ஒரு திறனாய்வு!
தொடர் : 39
M. அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.
தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்
தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்
திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… பக்கம் 381,382 மற்றும் 383ல் பாதி வரை ஹதீஃத் எண் 14ம் அதனைத் தொடர்ந்து பல விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இதைப் பற்றி ஒன்றும் எழுதுவதாக இல்லை.
ஏனெனில் இதுவரை அமல்களின் சிறப்பு(அசி) புத்தகம் எப்படியயல்லாம் மக்களை ஏமாற்றி வந்தார்களோ அதே பாணியைத்தான் இந்த பக்கங்களிலும் கடைப் பிடித்துள்ளனர். மக்கள் சலிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக முற்றிலும் புதிய பாணியில் புத்தம் புதிய கோணத்தில் அடுத்த ஏமாற்று வேலையை அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகம் கையாண்டு இருக்கிறது. அதனை இப்போது பார்ப்போம்.
அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகம் கூறும் செய்தி! பக்கம்383ல் பாதிக்கு மேலே, கீழே காண்பிக்கப்பட்டுள்ள 15ஆம் எண் ஹதீஃதைப் பாருங்கள். 15. ஹஜ்ரத் அபூஸயீதுல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “மக்கள் உங்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லுமளவுக்கு அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள்” என ரசூல்(ஸல்) அவர்கள் அருளினார்கள். நூல் : அஹ்மத் மற்றொரு ஹதீஃதில் “முனாபிக்குகள் உங்களை முகஸ்துதிக்காரன் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் திக்ரு செய்யுங்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது ஆய்வு :
ஒவ்வொரு ஹதீஃத் நூலும் அந்த நூலில் தரப்பட்டுள்ள ஹதீஃத்களை பொருள் வாரியாகத் தலைப்புகள் கொடுத்து அட்டவணை ஒன்றை நூலின் முகப்பில் கொடுப்பது வழக்கம். நாம் தேடும் ஹதீஃத்களை இந்த அட்டவணை மூலமாக சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். உதாரணமாக: புகாரி ஹதீஃத் நூலில் இறைச் செய்தி, ஈமான், இல்ம், உளூ, குளிப்பு என்று இன்னும் பல பொருள் வாரியாக தலைப்புகள் அட்டவணை (INDEX)யில் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் தேடும் ஹதீஃதை இதன் மூலம் கண்டறியலாம்.
* அதேபோல முஸ்லிமில் ஈமான், உளூ, மாதவிடாய் என இன்னும் பல பொருள் களில்,
* நசயீயில் உளூ, தண்ணீர், அதான், மஸ்ஜித் என்று இன்னும் பல பொருள்களில்,
* அபூதாவுதில் ரமழான், தொழுகை என்று இன்னும் பல பொருள்களில், திர்மிதியில் பயணம், ஜகாத் என்று இன்னும் பல பொருள்களில்,
* இப்னு மாஜாவில் ஜனாஸா, நோன்பு என்று இன்னும் பல பொருள்களில், முஅத்தாவில் தஹஜ்ஜத், ஜமாஅத் தொழுகை என்று இன்னும் பல பொருள்களில்,
* ரியாளுஸ் ஸாளிஹீனில் உணவு, உடை, உறக்கம் என்று இன்னும் பல பொருள்களில்,
* புளுகுல் மராமில் ஹஜ், வியாபாரம், திருமணம் என்று இன்னும் பல பொருள்களில்,
* அல் அதாப் அல் முஃப்ரதில் உறவுகள், அனாதைகள், அண்டை வீட்டார் என்று இன்னும் பல பொருள்களில்,
ஸ மாயில் முஹம்மதிய்யாவில் ரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி மட்டும் அவர் களின் நுபுவுத் அடையாளம் ஆடை தலைமுடி வாழ்க்கை நிலை என 56 பொருள்களில், இவ்வாறாக இன்னும் பற்பல நூல்களில் பல பொருள்களில் தலைப்புகள் கொடுக்கப்பட்டு அட்டவணையில் இடம்பெறச் செய்துள்ளனர்.
அமல்களில் சிறப்புகள் புத்தகம் மேலே கூறியுள்ள ஹதீஃத் இடம் பெற்ற நூலாக அஹமத் ஹதீஃத் நூலைக் குறிப்பிட்டுள்ளனர். அதிசயம்! ஆனால் உண்மை! அஹமத் ஹதீஃத் நூலில் மட்டும் பொருள் வாரியாக தலைப்புகள் கொடுக்கப்படவில்லை. மாறாக அறிவிப்பாளர்கள் பெயர் வாரியாக, அதாவது ஹதீஃத்களை அறிவித்த 27 சஹாபாக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அட்டவணை தந்துள்ளனர். அந்த அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
ஸஹாபாக்களின் பெயர் வாரியான அட்டவணை :
1. முஸ்னத் அபூ பகர்
2. முஸ்னத் உமர் பின் கத்தாப்
3. முஸ்னத் ஸகீஃபா (அறிவித்த) ஹதீஃத்
4. முஸ்னத் உஸ்மான் பின் அஃப்பான்
5. முஸ்னத் அலீ இப்னு அபீ தாலிப்
6. முஸ்னத் அபூ முஹம்மத் தல்ஹா பின் உபைதுல்லாஹ்
7. முஸ்னத் அஜ்-ஜூபைர் பின் அல்-அவ்வாம்
8. முஸ்னத் அபூ ஈஸாக் சஃத் பின் அபீ உக்காஸ்
9. முஸ்னத் ஸயீத் பின் ஜைது பின் அம்ர் பின் நுஃபைல்
10. முஸ்னத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஜ்-ஜுஹ்ரி
11. அபூ உபைதா பின் அல் ஜர்ராஃ அம்ர் பின் அப்துல்லாஹ்)வின் ஹதீஃத்
12. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அறிவித்த ஹதீஃத்
13. ஜைது பின் காரிஜா அறிவித்த ஹதீஃத்
14. அல் ஹாரிஸ் பின் கஸாமா அறிவித்த ஹதீஃத்
15. அபூபக்ர் அவர்களின் உரிமை விடப்பட்ட அடிமை ஸஃது அறிவித்த ஹதீஃத்
16. முஸ்னத் அஹ்லுல் பைத் மற்றும் அல் ஹஸன் பின் அலீ பின் அபூதாலிப்
17. அல் ஹுஸைன் பின் அலீ அறிவித்த ஹதீஃத்
18. அகீல் பின் அபீதாலீப் அறிவித்த ஹதீஃத்
19. ஜாஃபர் பின் அபீதாலீப் அறிவித்த ஹதீஃத்
20. அப்துல்லாஹ் பின் ஜாஃபர் பின் அபீதாலிப் அறிவித்த ஹதீஃத்
21. முஸ்னத் பனீ ஹாசிம் (அல்-அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்)
22. முஸ்னத் அல்-ஃபாதில் பின் அப்பாஸ்
23. தம்மாம் பின் அல்-அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் அறிவித்த ஹதீஃத்
24. உபைதுல்லாஹ் பின் அல்-அப்பாஸ் அறிவித்தத ஹதீஃத்
25. முஸ்னத் அப்துல்லாஹ் பின் அல்-அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்
26. முஸ்னத் அப்துல்லாஹ் பின் அல்-அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்
27. முஸ்னத் அப்துல்லாஹ் பின் மசூத்
மேலே கொடுக்கப்பட்டுள்ள 27 ஸஹா பாக்களின் பெயர்களில் அசி புத்தகம் தெரிவித்துள்ள ஹஜ்ரத் அபூஸயீதுல் குத்ரீ (ரழி) அவர்களின் பெயர் இடம் பெறவேயில்லை. அதாவது அசி புத்தகம் கூறியுள்ள ஸஹாபி அப்படி ஒரு ஹதீஃதை அறிவிக்கவே இல்லை. அவமானமாக இருக்கிறது. இப்படியயல்லாம் தில்லுமுல்லு செய்து அசி ஆசிரியர் மறுமையில் எதை வாரிக் கட்டிக் கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை.
இந்த லட்சணத்தில் “மக்கள் உங்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லுமளவுக்கு அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங் கள்” என்றும்,””முனாபிக்குகள் உங்களை முகஸ்துதிக்காரன் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் திக்ரு செய்யுங்கள்” என்றும் சீடர்களுக்கு அறிவுரை கூறுகிறது கேவல மான இந்த புத்தகம். அதுவும் நபி(ஸல்) அவர்கள் ஹதீஃதில் கூறியுள்ளார்கள் என்று அந்த ஹதீஃதிற்கு அறிவிப்பாளர் கிடையாது. ஹதீஃத் நூலின் பெயரும் கிடையாது.
உண்மை நிலை என்ன தெரியுமா?
அதிகமாக திக்ர் செய்தவர்களில் சிலர் பைத்தியக் காரர்களாக அலைந்து கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தப்லீக் ஜமாஅத்தின் சீடர்களே! எமது அருமை இஸ்லாமிய சகோதரர்களே! உங்களை பைத்தியம் ஆக்கும் திட்டத்தைத் தான் உங்கள் முன் வைத்திருக்கிறது “அமல்களின் சிறப்புகள்” புத்தகம்! தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையேல், நீங்கள் பைத்தியமாகி உங்களை நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தினரை மார்க்கம் என்ற பெயரில் மோசம் செய்து விடாதீர்கள். அகில உலகிற்கும் அல்லாஹ் இறக்கி அருள் புரிந்திருக்கின்ற மேலான கண்ணியம் வாய்ந்த குர்ஆனையும், அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ரஹ்மத்தாக கொடுத்துள்ள ஹதீஃத்களையும் மட்டும் பின்பற்றி ஈருலகிலும் வெற்றி பெற ஈடுபடுங்கள் என்றும், பிறரிடமும் உங்களால் முடிந்த விதத்தில் நேரிய மார்க்கத்தைக் கூற பாடுபடுங்கள் என்றும் அன்புடன் அழைக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் தொடரும்….