அப்துர் ரஹ்மான், திருச்சி
இன்று முஸ்லிம் சகோதரர்களிடையே விபச்சாரம் பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதை விட கொடிய குற்றமான புரோகிதம் குற்றமாகவே பார்க்கப் படுவது இல்லை. காரணம் குர்ஆனை சுயமாக படித்து புரிந்து கொள்ள முயலாமல் மவ்லவிகள் பயான்கள் மூலம் குர்ஆனை விளங்கி கொள்ள முயல்வது தான். மவ்லவிகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான உண்மைகளை கூற மாட்டார்கள். காரணம் மக்கள் சொத்துக்களை தவறாக உண்பது தான், இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “நிச்சயமாக மதகுருமார்களிலும், துறவிகளிலும் பெரும்பாலோர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள், மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்…” (அல்குர்ஆன் : 9:34)
ஆனால் குர்ஆன் சொல்ல சொல்வது என்ன? “நாங்கள் செய்ய ஏவப்பட்டிருக்கும் இந்த இறைப் பணிக்கு மக்களாகிய உங்களிடம் கூலி-சம்பளம்-ஊதியம் கேட்கவில்லை. அது எங்கள் இறைவனிடமே இருக்கிறது” என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்த இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். (பார்க்க : 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:83) முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளிலிருந்து, கடமையான மார்க்கப் பணியை ஒரு போதும் கூலி-சம்பளத்திற்குச் செய்யக் கூடாது.
மனித குலத்திற்கே சொந்தமான இறுதி வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் குர்ஆனை ஆதத்தின் சந்ததிகள் அனைவரும் எவ்வித இன, மொழி, மத பாகுபாடுமின்றி அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் படித்து விளங்க முற்பட்டால் 29:69 இறை வனின் வாக்குறுதிப்படி அவர்கள் நேர்வழியை எளிதாக அடைந்து கொள்ள முடியும். கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டி ருக்க ஹதீஃத்கள் இது பற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
“குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற் படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்) “எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங் காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம் கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்) மேலே நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாமரனுக்கு அவனது தாய் மொழியில் எடுத்துச் சொன்னால் அவற்றைக் காது கொடுத்துக் கேட்டு மனதில் இருத்திக் கொண்டால், கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் அறவே கூடாது. கொடிய ஹராம் என்பது தெளிவாக விளங்கும்.
“மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கக் கூடாது” என்ற தடை ஜகாத் தடையாக இருந்தது போல் நபிமார்களுக்கு மட்டும் தான், மவ்லவிகளாகிய எங்களுக்கு அந்தத் தடை பொருந்தாது என்றும் மவ்லவிகள் வாதிடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நபி(ஸல்) அவர்களின் இந்தக் கடுமையான எச்சரிக்கையை உள்ளச்சத்துடன் படித்துப் பார்ப்பார்களாக!
“மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன், அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன்றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்”, “தூதர்களே! நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்க ளையே செய்யுங்கள்” (23:51) என்று இறைவன் கட்டளையிடுகிறான். (அதேபோல்) “நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற் றையே உண்ணுங்கள்”. (2:172) இவ்வாறு இறைவன் புரோகிதத்தை கொடிய குற்றமாக கூறி இருக்க அதனை சிறு குற்றமாக கூட பார்க்க முஸ்லிம்கள் தயாராக இல்லை மாறாக வேறு வழி இல்லை என்று கூறி அதனை ஆதரிக்க வேறு செய்கிறார்கள்.
இவ்வாறு உடல் உழைப்பு இல்லாமல் கூலி வாங்கும் புரோகிதர்கள், தங்கள் சுய வாழ்க்கையில் தவறிழைத்து விபச்சாரம் செய்துவிடும் போது அது மன்னிக்கப்படாத குற்றம் போல் விமர்சிக்கப்படுகிறது. உண்மையில் விபச்சாரத்தை விட கொடிய புரோகிதம் விமர்சிக்கப்படுவதோ? கண்டிக் கப்படுவதோ இல்லை இதுதான் முஸ்லிம் களின் நிலையாகும். விபச்சாரம் பற்றி குர்ஆன் : (நம்பிக்கை கொண்டோரே) நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள், அது மானக்கேடானதாகும். ‘
மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32) விபசாரியும், விபசாரனும், இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்று)தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்.
இன்னும், அவ்விரு வரின் வேதனையையும் நம்பிக்கையாளர் களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட் டும். (24:2) உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக் கூடிய இருவருக்கும் தண் டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடை யோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:16) ஹதீஃதிலும் கீழ்கண்டவாறு உள்ளது : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) ஒரு நாய் கிணறு ஒன்றைச் சுற்றிச் சுற்றி வந்துகொண் டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள்.
உடனே அவள் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 4518 ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம்:39, முகமன் (சலாம்) 3467 ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60, நபிமார்களின் செய்திகள் : இதில் கூறப்பட்டது போல் உணர்ந்து திருந்திக் கொண்டால் மன்னிப்பதாக அல்லாஹ் கூறும் குற்றம் தான் விபச்சாரம்.
ஆனால் புரோகிதம் அப்படி எங்கும் மன்னிக்கப்படுவதாக கூறப்படவில்லை அப்படி குர்ஆன், ஹதீஃதில் காணப்படவில்லை. கொடிய குற்றமான புரோகிதத்தை ஒழிக்க முஸ்லிம்கள் அனைவரும் பாடுபடுவோம். புரோகிதம் ஒழிந்தால்தான் முஸ்லிம்கள் வெற்றிபெற முடியும். இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்வோம். அல்லாஹ் தடுத்த அனைத்து பாவங்களை விட்டும் முஸ்லிம்களை பாதுகாப்பானாக.