் சொல்லவில்லை. மாறாக பிரச்சினைகள் யாரால் ஏற்படுகிறோ அந்த சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று அவர் கூறும் செய்திகளை நாமே நேரடியாகக் கேட்பதன் மூலமாக உண்மை எது? பொய் எது? என்பதைத் தெளிவாக நாம் அறிந்து அதை இன்ன பிற மக்களுக்கும் தெளிவுபடுத்த முடியும். இது தொடர்பாக நபிமொழி நூற்களில் காணப்படும். செய்திகளில் ஒரு சிலவற்றை முன் வைக்கிறோம்.
அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடனும் (அவர்களின் தோழர்களில்) ஒரு குழுவினருடனும் இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள்.
“பனூ மஃகாலா’ குலத்தாரின் மாளிகைக்கு அருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது கரத்தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நான் இறைவனின் தூதர் தான் என்று நீ சாட்சியம் அளிக்கிறாயா? என்று இப்னு ஸய்யாதிடம் கேட்டார்கள். இப்னு ஸய்யாத் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை கூர்ந்து பார்த்துவிட்டு நீங்கள் உம்மிகளின் தூதர் என்று நான் சாட்சியம் அளிக்கிறேன் என்று பதிலளித்தான். மேலும் அவன், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறைவனின் தூதர்தான் என நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்களா? என்றும் கேட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (நபித்துவத்தைப் பற்றி மேலும் அவனிடம் பேசாமல்) அவனை விட்டுவிட்டு நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று கூறினார்கள். பிறகு அவனிடம் (உன் நிலை பற்றி) நீ என்ன கருதுகிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத் எனக்கு மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன என்று கூறினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனக்கு இப்பிரச்சனையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று கூறிவிட்டு நான் ஒன்றை என் மனதில் உனக்காக (உன்னைச் சோதிப் பதற்காக) மறைத்து வைத்துள்ளேன் (அது என்ன வென்று சொல்) என்று கூறினார்கள். இப்னு ஸய்யாத் அது “”துக்” என்று பதிலளித்தான். (அதாவது “துகான்’ எனும் அத்தியாயத்தின் 10வது வசனம் என்பதை அரைகுறையாகச் சொன்னான்) உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “”தூர விலகிப் போ, நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் : 5614.
மற்றொரு அறிவிப்பில், நீ என்ன காண்கிறாய்? என்று (நபியவர்கள்) கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத் தண்ணீரின் மீது சிம்மாசனம் ஒன்றைக் காண்கிறேன் என்று சொன்னான். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “நீ கடல் மீதுள்ள இப்லீஸின் சிம்மாசனத்தையே காண்கிறாய்’ என்று கூறிவிட்டு இன்னும் என்ன காண்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவன் இரு உண்மையாளர்களையும் ஒரு பொய்யரையும் அல்லது இரு பொய்யர்களையும் ஓர் உண்மையாளரையும் காண்கிறேன் என்று சொன்னான். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டுள் ளது. அவனை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் : 5606.
அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது :
(ஒருநாள்) கிராமவாசிகளில் ஒருவர் (ளிமாம் பின் ஸஅல்பா) வந்து முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பி யுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா) என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உண்மைதான் என்று கூறினார் கள். அந்த கிராமவாசி வானத்தை படைத்தவன் யார்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்? என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்? என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்றார்கள். அப்படியானால் வானத்தை படைத்து, பூமியையும் படைத்து, இந்த மலைகளை நட்டும் வைத்தவன் மீதாணையாக அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா? என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று சொன்னார்கள்.
அவர், இரவிலும், பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள் மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா?) என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உண்மைதான் என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளை யிட்டானா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆம்’ என்றார்கள். தொடர்ந்து அவர் “”நாங்கள் எங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத் வழங்குவது எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே! என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உண்மைதான் என்றார் கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்கு கட்டளையிட்டானா? என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி(ஸல்) அவர்கள் “ஆம்’ என்றார்கள். அவர் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே? என்று கேட்க நபி(ஸல்) அவர்கள் “உண்மைதான்’ என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங் களுக்கு கட்டளையிட்டானா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள “ஆம்’ என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறை இல்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே? என்று கேட்டார். அதற்கும் நபி(ஸல்) அவர்கள் உண்மை தான் என்றார்கள். பிறகு அந்தக் கிராமவாசி தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றை விட நான் அதிகமாக்கவும் மாட்டேன். இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்” என்று கூறினார்கள்.
நூற்கள்:முஸ்லிம் 10, புகாரீ 63.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது:
அபூதர்(ரழி) அவர்கள் (என்னிடம்) சொன்னார் கள். நான் ஃகிஃபார் குலத்தை சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டி ருக்கிறார் என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே நான் என் சகோதரர் (அனீஸ்) இடம் நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், உன்னிடம் என்ன செய்தி உள்ளது? என்று கேட்டேன். நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரை கண்டேன் என்றார். நான் அவரிடம் போதிய செய்தியை எனக்கு நீ கொண்டு வரவில்லை என்று கூறி னேன். பிறகு தோலால் ஆன (தண்ணீர்) பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு கஅபாவில் தங்கியிருந்தேன். அப்போது அலீ(ரழி) அவர்கள் (கஃபாவில்) என்னைக் கடந்து சென்றார் கள் (என்னை கண்டதும்) “”ஆள்(ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள். நான் “”ஆம்” என்றேன். உடனே அவர்கள் அப்படியயன் றால் (என்) வீட்டிற்கு நடங்கள்(போகலாம்) என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும்(எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க கஅபாவிற்குச் சென்றேன். ஆனால்(அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்கு தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரழி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். மனிதர்(தாம் தங்கவேண்டிய) தமது வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா? என்று கேட்டார்கள். நான், “”இல்லை” என்றேன். உடனே அலீ(ரழி) அவர்கள் “”என்னுடன் நடங்கள் என்று சொல்லிவிட்டு உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாக இருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னேன் அதற்கு(அலீ) அவர்கள் அவ்வாறே செய்கிறேன் என்று சொன்னார்கள். நான் அப்போது இங்கு தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார் என்று எங்களுக்கு செய்தி கிடைத்தது. ஆகவே நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர் கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின் என் செருப்பைச் சரி செய்வதைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் (நிற்கா மல்) போய்க் கொண்டிருங்கள் என்று சொன்னார்கள்.
இறுதியில் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் செல்ல நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள் என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நூற்கள்: புகாரீ 3522, முஸ்லிம் 4878
அனஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் (நேரில்) வந்து சில வியங்களைக் குறித்துக் கேட்டார். தங்களிடம் நான் மூன்று வஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார் என்று கூறினார். பிறகு(1) இறுதி நாளின் அடையா ளங்களில் முதலாவது அடையாளம் எது? (2)சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? (3)குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, அல்லது தாயின் சாயலிலோ இருப்பது எதனால்? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் ஜிப்ரீல்தான் வானவர்களிலேயே யூதர்களுக்கு பகைவராயிற்றே என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசி கள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாய் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர் முந்திக் கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது என்று பதிலளித்தார் கள். (உடனே) அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் “”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை என்றும், தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்கள். நூல் : புகாரீ: 3938
உண்மையை அறிந்து அதனடிப்படையில் செயலாற்றி மறுமையில் வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களோடு விவாதிக்க தயாரா? என்று மார்தட்டிக் கொண்டு இருக்கமாட்டார்கள். மாறாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் சென்று அவர்கள் சொல்லும் கருத்தை உள் வாங்கி நல்ல முறையில் உரையாடி உண்மையை அறிந்து அதன்படி செயலாற்றுவார்கள். இதுவே நேர்வழியில் சென்று சொர்க்கத்தை அடைய விரும்புகின்ற ஒவவொரு முஸ்லிமும் கடைபிடிக்க வேண்டிய அழகிய வழிமுறை என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
விவாதத்திற்கு ஆதாரம் :
விவாதம் ஏதும் செய்யாமலேயே சம்பந்தப்பட்ட நபர்களிடம் சென்று அவர்கள் கூறும் செய்தி களை கவனமாகக் கேட்பதன் மூலமாக சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை எளிமையான முறையில் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று நபிமொழிகளின் அடிப்படையில் நாம் கூறினால், மார்க்கத்தை மக்கள் விளங்குவதற்கு கடினமாக்கி விட்டு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வீஹிவீமூ இயக்கத்தினர்கள், விவாதம் சம்பந்தமாக எத்தனை ஆயத்துகள் இருக்கின்றது. இதையயல்லாம் கண்டு கொள்ளாமல் இவர்கள் விவாதம் தொடர்பாக கட்டுரை எழுதுகிறார்கள் என்று தங்களது ஆதரவாளர்களைத் தக்க வைத்து கொள்வதற்காக நம்மை அவர்களின் இதழ்களிலோ, உரைகளிலோ விமர்சிக்கக்கூடும். ஆகையால் விவாதம் சம்பந்தமாக அவர்கள் கூறும் ஆதாரங்கள் மற்றும் விளக்கங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் இன்ஷா அல்லாஹ் விளக்குவோம்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “”என் இறைவன் உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செல்பவன்” என்று இப்ராஹீம் கூறியபோது, “”நானும் உயிர் கொடுப்பேன், மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான் எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்” என்று இப்ராஹீம் கூறினார். உடனே (சத்தியத்தை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். குர்ஆன் : 2:258
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! குர்ஆன் : 16:125
TNTJ, தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் இந்த இரண்டு வசனங்களையும் விவாதத்திற்கு மிக முக்கி யமான ஆதாரமாக காட்டி விவாதத்தின் மூலமாகத்தான் சத்தியத்தை நிலைநாட்ட முடியும் என்று கூறி தங்களது தொண்டர்களையும், குர்ஆன், ஹதீஃதை படிக்காத மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். பொதுவாக ஓர் அடிப்படையான வியத்தை விளங்கிக் கொள்ளவேண்டும். அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு வசனம் அருளப்பட்டது என்று சொன்னால் அதை நபி(ஸல்)அவர்கள் முதலில் நடைமுறைப்படுத்திக் காட்டுவார்கள். இதைப் போன்றே நபிதோழர்களும் நடைமுறைப்படுத்திக் காட்டுவார்கள். உதாரணத்திற்கு (நபியே) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (குர்ஆன் : 26:214) என்ற வசனம் அருளப் பெற்ற போது நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு குறை´ குலங்களை அழைத்து எச்சரிக்கை செய்தார்கள். (பார்க்க புகாரி: 4770)
இதை போன்றே, நீங்கள் விரும்புவதை (நல்வழியில்) செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். (குர்ஆன்:3:92) என்ற வசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா(ரழி) அவர்கள் தான் நேசித்த பைருஹா என்னும் தோடடத்தை தர்மமாக வழங்கினார்கள். (பார்க்க:புகாரீ:1461)
ஆயிஷா(ரழி) அவர்கள் மீது அவதூறு பரப்பிய தில் ஈடுபட்ட மிஸ்தஹ் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டேன் என்று அபூபக்கர்(ரழி) அவர்கள் சத்தியம் செய்தபோது “”உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவமாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் : 24:22) என்ற வசனம் அருளப்பட்டவுன் அபூபக்கர்(ரழி) அவர்கள் “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். (பார்க்க : புகாரீ : 4141) இதை போன்றே வட்டி, மதுபானம், திருமணம், பால்குடிச் சட்டம், விவாகரத்து, ஜிஹாத், பர்தா போன்ற இன்னபிற எல்லா வசனங்களையும் நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் கள். இப்போது நாம் கேட்பது என்னவென்றால்
…. விவாதம் செய்வீராக என்ற இந்த வசனம் அருளப்பட்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் யாருடன் விவாதம் செய்தார்கள்? அல்லாஹ் அருளிய தவ்ராத் தில் கலப்படம் செய்த யூதர்களை நோக்கி தவ்ராத் இறைவேதமா? இல்லையா? என்று தலைப்பிட்டு என்னோடு விவாதிக்க தயாரா? என்று நபி(ஸல்) அவர்கள் அறைகூவல் விட்டார்களா? அல்லது கிறிஸ்தவர்களை நோக்கி இன்ஜில் இறைவேதமா? இல்லையா? என்று எங்களோடு விவாதிக்கத் தயாரா? என்று அழைத்தார்களா? யூதர்கள் உஸைர் (அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என்று கூறிவந்தார்கள். இதைப் போன்றே கிறிஸ்தவர்கள் ஈஸ(அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என்று கூறி வந்தார்கள். இந்த இரு சாராரைப் பார்த்து இறைவனுக்கு மகனா? என்ற தலைப்பில் எங்க ளோடு விவாதிக்க உங்களுக்கு திராணி உண்டா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்களா? மூன்று கடவுளா? ஒரு கடவுளா? என்ற தலைப்பில் விவாதிப்போமா? என்று கிறிஸ்தவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விட்டார்களா? நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே தான் நபி என்று வாதிட்ட பொய்யர்கள் முஸைலிமா, அஸ்வத் அல்அன்ஸீ, இப்னு ஸய்யாத் ஆகியோருக்கு விவாத அழைப்பு கொடுத்தார்களா? பிற சமுதாய மன்னர்களுக்கு விவாத அழைப்பு கொடுத்தார்களா? காலம் தான் எங்களை அழிக்கிறது என்று கூறிய நாத்திகர் களுக்கு நபி(ஸல்) அவர்கள் விவாத அழைப்பு கொடுத்தார்களா? 16:125வது வசனம் அருளப்பட்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் இவர்களைப் போன்று யாருடனும் விவாதம் செய்யாத நிலையில் 16:125வது வசனத்தை ஆதாரமாக காட்டி TNTJ, இயக்கத்தினர்கள் விவாதம் செய்வது எந்த வகையிலும் முறையான ஆதாரமாகாது. நபி(ஸல்) அவர்கள் 16:125வது வசனத்தை நடைமுறைப் படுத்தவில்லை அதை நாங்கள்தான் நடைமுறைப்படுத்திக் காட்டுகிறோம் என்று TNTJ, இயக்கத்தினர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குர்ஆன் கூறும் விவாதம் :
முதலில் குர்ஆனைக் கொண்டு அழகிய முறையில் அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அப்படி அழைப்புப் பணியில் ஈடுபடும்போது எதிர் கருத்தில் உள்ளவர்கள் நாம் செய்த அழைப்புப் பணியை மையப்படுத்தி நம்முடன் உரையாடுவது தான் குர்ஆன் கூறும் விவாதமாகும். இப்ராஹீம் நபியின் வரலாறும் இதைத்தான் கூறுகிறது. அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்சமாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது) என் இறைவன் அனைத்துப் பொருட்களை யும் சூழ்ந்திருக்கிறான். உணரமாட்டீர்களா?
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங் காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்? (என்றும் இப்ராஹீம் கேட்டார்) குர்ஆன் : 6:80,81
நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமதாயத் திடமும் கேட்டபோது எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார். நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா? என்று அவர்கள் கேட்டனர். அவ்வாறில்லை, வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன் என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும் பிச் செனறபின் உங்கள் சிலைகளை உடைப்பேன் (என்றும் அவர் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வரவேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக் கினார். நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன் என்று அவர்கள் கூறினர். ஓர் இளைஞர் இவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார் எனக் கூறினர். அவரை மக்கள் பார்வைக்குக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சி கூறட்டும் என்றனர். இப்ராஹீமே! எங்கள் கடவுள் களை நீர்தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை அவற்றில் பெரிய சிலையே இதை செய்தது. அவை பேசக் கூடியவை யாக இருந்தால் அவற்றிடமே விசாரித்துக் கொள் ளுங்கள் என்று அவர் கூறினார். உடனே அவர்கள் விழிப்படைந்து நீங்கள்தான் (இவற்றை வணங்கிய தன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.
பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே என்றனர். அல் லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும், தீங் கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா? என்று கேட்டார். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குப வற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்கமாட்டீர்களா? (என்றும் கேட்டார்). குர்ஆன்:21:52-67 இதைப் போன்றே நபி(ஸல்) அவர்களின் அனுமதியோடு முகீரா பின் ஹுஃதபா(ரழி) அவர்கள் நஜ்ரான் நாட்டிற்கு சென்று அங்கு பிரச்சாரத்தை மேற் கொண்டதன் விளைவாக நஜ்ரான் நாட்டு கிறிஸ்த வர்களில் சிலர் ஈஸா(அலை) அவர்களை குறித்து கேள்விகள் கேட்டு நபி(ஸல்) அவர்களோடு உரையாடினார்கள். இதுவே குர்ஆன் கூறும் விவாதமாகும். TNTJ, இயக்கத்தினர்கள் செய்து வருவதைப் போன்று இவர்கள் ஒரு தலைப்பில் உட்கார்ந்து கொண்டு எதிர் தரப்பில் உள்ளவர் வேறு ஒரு தலைப் பில்(மறுக்கும் விதமாக) உட்கார்ந்து கொண்டு மாறி மாறி ஒருவருக்கொருவர் குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் மறுத்து வாயடித்து மல்லுக்கட்டி கொண்டிருப்பது ஒருபோதும் குர்ஆன் கூறும் விவாதமாகாது. இன்ஷா அல்லாஹ் எழுதுவோம்…