ஐயம் : இது நாள் வரைக்கும் குர்ஆன் சுன்னா (ஸஹீகான ஹதீஃத்) மட்டுமே மார்க்கம் என்பவர்களின் மத்தியில் இன்று புதிதாக குர்ஆனுக்கு முரணில்லாத ஹதீஃத் என்கிறார்களே! இப்படி கூறக் காரணம் என்ன? அப்படியானால் குர்ஆனுக்கு முரணாக ஸஹீஹான ஹதீஃத் இருக்கிறதா? இதில் அந்நஜாத்தின் நிலையையும் தெளிவு படுத்தவும். நாஸர், நாகர்கோவில்
தெளிவு : தமக்குக் கிடைத்த ஹதீஃத்களில், ஸஹீஹானதைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஹதீஃத் கலா வல்லுனர்கள் கையாண்ட அளவுகோள்களில் முதன்மை யானது. கிடைத்த ஹதீஃத் குர்ஆனுடன் முரண்படுகிறதா என்பதேயாகும். குர்ஆனுடன் முரண்பட்டால் அந்த ஹதீஃதை நிராகரித்து விடுவர். முரன்படவில்லை என்றால், குர்ஆனுடன் முரணில்லாத ஹதீஃதாக முடிவு செய்தனர்.
இதன் பொருள் ஸஹீஹான ஹதீஃத் குர்ஆனுக்கு முரணாக இல்லை என்பது தானே ஒழிய, குர்ஆனுக்கு முரணாக ஸஹீஹான ஹதீஃத் இருப்பதாக ஒப்புக் கொள்ள முடியாது என்பதேயாகும்.
ஐயம் : நான்கு மத்ஹப்களில் ஒன்றை பின் பற்றுபவர்கள் தாங்கள் சாராத ஏனைய மத்ஹப் பள்ளிகளிலும் தொழுகிறார்கள் ஆனால் இணை வைக்கும் இமாமை பின் பற்றக்கூடாது என்று ஃபத்வா கொடுத்து போட்டி பள்ளிகள் கண்டவர்கள் தங்கள் இயக்கம் சார்ந்த மர்க்கஸ்களில் மட்டும் தான் தொழுகிறார்கள் இணைவைக்கும் இமாம் இல்லை என்று தெரிந்தும் ஏனைய இயக்க மர்க்கஸ்களில் தொழுவதில்லை. அப்படியானால் அவர்கள் உண்மையான நோக்கம்தான் என்ன? நாஸர், நாகர்கோவில்
தெளிவு : “ருகூஉ செய்பவர்களுடன் சேர்ந்து ருகூஉ செய்யுங்கள்” என்பதே இறைக் கட்டளை. இதன்படி எந்த இமாமையும் பின் தொடர்ந்து தொழ இந்த இறைக் கட்டளை அனுமதிக்கிறது. அந்த இமாம் ´ர்க் வைப்பவராக இருந்தாலும் சரியே” ஒரு ஆத்மா சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே; என்ற 2:286 இறைக் கட்டளைக் கூறுவதால், குர்ஆனிலும், ஹதீஃதிலும் இந்தத் தடையயல்லாம் இல்லை என்பதை அறிவோமாக.
இமாம் சிர்க் வைப்பவராக இருந்தால், பின்பற்றுபவர் சிர்க் வைப்பவராக ஆகிவிடும் மேஜிக்கெல்லாம்(?) இங்கு நடப்பது இல்லை. மற்றும், பின்பற்றித் தொழுவதற்கு வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளிவாசல் களுக்கு தமது ஆட்களே போய் தொழுதால், மர்கஸிற்கு யார்தான் தொழ வருவார்கள் என்ற வினாவிற்கு விடையே மற்ற பள்ளி இமாம்கள் சி´ர்க் வைப்பவர்கள், அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்ற அறிக்கைகள். காரணம் மற்ற பள்ளிகளில் தொழும் கூட்டம் அதிகமாகி விட்டால் மர்கஸ் பள்ளிகள் வெறிச்சோடி போகாதா? அவர்களின் உண்மை நோக்கம் தனி பள்ளி, தனி கூட்டம், தனி தலைமை என்பது இன்னும் புரியவில்லையா?
குர்ஆன் ஹதீஃதைப் பின்பற்றுவதாக எண்ணிக் கொண்டுவந்த ஆட்களும் இப் படி ஒரு சட்டம் குர்ஆனில் இருக்கிறதா, ஹதீஃதில் இருக்கிறதா என்று கேட்கத் தவறி, அவர்களின் வசியப் பேச்சில் சிக்கி விட்டவர்களாகி விட்டனர். ஒருக்கால் அவர்கள் இப்போது திருந்தி இருக்கலாம். அல்லாஹ்வே அறிவான்.
ஐயம் : திருமணம் முடிந்த பின் தன் மனைவியை தலாக் கொடுத்துவிட்ட நபர் எந்த நிலையில் தலாக் கொடுத்திருந்தாலும், விவாகரத்து ஆகிவிட்ட அந்த பெண்ணுக்கு அந்த நபர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா? அல்லது நிலைக்கு ஏற்றவாறு ஜீவனாம்சம் மாறுபடுமா? ஜீவனாம்சம் ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா? இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். சர்புதீன், திருச்சி.
தெளிவு : பல கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். ஒவ்வொன்றையும் வரிசையாகப் பார்ப்போம்.
எந்த நிலையில் தலாக் கொடுத்திருந்தா லும் என்றும், அடுத்து, நிலைக்கு ஏற்றவாறு என்றும் சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் நிலைகளை நாங்கள் சரியாக புரிந்து கொண்டோமா என்பதற்காகவும், இந்த நிலைகளை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் எண்ணத்துடனும் சில நிலைகளைக் கீழே கொடுத்துள்ளோம்.
முதலாவதாக, தலாக் சொல்லப்படும் போதுள்ள நிலைகளைக் காண்போம்.
- திருமணத்திற்குப் பிறகு, உடலுறவு கொள்ளாத நிலையில், தலாக் சொல்லப் பட்ட பெண்கள்,
- திருமணத்திற்கு பிறகு, உடலுறவு ஏற்பட்ட பிறகுள்ள நிலையில், தலாக் சொல்லப்பட்ட பெண்கள்,
- மஹர் கொடுப்பதற்கு முன்பாக உள்ள நிலையில் தலாக் சொல்லப்பட்ட பெண்கள்,
- மஹர் கொடுக்கப்பட்ட பிறகுள்ள நிலையில், தலாக் சொல்லப்பட்ட பெண்கள்,
- திருமணம் நடந்தும் மஹரைப் பற்றியே தெரியாத நிலையில், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்.
தலாக் கூறப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா என்று அடுத்து வினவுகிறீர்கள். நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் பழக்கத்திற்கு ஜீவனாம்சம் என்று சொல்லப்பட்டு வருகிறது.
தாங்கள் கேட்டுள்ளபடி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
தலாக் கூறப்பட்டுள்ள பெண்களுக்கு அப்பெண்களைத் திருணம் செய்தவர்களால் கொடுக்கப்படும் பொருள் அப் பெண்ணின் வாழ்க்கைக்கு உதவும் நன் நோக்கோடு நியாயமாக இருக்க வேண்டும். இந்த உதவியை அரபியில் “முத்(th)ஆ” என்று சொல்லப்படும்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் பரிசுத்த குர்ஆனில் 2:236வது வசனத்தில் இதைப் பற்றி விவரிக்கிறான்.
2:236வது இறை வசனம் :
“பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால், உங்கள் மீது குற்றம் இல்லை; என்றாலும், அவர்களுக்கு பயனுள்ள பொருள்களைக் கொடுத்து உதவுங்கள். அதாவது செல்வம் படைத்தவன் நியாயமாக அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் உதவிப் பொருளைக் (“முத்((th)’) கொடுத்து உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் (முஹ்ஸினீன்கள்) மீது கடமை ஆகும்”.
பெண்களை நீங்கள் தீண்டாமலும், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்யாமலும் இருக்கப்பட்ட நிலையில், தலாக் நிகழ்ந்து விட்டால், அவர்களுக்கு பலனுள்ள பொருட்களைக் கொடுத்து அவர்களைப் பயன் அடையச் செய்யுங்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
இந்த 2:236வது இறைக் கட்டளை அருளப்பட்டபோது ஒருவர், “இது நன்மை செய்ய விரும்புபவர் மீதுதானே கடமை; நான் நன்மை செய்ய விரும்பினால் அவ்வாறு செய்வேன்; விரும்பாவிட்டால் அவ்வாறு செய்ய மாட்டேன்” என்று கூறினார். அப்போது “இறையச்சம் உடைய அனைவர் மீதும் இது கடமை” என்பதை 2:241வது வசனத்தை இறைவன் இறக்கி அருளினான். தப்ஸீர் இப்னு கஸீர் விரிவுரையில் பதிவாகி உள்ளது.
எனவே, 2:241வது வசனத்தை இப்போது பார்ப்போம். “”மேலும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சமரட்சனை(பராமரிப்பு) பெறுவதற்கு பாத்தியம் உண்டு. (இது) பயபக்தி உடையவர்கள் (முத்தகீன்) மீது கடமையாகும்.”
மேலே உள்ள மாற்றப்பட்ட 2:241வது வசனத்தில் மேலான அல்லாஹ், “விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு” என்று பொதுவாக அனைத்து நிலைகளிலும் உள்ள விவாகரத்துக்களையும் குறிப்பிட்டு ஒட்டுமொத்தமாக கட்டளையிட்டு விட்டதால், எந்த நிலையில் தலாக் சொல்லப்பட்டிருந்தாலும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு பயன்படும் விதத்தில் பரா மரிப்புக்கானதை நியாயமாகக் கொடுத்து உதவி “முத்(th)ஆ” செய்தல் வேண்டும் என்பதே சரியான முடிவாகும் என்பதை அறிவோமாக.
ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா என்பது தங்களின் அடுத்த கேள்வி? அதற்கான தெளிவை குர்ஆனிலிருந்து இப்போது காண்போம்.
மேலே குறிப்பிட்ட 2:241வது வசனத்தை இப்போதும் பார்ப்போம். “மேலும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சமரட்சனை (பராமரிப்பு) பெறுவதற்கு பாத்தியம் உண்டு. (இது) பயபக்தி உடையவர்கள் (முத்தகீன்) மீது கடமையாகும்”.
இந்த வசனத்திலோ அல்லது குர்ஆனில் வேறெந்த ஒரு ஆயத்திலும் மாதாமாதம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளை இல்லை. நாம் ஏற்கனவே சொன்னது போல, நம் நாட்டில் உள்ள பழக்கத்தின் காரணமாக இந்த எண்ணம் ஜீவனாம்சம் என்ற பெயரில் மாதாமாதம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளங்களில் பதிந்து இருக்கிறது. அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் 33:21வது ஆயத்தில் தெரிவித்துள்ளதால், இதற்கான விளக்கம் ஹதீஃதில் இருப்பதை இப்போது காண்போம்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரழி), அபூ உசைத் (ரழி) ஆகியோர் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ராஹுல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, தம் கரத்தை நபி(ஸல் அவர்கள் அவரை நோக்கி நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்ப வில்லை போலும் எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிற சணல் ஆடைகளை அளித்திடு மாறும் அபூ உசைத்(ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். (ஆதாரம் : புஹாரி 5256, 5257)
ஹதீஃதிலும் மாதாமாதம் தவணை முறையில் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை.
அலீ(ரழி) அவர்களின் மகனார் ஹசன் (ரழி) அவர்கள், தம் மனைவியை விவாகரத்து செய்தபோது பத்தாயிரம் திர்ஹம் வெள்ளிக்காசுகள் கொடுத்ததாகவும், அப்போது அந்தப் பெண்மணி, “பிரிந்து விட்ட நேசரிடமிருந்து கிடைத்த சொற்பத் தொகை” என்று கூறியதாகவும் தப்சீர் இப்னு கஸீரில் பதிவாகியுள்ளது.
எனவே, முத்ஆ ஒரு முறை கொடுத்த தாகத்தான் ஆதாரங்கள் உள்ளன. மாதா மாதம் கொடுத்ததாக சொல்லப்படவில்லை என்பதை அறிவோமாக.
ஐயம் : குர்ஆன் மட்டும் போதும் என்ற நவீன கூட்டம் ஹதீஃத்கள் கூடாது என்கிறார்கள் குர்ஆனும், ஹதீஃதும் மட்டுமே மார்க்கம் என்று கூறும் அந்நஜாத் கூட்டம் மத்ஹப்கள் கூடாது என்கிறார்கள் ஆக “ஹதீஃத்கள் கூடாது என்பது மத்ஹப்கள் கூடாது என்பதன் வளர்ச்சிதான்” என்று குற்றம் சாட்டுகிறேன். இரண்டு பேருக்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? ஹாஸிக் முகம்மது, சென்னை-50.
தெளிவு : கீழே உள்ள 4:59வது குர்ஆன் வசனத்தைப் படித்து அல்லாஹ்வின் தீர்ப்பை கவனியுங்கள்.
“முஃமின்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள்; ஏதாவது ஒரு விசயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், அல்லாஹ்விடமும் தூதரிடமும் திரும்புங்கள். இதுதான் மிக சிறந்ததாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.
இந்த இறை வசனத்தில், குர்ஆன், ஹதீஃதை பின்பற்றும்படி அல்லாஹ் கட்டளை இடுகிறான். மத்ஹப்கள் மற்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ள நவீன கூட்டம் உட்பட அனைத்து பிரிவுகளும், இந்த இறை வசனத்தை வாயளவில் கூறுவார்கள். ஆனால், புரிந்து செயல்படவில்லை-பின்பற்றவில்லை; குறிப்பாக மத்ஹப்வினர் பின்பற்றுவது குர்ஆன், ஹதீஃதுக்கு மாற்றமாக, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பிக்ஹ் சட்டங்களையே.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நாங்கள் குர்ஆன், ஹதீஃதை மட்டும் பின் பற்றுகிறோம். இதுவே எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
இவர்கள் அனைவரையும் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் 33:66,67,68 ஆகிய வசனங்களைப் பாருங்கள்.
“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இந்த தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். 33:66
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” என்று கூறுவார்கள். 33:67
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களை பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!” என்பர். 33:68
இப்போது கூறுங்கள். “ஹதீஃத்கள் கூடாது என்பது மத்ஹப்கள் கூடாது என்பதன் வளர்ச்சிதான் என்ற தங்களின் குற்றச்சாட்டு சரிதானா?” அடுத்தக் கேள்விக்கான பதில் இது சம்பந்தமாக இருப்பதால், அதையும் படித்துப் பாருங்களேன்.
ஐயம் : அல்லாஹ்வால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட மூல ஆதாரம் குர்ஆன் மட்டும். எனவே குர்ஆன் மட்டும் போதும்; நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஃத்களில் ஆதாரப்பூர்வமானவை, விரும்பத்தக்கவை பலவீனமானவை, இட்டுக்கட்டப்பட்டவை என பல விதங்களில் ஹதீஃத்கள் இருப்பதால் ஹதீஃத்கள் தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனரே. அஹ்லுல் குர்ஆன் எனும் பிரிவினர். இது சரியா?
மேலும் இப்பிரிவினரில் ஒரு சிலர் தங்களை “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று கூறிக்கொள்கிறார்களே, விளக்கம் தரவும். எஸ், முஹம்மத் அப்துல்லாஹ், திருச்சி.
தெளிவு : “குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும்; ஹதீஃத்கள் தேவை இல்லை” என்ற அவர்களின் கூற்றை அவர்கள் குர்ஆனில் காட்டியே தீரவேண்டும். இது வரை காட்டி இருக்கிறார்களா? காட்டவே முடியாது. பிறகு எதற்கு இப்படி எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அவர்களுக்குத்தான் தெரியும். இப்படிக் கூறு வதற்கான ஆதாரங்களை அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்றிருக்கிறார்களா?
“ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா? அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் பின்பற்ற வேண்டாமா?”
அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்க ளுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று 33:21வது ஆயத்தில் குர்ஆன் கூறிக் கொண்டிருக்க, குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுபவர்கள் குர்ஆனின் இந்த 33:21 வது ஆயத்தை நிராகரித்து விட்டார்களா? நவூதுபில்லாஹ். அப்படி என்றால், குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லிக் கொண்டே ஏன் குர்ஆனை நிராகரிக்கிறார்கள்?
சுயமாக எதையும் சொல்லிவிடாமல் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலும் கண் காணிப்பிலும் இருந்து கொண்டு “ரசூல்” என்ற அந்தஸ்த்திலும், “நபி” என்ற அந்தஸ் திலும், அல்லாஹ்விடமிருந்து வஹீயாகப் பெற்றதை (குர்ஆனை)யும், அதற்கான விளக்கங்களை (ஹதீஃத்களை)யும் உலக மக்களிடம் ஒப்படைத்துவிட்டு தமக்கிட்ட இறைப்பணியை முழுமைப்படுத்தியதற்கு, அந்த வல்லோன் அல்லாஹ்வையே ஹஜ்ஜத்துல் விதாவில் சாட்சியாக்கி ஈருலகத்திற்கும் அருட்கொடை என்ற சான்றை வல்லோனிடமே பெற்று, இவ்வுலகை விட்டு மறைந்து விட்ட அந்த உத்தமரை-மாமனிதரைப் பின்பற்றக் கூடாதாம். (கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் குர்ஆனில் உள்ளவை என்பதை நினைவில் கொள்க). இவர்கள் சொல்வதைத்தான் பின்பற்ற வேண்டுமாம். ஆக, இவர்கள் குர்ஆனையும் பின்பற்றவில்லை, ஹதீஃதையும் பின்பற்றவில்லை.
2:285வது குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.
“தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார். முஃமின்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்”
முஃமின்கள் தூதர்களையும் நம்புகிறார் களாம். இது குர்ஆனின் கூற்று. ஆனால், இந்த மனிதர்கள் இறுதித் தூதர் சொன்னவை களை நம்பமாட்டார்களாம். அதாவது தூதர் கொடுத்த ஹதீஃத்கள் வேண்டாமாம் அப்படியயன்றால், அவர்களை அவர்களே அங்கீகரிக்கவில்லை.
அந்த வசனத்தை இன்னும் கவனியுங்கள் “இன்னும், நாங்கள் செவிமடுத்தோம். நாங்கள் வழிப்பட்டோம்” என்றும் கூறுவார்களாம். அதாவது முஃமின்கள் தங்கள் ஈமானை நிரூபிக்கிறார்கள். ஆனால், இவர்களோ தூதர் கொடுத்ததை நம்பமாட்டார்களாம். அப்படி என்றால் குர்ஆனில் இந்த வசனத்தை செவிமடுக்கவுமில்லை, வழிபடவும் இல்லை.
குர்ஆன் கூறும் 4:65வது ஆயத்தைப் பாருங்கள் :
“உம் இறைவன் மேல் சத்தியமாக! அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர், நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தயையும் தம் மனங்களில் கொள்ளாது, (அத் தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக மாட்டார்கள்.
“இந்த நபி, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கின்றனர்” 33:6வது இறை வசனம் இந்த வசனத்தின்படி நபி(ஸல்) அவர்களை தங்களுடைய உயிர்களை விட மேலானவராக கருதி இருந்தால், நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஃத்களை நிராகரிப் பார்களா?
கீழே கொடுக்கப்பட்டுள்ள இறை வசனங் களைப் பாருங்கள்.
ஞானம் நிரம்பிய குர்ஆன் மீது சத்தியமாக. 36:2
நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவராவீர். 36:3
நேரான வழியின் மீது இருக்கின்றீர். 36:4
குர்ஆன் மீது சத்தியமிட்டு அல்லாஹ் கூறுவதைப் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர் கள் நேரான வழியின் மீது இருக்கின்றார் களாம். நாம் சொல்லவில்லை, அல்லாஹ் சொல்கிறான். நேரான வழியில் இருப்பவர் பொய்யான ஹதீஃத்களை தந்துவிட்டாராம். பொய்யான ஹதீஃத்களை அவர்கள் தரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். இப்போதும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள், அல்லாஹ் சொல்வதையும், தூதர் சொல் வதையும் கேட்காதவர்கள்” என்றே எண்ண முடியும்.
இஸ்லாத்தின் எதிரிகள், இஸ்லாத்திற்குள்ளே ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் மிகைப்படுத்தல், சுயலாபம், மனித சிந்தனைகளை மார்க்கமாக்க முனைந்த சித்தாந்தங்கள், தூண்டிவிடல் என பற்பல காரணங்களால் அல்லாஹ்வின் தூதர் சொல்லாதவை ஹதீஃத்களாய் அறிமுகப்படுத்தப்பட்டன.
அல்லாஹ்வின் மிகப் பெரும் ஏற்பாடு! மிகப் பெரிய கிருபை! கிஞ்சிற்றும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முஹத்தி ஸீன்கள் தங்களின் தியாகத்தாலும், சொல்லொனா கடின உழைப்பாலும், முழுக்க முழுக்க தங்களை அர்ப்பணித்து பிற வகை ஹதீஃத்களிலிருந்து ஆதாரப்பூர்வமான (ஸஹீஹான) ஹதீஃத்களை தரம் பிரித்துக் கொடுத்தது. எமது தூதர் சுயமாக எதையும் பேசுவதில்லை என்ற தன் வாக்கை நிரூபித்துக் காட்டிய அல்லாஹ் மிகப் பெரியவன். இந்த முஹத்திஸீகளின் பணி அளப்பரியது.
ஆனால், அவைகளைப் படித்துப் புரிந்து கொள்ள சிரமம் என்றெண்ணி, போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டு செல்வதைப் போல, சர்வசாதாரணமாய் ஹதீஃத்கள் வேண்டாம் எனப் புறக்கணித்து விடுவது சரிதானா என்று சற்று தனிமையில் உட்கார்ந்து அல்லாஹ்வுக்கு பயந்து சிந்தியுங்கள். அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் ஹிதாயத் கொடுப்பான்.
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, குர்ஆனையும், ஹதீஃதையும் பின்பற்றி முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாக மரணிக்கவாவது முயற்சிக்கட்டும். உதாரணத்திற்கு, 4:59வது வசனத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கான அல்லாஹ்வின் தீர்ப்பை கவனியுங்கள்.
முஃமின்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள்; ஏதாவது ஒரு விசயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், அல்லாஹ்விடமும், தூதரிடமும் திரும்புங்கள். இதுதான் மிக சிறந்ததாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.
இந்த வசனத்தை பல தடவைகள் அவர்கள் புரிந்து கொள்ளும் வரை படிக்கட்டும். என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டும்படும்படி அல்லாஹ் கட்டளை இடுகிறான்.
முஃமினாக இருந்தால், என்ன செய்வார்கள் கட்டுப்பட்டு விடுவார்கள். ஏதாவது ஒரு விசயத்தில் பிணங்கிக் கொண்டால், யாரிடம் பிணங்க முடியும்? அல்லாஹ்வின் தூதரிடம் பிணங்க முடியுமா? பிணங்கினால் அவன் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்தவன் ஆவான். நான் சொல்லவில்லை? அல்லாஹ்வே கூறுகிறான்.
வசனத்தைத் தொடருங்கள். “பிணங்கிக் கொண்டால், அல்லாஹ்விடமும் தூதரிடமும் திரும்புங்கள்” என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான் அல்லவா? தூதரிடம் பிணங்கியவர்கள் தூதரிடம் திரும்புவார்களா? மாட்டார்கள் அல்லவா? அப்படி என்றால் அவர்கள் யாரிடம்தான் பிணங்க முடியும்? ஆட்சி அதிகாரம் உடையவர்களிடம் மட்டுமே அவர்கள் மார்க்க முரணாகக் கூறினால், பிணங்க முடியும். தீர்ப்பு என்ன? “பிணங்கிக் கொண்டால், அல்லாஹ்விடமும் தூதரிடமும் திரும்புங்கள்” என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள், குர்ஆன் கூறுவதைக் கேட்கமாட்டார் களாம். ஆனால் இவர்கள் பின்பற்றுவது குர்ஆனை மட்டும்தானாம்! விந்தை மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ?
வசனத்தைத் தொடருங்கள். அப்படித் “திரும்புவதுதான் மிக சிறந்தது. அழகான முடிவு” என்று அல்லாஹ் தன் தீர்ப்பைத் தெரிவித்துவிட்டான். அப்படி இருந்தும், அல்லாஹ்விடமும் திரும்பவில்லை. தூதரிடமும் திரும்பவில்லை. அது எப்படிப்பட்ட முடிவாக இருக்கும்?
ஆக, 4:59வது வசனத்தின்படி :
- அவர்கள் முஃமின்கள் இல்லை,
- தூதர் கூறியவை வேண்டாம் எனக் கூறுவதன் மூலம், அல்லாஹ்வின் கட்டளையை மீறிவிட்டார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படவில்லை, தூதருக்கும் கட்டுப்படவில்லை.
- அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்கள் இல்லை என்றும் நிரூபிக்கிறார்கள்.
- அவர்களின் முடிவு சிறந்ததும் அல்ல, அழகானதும் இல்லை.
மொத்தத்தில், குர்ஆன் மட்டும் போதுமாம். ஆனால் குர்ஆன் கூறுவதைக் கேட்க மாட்டார்களாம். ஆனால், இவர்கள் பின்பற்றுவது குர்ஆனை மட்டும்தானாம்! விந்தை மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ? அவர்களுக்கு குர்ஆன் சந்தர்ப்பம் தருவதை பயன்படுத்திக் கொள்ளட்டும். கீழுள்ள இரு வசனங்களைப் படித்து தங்களை அவர்கள் திருத்திக் கொள்ளட்டும்.
6:159வது இறை வசனம் :
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டனரோ, அவர்களின் எந்த காரியத்திலும் (நபியே) உமக்கு சம்பந்தம் இல்லை. அவர்களுடைய விசயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
அல்லாஹ், நபிக்கு கட்டளையிடுவதைப் பார்த்தீர்களா?
(நபியே!) அவர்களின் எந்த காரியத்திலும் உமக்கு சம்பந்தம் இல்லை என்று கூறி, இவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக உள்ள எல்லாப் பிரிவுகளையும் கழட்டி விடுகிறான்.
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில்) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். 30:32
மேற்கண்ட நிலையிலிருந்து தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டு அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படட்டும். அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் பெற்று, நபி(ஸல்) அவர்கள் கொடுத்த குர்ஆனும் வேண்டும், அல்லாஹ்வின் கண்காணிப்பின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஃத்களும் வேண்டும் என்று அனைவரும் ஈமான் கொள்வோமாக.
சரக்கே இல்லாமல் விற்பனைக்கு வந்து விட்ட அவர்கள், யாராலோ இயக்கப்படுகிறார்களோ என சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. அது உண்மையாக இருக்குமேயானால், அவர்களுக்கு வாழ்வாதார பிரயோ ஜனங்களும் கிடைக்குமோ என்றும் சந்தே கிக்க வேண்டி இருக்கிறது. அதுவும் உண்மையாக இருக்குமேயானால், அவர்களின் பின்புலம் பற்றி அரசு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய சூழ்நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சி சுப்ரமணியபுரம் ஷாஜஹான் அவர்களிடம் அப்துல் ஹமீது, அந்நஜாத் அவர்கள் என்ன சந்தேகம் இருந்தாலும் எழுதிக் கொடுங்கள் அந்நஜாத்தில் பதிலளிக்கிறோம் என்று சொல்லியிருந்தார். இதுவரையும் எழுத்துப்பூர்வமாக இதுவரை இவர்கள் எதையும் எழுதி அனுப்பவில்லை. எழுத்துப்பூர்வமாக இருந்தால் மட்டும் பதிலளிக்க முடியும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.