மனித உயிர் குடிக்கும்… மது நோய்! (Alcoholism Disease)
- ஹலரத் அலி, திருச்சி.
மனிதர்களை நல்வழிப்படுத்தவே உருவானதாக சொல்லப்படும் மதங்கள் அனைத்துமே நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ மது குடித்தலை ஊக்கப்படுத்தும் நிலையில்தான் இன்றும் உள்ளன. அல்லாஹ்வின் நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே இந்த சமூகச் சீர்கேட்டை கடுமையாக எதிர்த்து களமாடுகிறது. மதுவை “தீமைகளின் தாய்” என்று வர்ணித்து சிந்திக்கச் சொல்லி சீர்படுத்துகிறது.
நபியே! மதுபானத்தையும் சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும்பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு(அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டில் உள்ள பாவம் அவ்விரண்டிலுமுள்ள பலனை விடப் பெரியது” அல்குர்ஆன் : 2:219
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், மது (குடிக்கலாமா என்பது) பற்றி கேட்டார் அதைக் (குடிக்கக் கூடாது என) தடுத்தார்கள். அதை மருந்துக்குப் பயன்படுத்தலாமா? என மீண்டும் அவர் கேட்டார். நிச்சயமாக அது (நோயைக் குணப்படுத்தும்) மருந்தல்ல அதுவே ஒரு நோய்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, அஹ்மது
அனைத்து தீமைகளுக்கும் தாய் போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு மாஜா :3371
பல நோய்களை உருவாக்கும் மதுவிலும் உடல் ஆரோக்கியத்திற்கான சிறிது நன்மையுண்டு என்றே இதுவரை மருத்துவ உலகம் கூறிக் கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமும் சிறிது சிவப்பு ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லது என்று மதுவை தொடர்ந்து குடித்து வருகின்றனர். மதுவுக்கு அடிமையானவர்கள் நோயாளிகள் என்று இருபதாம் நூற்றாண்டு வரை ஒருவருக்கும் தெரியவில்லை.
மது அடிமை (Alcohol Addict) என்றே பல நூற்றாண்டு காலமாக அழைத்து வந்தனர். குடிப்பழக்கத்தால் உருவான பல்வேறு நோய்களை கண்டறிந்த பின்பு 1956ஆம் ஆண்டு “அமெரிக்கா மருத்துவ கழகம்” குடி கெடுக்கும் குடியை ஒரு நோய் என பகிரங்கமாக அறிவித்தது. ஆயினும் மது ஒரு நோய் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டார்கள்.
(In 1956 the American Medical Association (AMA) declared Addiction to alcohol and other drugs, to be a disease. Definitions include disorder of human functions with signs and symptoms not caused by physical injury)
ஆனால் சமீபத்திய மிகப் பரந்த, விரிவான ஆய்வு முடிவுகள்… மது குடிப்பதால் சிறிது நன்மையுண்டு என்பதை விட உடலுக்கு மிகப் பெரும் தீங்கையே கொடுக்கிறது… என்ற உண்மை ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற மருத்துவ ஆய்விதழான “லான்செட்” (The Lancet) ஆகஸ்ட், 2018 இதழில், மது சிறிது குடித்தாலும் அதாவது ஒரு நாளில் ஒருமுறை மட்டும் குடித்தாலும் அதன் அபாயம் அதிகம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலகம் முழுவதும் மூன்றில் ஒருவர் மது குடிப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. அதாவது, உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒருவர் சுமார் 240 கோடி மக்கள் “குடி” மகன்களாக மது நோயில் மாட்டியுள்ளனர்.
இதில் 25% பெண்களும், 39% ஆண்களும் போதையின் பாதையில் நடக்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 1.7% மதுவை ஆண்களும், 0.73% மதுவை பெண்களும் பாவிக்கின்றார்கள். ஆண்டுதோறும் மதுவின் கொடுமையினால் சுமார் 28 லட்சம் பேர் மரணிக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 49 வயதுடையவர்களே பெரும்பாலும் மதுவுக்கு பலியாகிறார்கள்.
இந்த விரிவான ஆய்வானது 1990-2016 வரை 195 நாடுகளில் நடத்தப்பட்டது. 694 ஆய்வு தரவுகளுடன் 592 ஆராய்ச்சி முடிவுகள் கணக்கில் எடுக்கப்பட்டன. மது குடித்தல் தொடர்பாக இதுவரை நடந்த ஆய்வுகளில் இதுவே மிகப் பெரியது. விபத்தில் இறப்பவர்கள், தற்கொலை செய்பவர்கள், காச நோய், கல்லீரல் நோய், புற்று நோய் போன்றவற்றில் இறப்பவர்களின் பின்னணியில் காரணியாக இருப்பது மது குடித்ததன் விளைவே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக புகை பிடித்தலை விட மது குடித்தல் உடலுக்கு தீங்கிழைப்பதில்லை என்றே பெரும்பாலான ஆய்வு முடிவுகள் முன்பு கூறின. உதாரணமாக, ஒருவர் ஒரு நாளில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ அளவோடு குடிப்பதினால் அவரது இதய நோய் மற்றும் நீரிழிவு, பக்க வாதம் போன்ற நோய்களுக்கு அது நல்லது என்று மது குடித்தலை ஊக்குவித்தனர்.
ஆனால் தற்போதைய முழுமையான புதிய ஆய்வு இதை முற்றிலும் நிராகரித்து, ஒரு நாளில் ஒருமுறை மட்டும் குடித்தாலும் அது நோயை அதிகரிக்கவே செய்வதாக ஆய்வு முடிவுகள் கூறுவது. ஆய்வாளர் களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. ஆகவே சிறிது குடித்தாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்ற முடிவுக்கு இன்றைய மருத்துவ உலகம் வந்துள்ளது. உலகெங்கி லும் 28 லட்சம் மக்கள் இறப்பிற்கு மது குடிப்பழக்கமே காரணியாக உள்ளது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் இதய நோயால் இறக்கின்றார்கள் என்றால், அதன் பின்னணியில் மது போதையின் தாக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மதுவினால் வரும் இதய நோய் ஆண்களில் 27.1%, பெண்களில் 18.9% பேரும் மரணத்தை தழுவுகிறார்கள். 15 வயதிலிருந்து 95 வயது வரையுள்ள ஒரு நபர் தினமும் ஒரு முறை ஆல்கஹால்-மது குடிக்கின்றார் என்றால், இவர் மதுவினால் உண்டாகும் 23 வகை வியாதிகளை 0.5% வருடந் தோறும் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
உலக அளவில் அதிகளவு மது குடிக்கும் மக்கள் டென்மார்க் நாட்டினர். சுமார் 95.3% பெண்களும், 97.1% ஆண்களும் மது குடிப்பவர்களாக உள்ளனர். குறைந்த அளவு மது பாவிக்கும் நாட்டினராக பாகிஸ்தான் ஆண்கள் 0.8%, பங்களாதேஷ் பெண்கள் 0.3% இடம் பெறுகிறது.
குடிப்பதினால் உடலுக்கு நன்மையுண்டு என்று இதுவரை கூறி வந்த மேல் நாட்டு மருத்துவ உலகத்தின் மாயை, இன்று அவர்களாலேயே உடைக்கப்பட்டுவிட்டது. மது ஒரு நிவாரணி அல்ல, மாறாக அதுவே ஒரு நோய் என்ற அல்லாஹ்வின் வாக்கு இன்று அறிவியல் ஆய்வின் மூலம் மருத்துவ உலகத்தால் மெய்ப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
தீமைகளின் தாயாக மது இருக்கிறது என்று நன்கு தெரிந்த பின்னும் மதுப்பழக்கத்தை மக்களிடம் மென்மேலும் விரிவுபடுத்தவே மக்கள் நல அரசுகள் பாடுபடுகின்றன. மதுவை தடை செய்ய இவர்களால் முடிவதில்லை. காரணமென்ன? யார் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள் தான் சாராய ஆலையின் உரிமையாளராக இருக்கின்றார்கள். அல்லது சாராய அதிபர்கள் அளித்த பொருளாதார ஆதரவில் பதவிக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்வின் சட்டம் அமுல்படுத்தாத வரை உலகில் மது போதை நோயை மாய்ப்பது இயலாத ஒன்று.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் விட நம் தமிழ்நாடு தான் புதிய “குடி”மகன்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழக அரசை தாங்கிப் பிடித்து வருவாயில் தூக்கி நிறுத்துவது குடித்து கொடுக்கும் தள்ளாடும் குடி மகன்களே, வருடத்திற்கு சுமார் 21,800 கோடி ரூபாய்கள் டாஸ்மாக் மூலமே வசூலாகிறது. பெரும்பாலான மாநிலங்களின் வருவாயில் 20% போதையில் தள்ளும் மதுபானம் மூலமே கிடைக்கிறது.
உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மதுபானத்தில் ஐந்தில் ஒரு பங்கு சுமார் 20% இந்தியர்கள் குடித்துக் களிக்கிறார்களாம்.
இதில் அரசு புள்ளி விபர கணக்கில் வராமல் கள்ளச்சாராயம் குடிப்பவர்கள் மூன்றில் இரண்டு இருக்கலாம் என்று “லான்செட்” இதழின் (Lancet Magazine) ஆய்வு கூறுகிறது.
இந்தியாவின் சந்தை பொருளாதாரம் உலகமயமானவுடன், வெளிநாட்டு மதுபானங்கள் இங்கு வெள்ளமாக பாய்கின்றன. மது மயக்கத்தில் மக்களைத் தள்ளி, அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டும் மக்கள் நல அரசுகள் முட்டாள் அரசாகவே இன்றும் உள்ளன.
ஏனெனில் மதுவினால் கிடைக்கும் ஒரு ரூபாய் வருவாயை விட, மதுவினால் நோய்வாய்ப்படும் மக்களுக்கு இரண்டு ரூபாய் அரசு செலவு செய்கிறது, அத்துடன் உற்பத்தித்திறன் இழப்பு வேறு.
ஒரு காலத்தில் கஞ்சா, சாராயம் என்ற வார்த்தைகளை சொல்வதற்கே மக்கள் கூச்சப்பட்டனர். ஆனால் இன்று குடிமகன்கள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு “கவர்மெண்டின் உற்சாக பானம்” ஊற்றாக ஓடுகிறது. தமிழகத்தில் சுமார் 60% குடும்பங்களில் குடிமகன் ஒருவர் கட்டாயம் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கூடிய விரைவில் இதை 100 சதவிகிதம் முழுமை பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கு மக்கள் நல அரசு பெரு முயற்சி எடுத்து வருகின்றது. பிறகு தமிழ்நாடு என்ற அழகிய பெயர் வைத்திருப்பது தமிழுக்கு இழுக்கு. எனவே, “குடிகார நாடு’ என்று மாற்றிவிடலாம்.