அமல்களின் சிறப்புகள்….
ஒரு திறனாய்வு!
M. அப்துல் ஹமீத்
தொடர் : 35
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம்பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்
தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 வ்வால் பிறை, ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.
திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…
பக்கம் 377ல் 3வது பாராவில் சொல்லப்பட்ட செய்தி :
ஷைகு அப்துல் அஜீஸ் தப்பாஹ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) என்ற பெரியார் சமீப காலத்தில் வாழ்ந்திருந்தவர் கள். அன்னார், அறவே எழுதப்படிக்கத் தெரியாதவர். ஆனால், ஒருவர் சொல்லக் கூடிய வாசகத்திலிருந்து அது குர்ஆனுடைய ஆயத்தா, ஹதீஃத் குத்ஸியா, ஹதீஃத் நபவியா அல்லது பொய்யான ஹதீஃதா என்பதைத் தனித்தனியாகப் பிரித்து சொல்லி விடுவார்கள். மேலும், சொல்லக் கூடியவர்களுடைய வார்த்தையிலிருந்து வெளிப்படுகின்ற ஒளிவீச்சைக் கொண்டு அது யாருடைய வாசகம் என்பது விளங்கி விடுகிறது. ஏனெனில் அல்லாஹுத் தஆலாவுடைய திருவசனங்களின் ஒளிவீச்சு ஒருவிதமாகவும், ஹதீஃத்களின் ஒளிவீச்சு ஒருவிதமாகவும், ஹதீஃத்களின் ஒளிவீச்சு வேறொரு விதமாகவும் இருக்கும். மற்றவர்களுடைய வாசகங்களில் இவ்வகையான ஒளி இருப்பதில்லை என்பதாக அவர்கள் கூறுவார்கள்.
எமது ஆய்வு :
இதுவும், இதுபோன்ற கணக்கிலடங்காத விதவிதமான வெவ்வேறு விஷயங்கள் இவர்கள் காட்டும் மனிதர்களால் இவர்கள் பாஷையில் சொல்வதானால் அல்லாஹ்வின் நல்லடியார்களால் அல்லது அல்லாஹ்வின் நேசர்களால்(?) சர்வ சாதாரணமாகக செய்துவிட முடியும் என்று அமல்களின் சிறப்பு(அசி) ஆசிரியர் அப்புத்தகம் முழுவதும் சளைக்காமல் எழுதி பக்கங்களை நிரப்பி வாசகர்களை மூளைச் சலவை செய்திருக்கிறார். மேலே சொல்லப்பட்ட இந்த செய்தியைப் படிக்கும் ஆதரவாளர்கள் இதெல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மூளைச் சலவையால் வசப்படுத்தப் பட்டவர்களை மற்றவர்கள் சுலபமாக அடையாளம் காண முடியும். எப்படி என்றால், இப்புத்தகம் படிக்கப்படும் “தஃலீம்களில்” அமர்ந்திருக்கும் அப்படிப்பட்ட நபர்கள் படிக்கப்பட்ட விஷயங்கள் மிகவும் அற்புதமானது. ஆச்சரியமானது என்று அந்த விஷயத்தை ஆமோதிக்கும் விதமாக தலையை ஆட்டி அல்லது உச்சுக்கொட்டி அல்லது மண்டையை ஆட்டிக் கொண்டே உச்சுக் கொட்டுவதையும் கச்சிதமாக செய்து தாங்கள் மெஸ்மரிசம் செய்யப்பட்டவர்களைப் போல இருப்பார்கள். இவர்கள் தஃலீமில் படிப்பதை கவனித்துக் கொண்டு இருப்பவர்கள்.
இன்னொரு சாரார், தஃலீமில் படிப்பதை கவனிக்காதவர்கள், ஆனால் தலையை ஆட்டி அல்லது உச்சுக்கொட்டி அல்லது மண்டையை ஆட்டிக் கொண்டே உச்சுக் கொட்டுவதையும் கச்சிதமாக செய்து, தங்களின் இப்படிப்பட்ட செயல்கள் மூலமாக தாம் தஃலீமில் முழுமன ஈடுபாட்டுடன் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக மற்றவர்களுக்கு பாவ்லா காட்டி தெரியப்படுத்துவார்கள்.
இப்படியாக முதல் நாள் ஒரு லூசு தலையாட்டும்! அடுத்த நாள் அடுத்த லூசு! இப்படியாக மண்டையை ஆட்டும் லூசுகள் நாளாக நாளாக பெருகிக் கொண்டு இருக் கின்றார்கள்.
இப்போது செய்தியின் உண்மையை ஆராய்வோம்.மேலோட்டமாகப் பார்த் தால், மேற்கண்ட பெரியார் சமீப காலத்தில் வாழ்ந்தவர் என்பதால், சமீப காலம் என்பது ஒன்று இரண்டு வருஷமோ அல்லது பத்து இருபது வருத்துக்குள்ளோ இருக்கும் என்றுதான் நினைப்போம். அப்படி நினைக் காதீர்கள். சம்பவம் நடந்து முடிந்ததாக கூறப்படுவது சுமார் 50 வருங்களுக்கு மேலாகவே இருக்கும் என்று கணக்கிடுகிறேன். ஏனென்றால் எனக்கு இப்போது 70 வயது ஆகிறது. ஒளிவீச்சு சக்தி கொண்ட முஸ்லிம் மனிதர் எவரும் உலகில் அதுவும் குறிப்பாக இந்தியாவில் எங்காவது 50 வருஷங்களுக்கு முன்பாக இருந்திருந்தால், கண்டிப்பாக நான் கேள்வியாவது பட்டிருப்பேன். ஆனால் கேள்விப்பட்டதேயில்லை.
என்னுடைய அப்பா அல்லது தாத்தா காலத்து சம்பவமாக இருக்குமோ என்று நினைக்கக் கூட மனம் வரவில்லை. ஏனென்றால், அமல்களின் சிறப்பு புத்தகத்தை வெளியிட்ட ஆசிரியர் ஏறக்குறைய அந்த சமயத்தில் நான் இருந்த வயதைவிட 10 அல்லது 12 வருங்கள் வித்தியாசத்தில் என்னினும் பெரியவராக இருந்தார். எனவே, அவர் சமீப காலம் என்று சொல்லுவதால், அவரது ஜீவித கால நிகழ்வாகவே இது இருந்திருக்கும் அல்லவா?
ஒளி வீச்சால் ஒருவர் சொல்லக்கூடிய வாசகத்திலிருந்து அது குர்ஆனுடைய ஆயத்தா, ஹதீஃத் குத்ஸியா, ஹதீஃத் நபவியா அல்லது பொய்யான ஹதீஃதா என்பதைத் தனித்தனியாகப் பிரித்து சொல்லி விடுவார்கள் என்றால் இது உலகளவில் மிகப் பெரிய அற்புதமான நிகழ்ச்சி. இதனால் இது மார்க்க ஈடுபாட்டிலுள்ளவர்களும்,மார்க்க வாசனையே இல்லாதவர்களும், ஆக எல்லா மக்களும் இதனை கேள்விப்பட்டிருப்பார்கள். அப்பெரியாரைப் பற்றி நான் கேள்விப்படவில்லை என்றாலும், நான் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபட்டிருந்த இளம் வயதில் என்னை விட 10 அல்லது 12 வருஷங்கள் பெரியவர்கள் அதாவது அசி ஆசிரியர் வயதையயாத்தவர்கள் கூட இப்படி ஒரு மனிதர் இருப்பதாக வாழ்ந்ததாக எவருமே கூறியதில்லை.
எனவே அசி ஆசிரியர் வழக்கமாக விட்டடிக்கும் கப்ஸாவில் உதித்ததுதான் அப்துல் அஜீஸ் டப்பாஹ் சாரி தப்பாஹ் என்ற கற்பனை பெயராகும் என்ற முடிவுக்கு எவரும் வந்துவிட முடியும். இப்படிப்பட்ட கற்பனை கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஷைக்குகள் என்ற பட்டத்தையும் சூட்டி சந்தோசப்பட்டுக் கொள்கிறது அசி புத்தகம். சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த (கப்ஸா) சிந்தனைகள் பல தகுதிகள் கொண்ட ஒரே நூல் உலகத்திலேயே அசி புத்தகம் மட்டுமாகவே இருக்க முடியும்.
அடுத்த புருடாவைப் பாருங்கள். யாராவது எதையாவது சொன்னால், சத்தம் தானே கேட்கும். அதாவது ஒலிதானே கேட்கும். ஆனால் ஆச்சர்யம், ஷைகு அப்துல் அஜீஸ் தப்பாஹ் என்கின்ற இந்த பெரியாருக்கு பேசுபவர்களின் பேச்சிலிருந்து ஒளி வீச்சு தெரியுமாம்! அதாவது வெளிச்சம் தெரியுமாம்.
இருப்பதை மாற்றியோ அல்லது இல்லாத வேறொன்றைக் கூறியோ மக்களை ஏமாற்றும் அசி ஆசிரியரை நம்பி, அவர் சொல்லித் தந்த பொய்களை மார்க்கம் என நினைத்து ஏமாந்து கொண்டிருக்கும் நபர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. வைரத்தால் ஜொலிக்கும் வீடுகள் இவர்களுக்கு கிடைக்கும் என்றெல்லாம் கூறி இவர்களுக்கு ஆறுதல் வேறு கூறி தேற்றுகிறார்.
இவர் எழுதியிருப்பதில் கிடைக்கும் அடுத்த தடயத்தைப் பாருங்கள். விட்டால் போதும் போகிற போக்கில் ஜல்லியை அள்ளிவிட்டுக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறார்.
பின்பற்றுபவர்களை இளிச்சவாயன்களாக நினைக்கிறார் போலும்!
ஏனென்றால், ஷைகு அப்துல் அஜீஸ் தப்பாஹ் என்கின்ற அந்த பெரியாருக்கு அறவே எழுதப் படிக்கத் தெரியாதாம். ஒருவரின் பேச்சில் அல்குர்ஆன் வசனங்கள் வெளிப்படும்போது, அதில் வெளிச்சம் (ஒளி) வெளிப்படுவதாகக் கூறுபவர் அந்த வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு கண் பார்வை இருக்க வேண்டும் என்றுதானே எழுத வேண்டும். அதை விட்டு, வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருப்பது போல, அந்தப் பெரியார் அறவே எழுதப் படிக்கத் தெரியாதவர் என ஏன் எழுத வேண்டும்?
அறவே குருடர்களாய் இருப்பவர்கள் வெளிச்சத்தை உணர்வால் அறிவார்கள். உணர்வால் வெளிச்சத்தை அறிவதற்கு, குருடர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. உண்மை இவ்வாறு இருக்க, சம்பந்தமே இல்லாமல், அப்பெரியார் அறவே எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை ஏன் குறிப்பிடவேண்டும்?
படிப்பவர்களையும் அதைக் கேட்கும் நபர்களையும் முட்டாள்களாக, இளிச்சவாயன்களாக, கேனையன்களாக, ஆக்கி விட்டோம் என்ற இருமாப்பில், இப்படிப்பட்ட அறிவுக்குப் பொருந்தாத விஷயங்களை எழுதி குவித்துக் கொண்டு இருக்கிறார். அல்லாஹ்வுடைய இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்த காரணத்தால் அவர்களது அந்தஸ்துக்கு அசி ஆசிரியர் அவரது கற்பனைப் பாத்திரங்களை உயர்த்திக் காட்டுவதற்காக இந்தப் பெரியாரை எழுதப் படிக்கத் தெரியாதவராகக் காண்பித்து அதில் சிறிது திருப்தி அடைந்து கொள்கிறாரோ, என்னவோ?
கண்ணியமிக்க அல்லாஹ், உலக மக்கள் பின்பற்றுவதற்காகவே இறக்கி அருள் புரிந்திருக்கின்ற அல்குர்ஆனை ஒரு மூலை யில் ஒதுக்கி வைத்து விட்டு, அமல்களின் சிறப்பு புத்தகத்தை மட்டும் இறை இல்லங்களில் படிப்பதற்கும், படிப்பதை மண்டை யாட்டிக் கேட்பதற்கும் ஆட்களைத் தயார்படுத்தி இருப்பதை அவரும் அந்த மக்களும் இமாலய சாதனையாகக் கருதி கொண்டிருக்கிறார்கள். அந்தோ பாவம்! பரிசுத்த குர் ஆனை ஓரம் கட்டிவிட்ட குற்றத்திற்காக, மறுமை நாள் இவர்களுக்கு சோதனையாக அமைந்து அந்த குர்ஆன் இவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்போது இவர்கள் அனைவரும் வேதனையில் மாட்டிக் கொள் ளப்போவது நிச்சயம் என்பதை அறிவார்களாக!
ஒருவரது பேச்சில் ஒளிவீச்சு அதாவது வெளிச்சம் ஏற்பட முடியும் என்று இவர் கூறுவது உண்மையா என்பது பற்றி பரிசுத்த குர்ஆனும், நபி வழி ஹதீஃத்களும் என்ன சொல்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்.
அல்குர்ஆன் :
அல்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் உள்ள எல்லா ஆயத்துக்களையும் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலமாக இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி அருள் புரிந்திருக்கின்றான். அத் தனை ஆயத்துக்களையும் ஜீப்ரில்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு ஓதிக் காட்டும் போது, நபி(ஸல்) அவர்கள் ஒளி வீச்சை பார்ப்பார்கள் என்று அல்லாஹு ரப்பில் ஆலமீன் அல்குர்ஆனில் எந்த ஒரு ஆயத்திலும் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் எந்த ஒரு ஹதீஃதி லும் ஒளிவீச்சைக் கண்டதாகத் தெரியப்படுத்தவும் இல்லை இதனை கீழ்காணும் ஹதீஃத்களிலிருந்து தெளிவாக நாம் அறிவோம்.
ஹதீஃத்கள் :
புகாரி பாகம் 1, ஹதீஃத் எண் 3,4,5 ஆகியவைகளில் இது சம்பந்தமாகவுள்ள செய்தியின் சுருக்கம் கீழே தரப்பட்டிருப்பதை கவனியுங்கள்.
ஹதீஃத் எண் 3 (சுருக்கமாக) :
ஹிரா குகையில் நபி(ஸல்) அவர்கள் தனித்திருக்கும்போது, ஒரு வானவர் அவர்களிடம் வந்து “ஓதுவீராக” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே” என்றார்கள். இந்நிலையை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்.
அவர் என்னைப் பிடித்து நான் சிரமப் படும் அளவுக்கு இறுகக் கட்டி அணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு, மீண்டும் “ஓதுவீராக” என்றார். “நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே” என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு என்னை இறுகக் கட்டி அனைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் “ஓதுவீராக” என்றார்.”நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்து விட்டு விட்டு “”படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் பெயரால் ஓதுவீராக” அவன் தான் மனிதனை “அலக்”கில் இருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இரட்சகன் கண்ணியம் மிக்கவன்” என்று 96வது சூரத்துல் “அலக்” அத்தியாயத்திலுள்ள சில இறை வசனங்களை ஓதிக் காண்பித்தார்.
ஹதீஃத் எண் 4 (சுருக்கமாக)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிராக் குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும், பூமிக்குமிடையே ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன், திரும்பி வந்து (கதீஜா(ரழி)விடம்) “என்னைப் போர்த்துங்கள்” என்றேன். அப்போது,
“போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே எழுவீராக! 74:1
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! 74:2
மேலும், உம் இறைவனைப் பெருமைப்படுவீராக! 74:3
உம் ஆடைகளை தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக! 74: 4
மேலும், அசுத்தங்களை விட்டு ஒதுக்கி விடுவீராக! என்பது வரை 5 வசனங்களை இறைவன் அருளினான். 74:5
ஹதீஃத் எண் : 5 (சுருக்கமாக)
“அவசரப்பட்டு நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்” (75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் விளக்கும்போது, நபி(ஸல்) அவர் களுக்கு இறைச் செய்தி அருளப்படும் போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் மூலம் புலனாயிற்று.
“வஹீயை (மனனம் செய்ய) அவசரப்பட்டு உங்கள் நாவை அசைக்க வேண்டாம்” (75:16)
ஏனெனில், அதனை (குர்ஆனை உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் மூலம்) ஓத வைப்பதும் நமது பொறுப்பாகும் (75:17).
எனவே, அதனை (அவர் ஓதும்போது ஓதுவதிலேயே கவனம் செலுத்தி) பின் தொடர்வீராக! அதாவது மவுனமாக இருந்து அதனை செவி தாழ்த்திக் கேட்பீராக! (75:18)
பின்னர் நீர் அதனை ஓதும்படிச் செய்வது நமது பொறுப்பாகும் (75:19) என்ற வசனங்களை அல்லாஹ் அப்போது அருளினான்” என்று கூறினார்கள். மேலும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் தொடர்ந்து, “அதன் பின்னர் நபி(ஸல்) அவர்களிடம், ஜிப்ரீல்(அலை) அவர்கள் வரும்போது (அவர்கள் ஓதுவதை) செவி தாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள் ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களும் ஓதினார்கள்” என்று கூறினார்கள்.
மேலே உள்ள ஹதீஃத்கள் நமக்குத் தெரிவிப்பதென்ன என்று பார்ப்போம்.
புகாரியின் முதல் பாகத்திலுள்ள மேலே கூறப்பட்டுள்ள ஹதீஃத் எண் 3ல் ஜிப்ரீல் (அலை) அவர்கள் “ஓதுவீராக” என்று கூறியவுடன் நபி(ஸல்) அவர்கள் ஒளிவீச்சைக் கண்டதாகக் கூறவில்லை. மாறாக ஜிப்ரீல் (அலை) அவர்களின் குரலை (ஒலியை) செவியேற்றதால்தான் ஓதுவீராக என்ற குரலுக்கு “நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே” என்று பதிலளித்தார்கள்.
ஹதீஃத் எண் 5ன் இறுதியில் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் மிகத் தெளிவாக, “நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வரும்போது(அவர்கள் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள் ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களும் ஓதினார்கள்” என்று கூறுகிறார்கள்.
ஒருவர் சொல்லக்கூடிய வாசகத்திலிருந்து அது குர்ஆனுடைய ஆயத்தா, ஹதீஃத் குத்ஸியா, ஹதீஃத் நபவியா அல்லது பொய் யான ஹதீஃதா என்பதைத் தனித்தனியாகப் பிரித்து சொல்ல மனிதனால் முடியும் என்று, பச்சைப் பொய்யை அவிழ்த்து விடும் அசி புத்தகத்தின் கூற்று நடக்கக்கூடிய சாத்தியம் தான் என்பது உண்மையானால், தங்கள் வாழ்நாளை தியாகம் செய்த எண்ணிக்கையில் அடங்காத ஹதீஃத்கலை வல்லுனர்கள், மாமேதைகள் ஹதீஃத்களை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டி ருக்காதே! அசி புத்தக ஆசிரியர் பொய்யான ஹதீஃத்களை மெய்யான ஹதீஃத்களாகக் காட்டி “ஷைகுல் ஹதீஃத்” என்ற டைட்டிலை மிகச் சுலபமாகத் தட்டிச் சென்று விட்டார். இது இவரது முதல் பக்கம் மறு பக்கம் ஹதீஃத்கலை வல்லுனர்கள் அவர்களது வாழ்க்கையை அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ததாக வானளாவப் புகழ் கிறார். ஏன் இந்த கள்ளவேடம்?
குர்ஆனும், ஹீதஃதும் ஒன்றைத் தெளிவாக்கி விட்ட பின், அசி ஆசிரியருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ தமது கற்பனைக் கதாநாயகன் ஷைகு அப்துல் அஜீஸ் தப்பாஹ்வை அல்லாஹ்வின் தூதரைப் போல எழுதப் படிக்கத் தெரியாதவராகக் காட்டி, நயவஞ்சகத்தனமான இன்னும் ஒருபடி மேலே போய் அவரது கதாநாயகரை அல்லாஹ்வின் தூதரை விட அந்தஸ்தில் பெரிய ஆளாக அவரது ரசிகர்களிடம் உயர்த்திக் காட்டிவிட்டார். இது அவரது வழக்கமான பாணி தானே. அதற்கான கூலி அல்லாஹ்விடம் இவருக்கு கிடைக்கப் போவது நிச்சயமாக உறுதி! உறுதி.