MTM. முஜீபுதீன், இலங்கை
அக்டோபர் தொடர்ச்சி……
இமாம் தொழுகை நடத்தும் போது அவருக்கு முன்னதாக செயல்படக் கூடாது. நபி(ஸல்) அவர்களின் போதனையை கவனியுங்கள்.
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்து “ருகூஉ”ச் செய்தால் நீங்களும் குனியுங்கள். அவர் “சமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்” என்று சொன்னால் நீங்கள் “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள். (முஸ்லிம் :706)
அத்துடன் ஸஹீஹ் முஸ்லிம் : 707 ஹதீஃதின்படி இமாம் இருந்து தொழுகை நடத்தும் போது மக்கள் சக்தி பெறின் நின்று தொழுவதற்கும் அனுமதி உண்டு என அறிய முடிகின்றது. மக்கள் கூட்டாக இறை இல்லத்தில் ஒன்று கூடித் தொழுவதன் மூலம் பல்வேறு வகையில் தொடர்பும், நன்மைகளும் மக்களுக்குக் கிடைக்கின்றது. இதனால் கூட்டுத் தொழுகையின் முக்கியத் துவம் வலியுறுத்தப்படுகின்றது. கவனியுங்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். (முஸ்லிம் : 1151)
கூட்டுத் தொழுகை மூலமாக மக்களிடையே மிக நெருங்கிய உறவு ஏற்படுகின்றது. ஜமாஅத் தலைவருக்கும், மக்களுக்கும் உறவு சிறப்படைகின்றது. மக்களின் குறை நிறைகளை தீர்ப்பது இலகுபடுத்தப்படுகின்றது. மக்களிடையே நற்பண்புகள் சிறப்படைகின்றது. மார்க்க அறிவு வளர்ச்சி அடைகின்றது. சமூகத்தில் ஊடுருவக் கூடிய தீமைகள் தவிர்க்கப்படுகின்றன. உண்மைச் செய்தித் தொடர்பு வளர்ச்சி அடைகின்றது. அன்று நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இறை இல்லங்கள் மனிதனின் தேவைகளை தீர்த்துவைக்கும் மையங்களாக செயற்பட்டதை ஹதீஃத்கள் ஐவேளைகள் சந்தித்துக் கொள்வதனால் கல்வி, மனிதப் பண்புகள், நல் உறவு, பொருளாதாரத் தேவைகள், அரசியல், சுகாதாரத் தேவை,குடும்ப வாழ்வு சீரடைவதற்கான தேவைகள் சிறப்பாக நிறைவு பெற கூட்டுத் தொழுகை மூலமாக இறை யில்லத்தினூடான தொடர்பு வழிகாட்டுகின்றன. கூட்டுத் தொழுகையை தவற விடுபவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு” என்று கூறினார்கள். (முஸ்லிம் : 1156)
ஒவ்வொரு தனி மனிதனுக்கும், முஸ்லிம் சமுதாயத்திற்கும் கூட்டுத் தொழுகையும், ஜமாஅத் தொழுகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கூட்டுத் தொழுகையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட முஸ்லிம் சிரமத்துடனாவது, கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்வான். (கவனிக்கவும் ஸஹீஹ் முஸ்லிம் : 1157, 1159 ஹதீஃத்கள்) ஒரு மனிதன் வீட்டுடன் சேர்த்து எரிக்கப்படுவதை விட பெரும் நஷ்டத்தினை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதனால் அடைந்து கொள்வான்.
அன்று நெறிநூல் வழங்கப்பட்டவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை புறம் தள்ளி சனிக்கிழமை நாட்களில் மீன் பிடித்ததினால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டு சந்ததியில்லாது அழிக்கப்பட்டதை அல்குர் ஆனில் தெரிந்து கொள்ள முடிகின்றது.
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம். இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர் களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர் களுக்கும் படிப்பினையாகவும் பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன்: 2:65,66)
குரங்குகளாக்கப்பட்டவர்களில் விரி வான வரலாறு அல்குர்ஆனில் (7:163-166) வசனங்களில் காணப்படுகின்றன.
அல்லாஹ் வெள்ளிக்கிழமை ஜுமுஆ கூட்டுத் தொழுகை பற்றி பின்வருமாறு விளக்குகின்றான். ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறை வேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்றவண்ணமே உம்மை விட்டு விடுகின்றனர் “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும், வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும். மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் : 62: 9-11)
அல்லாஹ் மீது விசுவாசம் கொண்ட முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்கு அழைக்கப்பட்டால் ஜுமுஆவுக்கு சமூகமளிப்பது கடமையாகும். அத்துடன் ஜுமுஆவுடைய நேரத்தில் ஒரு வியாபாரத்தினையோ, வேடிக்கையையோ கண்டால் அதன் பக்கம் செல்லக்கூடாது என வலியுறுத்தப்படுகின்றது. இதனால் உலகில் வாழுகின்ற முஸ்லிம்கள் ஜுமுஆவுடைய நேரத்தில் தமது வியாபாரத்தை விட்டு பள்ளிக்கு வந்து விடுகின்றனர்.
ஆகவே ஒவ்வொரு வாரமும் மக்கள் பள்ளியில் ஒன்றுகூடி அல்லாஹ்வுடைய நேர்வழியை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்படுகின்றது. அத்துடன் முஸ்லிம்கள் பல தேவைகளுக்காக பல வகையான தொழுகைகளையும் நபி வழிக் கமைய உரிய சந்தர்ப்பங்களில் செயற்படுத்தி வருகின்றனர். தொழுகை ஒரு பிரார்த்தனையாகவும் அமைகின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊர் மக்களும் தொழுகை மூலமாக ஐந்து வேளைகள் இறை இல்லங்களில் ஒன்றுகூட்டப்படுகின்றனர். அதுபோல் வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்காக ஒரு ஊர், பிரதேச மக்கள் ஒன்று கூட்டப்படுகின்றனர். அதுபோல் ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமைக்காக உலகில் பல பிரதேசங்களிலிருந்தும் முஸ்லிம்கள் எந்த பேதங்களும் இன்றி, ஓர் இறைவனை வணங்குவதற்காக ஒன்று கூடுகின்றனர். ஆகவே தொழுகை மக்களை ஓர் இறைவனை வணங்குவதற்காக ஒன்றுதிரட்டுகின்றது உண்மையான தொழுகையாளிக்கு சொர்க்கம் கிடைப்பதாக அல்குர்ஆன் இயம்புகின்றது. ஆகவே தொழுகை எல்லா வகையான பாவங்களை விட்டும் மனிதனைக் காக்கும் கேடயமாகும். அதுபோல் கடமையல்லாத தொழுகைகளையும் அறிந்து அல்லாஹ்வின் நல் அருளைப் பெற முயற்சிப்போமாக.
கடமையாக்கப்பட்ட ஜகாத்தும், இஸ்லாமிய பொருளாதாரமும் :
உலகில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கான தேவைகளை இறைவன் படைத்து வைத்துள்ளான். மனிதனைத் தவிர மற்ற சகல உயிரினங்களும் தமது அடிப்படைத் தேவைகளை, அன்று முதல்இன்று வரை எந்த மாற்றங்களும் இன்றி ஒரே வடிவிலேயே பெற்றுக்கொள்கின்றது. உதாரணமாக காகம் அன்றும் இன்றும் ஒரே வகையான கூடுகளிலேயே தமது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கின்றன. ஆடு, மாடு, ஒட்டகங்கள் அன்றும் இன்றும் தாவர உணவுகளையே எந்த மாற்றமும் இன்றி உட்கொள்கின்றன.
அவை தமது வீடுகளை தமது தேவைக் கமைய மாற்றியமைக்கும் வல்லமையைக் கூடியளவில் பெற்றுக் கொள்வதில்லை. அதேபோன்றே, ஏனைய பறவைகளும், மிருகங்களும், தாவரங்களும், மற்றும் மனிதன் தவிர்த்த சகல உயிரினங்களும் தமது அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், மற்றும் தேவைகளை தாம் வாழும் சூழலுக்கமைய இயற்கைக்கமைய அன்றும் இன்றும் ஒரே வடிவில் பெற்றுக் கொள்கின்றன. இவ்வாறு பெற்றுக் கொள்வதற்குக் காரணம் மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்கள் தமது அடிப்படைத் தேவைகளை தமது விருப்பங்களுக்கமைய பல்வேறு வடிவில் விருத்தி செய்து கொள்ளும் வல்லமை அற்றதாக படைக்கப்பட்டுள்ளதனால் ஆகும். இதனால் அவற்றுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள வரையறைக்கு உட்பட்டதாகவே, குறித்த வாழ்க்கை வட்டத்தினுள்ளேயே தமது ஜீவிதத்தை அமைத்துக்கொள்ள முடியும்.
உலகில் உள்ள உயிரினங்களில் சில, தாவரங்களை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன. இன்னும் சில உயிரினங்கள் தாவரங்களை உணவாக உட்கொள்வதில்லை ஊன் உணவுகளை உண்பவைகளாக காணப்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் தாவரங்களையும், ஏனைய உயிரினங்களைக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்பவைகளாக்கக் காணப்படுகின்றன. இவ்வாறான நடைமுறை, உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் நடந்து வரும் செயற்பாடுகளாகும். இந்த இயற்கை நடைமுறைக்கு மாற்றமாக எந்த உயிரினமும் இன்னுமோர் உயிரினத்தைக் கொன்று, உணவாக உட்கொள்ளக் கூடாது என உள்ளுணர்வு மூலமாக வாழ முயற்சி செய்யின், எந்த உயிரினமும் உலகில் உயிருடன் வாழ முடியாது பட்டினியால் சாகவேண்டி இருக்கும். ஆகவே ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு உயிரினத்தில் தங்கி வாழ வேண்டியவைகளாக காணப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஓர் முறையில் உலகிற்கு கூடிய நன்மைகளைச் செய்பவைகளாகவும், குறைந்தளவில் பயன்படக் கூடியவைகளாகவும் உள்ளன.
மனிதன் உண்ணும் உணவுகளை மட்டுமே எல்லா உயிரினங்களும் உட்கொள்ளின், உயிரினங்களின் உணவுத் தேவைக்கான சமநிலை மாறும்; மற்றும் உலகில் உயிரினங்கள் வாழ்வதனால் கிடைக்கும் அனுகூலங்களை அதிகரித்துக் கொள்ளவும், வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்ளவும் முடியாது போகும். இதனால் உயரினங்கள் வாழ்வதற்கான ஒரு சமநிலையான உலகைத் தோற்றுவிக்க முடியாது போகும். ஆகவே இறைவன் உயிரினங்கள் சமநிலையில் உண்டு வாழ்வதற்கான இயற்கை உள்ளுணர்வு மூலமான தேவை மட்டம் ஒன்றை அமைத்து வைத்துள்ளான். அதைக் சிதைக்க கூடாது என்பதை இந்த நவீன உலக மனிதர்களினால் உணர்ந்து கொள்ள முடியும்.