பெரும்பான்மை…

in 2018 நவம்பர்

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

அக்டோபர் தொடர்ச்சி…

இன்று உன்னை உன் சடலத்தோடு கரை ஒதுங்கச் செய்வோம். உனக்குப் பின்வரு வோருக்கு நீர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் (என்று நாம் கூறினோம் எனினும்) மக்களில் பெரும்பாலானோர் நமது சான்றுகளை(ப் பாராது) அலட்சியம் செய்பவராகவே உள்ளனர். 10:92

நற்செய்தி கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கிறது) ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அலட்சியம் செய்கின்றனர். (மேலும்) அவர்கள் செவியேற்பதுமில்லை. 41:4

பெரும்பாலானோர் சத்தியத்தை உண்மையை வெறுக்கிறவர்களாகவே இருந்தார்கள் :

நிச்சயமாக நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் உங்களில் பெரும்பாலானோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள். (என்றும் கூறப்படும்) 43:78

அல்லது அவருக்கு மனநோய் (பைத்தியம்) பிடித்திருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறன்று அவர்களிடம் அவர் உண்மையையே கொண்டு வந்திருக்கிறார் (ஆனால்) அவர்களில் பெரும்பாலானோர் உண்மையை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர். 23:70

மேலும் (நபியே!) உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நற்செய்தி கூறுபவராக வும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி நாம் அனுப்பவில்லை எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள். 34:28

பெரும்பாலானோர் வழிகெட்டிருந்தனர்:

நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் முற்கால மக்களில் பெரும்பாலானோர் (இவ்வாறே) வழிகெட்டிருந்துள்ளனர். 37:71

பெரும்பாலானோர் பாவத்திலும், வரம்பு மீறலிலும் தடை செய்யப்பட்டதை உண்பதிலும் தீவிரமாக இருக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பாவத்திலும், வரம்பு மீறலிலும் தடை செய்யப்பட்டதை உண்பதிலும், தீவிரமாக இருப்பதை (நபியே!) நீர் காண்கிறீர் அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் மோசமானது அவர்களது பாவமான பேச்சிலிருந்தும் தடை செய்யப்பட்டதை அவர்கள் உண்பதிலிருந்தும் அவர்களை வணக்கசாலிகளும் அறிஞர்களும் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகவும் மோசமானது. 5:62,63

பெரும்பாலானோர் செய்வது மிகவும் கெட்டவையாகும் :

(அது மட்டுமன்றி) அவர்கள் தெளராத்தையும், இன்ஜீலையும் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (இதர வேதத்)தையும் (முறையாகக்) கடைப்பிடித்து நடத்திருப்பார்களாயின் தமக்கு மேல் (வானில்) இருந்தும் தமது கால்களுக்குக் கீழ் (பூமியில்) இருந்தும் (கிடைப்பவற்றை) அவர்கள் உண்டு (மகிழ்ந்து) இருப்பார்கள். (ஆனாலும்) அவர்களில் நேர்மையாக நடந்து கொள்கின்ற சிலரும் உள்ளனர். (எனினும்) அவர்களில் பெரும்பாலானோர் செய்வது மிகவும் கெட்டவையானதேயாகும். 5:66

பெரும்பாலானோர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாக்கிக் கொண்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் (ஏக இறையை மறுத்த) காஃபிர்களையே உற்ற நண்பர்களாக்கிக் கொள்வதை (நபியே!) நீர் காண்கிறீர் அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளும் வகையில் தமக்காக அவர்கள் தேடிக் கொண்ட (வினையான)து மிகவும் மோசமானது அவர்கள் (என்றென்றும்) வேதனையில்தான் நிரந்தரமாக இருப்பார்கள். 5:80

பெரும்பாலானோர் தமது இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்களாவர் :

அல்லாஹ்(தான்) வானங்களையும், பூமியையும் அவற்றிற்கு இடையில் உள்ளவற்றையும் நியாய(மான காரண)த்தோடும் குறிப்பிட்ட தவணையோடும்தான் படைத்துள்ளான் என்பதை அவர்கள் தமக்குள்ளேயே சிந்தித்துப் பார்க்கவில்லையா? நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் தமது இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்களாவர். 30:8

பெரும்பாலானோர் இறை நம்பிக்கை கொள்வோராயில்லை :

(நபியே!) இது மறைவான செய்திகளில் அடங்கும் இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம் அவர்கள் சூழ்ச்சி செய்து தமது முடிவை ஒருமனதாக எடுத்தபோது அவர்கள் அருகில் (நீர்) இருக்கவில்லை நீர் (எவ்வளவுதான்) பேராசை கொண்டாலும் மனிதர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்கை கொள்வோராயில்லை. 12:102,103

நிச்சயமாக இதில் (தெளிவான) சான்று உள்ளது (ஆயினும்) அவர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்கை கொண்டோராய் இருக்கவில்லை.
26:8,67,103,121,158, 174, 190

பெரும்பாலானோர் இறை நம்பிக்கை கொள்வதில்லை :

தமது இறைவனிடமிருந்து வந்த தெளிவான சான்றில் இருந்து கொண்டு அதைத் தொடர்ந்து அவனிடமிருந்து ஒரு சாட்சியும் தம்மிடம் வந்து அதற்கு முன்பே மூஸாவின் நெறிநூல் முன்னோடியாகவும் அருளாகவும் அமைந்துவிட்ட ஒருவரா? (அவ்வாறு இல்லாத மற்றவருக்கும் சமம் ஆவார்?)இத்தகையோரே இ(ந்நெறி நூ)லை நம்புகின்றனர். இதை மறுக்கும் அணியினருக்கு நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும். எனவே (நபியே!) இது குறித்து நீர் ஐயம் கொள்ளவேண்டாம். நிச்சயமாக இது உம்முடைய இறைவனிடமிருந்து வந்த உண்மைதான் எனினும் மக்களில் பெரும் பாலானோர் (இறை) நம்பிக்கை கொள்வதில்லை. 11:17

அலிஃப், லாம், மீம், ரா இவை (தெளிவான) இந்நெறிநூலின் (தூய) வசனங்களாகும். உம்முடைய இறைவனிடம் இருந்து உமக்கு அருளப்பெற்ற இது முற்றிலும் உண்மையானது. எனினும் மக்களில் பெரும்பாலானோர் நம்பிக்கை கொள்வதில்லை. 13:1

நிச்சயமாக அவர்களில் பெரும்பாலானோர் மீது (நமது) வாக்கு பலித்து விட்டது. எனவே அவர்கள் இறை நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. 36:7

பெரும்பாலானோர் நபி என நம்பமாட்டார்கள் :

(நபியே!) இவை (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளவையாகும். அவற்றை நாமே உமக்கு வஹியாக அறிவிக் கின்றோம். அவர்கள் சூழ்ச்சி செய்தவர்களாகத் தமது விசயத்தில் ஏகமனதாக முடிவெடுத்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (நபியே!) நீர் எவ்வளவுதான் ஆர்வம் கொண்டாலும் மனிதர்களில் பெரும்பாலானோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள். 12:102-104, 34:28

பெரும்பாலானோர் குர்ஆனை நம்புவதில்லை:

அலிஃப், லாம், மீம், ரா இவைநெறி நூலின் (தூய) வசனங்களாகும். மேலும் (நபியே!) உம்மீது உமது இறைவனிடமிருந்து அருளப் பெற்றுள்ள இது உண்மையாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) நம்புவதில்லை. 13:1

இ(ந் நெறிநூலான)து நிச்சயமாக உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) நம்பிக்கை கொள்வதில்லை. 11:17

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத் தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம். பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் உடன்படிக்கை செய்த போதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே அவர்களில் பெரும்பாலானோர் (இதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். 2:100

யூதர்களில் சிலர் நெறிநூல் வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர். (உம்மை நோக்கி நபியே நீர் சொன்னதை) நாம் கேட்டோம். அதற்கு மாறாகவே செய்வோம் இன்னும் (நாங்கள் கூறுவதை)நீர் கேளும் (நீர் கூறுவது எங்களது) செவியேறாது போகட்டும் என்று கூறி “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக் கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர். (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் நாம் செவியேற்றோம். இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட் டோம். (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள் எங்களை அன்போடு கவனியுங்கள் (உள்ளூர்னா) என்று கூறி இருப்பார்களானால் அது அவர்களுக்கு நன்மையாகவும் மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகையால் குறைவாகவே தவிர அவர்கள் (பெரும்பாலானோர் நெறிநூல் வசனங்களை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். 4:46,155

“என்னுடைய இறைவா! நிச்சயமாக(ப் பெரும்பாலான) எனது மக்கள் இந்தக் குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்” என்று நம் தூதர் கூறுவார்) 25:30

பெரும்பாலானோர் குர்ஆனிலுள்ள அத்தாட்சிகளை நம்பிக்கை கொள்வதில்லை: நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலானோர் (அதனை) நம்பிக்கை கொள்வதில்லை. 26:103,121,139,158,174,190

பெரும்பாலானோருக்கு நிராகரித்தலையும் வரம்பு மீறுதலையும் அதிகப்படுத்துகிறது:

வேதமுடையவர்கள்! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும் இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டதையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை என்று கூறும். மேலும் உமது இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட(இந்நெறிநூலான)து அவர்களில் பெரும்பாலானோருக்கு நிராகரித்தலையும், வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. 5:68

பெரும்பாலானோர் அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்.

எனினும் உனக்குப் பின் உள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள். 10:92

பெரும்பாலானோர் மீது வேதனை விதிக்கப்பட்டுவிட்டது :

இன்னும் (மனிதர்களில்) பெரும்பாலானோர் மீது வேதனை (விதிக்கப்பட்டு) உறுதியாகிவிட்டது. 22:18, 36:7

பெரும்பாலானோருக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய நம்பிக்கை இல்லை:

(நபியே!) ஒரு சமூகத்தாரை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதே இ(து அருளப்பெற்ற)தற்குக் காரணம் அவர்களின் மூதாதையர்(கள் அவ்வாறு) எச்சரிக்கப்படவில்லை. எனவே அவர்கள் அலட்சியமாக உள்ளனர். நிச்சயமாக அவர்களில் பெரும்பாலானோர் மீது (அவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகி விட்டது. ஆகவே அவர்கள் இதை நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. 36:6,7

பெரும்பாலானோர் மறுமை நாளை நம்புவதில்லை:

(மறுமை நாளுக்கான விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதை நம்பிக்கை கொள்வதில்லை. 40:59

பெரும்பாலானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர்:

இறை நம்பிக்கை கொண்டோரே சமய அறிஞர்கள் துறவிகள் ஆகியோரில் பெரும் பாலானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். (மேலும் நேரிய) இறை வழியிலிருந்து (ம் மக்களைத்) தடுக்கின்றனர். யார்(இவ்வாறு தவறான முறையில்) பொன்னையும், வெள்ளியையும் திரட்டி வைத்துக் கொண்டு அவற்றை இறை வழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக. 9:34, 5:63

பெரும்பாலானோர் நபியின் கட்டளைக்கு மாறு செய்தனர் :

பின்னர் தாலூத் (தமது) படைகளுடன் புறப்பட்ட போது அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான் அதில் தமது ஒரு கையளவு (மட்டும் தண்ணீர்) அள்ளி அருந்துபவரைத் தவிர (அதற்கும் அதிகமாக) அருந்துபவர் என்னைச் சார்ந்தவரல்லர் அதைச் சுவைக்காதவர்(தான்) என்னைச் சார்ந்தவராவார் என்று (அவர்களிடம்) கூறி னார். ஆனால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள் அதிகமாக) அதில் அருந்தினர். பின்னர் அவரும் அவருடன் (சென்ற) நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்து சென்றபோது இன்று ஜாலூத் மற்றும் அவனுடைய படையினருடன் (போரிட) எங்களுக்கு வல்லமை இல்லை என்று கூறி விட்டனர். (ஆனால்) அல்லாஹ்வை நாம் நிச்சயமாகச் சந்திப்போம் என்று நம்பியோர் எத்தனையோ சிறு கூட்டம் பெரும் கூட்டத்தை அல்லாஹ்வின் உதவியால் வென்றுள்ளது அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று கூறினார். 2:249

பெரும்பாலானோர் வாக்கை காப்பதில்லை:

அவர்களில் பெரும்பாலானோரிடம் (கொடுத்த) வாக்கைக் காக்கும் பண்பை நாம் காணவில்லை. 7:102

பெரும்பாலானோர் மூடர்களாகவே இருக்கின்றனர் :

நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கி வைத்தாலும் இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படி செய்தாலும் இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்கு நேர் கொண்டு வந்து ஒன்று சேர்த்தாலும் அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் அவர்களில் பெரும்பாலானோர் மூடர்களாகவே இருக்கின்றனர். 6:111

பெரும்பாலானவர்கள் விதண்டாவாதம் புரிகின்றனர் :

நிச்சயமாக இந்தக் குர்ஆனில் நாம் மனிதர்களுக்கு எல்லா (விதமான) எடுத்துக்காட்டுகளையும் (கூறி) விவரித்துள்ளோம். (ஆனாலும்) மனிதனோ பெரும்பான்மையாக விதண்டாவாதம் புரிபவனாகவே இருக்கின்றான். 18:54, 9:54, புகாரி : 1127, 7347, 7455, முஸ்லிம் : 1424

பெரும்பாலானவர்களுடைய பேச்சில் எந்த விதமான நன்மையுமில்லை :

தர்மம் அல்லது நற்செயல் அல்லது மக்க ளிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் தூண்டக் கூடியவர்களின் இரகசிய உரையாடல்) களைத் தவிர அவர்களில் பெரும்பாலான (வர்களின்) இரகசிய உரையாடல்களில் எந்தவிதமான நன்மையும் இல்லை. 4:114

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “மனிதனின் உரையாடல்கள் அனைத்தும் அவனுக்குப் பாதகமானவையாக அமைந்துள்ளன அல்லாஹ்வைத் துதித்தல் அல்லது நற்பணிகள் புரியும்படி தூண்டுதல் அல்லது தீயவற்றைத் தடுத்தல் தொடர்பான உரையாடல்களைத் தவிர பெரும்பாலானோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.” (உம்மு கபிபா(ரழி) தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி)

Previous post:

Next post: