தராவீஹ் தொழுகைக்கு கூலி வாங்கலாமா?
S. முஹம்மது சலீம், ஈரோடு
மார்க்கப் பிரசாரங்கள் செய்வதற்கோ, இமாமத் செய்வதற்கோ கூலி வாங்கக் கூடாது என்று குர்ஆனும், ஹதீஃதும் தெளிவுபடுத்தி கொண்டிருக்க அந்த போதனைகளையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாமல் சுயவிளக்கம் கொடுத்து மெளலவிமார்கள் மார்க்கத்தை தொழிலாக்கி வருகிறார்கள். இவர்களிடம் குர்ஆன், ஹதீஃதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று கூறினால் எங்கள் மத்ஹப் நூல்களில் இவ்வாறு கூறவில்லை என்று எதிர்வாதம் செய்து தங்களது தவறுகளை நியாயப்படுத்துவார்கள். இவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்த மத்ஹபையாவது முறையாக பின்பற்றுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இவர்களது உலக வாழ்க்கையை பாதிப்படைய செய்யும் வகையில் சட்டங்கள் ஏதேனும் மத்ஹப் நூற்களில் எழுதப்பட்டிருந்தால் அதையும் கண்டுக் கொள்ளமாட்டார்கள் உதாரணத்திற்கு தராவீஹ் தொழ வைக்க கூலி வாங்கலாமா என்பதை குறித்து இவர்களால் மதிக்கப்படும் மத்ஹப் நூற்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
தராவீஹில் குர்ஆனை ஓதுவதற்கு கூலி….?
தராவீஹில் குர்ஆனை ஓதும் ஹாஃபிழ் பணம் கேட்பதும், அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதும் இரண்டுமே மார்க்கத்தில் விலக்கப்பட்ட ஹராமான செயலாகும். இவ்வாறு செய்யும்போது குர்ஆனை ஓதிய, குர்ஆனைக் கேட்ட இரு தரப்பாருக்கும் நன்மைக்கு பகரமாக பாவமே ஏற்படும். நூல்கள் : ஷாமி பாகம் 6 பக்கம் 56 ஃபதாவா ரஹீதிய்யா பாகம்1 பக்கம் 392 ஃபதாவா மஹ்மூதிய்யா பாகம்7 பக்கம் 515 அஹ்ஸனுல் ஃபதாவா பாகம் 7 பக்கம் 171 ஜவாஹிருல் ஃபிக்ஹ் பாகம் 1 பக்கம் 382 தராவீஹ் தொழவைக்கும் ஹாஃபிழ்களுக்கு நிர்ணயம் செய்யப்படாத தொகை வழங்கப்படுகிறது. இதனை வழங்கப்படாத சூழ்நிலையில் ஹாஃபிழ்களிடமிருந்து எந்த வித எதிர்பார்ப்பும் இல்லையயனில் வழங்கப்படும் தொகை கூலியாகாது. எனவே இம் முறையில் கொடுக்கப்படும் தொகை ஆகுமானதாகும். நூல்: கிஃபாயத்துல் முஃப்தி பாகம் 3, பக்கம் 350 ஹதியா என்ற பெயரில்….? ஹதியா என்ற மாற்றுப் பெயரை உபயோகித்தாலும் கூட அதை ஊதியமாகவே கருதப்படுகிறது.
காரணம் தொழ வைக்கும் ஹாஃபிழ்கள் தங்களுக்கு ஏதாவது கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையின் மீதே தொழ வைக்கிறார்கள் மக்களும் ஹாஃபிழ்கள் ஊருக்குப் போகும்போது ஏதாவது கொடுத்து அனுப்பவேண்டும் என கட்டாயக் கொள்கையில் இருக்கிறார்கள். இப்படி இருவருமே கொடுக்கல் வாங்கலில் பரஸ்பர நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருப்பதால் ஹதியா என்ற பெயரில் வாங்குவதும், கொடுப்பதும் கூடாது. நூற்கள்: ஷாமி, பாகம் 6, பக்கம் 55 ஃபத்வா தாருல் உலூம் பாகம் 4, பக்கம் 263 தற்காலிக இமாமாக நியமனம் செய்வது…? இங்கு அசல் நோக்கம் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஓதுவதுதானே தவிர இமா மத் அல்ல.
எனவே இச்சூழ்நிலையிலும் பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே ஹராமாகும் என மெளலானா அஷ்ரஃப் அலீ தனவீ(ரஹ்) குறிப்பிடுகிறார்கள். நூல்: இம்தாதுல் ஃபதாவா பாகம் 1, பக்கம்322 மத்ஹபை ஆதரிக்கும் நூல்களிலிருந்து நான்கு ஃபத்வாக்களை நாம் எழுதியுள்ளோம் இவற்றை ஒன்றுக்கு பலமுறை படித்துப் பாருங்கள். தராவீஹ் தொழுகைக்கு கூலி வாங்குவது ஹராம் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கும் இந்த ஃபத்வாவை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்திய ஹாஃபிழ் யாரேனும் உண்டா? மத்ஹபு நூற்களில் ஹராம் என்று கூறப்பட்டிருந்தாலும் நாங்கள் பொருளாதார பேரத்தின் காரணமாக ஹராமான வழியில் துணிந்து சம்பாதிப்பவர்கள் என்ற உண்மையை கூறிய மெளலவிகள் யாரேனும் உண்டா?
தங்களுடைய வருமானத்தை பாதிப்படைய செய்யும் வகையில் உள்ள இந்த ஃபத்வாக்களை தப்பித்தவறி வாய்த் தடுமாறிக்கூட சொல்ல மாட்டார்கள் தங்களது வருமானத்தை காப்பாற்றுவதில் குறியாய் இருப்பவர்கள். தராவீஹ் தொழுகைக்கு கூலி நிர்ணயம் செய்யப்படாத நிலையில் ஹாஃபிழ்களும் பணத்தை எதிர்பார்க்காத நிலையில் வழங் கப்படும் தொகை ஆகுமானதாகும் என்ற இரண்டாவது ஃபத்வாவை எடுத்துக் கொள்வோம்.
தராவீஹ் தொழுகைக்கு கூலி நிர்ணயம் செய்யாமல் தராவீஹ் தொழ வைக்கும் ஹாஃபிழ் நாம் அறிந்தவரை தமிழகத்தில் எங்குமே கிடையாது. மாறாக ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு பல மாதங் களுக்கு முன்பே பள்ளிவாசல் நிர்வாகத்தின ருடன் தொடர்பு கொண்டு இத்தனை ஆயி ரம் கொடுத்தால் நான் தராவீஹ் தொழ வைப்பேன் என்று தனது குரலுக்கு ஏற்ற வாறு பேரம் பேசிய பிறகே எல்லா ஹாஃபிழ் களும் தராவீஹ் தொழ வைக்கிறார்கள். சென்ற வருடம் தராவீஹ் தொழவைக்க கொடுத்த பணத்தை விட சற்று குறைத்து இந்த வருடம் கொடுத்தால் அதை மனப் பூர்வமாக எந்த மெளலவியும் ஏற்றுக் கொள்ளமாட்டார். மாறாக அடுத்த ஆண்டு அதிக பணம் கொடுக்கும் மற்றொரு பள்ளி நிர்வா கத்தைத் தேடி அலைவார்கள்.
இதுவே மெளலவிமார்களின் எதார்த்த நிலை. எங்கள் மஹல்லாவில் தராவீஹ் தொழ வைக்கும் ஹாஃபிழ்களுக்கு பணம் ஏதும் நிர்ணயம் செய்யாமலே தொழவைக்கின் றார் என்று மெளலவிகளுக்கு சிலர் வக்காலத்து வாங்குகின்றனர். நிர்ணயம் செய் தால் கிடைக்கும் பணத்தை விட அதிகமான பணம் இவர் கேட்காமலே (ஹாஃபிழ் விரும்பிய அளவு) கொடுத்து விடுவதால் இவர்களுக்கு பேரம் பேசவேண்டிய தேவை ஏற்படாமல் போய் விட்டது. இத்தகைய ஹாஃபிழ்களை தராவீஹ் தொழ வைத்த பிறகு வெறுங்கையுடன் ஊருக்கு அனுப்பிப் பாருங்கள் அவர் அடுத்தாண்டு உங்கள் மஹல்லாவுக்கு நிச்சயமாக வரமாட்டார். இந்த ஹாஃபிழ்கள் தராவீஹில் ஓதப்படக்கூடிய குர்ஆனை மக்கள் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டு தொழவைக்கவில்லை. தனது வருமானத்திற்காக மட்டுமே தராவீஹ் தொழ வைக்கிறார்கள். இதை எந்த ஹாஃபிழும் மறுக்க முடியுமா? எந்த பள்ளியில் அதிக பணம் கொடுப்பார்களோ அந்த பள்ளியை தக்க வைத்துக் கொள்வதில் குறியாக இருக்கும் இந்த மெளலவிகள் நாங்கள் குர்ஆனை ஹதீஃஐத்தான் பின்பற்றுகிறோம் என்று சொல்வது பொய்.
அதேபோல நாங்கள் மத்ஹபை பின்பற்றுகிறோம் என்று கூறுவதும் பொய். இவர்களது வருமானத்திற்கு ஆதரவாக யாராவது எதையாவது எழுதி வைத்திருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி அதை அப்படியே பின்பற்றுவார்கள். முஸ்லிம் களே! அற்பமான உலக வாழ்க்கையில் சொகுசாக வாழவேண்டும் என்பதற்காக மார்க்கத்தை கேடயமாக பயன்படுத்தி மத்ஹபு முகமூடி அணிந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திவரும் இந்த மெளலவிகளை இனியுமா நம்பப் போகிறீர்கள்? நீங்கள் அறிந்து கொண்டே உண்மை யைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். குர்ஆன் : 2:42
குறிப்பு : சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த முஃப்தி S.A.H. உமர் ஃபாரூக் மழாஹிரி, மெளலவி J.அப்துர் ரஹீம் ஸிராஜி ஆகியோர் தொகுத்த “மார்க்கச் சட்டங்களின் தெளி வான தீர்ப்புகள்” என்ற புத்தகத்திலிருந்த மொழிபெயர்ப்பையே நான் இந்த கட்டுரைக்கு பயன்படுத்தியுள்ளேன். இந்த புத்தகம் மக்களுக்கு பயனுள்ள புத்தகம் என்று புரசைவாக்கம் முன்னாள் இமாம் K.A.நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தராவீஹ் தொழுகைக்கு கூலி வாங்கக்கூடாது என்பது எந்தளவு உண்மையோ அதேபோன்றே தராவீஹ் என்ற பெயரில் ஒரு தொழுகை கிடையாது என்பதும் உண்மை.