நீட் நுழைவுத் தேர்வு!

in 2018 ஜூன்

ரமழான்-­ஷவ்வால்-1439

நீட் நுழைவுத் தேர்வு!

இக்கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்துள்ள, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) குளறுபடிகள் நமக்கு கற்பித்துத் தந்த பாடம் என்ன? கல்வியை மத்திய ஆளுமையின் கீழ் கொண்டு வருவது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதே நாம் கற்றுக்கொண்ட பாடம்.

எப்போதுமே நடைபெற்றிராத குளறுபடிகள், மையங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகிறது. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் மையங்கள் ஒதுக்குவதில் ஏன் இந்த குளறுபடிகள்? தமிழகம் எங்கே? சிக்கிம் எங்கே? ராஜஸ்தான் எங்கே? தமிழக மாணவர்களுக்கு சிக்கிமும், ராஜஸ்தானும் பக்கத்திலா இருக்கிறது? இவ்வாறாக மையங்கள் ஒதுக்கப்பட்டதில், பரிதாபம், தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைக்கப்பட்டனர், பந்தாடப்பட்டனர்.

* அடுத்த பரிதாபம்!

* தமிழ்க் கேள்வித்தாள்!!

* பெரும்பான்மையான கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு!!!

இதுவரை பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறை என்ன? தாய் மொழியில் நல்ல திறமைக் கொண்ட மாணவர்களின் திறமை வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே, மாநில மொழிகளில் தேர்வு எழுதும் முறை பின்பற்றப்பட்டுக் கொண்டுவருகிறது. சிறந்த முறையிலும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு “சிபிஎஸ்இ”யின் அலட்சியப் போக்கால் இத்தகைய தவறுகள். மாநில மொழிக் கேள்வித்தாளில் நடந்திருப்பது அதுவும் தமிழ்க் கேள்வித் தாளில் நடந்திருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. ஏனென்றால் தகுதியான மாணவர்களை வெளியேற்றி விட இவர்களின் அலட்சியம் வழிவகுத்துவிட்டது. மக்களைத் தொற்றிக் கொண்ட அடுத்த பயம்! 13 லட்சம் மாணவர்கள் இத் தேர்வை எழுதியிருப்பதாகவும், அதிகபட்சமாக இந்தி மொழியில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் தேர்வு எழுதியிருப்பதாகவும், பிராந்திய மொழிகளில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பதாகவும் அரசுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த புள்ளி விவர தெரிவிப்புகள் இந்தி மற்றும் ஆங்கில மொழி வழியில் மட்டுமே உயர் கல்வித் தேர்வுகள் இனி நடைபெற திட்டமிடப்படுகிறதோ என்ற ஐயத்தை மக்கள் மனதில் விதைக்க முயல்வது போல் தெரிகிறது.

இந்தி ஆதிக்கத்தை உள் நுழைத்து பிற மாணவர்களை பின் தள்ளிவிடக்கூடிய மாயவலையாக இந்த அறிவிப்பு தென்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

Previous post:

Next post: