N. அலி, கல்லிடைக்குறிச்சி
நம்மை விட்டு கடந்து கொண்டிருக்கும் புனிதமிக்க ரமழான் மாதம் என்பது தன்னு டைய அடியார்கள் தன்னை அஞ்சுவதற்கு இறைவனே நோன்பு எனும் இறையுணர்வு பயிற்சி கொடுக்கும் பயிற்சி மாதமாகும். புனித ரமழான் மாதம் எத்தகையதென் றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியை தெளிவுபடுத்தக்கூடி யதும் அசத்தியத்தை பிரித்தறிவிக்கக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். (குர்ஆன் : 2:185) இதற்கு முந்தைய வசனத்தில் முன் னுள்ள நபிமார்களின் சமுதாயத்தின் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது (பார்க்க : 2:183) என்றும் கூறும் அல்லாஹ் அதிலும் குறிப்பாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கச் சொன்ன காரணம் அதில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது என்பதாகும். இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தை எளிதாக விளங்க முடியும்.
அது குர்ஆன் கூறும் வாழ்க்கை நெறியை உடலாலும், மனதாலும், மனதின் விருப்பு, வெறுப் புக்கு இடமின்றி ஆயுள் முழுவதும் பின் பற்றுவோம் என்ற மனநிலையை, மன வலிமையை, இறையச்சத்தை பெற்றுக் கொள்ள ஏதுவாக அந்த குர்ஆன் இறங்கிய மாதத்திலிருந்தே நோன்பு என்ற இறையச்சப் பயிற்சி நமக்கு தரப்படுகிறது. இதை முஸ்லிம் சமூகம் விளங்கிச் செயல்படுகிறதா? என்றால் இல்லை என்பதை அடுத்த பதினொரு மாதங்களின் வாழ்க்கை முறையை வைத்தே நாம் கண்டு கொள்ள முடியும். ரமழான் முடிந்தவுடன் பள்ளிவாசல்களில் “தொழுகையாளிகளைக் காணவில்லை” என்று எழுதி வைக்கும் அளவுக்குத் தான் முஸ்லிம் சமூகத்தின் நிலை இருக்கிறது இந்நிலைக்கு என்ன காரணம்? ஒரு மாத பயிற்சியின் நோக்கமான குர்ஆனை விளங்கி பின்பற்றுவோம் என்ற தொடர் முயற்சி இல்லாததே காரணம் தொடர் முயற்சி செய்யாத வண்ணம் முஸ்லிம் சமூகத்தினர் மேல் சவாரி செய்யும் புரோகித ஆலிம் வர்க்கம் முட்டுக்கட்டை போட்டு வைத்திருக்கிறது. மூட நம்பிக்கையை வளர்த்து வைத்திருக்கிறது அது இதுதான் 7 வருடம் ஆலிம் படிக்காதவருக்கு குர்ஆன் விளங்காது அரபி இலக்கண இலக்கியம் அறியாதவருக்கு குர்ஆன் விளங்காது குர்ஆனை விளங்கி பின்பற்றினால்தான் மறுமையில் வெற்றி என்பதை மறைத்து குர்ஆன் ஓதினால் நன்மை என்பதை மட்டும் கூறி குர்ஆனை ஓதுவதோடு முஸ்லிம் சமூகத்தை ஒதுங்கிக் கொள்ள வைத்துவிட்டார்கள்.
ஒரு மாத பயிற்சியோடு பவ்வியமாக ஒதுங்கிக் கொள்ள வைத்து விட்டார்கள். இப்பொழுது 2:185ன் வசனத்தை சிந்தித்துப் பாருங்கள் “மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும் நேர்வழியை தெளிவுபடுத்தக்கூடியதாகவும்” என்று அல்லாஹ் கூறுவதன் மூலமாக குர்ஆனை ஏற்றுக் கொண்டவர். ஏற்றுக் கொள்ளாதவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடு இல்லாமல் ஆதமுடைய மக்கள் அனைவரையும் குறிக்கும் “மனிதர்கள்” என்று பொதுவாக கூறி அனைவரும் குர்ஆனின் பக்கம் சிந்தனையை செலுத்து வதற்கு வாய்ப்பளிக்கிறான் ஏகன் அல்லாஹ் ஆனால் இவர்களோ அல்குர்ஆன் அல்லாஹ்வின் நெறிநூல் என்று நம்பிக் கைக் கொண்டிருக்கும் மக்களுக்கே அந்த குர்ஆன் விளங்காது என்று சொல்வது எவ்வளவு பெரிய மடமையான விந்தையான வாதம்? எவ்வளவு பெரிய மாபாதகச் செயல்?
இத்தனைக்கும் ஏகன் அல்லாஹ் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்ட உள்ளங்களுக்கு வழிகாட்டுவான் என்று வாக்களிக்கிறான். (பார்க்க : 64:11) நம்முடைய வழியில் முயற்சி செய்வோ ருக்கு வழியை எளிதாக்குவோம் (பார்க்க 29:69) என்று வாக்களித்திருக்கிறான். இவற்றையயல்லாம் முஸ்லிம் சமூகம் விளங்கி செயல்பட முயற்சி செய்தால் புரோகித வர்க்கத்தின் புரட்டு வாதங்கள் அடிபட்டு போய்விடும். நாம் ஒரு மாத காலம் நோன்பின் மூலம் இறையுணர்வைப் பெற பயிற்சி செய்தோம் நோன்பின் நோக்கம் இறையுணர்வுதான் (பார்க்க 2:183) அந்த இறையுணர்வைப் பற்றி குர்ஆன் வர்ணிப்பதைப் பாருங்கள். ஆதமுடைய மக்களே தங்களுடைய மானத்தை மறைக்கக்கூடிய ஆடையையும் அலங்காரத்தையும் திட்டமாக நாம் அருளியுள்ளோம்.
எனினும் இறையுணர்வு ஆடையே மிகச் சிறந்தாகும் (லிபாசுத் தக்வா) அது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும் (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறலாம். (குர்ஆன் : 7:26) இவ்வுலகில் மனிதர்களோடு எந் நேரமும் ஒட்டியிருப்பது ஆடையாகும். இந்த ஆடை நம் மானத்தை மறைக்கிறது. அலங்காரமாக காட்டுகிறது. ஆள் பாதி, ஆடை பாதி என்பது தமிழின் முதுமொழி “லிபாசு தக்வா” என்பது இவ்வுலகில் நம்மை கண்ணியமாக வாழவைப்பதோடு மட்டு மில்லாமல் நாளை மறுமையிலும் கண்ணிய மான வாழ்வைப் பெற்றுத் தரும். நம்மில் யாரும் ஒரு மாத காலம் மட்டும் ஆடையணிந்து விட்டு மற்ற காலங்களில் ஆடை யில்லாமல் வாழ முயற்சிப்பதில்லை. ஆயுள் முழுவதும் ஆடை அணியவே விரும்புகிறோம். ஒரு மாத காலம் மட்டும் மிகச் சிறந்த ஆடையான லிபாசுத் தக்வாவை அணிய பயிற்சி செய்த நாம் மற்ற காலங்களில் அதைத் தொடர முயற்சி செய்யாமல் இருப்பது முறையா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்! அதற்காக மார்க்கம் ஆயுள் முழுவதும் உங்களை நோன்பு நோற்க சொல்லவில்லை.
ரமழானில் பகலில் உண்ணுவதையும், பருகுவதையும் தடை செய்த மார்க்கம் (பார்க்க 2:185) ரமழானல் லாத காலங்களில் உண்ணுங்கள், பருகுங்கள் என்றே சொல்கிறது. (பார்க்க 7:31) ஆனால் ஒன்று ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் தடை செய்யப் பட்டவை உங்களுக்கு ஆயுள் முழுவதும் தடை செய்யப்பட்டவையே என்பதை விளங்கி செயல்பட வலியுறுத்துகிறது. திருமண வீடுகளில் கணவன், மனைவி உறவுக்கு ஆடையை உவமையாக குர்ஆன் கூறியிருப்பதை எடுத்துக்காட்டி சிறப்பித்து, சிலாகித்து பேசும் பெரும் அறிஞர்கள்? பேச்சாளர்கள் கூட “இறையுணர்வு” எனும் தலைப்பில் கூட இந்த “லிபாசுத் தக்வாவை” சிறப்பித்து, சிலாகித்து பேசியதாக நம்மால் அறியமுடியவில்லை. (ஒருவேளை செய்தி ருந்தால் மிக்க மகிழ்ச்சி) இந்த லிபாசுத் தக்வாவைப் பற்றி முஸ்லிம்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் அது முஸ்லிம்களை குர்ஆனோடு நேரடித் தொடர்பு கொள்ள செய்து விடும் (பார்க்க 2:1) முஸ்லிம்களின் இன்றைய நிலையை தெளிவா படம் பிடித்துக் காட்டும். லிபாசுத் தக்வாவுடன் தொடர்புடைய ஒரு விஷயத்தைப் பாருங்கள். நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும்.
எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள் வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவை நேரான வழியிலிருந்து உங்களை சிதறடித்து விடும். நீங்கள் இறையுணர்வுப் பெறுவதற்காக இந்த அறிவுரை வழங்கப்படுகிறது. குர்ஆன்: 6:153 2:183ல் நோன்பு வைக்க கட்டளையிடும்போது நோன்பின் மூலம் இறையுணர்வு பெறலாம் என்று கூறிய அல்லாஹ் 6:153ல் இந்த அறிவுரையை நீங்கள் இறையுணர்வு பெறுவதற்காக வழங்குகின்றேன் என்று கூறுகிறான். குர்ஆனின் அறிவுரைகளை விளங்கி பின்பற்றுவதன் மூலம் நம் ஆயுள் முழுவதும் லிபாசுத் தக்வாவை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை விளங்கலாம். இந்த அறிவுரையை விளங்கி பின்பற்றாத காரணத்தினால் இன்றைய முஸ்லிம்களின் இழி நிலையைப் பாருங்கள். ஆயிரம் ஆண்டுகளாக நான்கு மத்ஹபு பிரிவுகளில் சிக்கி சீரழிந்த வர்கள் அதன் பிறகு நாற்பது இயக்கங்களில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். அதிலும் உச்சக்கட்டமாக இயக்கங்களில் சிக்கி சீரழியும் முஸ்லிம்களுக்கு அதன் தலைவர்கள் பெரும் அறிஞராகவும், பெரும் ஆய்வாளர்களாகவும் தெரிந்தனர். இன்றைக்கு அவர்களே பலான பாலியல்களில் பலியாகி நிற்கின்றனர்.
இதை ஜீரணிக்க முடியாமல் அதில் உள்ளவர்கள் நெளிந்து கொண்டிருக்கின்றனர். இந் நிலைக்கு காரணம் குர்ஆன் கூறிய அறிவு ரையை (6:153) விளங்கி செயல்படாமல் லிபாசுத் தக்வாவை இழந்ததுதான். லிபாசுத் தக்வாவின் இருப்பிடம் அல்குர்ஆனாகும். “யா அய்யுஹல்லதீன ஆமனூ” என்று அழைத்து நமக்கு கட்டுப்படச் சொல்லித் தரும் அல்லாஹ்வின் கட்டளைகளும், நம் வாழ்வில் பின்பற்றுவதற்கு அவன் வழங்கிய அறிவுரைகளும் “லிபாசுத் தக்வாவின்” வடிவமைப்பாகும். இறைவன் பார்க்கின்றான் என்பது இறையுணர்வு என்றால் அந்த இறையுணர்வுக்கேற்ப அவனின் கட்டளைகள், அறிவுரைகளை ஏற்று அணிந்து தங்களின் வாழ்வை அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்வதே “லிபாசுத் தக்வா” இதற்கு முஸ்லிம் சமூகம் குர்ஆனை விளங்கி செயல்பட முன்வரவேண்டும் என்று அன்பாய் வேண்டுகோள் விடுக்கிறோம். இறை நம்பிக்கை கொண்டவர்களே அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விட வேண்டாம். (குர்ஆன்: 3:102)