விமர்சனம் : 2018 அக்டோபர் இதழ், பக். 4ல் ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது என்கிறீர்கள். அதே நேரத்தில் ஸலஃபிக் கொள்கையும் கூடாது என்கிறீர்கள். இரண்டும் முரண்படுவது போல் தெரிகிறதே! தெளிவுபடுத்துங்கள். ஹாஸிக் முகம்மது, சென்னை-50.
விளக்கம் : ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது என்று கட்டுரையாளர் கூறியதைத் தாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால், ஸலஃபிக் கொள்கை கூடாது என்று அந்நஜாத் கூறுவதில்தான் தாங்கள் முரண்பாட்டைக் காண்கிறீர்கள். கீழுள்ள இறைவசனத்தைப் பாருங்கள். அவர்கள் சொல்லைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்.
அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம், இவர்கள்தாம் அறிவுடையோர் என்று 39:18 இறைவசனத்தில் அகிலங்களைப் படைத்த அல்லாஹ் கூறியிருப்பதால், ஸஹாபாக்களின் சொல்லானாலும், ஸலஃபிகளின் சொல்லானாலும் இன்னும் வேறு எவருடைய சொல்லானாலும் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணில்லாமல் அவை இருக்குமேயானால், அவற்றை ஏற்றுக் கொள்ள அந்நஜாத் என்றுமே தயங்குவதில்லை. குர்ஆன், ஹதீஃதைப் பின்பற்றுவது மட்டுமே ஒரு முஸ்லிமின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கட்டுரையாளர் தமது கட்டுரையின் ஆரம்பத்திலும், இடையிலும், இறுதியிலும், “குறிப்பிலும்” இதனை அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார். ஸலஃபிகள் அப்படி குர்ஆன், ஹதீஃதில் இல்லாத எதைக் கூறிவிட்டனர் என்ற வினா தங்களுக்குள் எழலாம். “ஸலஃபிக் கொள்கை” என்று தங்கள் விமர்சனத்திலேயே குறிப்பிட்டுள்ளீர்களே அதில்தான் முரண்பாட்டைக் காண்கின்றோம்.
இஸ்லாமிய கொள்கைதான் அல்லாஹ்வால் அங்கீகரிககப்பட்ட கொள்கை, அதுவே மார்க்கம். மத்ஹப்கள், இயக்கங்கள், இன்னும் இன்னும் என பற்பல அல்லாஹ் அருளிய கீழ்கண்ட வசனங்களை நிராகரித்து தனித்தனி ஜமாஅத்தாக இயங்குகின்றனர். பதில் சொல்வார்களா? “நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் உமக்கு சம்பந்தம் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். 6:159
“எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ, ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.” 30:32 இறுதியாக கட்டுரையாளர் ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்ய வேண்டாம் என்று கூறுவதன் காரணம். அவர்கள் “ஸஹாபாக்கள் ஜமாஅத்” என்று புதிதாக எந்த பிரிவையும் ஏற்படுத்தவில்லை என்பதாலேயே! எனவே, ஸஹாபாக்கள் கூறியதிலும் எதையேனும் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாகக் கண்டால், அவற்றையும் அலட்சியம் செய்வோமாக.