மே 2018
ஷஃபான் – ரமழான்-1439
தமிழ்நாடும்! காவிரி நீரும்!!
காவிரி நதி நீர் பகிர்மானம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. 24 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த தீர்ப்பு இது. கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவை இத்தீர்ப்பு இன்னும் குறைத்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்த மேலாண்மை வாரியம் அமைப்பதை பாஜக அரசு தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு வாழ்வா? சாவா? எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்தும் விட்டனர். தங்களின் வாழ்வாதாரங்களுக்கு தங்களிடம் எதுவும் இல்லை என்ற நிலையில் இருந்து வருகின்றனர்.
இத்தீர்ப்பை அமுல்படுத்தி நிறை வேற்றுவதற்கு மத்திய பாஜக அரசு காலம் கடத்திக் கொண்டே இருக்கிறது. மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்துவிட்டால், கர்நாடக மக்கள் வெகுண்டு எழுவார்கள். இதனால் வருகிற மே மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.ஜே.பியின் வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற பயத்தால், மத்திய அரசு தமிழ்நாட்டை கண்டுகொள்ளாத கேவலமான சூழல் நடந்து கொண்டிருக்கிறது. எனவே போராட்டங்கள் ஏற்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மோடியின் மவுனம் அடுத்தடுத்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும்படி ஆகிவிட்டது.
மத்தியிலிருந்து அரசியல் பேசுபவர் கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசி வருகின்றனர். உணர்வு மிக்க போராட்டங்களை பா.ஜா.கவினர் இழிவுபடுத்தி பேசிவருகின்றனர். இந்நிலையில் பல அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த போராட்டங்களும் தமிழக விவசாயிகளின் உணர்வை பிரதிபலிப்பவைகளாகவே இருக்கின்றன. எனவே அரசு இதனை கேட்டாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுமேயானால் பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டில் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும்.
இந்த நிலையில் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரின் வருகைக்கு மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டங்கள் வீரியம் பெற்றன. போராட்டங்களுக்கு ஆதரவு பெருகி வந்தது. சமூக வலைதளங்கள் “திரும்பிச் செல்லுங்கள் மோடி”ஹேஷ்டேக்” சர்வதேச அளவில் ட்ரெண்டிங் ஆக இருந்தது. தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாகவும், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் தான் இந்த போராட்டங்களைப் பார்க்க முடிகிறது. சென்னை வந்த பிரதமர், நதிநீர் விஷயமாக ஒரு வார்த்தைக் கூட பேசாமல் திரும்பிச் சென்றது தமிழக மக்களுக்கு அவமானமாகவும், ஏமாற்றமாகவும் அமைந்தது.
பா.ஜா.க. மீதான எதிர்ப்பு இந்தியாவில் பரவலாக இருந்தாலும், தமிழ்நாட்டில் தான் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது வெற்றியை நோக்கி பயனிப்பதாகவுமிருக்கிறது. அதேநேரத்தில் ஆட்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளிடையே இந்த ஒற்றுமை குலைக் கப்பட்டு விடுமோ என்ற ஐயமும் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் பலன் கிடைப்பது பாழாகி விடுமோ என்று அச்சம் கொள்ளும்படியும் இருக்கிறது.