ஐயம் : குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் இருக்கும் போதே உடல்நிலை குறைவினால் அல்லது இயலாமையினால் தயம்மும் செய்யலாமா? அந்நஜாத் வாசகி.
தெளிவு: குளிப்பு கடமையான நிலையில் உடல் நலக்குறைவு அல்லது இயலாமை போன்ற காரணங்களினால், மண் கொண்டு தயமம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்ஆனில் 4:43, 5:6 வசனங்களில் தயமம் பற்றி விவரித்து உள்ளான். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது, நீங்கள் கூறுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள். அன்றியும், குளிப்பு கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை பள்ளிக்குச் செல்லா தீர்கள், (பள்ளிவாசல் வழியாக) பாதையை கடந்து சென்றால் தவிர, இன்னும், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது மலஜலம் கழிக்குமிடத்திலிருந்து வந்தால் அல்லது பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்துகொள்ள) தண்ணீரைப் பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்.
(இதன் பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (4:43) நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள், உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்); நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்க கடமைப்பட்டோராக) இருந்தால் (குளித்து) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்; தவிர, நீங்கள் நோயாளிகளாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மலஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களை தீண்டி (உடல் உறவுக் கொண்டு) இருந்தாலும், (உங்களை சுத்தப்படுத்திக் கொள்ள) நீங்கள் தண்ணீரைப் பெறாவிட்டால், சுத்தமான மண்ணை நீங்கள் நாடி (இரு கைகளால் அடித்து) அதிலிருந்து உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும், தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை; ஆனால், அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும், இன்னும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். (5:6)
நபி(ஸல்) அவர்களின் அனுமதி :
1. ஹதீஃத் ஆதாரம் : நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; “எனக்கும் என் சமூகத்திற்கும் பூமி முழுவதும் தொழுகை நடத்தும் இடமாகவும் தூய் மையானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஆதலால், என் சமுதாயத்தின் எந்த ஒரு மனிதருக்கும் எங்காவது தொழுகை நேரம் வந்து விட்டால், தன்னைத் தூய்மை செய் யும் பொருள் அவருக்கு அருகிலேயே உள்ளது.” (அஹ்மத்)
2. ஹதீஃத் ஆதாரம் : இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) கூறுகின்றார் : நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அங்கே அண்ணலார் எங்களுக்காக தொழவைத்தார்கள். அப்போது (தொழாமல்) விலகி நின்ற ஒருவரைக் கண்டு, அவரிடம் நபிகளார் கேட்டார்கள்; “ஏன் தொழவில்லை?” “எனக்கு ஜனாபத் ஏற்பட்டுள்ளது, தண்ணீ ரும் இல்லை” என்று அவர் கூறினார். நபி (ஸல்) கூறினார்கள்; “மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் போது மானதாகும்.” (புகாரி, முஸ்லிம்)
3. ஹதீஃத் ஆதாரம் : அம்ர் இப்னுல் ஆஸ்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “தாதுஸ்ஸலாஸில்” என்ற போருக்கு நான் அனுப்பப்பட்டபோது குளிர் கடுமையாக இருந்தது. அத்துடன் எனக்குக் குளிப்பும் கடமையானது, குளித்தால் இறந்துவிடுவேன் என்று எனக்கு பயம் உண்டானது. எனவே, தயம்மும் செய்து உடன் வந்த தோழர்களுக்கு இமாமாக ஸுபுஹ் தொழுகையைத் தொழ வைத்தேன். நாங்கள் நபிகளாரிடம் வந்தபோது நடந்த சம்பவத்தைத் தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) என்னிடம் கேட்டார்கள். “அம்ரே! உங்களுக்குக் குளிப்புக் கடமையான நிலையில் தோழர்களுக்கு ஸுபுஹ் தொழுகையைத் தொழவைத்தீர்களா?” நான் கூறினேன். “ஆம்! அல்லாஹ்வின் இந்த வசனம் என் நினைவுக்கு வந்தது; “உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்கள் மீது அளப்பறிய கருணை புரிபவனாக இருக்கின்றான்.
எனவே, நான் தயம்மும் செய்து தொழ வைத்தேன்.”அது கேட்ட அண்ணலார் சிரித்தார்கள். ஒன்றும் சொல்லவில்லை. (அஹ்மத், அபூதாவூத், ஹாகிம், தாரகுத்னி, இப்னு ஹிப்பான் போன்றோர் இதனை அறிவிக்கின்றார்கள். இமாம் புகாரி அறிவிப்பாளர் வரிசைக் கூறாமல் பதிவு செய்துள்ளனர்.) இதில் நபி(ஸல்) அவர்களின் மெளன மான அனுமதி உள்ளது. ஏனெனில் தவறான ஒரு காரியத்தை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தண்ணீர் அருகில் இருந்தாலும் அதனை பயன்படுத்தினால் உடலுக்கு ஏதாவது தீங்கு ஏற்படும் என்று அஞ்சினால் தயம்மும் செய்ய அனுமதி உள்ளது என்று அறியமுடிகிறது.
ஐயம் : முஸ்லிம் அல்லாதவர்கள் மரணித் தால் அடக்கத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது கூடுமா? சுல்தான்ஜி, ஆத்தூர்.
தெளிவு : முஸ்லிம் அல்லாதவர் அடக்கத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளலாம். அது சமயம், சடங்குகளில் கலந்து கொள்ளக் கூடாது. நமக்கு நெருக்கமானவர்கள் இறக்கும்போது அடக்கத்தில் கலந்து கொள்வது கூடும் என்று பின்வரும் ஹதீஃத் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அலீ(ரழி) கூறுகின்றார்; “முதியவரும் வழிதவறியவருமான உங்களது சிறிய தந்தை இறந்துவிட்டார்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “நீர் சென்று உமது தந்தையை அடக்கம் செய்வீராக. வேறு எதுவும் செய்ய வேண்டாம். பின்னர் நேராக என்னிடம் வருவீராக”. அலீ(ரழி) கூறுகின்றார்; நான் சென்று அவரை அடக்கம் செய்தேன். பின்னர் நேராக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபிகளாரின் உத்தரவுப்படி நான் குளித்தேன். பின்னர் எனக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித் தார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸயீ, பைஹகீ)