எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழும் முஸ்லிம்களுக்கு சுவனம் பரிசாகக் கிடைக்கும் என்று இறைவன் வாக்களிக்கின்றான். அந்த மகத்துவம் மிக்க சுவனத்தில்…. ”தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும்……..” – அல் குர்ஆன். 47:15
உயர்ந்த சுவனத்தில் பரிசாக கொடுக்கப்பெரும் பாலும்,தேனும், மதுவும் எப்படி எதனால் உருவாக்கப்படுகின்றது என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதே சமயம் இவ்வுலகில் மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய குடிக்கும் இனிய பானங்களாகிய பால்,தேன், மற்றும்முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட மது போன்றவை எவ்வாறு உருவாகிறது? என்பதை கவனித்து ஆய்வு செய்து பார்த்தோம் என்றால்…
உலகின் உயிர் ஜீவன்களுக்கு ஆதாரமான மேகத்திலிருந்து பொழியும் மழை நீரும், ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற கால்நடைகள் வழங்கும் பால், மற்றும் பேரீச்சை,திராட்சை பழங்கள் தரும் மது, தேனீக்கள் தரும் இனிமையான தேன். இவை அனைத்து பானங்களும் பல்வேறு வகைகளில் இருந்து வந்த போதிலும்…இந்த பானங்கள் அனைத்தும் ஒரே அடிப்படை பாக்டீரியாக்கள் மூலமே உருவாக்கப்படுவதாகவே அல் குர்ஆன் தொடர் வசனங்கள் கூறுகின்றன.எப்படி? என்று பார்ப்போம்.
இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக்கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான்.- நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் தக்க அத்தாட்சி இருக்கிறது. – அல் குர்ஆன்.16:65.
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு,மாடு, ஒட்டகம், போன்ற) கால்நடைகளிலும் தக்க படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாக) புகட்டுகிறோம். – அல் குர்ஆன். 16:66
பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும்,நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும்சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. – அல் குர்ஆன். 16:67
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “ நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள் (என்றும்) உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பல வித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது;அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்கவல்ல) சிகிச்சை உண்டு;நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. – அல் குர்ஆன். 16:68
வான் மழை பொழியும் பாக்டீரியா நுண்ணுயீர்கள்.
எல்லா குடி பானங்களுக்கும் அடிப்படையான மழை நீர் எப்படி உருவாகிறது என்று எல்லோருக்கும் தெரியும். அதாவது வான் மேகங்கள் இணைந்து மழை பொழிவது.ஆனால் நம் மக்களுக்கு தெரியாத மழை பொழிவு முறைதான். நுண்ணுயீர் பாக்டீரியா மழை பொழிவு. (Bio Precipitations Rain).வான் மேகத்திலுள்ள பாக்டீரியா நுண்ணுயிர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருவுற்று ((Fertilization) மழை நீரை பொழியச் செய்வதாக .அல்லாஹ் கூறுகிறான்.
(சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயமாக அல்லாஹ்தான் அடுக்குகின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர் அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீங்கள் காண்கிறீர்கள்… –அல் குர்ஆன்.24:43.
மேகம் கருக்கொள்ளும்படியான காற்றுகளையும் நாமே அனுப்பி வைக்கின்றோம் அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கின்றோம். –அல் குர்ஆன்.15;22
உபைத் பின் உமைர் அல்லைஸி (ரஹ்) அவர்கள் கூறியதாவது.” அல்லாஹ் ஆரம்பமாக மழைக்காற்றை (முபஷ்ஷிரா) அனுப்பி வைக்கிறான்.அது பூமியை கூட்டி சுத்தப்படுத்துகிறது.பின்னர் ஒன்றிணைக்கும் காற்றை (மு அல்லிபா) அனுப்புகிறான்.அது மேகங்களை ஒன்றிணைக்கிறது.பின்னர் சூல் கொள்ளச் செய்யும் காற்றை (லாவாகிஹ்) அனுப்புகிறான்.(அதையடுத்து மழை பொழிகிறது.) தப்ஸீர் இப்னு கஸீர் – 4. பக்கம்.1022. ( ரஹ்மத் பதிப்பகம்.)
ஆண்,பெண் உயிரினங்கள் சேர்ந்தால் மட்டுமே கருவுறுதல் நடைபெறும்.இதைக் குறிக்க அரபியில் “லவாகிஹ்”(Impregnate or Fertilization) பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வான் மேகங்களில் நிகழும் இந்த கருவுறுதல் இணைவுக்கு காரணியாக இருப்பது Pseudomonos syringae என்ற பாக்டீரியா நுண்ணுயிரி என்று நவீன அறிவியல் கூறி, அல்குர்ஆன் வசனங்களை மெய்ப்பிக்கின்றது. உயிருள்ள பாக்டீரியாக்களிலிருந்து அல்லாஹ் உயிரற்ற மழை நீரை இறக்கி, இதைக்கொண்டு இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான்.
https://en.wikipedia.org/wiki/Bioprecipitation
பாலை உருவாக்கும் பாக்டீரியா நுண்ணுயீர்கள்
ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற கால்நடைகளிலிருந்து பால் எவ்வாறு உருவாகிறது? அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சயமாக உங்களுக்கு ( ஆடு,மாடு,ஒட்டகம், போன்ற) கால்நடைகளிலும் தக்க படிப்பினை இருக்கின்றது;அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாக) புகட்டுகிறோம். – அல் குர்ஆன். 16:66.
கால்நடைகளில் பால் உருவாகும் இடமாக, அவைகளின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையில் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆம்! இலை,தழை,புற்களைத் தின்று அசைபோடும் கால் நடைகளுக்கு நான்கு இரப்பைகள் தனித்தனியாக இருக்கின்றன.அவைகள். ரூமென் (Rumen,) ரெடிகுழம் (Reticulum), ஓமசம் (Omasum ,அபோமசம் (Abomasum) என்பனவாகும்.
இந்த ரூமென் என்று சொல்லப்படும் இரைப்பையில் கோடிக்கணக்கான நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன.இவைகள் வெளியிடும் என்ஸைம், மெல்லப்பட்டு அரைத்த புல்,தாவரங்களை கூழாக்கி அவற்றிலிருந்து சத்துக்களைப் பிரிக்கிறது.இந்த மைக்ரோப்ஸ் என்னும் நுண்ணுயிர்கள், எண்ணிக்கையானது ஒரு மில்லி லிட்டர் நீரில் சுமார் 25 பில்லியன் பாக்டீரியாக்களும், பத்து மில்லியன் புரோடோஸா (Protozoa) க்களும்,ஆயிரக்கணக்கான பூஞ்சைகளும் (Fungi and Archaea) இருக்கின்றன.ஒரு பசுமாட்டில் சுமார் 1,௦௦௦,௦௦௦,௦௦௦,௦௦௦,௦௦௦ குவாடிரில்லியன் நுண்ணுயிர்கள் வசிக்கின்றன.ஒவ்வொன்றும் தனித்தனி பணிகளைச் செய்கின்றன.
ரூமென் எனப்படும் இரைப்பை சாண அறையில் வாழும் நுண்ணுயிர்களே பால் சத்துக்களை தனியாக பிரித்து மாட்டின் மடுவுக்கு அனுப்புகிறது.இரப்பை சாண அறையில் பாலை பிரித்தெடுக்கும் பிரத்யேக நுண்ணுயிர் ஜீன்களை இன்று அறிவியல் உலகம் அடையாளம் கண்டுள்ளது.இதன் மூலம் அல் குர்ஆனின் 16:66 வசனம் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
read:https://phys.org/news/2018-02-dna-cow-stomachs-aid-meat.html
ஆடு,மாடு,ஒட்டகங்களில் இருந்து பெறப்படும் பாலை உற்பத்தி செய்வது அந்த விலங்கினங்கள் அல்ல.அவற்றின் வயிற்றில் உருவாகும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் வெளியிடும் என்ஸைம் நொதிகளே, (Enzyme Fermentation process) பசும் புற்களை பாலாக மாற்றுகிறது. வான் மேகங்கள் பொழியும் மழை நீரும் நுண்ணுயிர் பாக்டீரியாக்களால் உருவாவது போலவே ,மாட்டின் பாலையும் பாக்டீரியா நுண்ணுயிர்களே உருவாக்குகின்றன.
மதுவை உருவாக்கும் பாக்டீரியா நுண்ணுயீர்கள்
பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும்,நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும்சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. – அல் குர்ஆன். 16:67
பேரிச்சை,திராட்சை பழங்களில் இருந்து மது உண்டாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான். எப்படி? பொதுவாக இன்று உலகளவில் திராட்சை பழங்களில் இருந்தே ஒயின் போன்ற மது அதிகம் தயாரிக்கப்படுகின்றன.திராட்சை சாறு எப்படி மதுவாக மாறுகிறது?இயற்கையிலேயே அல்லாஹ் அப்பழத்தின் மேற்புறத் தோலில் வெண்மையான மாவு (Blooms) போன்ற படலம் இருக்கும். “சாக்ரோமைசிஸ் செர்விசஸ்” (Saccharomyces Cerevises) என்னும் ஈஸ்ட் நுண்ணுயிர்கள்களே அவைகள். இயற்கையாகவே அல்லாஹ் இப்பழங்களின் தோலின் மீது நுண்ணுயிரை இணைத்தே படைத்துள்ளான்.
திராட்சையை பிழிந்து சாறு எடுத்து அதன் தோலுடன் ஊற வைக்கும்போது திராட்சை தோலில் உள்ள ஈஸ்ட் நுண்ணுயிரிகள் இனிப்பில் பலமடங்காக பல்கிப்பெருகி என்சைம் ஸைமாஸ் நொதியை (zymase) சுரக்கின்றன. இவை இனிப்பில் உள்ள குளுக்கோஸை சிதைத்து (Fermentation) ஆல்கஹால்,மதுவாக மாற்றி கார்பன் டை ஆக்சைடை வெளி விடுகின்றன.
. http://en.wikipedia.org/wiki/Fermentation_(wine)
தேனீக்கள் வயிற்றில் நுண்ணுயீர் பாக்டீரியாக்கள் .(Honey bee gut microbiomes)
வேலைக்கார தேனீக்கள், மலர்களின் பூந்தாது மகரந்தத்தை உறுஞ்சி தம் வயிற்றில் சேமிக்கின்றன.இதன் வயிற்றில் உள்ள (Lactobacillus ) பாக்டீரியாக்கள் வெளியிடும் என்சைம்கள் நெக்டார் எனும் பூந்தாதை தேனாக (Processing Pollen) மாற்ற உதவுகின்றன. (Saccharide breakdown and fermentation by the honey bee gut microbiomes)
researchnews.plos.org/2017/12/12/processing-pollen-how-honeybee-gut-bacteria-help-digest-pollen/
இதைத்தான் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்,
அதன் வயிற்றிலிருந்து பல வித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது;அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்கவல்ல) சிகிச்சை உண்டு;நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. – அல் குர்ஆன். 16:68
ஆடு,மாடுகளின் வயிற்றிலுள்ள நுண்ணுயீர் பாக்டீரியாக்கள் மூலம் பால் உற்பத்தியாவது போலவே, தேனீக்களின் வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களே தேனை (Fermentation Processingஎனும்) வேதியல் முறையில் உருவாக்குகின்றன.
அல் நஹ்ல் எனும் தேனீ அத்தியாயத்தில் தொடர்ந்து வரும் வசனங்களில் 16:65 முதல் 16:68 முடிய, ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் “ இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” என்று அல்லாஹ் சொல்கிறான்..அல்லாஹ்வின் கட்டளைப்படி அத்தாட்சிகளை தேடி சிந்திக்கும் போது அதனுள் உள்ள அறிவியல் உண்மைகளை உணர முடிகிறது.மழைநீர்,பால்,தேன்,மது போன்ற நான்கு பானங்களும் நம் கண்களுக்கு தெரியாத நுண்ணுயீர் பாக்டீரியாக்களால் நமக்காக உருவாக்கப்படுகிறது.
குறிப்பாக,பால்,தேன்,மது என்ற மூன்று பானங்களும் கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயீர் பாக்டீரியாக்கள் வெளியிடும் என்ஸைம் நொதிகளால் (Fermentation processing)முறையில் தயாரிக்கப்படுகின்றன.ஆனால் இம்மூன்று பானங்களில் பால்,தேன் இரண்டை மட்டும் ஹலாலாக்கிய அல்லாஹ்,மதுவை மட்டும் நமக்கு ஹராமாக்கிய காரணமென்ன? சிந்திக்கும் போது ஒரு உண்மை புரிகிறது.
பாலும் தேனும் இயற்கை பானங்கள் என்று அல்லாஹ் அனுமதிக்க காரணம், இவை இரண்டும் இயற்கையாகவே மாடு,மற்றும் தேனீயின் வயிற்றில் இருந்து அல்லாஹ் நமக்குக் கொடுக்கின்றான்.ஆனால் மதுவானது மனிதக் கரங்களால் வெளி உலகில் உருவாகி களங்கப்பட்டு ஹராமாகிறது. “பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும்,நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்”.16;67.என்று அல்லாஹ்சொல்கிறான். மனிதக் கரங்கள் பெரும்பாலும் அழிவையே மனிதனுக்கு கொடுக்கின்றன.அல்லாஹ் மனிதர்களுக்கு அணுவளவும் தீங்கிழைக்க மாட்டான்.
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை;எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள். – அல் குர்ஆன்.10:44
உலக உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ உதவும்….. நீர்,பால்,தேன்,மது போன்ற பானங்கள் அனைத்தும் ஒரு செல் உயிரியான பாக்டீரியாக்கள் மூலமே நமக்கு கிடைக்கின்றது. கண்ணில் காண முடியாத இவ்வுயிரிகளே இவ்வுலகை உயிர்ப்போடு வைத்துள்ளது.இந்த ஒரு செல் உயிரினங்கள் இல்லையெனில் உயிர்கள் இல்லை உலகமே இல்லை.
இவர்களையும், பூமியில் முளைப்பிக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் அறியாத மற்றவை(பாக்டீரியா நுண்ணுயிர்)களையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன். – அல் குர்ஆன்.36:36.