“லிபாசுத் தக்வா” (இறையச்சம் எனும் ஆடை)
N. அலி, கல்லிடைக்குறிச்சி
ஜூலை மாத தொடர்ச்சி… சென்ற இதழில் லிபாசுத் தக்வாவின் சில விஷயங்களைப் பார்த்தோம். அதில் லிபாசுத் தக்வாவின் சிறப்புகளை எழுதவில்லை அது ஒரு குறையாக இருந்தது. ஏனெனில் அல்லாஹ் தக்வாவிற்கு ஆடையை உவமையாக கூறி இருக்கிறான். இதன்மூலம் நாம் பயன்படுத்தும் ஆடையையும், லிபாசுத் தக்வாவையும் ஒப்பிட்டு சிறப்புகளை அறிவது நமக்கு பயன்தரும். அந்த ஒப்பீட்டை கீழே தருகிறோம்.
1. நாம் பயன்படுத்தும் ஆடை நம் மானத்தையும், நம்மிடம் உள்ள குறைகளை மறைக்கும். ஆனால் லிபாசுத் தக்வா நம் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் எந்த குறைகளையும் நம்மிடம் அண்ட விடாது.
2. நாம் பயன்படுத்தும் ஆடையின் அழுக்குகளை நாம் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் லிபாசுத் தக்வா அதை அணிந்து இருப்பவரை பாவங்களிலிருந்து தூய்மை யாக்கும் மனதின் அழுக்குகளை சுத்தம் செய்யும்.
3. இவ்வுலகில் அழகாகவும், அலங்காரமாகவும் ஆடை அணிந்து இருப்பவர் மனிதர்களின் கண்களுக்கு கண்ணியத்திற் குரியவராகத் தெரிவார். ஆனால் லிபாசுத் தக்வாயுடையவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் ஆவார். பார்க்க: 49:13
4. இவ்வுலகில் நாம் அணியும் ஆடையை நாம் விரும்பியவாறு நமக்கேற்வாறு தேர்வு செய்கிறோம். ஆனால் லிபாசுத் தக்வா அதற்கு ஏற்றவாறு நம்மை மாற்றி மிகச் சரியாக வடிவமைக்கும்.
5. நாம் இவ்வுலகில் எவ்வளவு விலை உயர்ந்த ஆடை அணிந்தாலும் (அது ஹலாலான முறையில் இருந்தால் அதற்கு பிரதி பலனாக நன்மை எழுதப்படுவது போல, லிபாசுத் தக்வாவை ஏற்று நடப்போருக்கு இவ்வுலகிலேயே மறுமைக்கும் பலனளிக்கும் “புர்ஹான்” எனும் நன்மையை தருதாக வாக்களிக்கிறான். “இறை நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்வீர்களாயின் உங்களுக்கு “புர்ஹானை” வழங்குவான். மேலும் உங்களுடைய தீமைகளை நீக்கி விடுவான். உங்களை மன்னித்து விடுவான் அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாக இருக்கிறான். (குர்ஆன் : 8:29)
ஒரு நாளைக்கு 17 முறை அல்லாஹ்விடம் கடமையான தொழுகையில் நாம் வலியுறுத்திக் கேட்கும் நேர்வழியை பெற்றுக் கொள்வதற்கு இந்த “புர்ஹான்” மிகவும் அவசியமாகும். இந்த “புர்ஹான்” எனும் தன்மை தான் குர்ஆனுக்கும் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான் (பார்க்க: 2:185)
இந்த தன்மை ஒவ்வொரு முஸ்லிம்களிடத்தில் வந்துவிட்டால் குர்ஆனை விளங்கி பின்பற்றும் தன்மை வாழ்க்கையில் நடை முறைக்கு வந்து விடும். எவ்வளவு குழப்ப மான காலகட்டத்திலும் எது சரி, எது தவறு என்று பிரித்தறியும் (“புர்ஹான்”) உயர்ந்த நிலையை முஸ்லிம்கள் பெற்று விடுவார்கள் இந்த நிலையை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக.
6. குர்ஆனில் மிக அழகிய வரலாறான நபி யூசுப்(அலை) வாழ்க்கையில் அமைச்சரின் மனைவி தவறான பாதைக்கு அழைக்கும் தருணத்தில் இந்த “புர்ஹான்” வழங்கி தவறிழைக்காமல் தடுத்ததாக அல்லாஹ் நமக்கு எடுத்துக்காட்டுகிறான். (பார்க்க: 12:24)
7. அல்லாஹ்வின் சான்றுகள் என்பது அல்லாஹ்வின் உள்ளமையை/இருப்பை பறைசாற்றும் சான்றுகளாகும். “லிபாசுத் தக்வா” அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று என்று சொல்வதின் மூலமாக இந்த முஸ்லிம் சமூகம் தன்னுடைய வாழ்க்கை நடைமுறையில் லிபாசுத் தக்வாவை வெளிப்படுத்தும் போது அது பிற சமுதாய மக்களுக்கு அல்லாஹ்வின் உள்ளமையை/இருப்பை அவனைப் பற்றிய சிந்தனையை பிரதிபலிக்கும் ஒரு சான்றாக அமைந்து விடும். அரபிய தீபகற்பத்திலிருந்து வணிகம் செய்ய வந்த முஸ்லிம்களின் வாழ்க்கையில் “லிபாசுத் தக்வா” இருந்ததால் அதன் மூலம் இந்தியாவில் இஸ்லாம் பரவியது என்பதற்கு வரலாற்றில் சான்று இருக்கிறது.
8. லிபாசுத் தக்வா குறித்து பேசும் 7:26ன் அடுத்த வசனத்தில் “ஆதமுடைய மக்களே ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவ்விருவரின் மானத்தை அவ்விரு வருக்கும் காண்பிப்பதற்காக வேண்டி அவ்விருவரின் ஆடையை அவ்விருவரை விட்டும் அவன் களைந்து, சுவனத்திலிருந்து வெளியேற்றியது போன்று உங்களையும் அவன் சோதனைக்குள்ளாக்கி விட வேண்டாம். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காண முடியாதவாறு உங்களை (அவர்கள்) பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதோருக்கு அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கின்றோம். (7:27)
நம் பெற்றோர்கள் இந்நிலை அடைவதற்குக் காரணம் 2:35ல் அல்லாஹ் போட்டிருந்த கட்டளையை மீறி மாறு செய்து (பார்க்க : 20:121)
அதன் காரணத்தினால் முதலில் லிபாசுத் தக்வாவை இழந்து பிறகு அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஆடையை ஷைத்தான் களைவற்கும், சுகமான சுவன வாழ்விலிருந்தும் வெளியேற்றி சொற்பமான சோதனை வாழ்வுக்கு தள்ளப்பட்டதும் (பார்க்க : 2:36)
இறைக்கட்டளையை மீறியதால் ஏற்பட்ட “லிபாசுத் தக்வா” இழப்பு தான் காரணமாகும். அதனால்தான் அல்லாஹ் 7:26ல் “லிபாசுத் தக்வா” குறித்து பேசிவிட்டு அதற்கடுத்த வசனத்தில் 7:27ல் நம் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலையை விவரிக்கிறான். இந்நிலை நமக்கும் ஏற்படக் கூடாது என்றால் நமக்கு வழங்கப்பட்ட சொற்பமான இவ்வுலக சோதனை வாழ்க்கையில் லிபாசுத் தக்வாவை இழந்து ஷைத்தான் நம்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. நமக்கு வழங்கப்பட்ட சொற்பமான இவ்வுலக சோதனை வாழ்க்கையில் லிபாசுத் தக்வாவை இறுகப் பற்றிப் பிடித்து சுகமான சுவன வாழ்விற்கு உறுதியான முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் சுவனம் நமக்கு சோபனமாகும். இதை முஸ்லிம்கள் கவனமாய் முயற்சி செய்யுமாறு அன்போடு அழைக்கிறோம்.