எஸ். ஹலரத் அலி. திருச்சி- 7.
அன்றைய ஜாஹிலியா கால அரேபியாவில் ஆண்டுமானமானது, இப்ராஹீம் (அலை) நெருப்பில் இடப்பட்ட நாளையும், பின்னர் காபத்துல்லாஹ் கட்டிய நாளையும், ஆண்டு மானங்களாக வைத்து கணக்கிட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது. பின்னர், காப் இப்னு லுஆவின் மரணத்தை, யானையாண்டு வரை ஆண்டுமானமாகக் கொண்டார்கள். பின்னர் ஹிஜ்ரி ஆண்டு வரை யானையாண்டே அவர்களின் ஆண்டுமானமாக இருந்து வந்தது.
அரபுகளில் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பிரபல்யமான நிகழ்வுகளை வைத்து வரலாற்றை உறுதிப் படுத்தினர். அவர்கள் அனைவருக்குமான ஒரு ஆண்டுமானம் அன்றிருக்கவில்லை. அவர்களுக்கு ஒரு ஒன்றுபடக் கூடிய ஆண்டுமானம் இருந்திருந்தால் வரலாற்றில் இவ்வாறு வேறுபட்டிருக்கமாட்டார்கள். ( இமாம் இப்னுல் அஸீர் – “அல்-காமில்.”1:11.12.)
அன்றைய அரபுகள் மாதங்களை “முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல்…” என்று அழைக்கும் முன்னர் வெவ்வேறு பெயர்களிலும் காணப்பட்டன. ஜாஹிலியாக் காலத்தில் சந்திரமாதங்களை சூரிய வருடத்துடன் இணைப்பதற்காக ஏனைய (யூத) சமுதாயங்கள் எவ்வாறு ஒரு மாதத்தைக் கூட்டினார்களோ அந்த நடைமுறையையும் அரபுகள் பின்பற்றினர். இதனை“ நஸீஆ” என அழைத்தனர். அதிகரிக்கப்படும் அவ்வருடம் “அல்- கப்ஸா” என அழைக்கப்பட்டது. இந்த சந்திர சூரிய அமைப்பு (Lunisolar)அவர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக இருந்தது.
அரபுகள் நான்கு மாதங்களை கண்ணியமான மாதங்களாக கருதி வந்தார்கள். முஹர்ரம்,ரஜப்,துல்கதா, துல்ஹஜ், என்பவையே அம்மாதங்கள். ஆனாலும் இந்த வருசைப்படுத்தும் ஒழுங்கு சீர் குழைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மத்தியில் மாதங்களைக் தீர்மானிக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்குப் பெயர்.” கலம்மஸ்” (காலம் கணிப்பு செய்பவர்) இவர் கினானா கோத்திரத்தை சேந்தவராக இருந்தார். ஒவ்வொரு கோத்திரமும், இன்னொரு கோத்திரத்தாருடன் போர் செய்ய நாடினால், அவர்கள் கண்ணியமான நான்கு மாதங்களில் ஆரம்பிப்பதில்லை.
ஆனாலும் அம்மாதம் யுத்தத்துக்கு பொருத்தமாக காணப்படின் “கலம்மஸ்” இதற்கு லஞ்சம் வாங்கி, கண்ணியமான மாதம் ஒன்றை முற்படுத்தி இன்னொரு மாதத்தை அதற்குப் பின்னர் வரச் செய்தனர். துல்கதா,துல்ஹஜ்,முஹர்ரம் என கண்ணியமான மாதங்கள் தொடர்ச்சியாக வருவதால், அது அவர்களுக்கு தடங்கலாக இருந்தது. ஸபர் மாதத்தை முற்படுத்தி முஹர்ரம் இரண்டாவதாக வரச்செய்வார்கள். அதனால் மாதங்களின் ஒழுங்கு மீறப்பட்டது. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ் நிகழவில்லை.
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள் செய்த ஹஜ் கூட துல்கதாவிலேயே நிகழ்ந்தது. நபிகளார் தங்கள் ஹஜ்ஜை பிற்படுத்தியதற்கு இதுவும் ஒரு காரணமாகும் (-இமாம் இப்னு தைமிய்யாவின் – “பயானுல் ஹதா மினல்லலால் பீ அம்ரில் ஹிலால்”)
இதனாலேயே நபியவர்கள் தங்கள் இறுதி ஹஜ்ஜில் இவ்வாறு கூறினார்கள்.
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பி விட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனித மாதங்களாகும்….” என்று நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜத்துல் வதாவில் கூறினார்கள். புஹாரி.4662.
நாட்கள், வாரங்கள் மாதங்கள், வருடங்கள் என்னும் அளவீடுகளைக் கொண்டு காலத்தை எவ்வாறு மிகச சரியாக கணக்கிடுவது என்பதைக் கூறுகின்ற சந்திர நாட்காட்டி முறை உலக வரலாற்றிலேயே ஒன்றுதான் இருந்திருக்கிறது. அதைத்தவிர, மனிதர்கள் இது நாள்வரை பயன்படுத்தி வந்துள்ள, மற்றெல்லா நாட்காட்டி முறைகளும், ஏதோ ஒரு வகையில் நாட்களைக் கூட்டுவதிலோ அல்லது குறைப்பதிலோ (Intercalation) “இடைச்செருகல்” என்ற நடைமுறையில் ஈடுபட்டுள்ளன. அல்லது போலி தெய்வங்களை அல்லது படைப்புகளை வழிபடுவதாக அமைந்துள்ளன.
இன்றைய முஸ்லிம்களில் பலர், ரமலான் போன்ற காலங்களில் மட்டும் இஸ்லாமிய மாதங்களையும், மற்றைய தங்களின் அன்றாட பொருளாதார கொடுக்கல், வாங்கலுக்கு இணை வைப்பாளர்களின் நாட்காட்டிகளையே பயன்படுத்துகின்றனர். மாற்றம் இன்று எல்லாவற்றிலும் தேவையாகவே உள்ளது. நமது நடத்தைகள், மனப்பாங்குகள், வாழ்க்கை முறைகள் என அத்தனை விசயங்களிலும் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்படுவதும் ஏற்படுத்தப்படுவதும் ஒரு ருசிகரமானதாகவே அமையும்.
மாற்றமில்லாத வாழ்க்கை மலர்ச்சியில்லாமலே போய்விடும். வாழ்க்கையை இன்பகரமானதாக மாற்ற வேண்டுமானால், நாம் மாற்றங்களுக்காக மாறவேண்டும். நாமும் நமது சூழலும் மாற்றங்களை நோக்கி நகர வேண்டும். இதைத்தான் பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாம் வலியுறுத்துகிறது. முஸ்லிம்கள் சம்பத்தப்பட்ட அநேக விசயங்கள் பிறை கணக்கெடுப்பை மையமாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக,முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து, குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இது தான் படைத்த அல்லாஹ்வின் கட்டளையாக உள்ளது. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கை தீர்மானிக்குமாறு அல்லாஹ் மூஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது…..
அவன்தான் சூரியனை பிரகாசமாகவும்,சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுச் சந்திரனாகிய அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அவன் அறிவுள்ள மக்களுக்கு தான் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். அல் குர்ஆன்.10:5.
- ரமழான் மாதத்தின் (பர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது,
உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். குர் ஆன்.2:185.
- ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது,
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்கக் கூடாது.என்று நபி (ஸல்)அவர்கள் கூறினர். -புஹாரி. 1197.
- துல் ஹஜ்ஜூ 8-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை ஹஜ்ஜூவுடைய கிரியைகளை நிறைவேற்றுவது,
“பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக! “அவை மக்களுக்கு காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” அல் குர்ஆன்.2:189.
- முஹர்ரம் மாதத்தின் 9-வது மற்றும் 10-வது நாட்களில் ஆஷூரா நோன்புகளை நோற்பது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதார்களும், கிறிஸ்தவர்களும், கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர், அதற்கு அல்லாஹ்வின் தூதர்,” இன்ஷா அல்லாஹ்!அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள்.. ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். முஸ்லிம்.2088.
- அய்யாமுல் பீழ் என்னும் மாதந்தோரும் வெண்மை நாட்களின் சுன்னத்தான மூன்று நோன்புகள்,
மாதத்தில் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள், எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்; அபூதர் (ரலி) ,நஸயீ. 692.
- ஹஜ்ஜூக்கு செல்லாதோர் துல்ஹஜ்ஜூ மாதம் 9-வது நாள் அரஃபா நோன்பு நோற்பது,
”அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), முஸ்லிம். 1977, அபூ தாவூத்.2071.
- அனைத்து இஸ்லாமிய மாதங்களையும் சரியான நாளில் ஆரம்பித்தல்,
ரமலானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள்,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” – அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ.
- குர்ஆன் கூறும் புனித மாதங்களைச் சரியாகத் துவங்குதல்,
புனிதமான ( ரஜப்,துல் கதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்…’ அல் குர் ஆன்.2;217, 2:294.
- ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய காலம்,
“ தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்.” அல் குர் ஆன்.2:233.
- தலாக் சொல்லப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்ணுடைய இத்தாவின் மாதக் கணக்கு,
மேலும் இத்தாவின் காலத்தை சரியாக கணக்கிடுங்கள்.மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். .- அல் குர்ஆன்.65:1
அவர்களுடைய இத்தாவின் காலம் மூன்று மாதங்களாகும். – அல் குர்ஆன்.65:4.
- கடன் கொடுக்கல் வாங்கள் பற்றிய தவணை பத்திர காலங்களை குறித்தல்,
தவிர (கொடுக்கல்,வாங்கல்) சிறிதோ,பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்….” அல் குர்ஆன்.2:282.
ஆக, ஒரு முஸ்லிமின் அனைத்து வணக்கங்களும், வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையிலும், குறித்த கிழமைகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வினதும், அவனது தூதர் (ஸல்) அவர்களதும் கட்டளையாக உள்ளது. இந்த அதி முக்கிய கட்டளைகளை புறக்கணித்தும், அலட்சியப்படுத்தியும் தங்கள் மனோ இச்சைப்படி மார்க்கத்தை வளைப்பவர்களே இன்று மார்க்க அறிஞர்களாக உலா வருகின்றனர்.
அல் குர்ஆனை ஆய்வு செய்த அன்றைய அரபுகள், ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து அகில உலகிற்கும் அறிவொளி பாய்ச்சினர். இருண்டு கிடந்த ஐரோப்பா கண்டமானது, அரபு அறிஞர்களின் அரபி மொழி ஆய்வை மொழிபெயர்த்து, அதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டனர். உலகிற்கு நவீன அறிவியலை அறிமுகப்படுத்திய முஸ்லிம் சமுதாயம், இன்று தற்குறி சமுதாயமாக வீழ்ந்து கிடப்பதன் முதல் காரணம், அறிவியல் அறிவில்லா போலி மதரஸா மெளலவிமார்களிடம் மார்க்கத்தை ஒப்படைத்ததே!
இந்த போலி ஆலிம்கள் தவ்ஹீதின் பெயரிலும், தக்லிதின் பெயரிலும், தரீக்காவின் பெயரிலும் அறிவியல் ஞானமில்லா விளக்கங்களைக் கொடுத்து மக்களை வழி கெடுக்கின்றனர். குர் ஆனில் இபாதத் என்னும் வணக்க வழிமுறைகளைச் சொல்லும் வசனங்கள் மிகச் சொற்பமானவையே! ஆனால் இந்த மாபெரும் பிரபஞ்ச படைப்புகளின் அறிவியல் விளக்கங்களே குர் ஆனில் நீக்கமற நிறைந்துள்ளது.
இந்த உண்மைகளை அறியும் அறிவோ, ஆற்றலோ,பயிற்சியோ எதுவும் இல்லாத மவுலவிமார்கள், தங்கள் கரங்களில்,ஒட்டு மொத்த குர்ஆனையும் எடுத்துக் கொண்டு அறிவியல் சிந்தனையின் வாசலை அடைத்துவிட்டார்கள்.வெறும் தொப்பி போடுவதிலும், கையை கட்டுவதிலும், பெரும் சண்டை இட்டு பிரியும் இவர்கள்,…..
இஸ்லாத்தின் அசலான, கால நேரம் வரையறுக்கப்பட்டு, நன்மைகளை அள்ளித்தரும் நாட்களை முன்பின் ஆக்கி விடுகிறார்கள். புறக்கண்ணில் பார்த்து குருட்டுக்கணக்குப் போட்டு முஸ்லிம்களை வஞ்சித்து வாழ்கின்றனர். இவர்களிடம் சிறைப்பட்ட குர் ஆணை விடுவித்து, அறிவியல் கலாசாலை ஆய்வுக்கூடங்களில் வைத்து வாசிக்கும்போது மட்டுமே மடமை ஒழியும், அறிவொளி பெருகும்! ஏனெனில்….
காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுச் சந்திரனாகிய அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்.அல்லாஹ் உண்மையைகொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை.–அவன் அறிவுள்ள மக்களுக்கு தான் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். அல் குர்ஆன்.10:5.
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறும் “அறிவுள்ள மக்களுக்கு…” என்று கூறும் சொல்லானது, நமது மெளலவி ஆலிம்களை பற்றிச் சொல்லவில்லை.மாறாக, சூரியன்,சந்திரன்,பூமி,கோள்களின் ஓட்டத்தை அறிந்த வானவியல் அறிஞர்களையே அல்லாஹ் கூறுகிறான். இந்த வானவியல் அறிவு இல்லாத நம் மதரஸா ஆலிம்கள் தங்களையே அல்லாஹ் சொல்வதாக நினைத்து, புறக்கண் குருட்டுக் கணக்குப்போட்டு நல்ல நாட்களை நாசமாக்குகின்றனர்.
நாட்களை முன் பின் ஆக்குவது குப்ர்
“வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும்.” – அல் குர்ஆன்:9:36.
ஓர் ஆண்டிற்கு 12 மாதங்கள் தாம் என்று படைப்பாளன் நிர்ணயித்துவிட்டதை, அதாவது அதில் எத்தனை வாரங்கள்? எத்தனை நாட்கள்? எத்தனை மணி நேரங்கள்? உட்பட அனைத்தும் அடங்கி விடுகின்றன. அல்லாஹ் நிர்ணயித்துவிட்ட மேற்கூறிய நாளையோ, மாதத்தையோ யாரும் முன் பின்னாக மாற்றிவிட முடியாது.”அவ்வாறு மாற்றுவது இறை மறுப்பாகும் (குப்ர்)” என்று அல்குர்ஆன் 9:37.எச்சரிக்கின்றது.
சூரிய ஓட்டத்தை விஞ்ஞான ரீதியில் கணக்கீடு செய்து எமது தொழுகை நேரங்களை அமைத்துக்கொண்டுள்ளோம். தற்போது யாரும் தடி நட்டு,நிழல் பார்த்து நேரம் பார்ப்பதில்லை. சூரிய,உதய, மறைவை புறக்கண்ணில் பார்த்து அமல் செய்வதில்லை. அப்படியானால் சந்திர கணக்கீட்டை நாம் ஏன் மறுக்கிறோம்? அல்குர்ஆன் “சூரியனும் சந்திரனும் இரண்டும் கணக்கின்படியே செல்கின்றன.”என்று கூறுகின்றதே! சூரியனை நாங்கள் கணக்கிடுவோம்.
ஆனால், “சந்திரனை கணக்கிட மாட்டோம்” என்று சொல்வது, குர் ஆனில் உள்ள சில வசனங்களைப் ஏற்போம். சில வசனங்களை மறுப்போம் என்பதாகும். இந்த இரட்டை நிலை பற்றி வல்ல அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றான்..
“நீங்கள் சிலதை நம்பி சிலதை மறுக்கின்றீர்களா? எனவே, உங்களில் இவ்வகையில் செயற்படுகின்றவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை (கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனை யின்பால் மீட்டப்படுவார்கள்.” – அல்குர்ஆன்.2:85.
இன்று இஸ்லாம் மார்க்கத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும், நபியின் வாரிசுதாரர்கள் என்றும், தம்மை அழைத்துக் கொள்ளும் மெளலவிமார்களே இத்தகைய குப்ரான இரட்டை நிலையை எடுத்து,ஒட்டு மொத்த உம்மத்தும் ஹராமான அமல்களை செய்யச் சொல்லி பாவத்தில் தள்ளுகிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு மதறாசாக்களில் கற்றுக்கொடுக்கப்பட்ட அறிவு அவ்வளவுதான்.அதற்கு மேல் அவர்களை அது சிந்திக்க விடாது.
இந்த மவ்டீக மெளலவிமார்களே எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு, மக்களை வழி கெடுக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு சுன்னத் ஆலிம் என்றும்,தவ்ஹீது ஆலிம் என்றும்,தரீக்கா ஆலிம் என்று அழைத்துக் கொண்டாலும், சத்தியத்தை எதிர்ப்பதில் எப்போதும் இவர்கள் ஒன்று பட்டே செயல் படுவார்கள். இதற்குக்காரணம், இவர்கள் அனைவரும் ஏழு வருட ஸனது மதரஸா என்னும் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருப்பதுதான்.
இவர்கள் படித்த பாடமெல்லாம் பூமியில் ,மண்ணுக்கு கீழ் நடக்கும் மண்ணறை வாழ்வு பற்றியும், வானத்திற்கு மேலுள்ள மறுமை வாழ்வு பற்றியதே அல்லாமல், இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள சூரிய,சந்திர,பூமியின் கோள்களின் ஓட்டம் பற்றி ஒன்றுமே தெரியாது. 1688 ல் உத்தரப் பிரதேச மாநில லக்னோவில் உள்ள சிஹாலா என்னும் ஊரில் பிறந்த முல்லா நிஜாமுத்தீன் சிஹலாவீ (1688-1748) என்பவரால் உருவாக்கப்பட்ட “சில்ஸிலையே நிஜாமியா” மதரஸா பாடத்திட்டமே இன்றும் போதிக்கப்படுகிறது.
இவர்களின் (தர்சே நிஜாமி) பாடத்திட்டத்தில் உலகம் உருண்டை அல்ல. தட்டை என்றே உள்ளது.அல்லாஹ் குர்ஆனில் கூறும் நவீன அறிவியலுக்கும் இந்த மதரஸா மவுலவிகள் கற்று வந்த கல்விக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. இஸ்லாத்திற்கும் கத்தம்,பாத்திஹா,கந்தூரி,மெளலூதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ..இது போல் அல்லாஹ் குர்ஆனில் கூறும் ஆலிம் (அறிஞர்) என்னும் சொல்லுக்கும் மதரஸா மவுலவி ஆலிமுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்.- (அல்குர் ஆன்.62:10.)
என்று மூமின்களுக்கு அல்லாஹ் கட்டளை இடுகின்றான்.
அல்லாஹ்வின் கட்டளையை அமுல் படுத்த நமது ஆலிம் உலமாக்கள் தயாரில்லை.பள்ளிக்குள் அமர்ந்தே அருட்கொடையை? தேடுகின்றனர்.இவர்களுக்கு உடல் உழைப்பு ஹராமாக்கப்பட்டு விட்டது.ஆகவே இவர்களுக்கு வெளி உலகமோ அறிவியல் தெளிவோ எதுவும் இல்லாமல் அன்றைய உம்மீ சமுதாய மக்கள் பார்த்த புறக்கண்ணையே இன்றும் மார்க்கமாக மக்களுக்குப் போதிக்கின்றனர். இன்றைய முஸ்லிம்கள் தற்குறி சமுதாயமாக மாறியதற்கு இவர்களே காரண கர்த்தாக்கள்.பிறையைப் பார்ப்பதற்கு அன்றைய ஒரே சாதனம் புறக்கண் மட்டுமே!
இன்று அல்லாஹ்வின் பேரருளால் இன்றைய முஸ்லிம் சமுதாயம் உம்மீ என்ற நிலையைத் தாண்டி அறிவார்ந்த சமுதாயமாக மாறிவிட்டது.ஆகவே புறக்கண்ணில் பார்க்க வேண்டிய தேவையும் நீங்கி விட்டது.புறக்கண்ணை விட அதிக சக்திவாய்ந்த சாதனங்களைக் கொண்டு பிறையை துல்லியமாக கணக்கிடக்கூடிய நிலையை அடைந்து விட்டது.ஆனாலும் நமது மதரஸா ஆலிம்கள் அந்த நிலையை இன்னும் அடையாததால்,அன்று உம்மீ சமுதாய மக்கள் பார்த்த புறக்கண்களையே இன்றும் நம்மை பார்க்கச்சொல்லி ரமலானின் “லைலத்துல் கத்ர்”ஒற்றைப்படை நாட்களை நாசமாக்குகின்றனர்.
பிறையை கண்ணால் பார்த்து நோன்பை துவக்குவோம்,கண்ணால் பார்த்து நோன்பை விடுவோம்..என்று,பேச்சும் மூச்சும், கண்ணாக இருப்பவர்கள்,அதே ஹதீஸில் அடுத்து வரும், .”கும்ம.. மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.” என்ற கணக்கீட்டை கண்டு கொள்ளாமல் மறைத்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்களின் சொல்லில் உள்ள பார்த்தலை மட்டும் தூக்கிப் பிடிப்பதும்.அதற்கு சமமாக வரும் கணக்கீட்டை மறுப்பதும்….என்ற இரட்டை நிலையை குர் ஆன் வசனங்களிலும்,ஹதீஸிலும் செய்து குப்ர் இன்னும் இணை வைப்பை மார்க்கமாக மக்களுக்கு போதிக்கின்றனர். தவ்ஹீது வியாதிகளும் இதற்குத் தப்பவில்லை.
மனு,ஜின், கூட்டத்தார்களே! வானங்கள்,பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின், அவ்வாறே செல்லுங்கள்; ஆனால் (வல்லமையும், நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
–அல் குர்ஆன்.55:33.
இவ்வசனம் அறிவியலாற்றல் இல்லாத உம்மீ சமுதாயத்தின் மத்தியில்தான் இறங்கியது. அன்றைய மக்களுக்கு இவ்வசனத்தில் ஒரு செய்தி மட்டுமே. செயல் படுத்த அவர்களுக்கு சக்தி ஆற்றலை அல்லாஹ் அன்று வழங்கவில்லை. இன்றோ நமது சமுதாயத்திற்கு பூமியை கடந்து செல்லும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்து விட்டான். மனிதன் நிலவிலும் இறங்கி மீண்டு விட்டான்.
அந்தோ பரிதாபம்! இவ்வளவு ஆற்றலை சக்தியை இந்த உம்மத்திற்கு கொடுத்த இறைவன், பிறையை பார்ப்பதற்கு மட்டும் புறக்கண்ணை மட்டுமே பயன்படுத்தச் சொல்வதாக மவுலவிகள் கூறுவதும், அதை அப்பாவி முஸ்லிம்கள் நம்பி, மூன்றாம் பிறையை முதல் பிறையாக கருதி நன்மையை அள்ளித்தரும் நாட்களை முன்பின் ஆக்கி ஏமாறுவதும் கை சேதமே! இந்த புரோகித மெளலவிமார்கள் ஒருக்காலும் சத்தியத்தை மக்களுக்குச் சொல்லவே மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு விடயம் கொடுக்கப்பட்டால்,அதில் எது எளிதானதோ அதையே தேர்வு செய்வார்கள். இன்று கண்ணால் பிறை பார்ப்பது பல குழப்பங்களுக்கும்,சந்தேகத்திற்கும், ஒற்றைப்படை நாட்களை இழப்பதற்கும், ஹராமான நாளில் நோன்பை வைக்கும் அவல நிலையையே உருவாக்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கணினி கணக்கீட்டு பார்வையின் மூலம், எளிதாக பிறை துவக்கத்தை அறிந்து, சமுதாயம் ஒன்றுபட்டு அமல்களை செய்து நன்மைகளை அள்ள அழைக்கிறது.
திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு பல சான்றுகள் உள்ளன.
– அல் குர்ஆன்.3:190