ஆகஸ்ட் 2018
துல்கஃதா – துல்ஹஜ்-1439
எய்ம்ஸ் மருத்துவமனை Vs. பசுமைச் சாலை
எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இம்மருத்துவமனையின் பணி மக்களுக்கு சேவை என்பதை மக்கள் உணர்ந்தவுடன் மக்கள் அதீதமாய் அதனை எதிர்பார்க்கின்றனர். இம்மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதும், இத்திட்டம் தமது மாவட்டங்களில் அமைக் கப்படவில்லையே என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவரமறிந்தவர்கள் தமது ஏக்கத்தைத் வெளியிட்டனர். பெரும்பான்மையினர் இதனை ஆதரித்து வருகின்றனர். இது மக்களுக்கான திட்டம் என்று மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் பசுமைச் சாலை என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்திருக்கும் சேலம்-சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை சேலம் மக்கள் ஆதரிக்கவில்லை. மட்டுமில்லாமல், கடுமையான எதிர்ப்பையும் பிரதிபலிக்கின்றனர். தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலிருந்தும் கூட இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, பெரும்பான்மையினர் இத்திட்டத்தை எதிர்க்கவும் செய்கின்றனர். அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் மக்களும் சரி, சமூக ஆர்வலர்களும் சரி, இத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல என்று நம்புகின்றனர்.
அதே நேரத்தில் மக்கள் எதிர்பார்க்கும் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் செல்கின்றன. மக்கள் எதிர்ப்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் பசுமைச் சாலை திட்டப் பணிகள் அரசால் வேகமாக முடிக்கிவிடப்படுகின்றன. எட்டு வழி சாலை திட்டத்தால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படப் போகிறோம் என்ற எண்ணம் மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனென்றால் இத்திட்டத்திற்காக இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு இதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் கணக்கிலடங்கா பலன்களை இத்திட்டத்தால் இழந்து விடப் போகிறோமோ என்ற அச்ச உணர்வு மக்களை தொற்றிக் கொண்டு விட்டது. ஒரு காலத்தில் வளம் மிக்க நாடாக இருந்த சோமாலியாவை இதுபோன்ற திட்டங்களின் மூலமாக நாசமாக்கியதைப் போல, தமிழ்நாட்டையும் வறண்ட பூமியாக்கி நாசமாக்க மறைமுக சூழ்ச்சி அரசி டம் இருப்பதாக சமூக வலைதளங்களின் செய்திகள் மக்களை இன்னும்அதீத அச்சம் கொள்ளச் செய்துவிட்டன.
எனவே, பசுமைச் சாலைத் திட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எதிர்த்துக் கொண்டிருக்கும் மக்கள், மற்றும் இத்திட்டத்தைக் குறித்து விமர்சனம் செய்பவர்கள் ஒவ்வொருவரையும் கைது செய்து அடக்கி விட நினைக்கும் அரசின் செயல்பாடுகள், சமூக வலைதளங்கள் கூறுவது உண்மையோ என்ற அச்சத்தை மக்களிடம் இன்னும் இன்னும் வலுவாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அச்சத்தை போக்க மறைமுகத் திட்டம் தங்களிடம் இல்லை என்பதை மக்கள் மன்றத்தில் முன்வைக்கவும், முன் வைக்கும் அந்த வாக்குறுதியை தங்களின் அடுத்தடுத்துள்ள உடனடியான செயல்பாட்டின் மூலம் உண்மை என நிரூபித்துக் காட்டவும் மத்திய மாநில அரசுகள் கடமைப்பட்டிருக்கின்றன. மக்களின் எந்த எதிர்ப்புகளும், போராட்டங்களும், எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி இருப்பதால் அரசு மக்களின் கருத்துக்க ளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாறாக தமிழக அரசு மக்களை கைது செய்வதன் வழியாக அணுகும்போது, அரசின் மீதான நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் போய்விடலாம். இந்த நிலைமையில், மத்திய அரசு, மாநில அரசிடம் மக்கள் கருத்தைக் கேட்கச் சொல்லியிருப்பது ஓரளவு திருப்தியைத் தருகிறது. இன்ஷா அல்லாஹ், நல்லது நடக்கும் என்று நம்புவோமாக!