ஐயம் : குர்ஆனை மிகவும் எளிதாக நாம் ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 54:17) எளிதாக்கப்பட்ட குர்ஆனை விளங்கிக் கொள்ள அதன் மொழியாக்கம் (தர்ஜுமா) மட்டும் போதுமா? இல்லை அதன் விரிவாக்கமும் (தப்ஸீர்) தேவையா? அபூ நபீல், தேங்காய்பட்டணம்
தெளிவு : எளிதாக்கப்பட்ட குர்ஆன் வசனங்களை விளங்கிக்கொள்ள மொழியாக்கம் போதுமானதே. வசனங்களை விளக்குவதற்கு அல்லாஹ்வால் அங்கீகாரம் பெற்றவர் கள் அழகிய முன்மாதிரியை பெற்றுள்ள (33:21) அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே. எளிதாக்கப்பட்ட வசனங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஏன் விளக்கம் தரவேண்டும் என்றொரு வினாவும் எழலாம். “தொழுகையை நிலைநிறுத்துங்கள்” என்று அல்லாஹ் கட்டளை இட்டதைக் கொண்டு தொழவேண்டும் என்பதை சுலபமாகப் புரிந்து கொண்டோம். ஆனால் எப்படி தொழவேண்டும்? திருமணம் எப்படி செய்ய வேண்டும்? ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்படி நோன்பு நோற்க வேண்டும்? ஒட்டுமொத்தமாக சகல காரியங்களையும் எப்படி செய்யவேண்டும் என்பதை உலக மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தான். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு தூதரை அல்லாஹ் ஏற்படுத்தித் தந்தருளினான்.
அந்த இறுதித் தூதர், நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இறைக் கட்டளையையும் செயல்படுத்த வேண்டிய முறைகளைக் கற்றுத் தந்தார்கள். ஹதீஃத்களின் வாயிலாக இவைகளையயல்லாம் அறிகிறோம். ஆனால் ஹதீஃத்கள் பற்பல நூல்களில் பதிவாகி இருப்பதாலும், பல நூல்களை வாங்கிப் படித்து அவைகளை தெரிந்து கொள்வது சிரமமாக இருப்பதாலும், ஓரளவேணும் இவைகளையும், இறை வசனங்கள் அருளப்பட்ட சந்தர்ப்பங்களையும், காரணங்களையும் உள்ளடக்கி தஃப்ஸீர்கள் இருப்பதால், மேலதிக விவரங்களைப் பெறமுடிகிறது. ஆனால் மார்க்கத்தில் பல பிரிவுகளை உண்டாக்கியவர்கள், அவரவர்களின் கொள்கைகளை தப்ஸீர்களில் திணித்து இருப்பார்கள். அந்த தஃப்ஸீர்களைத் தவிர்த்துக் கொள்வது சிறப்பு.
ஐயம் : நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்கிறீர்கள் ஆனால் அல்குர்ஆன் 10:6 இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் இங்கே இரவைத்தான் முதலில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். வார்னர் நதீர், நாகர்கோவில்.
தெளிவு : ஆயத்தில் “இரவும் பகலும்” என்று இடம் பெற்றிருப்பதால், அதில் “இரவு” முதலில் கூறப்பட்டுள்ளதால், நாளின் ஆரம்பம் இரவு தான் என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்? முதலில் கூறப்பட்டுள்ளதை முதலாவதாக எடுத்துக் கொள்ளும்படி இறைக் கட்டளை இருக்கிறதா? அல்லது ஹதீஃத் இருக்கிறதா? அப்படி இருந்தால்தான் தாங்கள் கூறுவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை கீழே உள்ள இறை வசனங்களைக் (112:1-4) கொண்டு அறியலாம்.
1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே.
2. அவன் தேவையற்றவன்
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை.
4. மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. மூன்றாவது வசனத்தை கவனியுங்கள்.
தங்களின் கூற்றுப்படிப் பார்த்தால், “அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை. (எவரை யும்) பெறவுமில்லை” என்றுதான் அமைய வேண்டும். ஏனென்றால், பெறப்படுவது தான் முதல் நிகழ்வு. பெற்றெடுப்பது அடுத்த நிகழ்வு. ஆனால், குர்ஆனில் அப்படி இல்லையே! இரண்டாவது நிகழ்வை அல்லாஹ் முதலில் கூறுகிறான். முதலாவது நிகழ்வை இரண்டாவதாகக் கூறுகிறான். 36:40 இறை வசனத்தைப் பாருங்கள்.
“இரவு பகலை முந்த முடியாது” என்று அல்லாஹ் அறிவுறுத்தி இருப்பதிலிருந்து பகல் தான் முன்னே சென்று கொண்டிருக் கிறது. எனவே, “நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்” தான் என்பதை அறிவோமாக.
ஐயம் : அடுத்து, அல்குர்ஆன் 91:1,2 சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் அது அஸ்தமித்ததற்குப் பின் உதயமாகும். சந்திரன் மீதும் என்று கூறியிருப்பதிலிருந்து மாலையில்தான் பிறை உதயமாகிறது என்பது ஊர்ஜிதமாகிறதல்லவா? அப்படியானால் மாதம் துவங்குவதை அதாவது (முதல் பிறையை) மாலையில் பார்ப்பதை தவறு என்று எந்த ஆதாரத்தில் கூறுகிறீர்கள்? வார்னர் நதீர், நாகர்கோவில்.
தெளிவு : பிறைகளை மாலையில் பார்ப்பது தவறு என்று யார் கூறியது? முதல் பிறையில் இருந்து முழு நிலவு வரை பிறைகளை மக்ரிபில் நேரத்தில் பார்ப்பது தான் சரியான மன்ஜிலை தெரிந்து கொள்ள உதவும். மாதம் முழுவதும் பிறைகள் பற்றி கவலைப்படாமல் 29ம்தேதி மாலை பிறை தேடும் கலாச்சாரத்தை தவறு என்று கூறியது தவறாகப் புரிந்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். நாங்கள் பிறைகளைப் பார்க்கத்தான் சொல்கிறோம் தினமும் பார்ப்பது தான் சரி. முதல் பிறை முதல் முழு நிலவு வரை சூரியன் அஸ்தமனத்தின் போது முழு நிலவுக்கு மறுநாள் முதல் சங்கமம் வரை சூரிய உதயத்திலும் பார்ப்பது.
சந்திரக் கணக்கின்படி உள்ளதை உங்க ளுக்கு உணர்த்தும். ஆனால் நாள் மாலையில் ஆரம்பம் செய்கிறது என்பதைத்தான் மறுக்கின்றோம். காரணம் அல்லாஹ் குர் ஆனில் “இரவு பகலை முந்த முடியாது” என்று கூறிவிட்டான். எனவே பகல்தான் முதலில் என்று குர்ஆன் கூறும்போது நாம் இரவில் நாளை ஆரம்பிக்க முடியாது. இதனை புரிந்து கொண்டால் மாதத்தை மஃரிபில் ஆரம்பிக்க முடியாது என்று உணர்ந்து கொள்வீர்கள்.
குறிப்பு : மஃரிபில் நாளை ஆரம்பித்து விட்டு மஃரிப் தொழுது விட்டு வந்து பிறை பார்ப்பதும் நாளை ஆரம்பித்து விட்டு பிறையை பார்க்கும் நிலையிலேயே உள்ளது.