ஆங்கிலேயர் நிர்ணயம் செய்த (UTC)
(ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்) இஸ்லாமிய அடிப்படையா?
அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சந்திரனை கணக்கிட்டு காலண்டர் போட்டு அதன் அடிப்படையில் அமல்கள் செய்து வருகின்றோம். கணக்கீடு நவீன அறிவியல் உலகில் மனிதர்களால் முடிந்த வரை துல்லியமான முறையில் கணக்கிட முடியும். (அல்லாஹ்வின் துல்லியம் என்பது இறுதியானது) அதன்படி கணக்கிட்டு வருகிறோம்.
இதற்காக உலக நடைமுறையில் உள்ள தேதிக்கோடு IDL உலக நேரம் UTC ஆகிய உலகம் நியமனம் செய்த அளவீடுகளை பயன்படுத்துகின்றோம். இவை இஸ்லாமிய அடிப்படையில் உள்ளதா என்று ஆய்வு செய்ய முயன்ற போது எனக்கு கிடைத்த UTC (உலக நேரம்) பற்றிய பதில்களை மட்டும் உங்கள் பார்வைக்கு தருகிறேன். இன்ஷா அல்லாஹ் நீங்கள் பரிசீலித்து எனக்கு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
UGMT, UT, UTC என்றால் என்ன?
இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத் துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் அறிவை கொண்டு தயாரித்த கணினிகளையும், GPS வழிகாட்டிச் சாதனங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்? தேவைதான்.
அன்றைய தேவை நேர நிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டு வந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளை யும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். வான இயற்பியல் மற்றும் கடல் பயணங்களில் நேர நிர்ணயத்தின் தேவையை உணர்ந்த அன்றைய பிரிட்டன் அரசாங்கம் நேர நிர்ணயத்திற்காகப் பல உலகளாவிய மாநாடுகளை நடத்தியது. பல ஆய்வுக் கூடங்களைத் திறந்தது. உலகளாவிய பல அறிவியல் அறிஞர்களின் துணை கொண்டு வகுக்கப்பட்ட நேரக் கணக்கினையும் அதன் நிர்ணயத்தையும் இறுதி யில் நடைமுறைப்படுத்திக் காட்டியது. இதன் விளைவாகக் கிடைத்தது தான் இந்த GMT, UT, UTCகளெல்லாம்.
GMT, UT, UTC ஆகியவைகளை நாம் பல இடங்களில் படித்ததுண்டு. படித்துவிட்டு குழம்பியதும் உண்டு. GMT என்றால் என்ன? UT அல்லது UTC என்றால் என்ன? என்ற தெளிவில்லாமல் பல இடங்களில் அறிவியல் சம்பந்தமான நேர கணக்குகளின் புரிதல்கள் தடைப்பட்டிருக்கலாம். இவற்றை பற்றி இங்கு காண்போம்.
GMT-Greenwich Mean Time (கிரீன்விச் இடைநிலை நேரம்)
UT-Universal Time (உலகளாவிய நேரம்)
UTC- Universal Time Coordinated (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்)
1928 முதல், லண்டனில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தில் இயங்கி வந்த வான் ஆய்வு மையமே ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greenwich Observatory – RGO) என்று அழைக்கப்பட்டது.
கிரீன்விச் இடைநிலை நேரம் (Greemwich Mean Time-GMT) :
கிரீன்விச் இடைநிலை நேரம் GMT என்பது கிரீன்விச் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாக கொண்டு போடப்பட்டுள்ள தீர்க்க ரேகையை (Zero Degree Longitude) பொறுத்து அமையப் பெற்ற சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலான ஒரு கால அளவு ஆகும்.
அதாவது நடுமட்ட சூரியன் (Mean Sun) சரியாக இந்த ஆய்வுக்கூடத்தின் தீர்க்க ரேகையை (Zero Degree) ஒத்திருக்கும் பொழுது மணி 12:00 GMT ஆகும்.
உலகளாவிய நேரம் – UT (Universal Time)
1928ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் சங்கம் பரிந்துரைத்ததின்படி அன்றிருந்த கிரீன்விச் சிவில் நேரமே (GMT) உலகளாவிய நேரம் (UT) என குறிப்பிடப்பட்டது. அந்த காலக்கட்டத்தில்தான் “உலகளாவிய நேரம் (Universal Time)” மற்றும் “உலகளாவிய நாள் (Universal Day)” அறிமுகமானது.
இந்த வகையான நேர நிர்ணயங்கள். சிவில் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்புடையதாக இருந்தது.
ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம் – UTC (Coordinated Universal Time)
பூமியின் சுழற்சிக்கேற்ப கணக்கிடப்பட்ட நேரம் அவ்வப்பொழுது ஒத்திசைக்கப்படுவதால் இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்-UTC(Universal Time-Coordinated) எனப்படுகிறது.
மிகத் துல்லியமான GPS, வானியல் கணக்கு போன்ற பயன்பாட்டிற்கு UTC மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். வானியற்பியல் கணக்கிற்காக நாம் பயன்படுத்துவது UTC நேர கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
UTC கணக்கிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நேர நிர்ணயம் ஆகும்.
சுருங்கச் சொன்னால், GMT அடைந்த பரிணாம வளர்ச்சியே UTC எனலாம்.
நாளின் ஆரம்பம் பற்றி இஸ்லாம் :
உலகம் ஆரம்பித்த நாள் முதல் நாள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்து உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்: அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும். இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 1548, அத்தியாயம் : 7 ஜும்ஆ
இந்த ஹதீஃத் மூலம் ஆதம் படைக்கப்படுவதற்கு முன்பே நாளும், கிழமையும் அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான் என்றும் உலகம் முழுவதும் ஒரே கிழமையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் என்றும் தெரிகிறது.
ஒரு இரவு, ஒரு பகல் சேர்ந்து ஒரு நாள் என்பது உலகில் அனைவராலும் ஒப்பு கொண்ட முடிவு ஆகும்.
ஒரு வானியல் நாள் என்பது நள்ளிரவில் நொடிகளில் இருந்து தொடங்கி கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு ஒரு நாள் நீளம் கொண்டது ஒரு சூரிய நாள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில் முஸ்லிம்களில் சிலர் நாள், மக்ரிபில் ஆரம்பிப்பதாகவும் மற்றும் சிலர் காலை பஜ்ரில் ஆரம்பிப்பதாகவும் கூறுகின்றனர்.
பகல் முதலில் என்போரும் இரவு முதலில் என்போரும் உள்ளனர். ஆனால் குர்ஆன் கூறுவது இதுதான்.
சூரியன் சந்திரனை பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் : 36:40)
இந்த வசனத்தின் மூலம் இரவு முந்தி வராது, பகலே முதலில் என்று அறியமுடிகிறது.
நாளின் ஆரம்பம் பற்றி உலக விளக்கம் :
கிறிஸ்துவர்கள் நாள் நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பிப்பதாகவும் அதன் அடிப்படையில் தான் கிறிஸ்துவ காலண்டர்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாட்டிலும் இரவு 12 மணிக்கு மேல் தேதியை மாற்றுகின்றனர்.
உலக நேரப்படி உலக நாள் ஆரம்பத்தின் உண்மை நிலை :
ஒருங்கிணைந்த உலக நேரம் UTCயின் அடிப்படை கட்டமைப்பு பற்றி பார்ப்போம்.
அது தேதிக்கோட்டில் சூரியன் உச்சியில் இருப்பது முதல் மறுபடி சூரியன் உச்சிக்கு வரும் வரை என்ற அடிப்படை கட்டமைப்பில் கட்டப்பட்டு உள்ளது.
நள்ளிரவை அடிப்படையாக கொண்ட நாளின் ஆரம்பம் செய்யும் உலக காலண்டருக்கு உலகில் நாளை ஆரம்பிக்கும் இடத்தின் உச்சியை அடிப்படையாக கொண்டு உச்சி முதல் உச்சி வரை என்ற நிலையில் UTC அமைந்து உள்ளது சரியா?
அல்லது நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்ற நிலை சரியா?
இஸ்லாமிய அடிப்படையில் நாளின் ஆரம்பம் :
இஸ்லாமிய அடிப்படையில் பஜர் முதல் பஜர் வரை நாள் கணக்கிடப்படுகிறது.
சாந்தியிருக்கும்; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன்:97:5)
இந்த வசனம் லைலத்துல் கத்ர் நாள் முடியும் நேரம் பற்றி குறிப்பிடும்போது பஜர் வரை உள்ளதாக குறிப்பிடுகிறது.
நபி(ஸல்) இஃதிகாஃப் இருந்தது, ஹஜ்ஜின் அமல்கள் ஆரம்பம் செய்தது, தொழுகை பஜர் முதல் இஷா வரை நாளின் கடைசியாக வித்ரு தொழுகை தொழுதது அசர் நடுதொழுகையாக வருவதும் நாள் பஜரில் இருந்து ஆரம்பம் ஆவதை உறுதி செய்கிறது.
* UTC உச்சி To உச்சி வருவது உண்மை என்றால் அதை ஏன் முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படையாக ஏற்க வேண்டும்?
* நாள் என்பது நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்று கூறும் ஆங்கில கணக்கீட்டின் அடிப்படைக்கே UTC எதிராக உள்ளதே?
* தேதிக்கோட்டில் பஜர் ஆரம்பிப்பது முதல் மீண்டும் பஜர் வரும் வரை உள்ளதை “இஸ்லாமிய உலக நேரமாக” எடுத்து கணக்கிடுவதே இஸ்லாமிய அடிப்படை.
இதனை இஸ்லாமிய அடிப்படையாக எப்படி மாற்றுவது? இப்போது உச்சி முதல் உச்சி வரை நாள் என்ற அடிப்படை கட்டமைப்பை பஜர் முதல் பஜர் வரை என்று மாற்ற பஜருக்கும் உச்சிக்கும் இடையே உள்ள நேரத்தை UTCயில் கழித்து கணக்கிட வேண்டும். பஜருக்கும், உச்சிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 7 மணி நேரத்தை குறைத்து கணக்கிட வேண்டும். சரியான IDLஐ கணக்கிட லண்டனுக்கும், மக்காவிற்கும் இடையே உள்ள 3 மணி நேர வித்தியாசத்தை UTCயில் கழிக்க வேண்டும் 24UTC- 3 = 21UTC. அதற்கு மேல் உள்ளது அடுத்த நாளுக்குரியது என IDL கட்டுரையில் பார்த்தோம். இப்போது UTCயில் உள்ள பிழையை சரி செய்து கணக்கிட 21UTC-7=14UTCக்கு மேல் நடைபெறும் சங்கமங்களை அடுத்த நாளுக்குரியதாக கணக்கிட வேண்டும்
14 UTC க்கு மேல் சங்கமம் நடைபெற்றால் அந்த சங்கமம் அடுத்த நாளுக்கு உரியது ஆகும். 14 UTCக்கு மேல் நடைபெறும் சங்கமங்களில் தேதி கோட்டில் அலஸ்காவில் நாளை ஆரம்பிக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடிந்து புதிய நாள் வந்து விடும்.
அந்த புதிய நாளில் சங்கமம் நடைபெறுவதற்கு முன்பே பஜ்ரில் புதிய மாதத்தை துவங்கி இருப்பார்கள். இது கமீட்டியின் கணக்கீட்டில் தவறான அடிப்படையில் உள்ளது. இது சரியா என்று ஹிஜிரி கமீட்டி பரிசீலிக்க வேண்டும்.
மேலும் அந்த மாதங்களில் தான் முழு நிலவு 16ம் தேதியில் தவறாக வரும். காரணம் புதிய தேதியை ஆரம்பிக்கும் தேதிக் கோட்டில் மக்கள் விடிந்த பின்பு நடைபெறும் சங்கமத்தை வைத்து சங்கமம் நடந்த அந்த நாளிலேயே மாதத்தை துவங்குவதால் வந்த தவறு அந்த நாளை விட்டு விட்டு மறுநாள் துவங்கினால் முழு நிலவு 15-ம் தேதியில் வரும்.
மக்காவில் பஜருக்கு நெருக்கமான 3 மணியாக உள்ளபோது தேதிக்கோட்டில் உச்சியில் நாளை ஆரம்பிப்பது இஸ்லாமிய அடிப்படையா என்று ஹிஜ்ரி கமீட்டி பரிசீலிக்க வேண்டும்.
மக்காவின் பஜரில் நாள் ஆரம்பிக்கிறது என்றால் ஆரம்பிக்கும் இடமும் மக்காவில் இருந்துதானே ஆரம்பிக்க வேண்டும்.
காலண்டரில் உள்ள குறைகளை மற்றவர்களின் விமர்சனமாக மட்டும் பார்க்காமல் இது பல ஆயிரம் மக்களின் இபாதத் தொடர்பானது என்பதை கருத்தில் கொண்டு IDLஐயும் UTCஐயும் மீண்டும் இஸ்லாமிய அடிப்படையில் உள்ளதா? என்று ஆய்வு செய்து மீண்டும் பரிசீலிக்குமாறு ஹிஜிரி கமீட்டியை கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கங்களுக்கும் என் தொலைபேசி எண் 9345154415 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவனும், ஞானம் மிக்கவனும் ஆவான். அவனே நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.