அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? குர்ஆன் விளக்கம்-1
கு. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை
நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன்முலம்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன், நிகரில்லா அன்புடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக!
ஆல இம்ரானுடைய 31வது வசனம் இது:
இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பதை அதை படித்த மாத்திரத்தில் “பளிச்’ சென்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால் புரிகிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் வசனம் அல்ல இது. அதன் வார்த்தை ஒவ்வொன்றையும் இனி விரிவாக அணுகுவோம்.
நீங்கள் இறைவனை நேசித்தால் என்னை பின்பற்றுங்கள் :
மனிதன் சதாவும் எதையாவது ஒன்றை நேசித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேசத்தை ஏதோ ஒருவிதத்தில் அவன் வெளிப்படுத்தியும் காட்டி விடுகிறான்.
பணத்தை நேசிக்கிறான், மனைவி மக்களை நேசிக்கிறான், உணவையும், தூக்கத்தையும் நேசிக்கிறான். மற்ற மற்ற சிலர் மார்க்கத்திற்கு விரோதமான சமூக தீங்கைக் கூட நேசிக்கிறார்கள். குடி, சூது, கடத்தல், போதைப்பொருள், அன்னிய பெண்கள் என்று நேசம் பல எல்லைகளையும், கிளைகளையும் கொண்டுள்ளது.
நாம் நேசிக்கக்கூடிய மனைவியை பார்ப்போம். அந்த தருணங்களில் மனம் குதூகளிக்கும் முகம் அந்த குதூகளிப்பை வெளியில் காட்டிவிடும்.
பணத்தை நேசிப்போம், அது கையில் கிடைத்தவுடன் முகம் அதன் அடையாளத்தை காட்டும்.
தீய காரியங்களை செய்ய துணியும் போது சமூகத்திலிருந்து மறைந்து அந்த காரியத்தை செய்கிறான் மனிதன். “மறைத்துக் கொள்ளுதல்” என்பது அவன் நேசத்தை காட்டி விடுகிறது.
ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலர்களின் அவசரமும், துடிப்பும், அவர்களின் நேசத்தை உலகிற்கு சொல்லி விடுகிறது.
தாயை கண்டவுடன் அவளை நேசிக் கும் குழந்தை தாவி தவழ்ந்து ஓடி வந்து அவள் மீதேறி தன் நேசத்தை வெளிப்படுத்தும்.
புரிந்து கொண்ட-மனம் நிறைந்த நண்பர்கள் சந்திக்கும் போது சிரித்து மகிழ்ந்து ஆரத்தழுவி தங்கள் நேசத்தை உலகிற்கு காட்டுவார்கள்.
இப்படியாக நேசத்திலிருந்தும் அதை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையிலிருந்தும் விடுபட்ட மனிதர்கள் யாருமே உலகில் இல்லை. இதே அடிப்படையில் இறைவனை நேசிக்கும் தன்மை மனித இயல்பில் கலந் துள்ளது. உலகில் வாழும் மக்களில் 95 சதவிகிதமானவர்கள் இறைவனை நேசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த நேசத்தில்தான் பெருத்த சிக்கல்களும், முரண்பாடுகளும் தென்படுகின்றன.
முஸ்லிம்களாகட்டும், ஹிந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், இன்னும் பிற மதத்தவர்கள், மொழிக்காரர்கள், நாட்டவர்கள் இவர்கள் அனைவருமே தன் தாயை காதலியை, மனைவியை, நண்பர்களை, உற்றார் உறவினரையும், சுற்றத்தாரையும் நேசிக்கும் விதமும் அந்த நேசத்தை வெளிக்காட்டும் விதமும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. இதே மக்கள் இறைவனை நேசிக்கும் விதத்தையும், அதை வெளிக்காட்டும் விதத்தையும் எண்ணிப் பாருங்கள்.
முஸ்லிம்கள் :
இவர்கள் ஒரே இறைவனை மிக வலுவாக நேசிக்கக்கூடிய சமுதாயத்தவர்கள். ஆனால் இவர்களில் கணிசமானவர்கள் இறை நேசத்தின் ஆழத்தை புரிந்துக் கொள் ளக்கூடிய வழியை கற்காமல் அதில் பெரும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் இறந்து போனவர்கள் மீதும் அவர்களின் சவக்குழிகளின் மீதும் மதகுருக்களாக கருதப்படும் ஹஜ்ரத்கள், ஷேக்குகள் என்ற மனிதர்கள் மீதும் அளப்பறிய நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்லும்படியெல்லாம் நடப்பதே இறை நேசம் என்றெண்ணி ஓரிறை கோட்பாட்டில் விபச்சார தன்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிலேயே நிலைத்தும் நிற்கிறார்கள்.0
ஹிந்துக்கள் :
இந்தியா என்ற மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வாழ்பவர்கள். மிகச் சிறந்த அறிவாளிகள், பண்பாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் என்று இவர்களின் தரம் பெருகி இருந்தாலும் இவர்களின் இறை நேசத்தின் வெளிப்பாட்டை, ஆன்மீக வழிபாட்டை கவனித்தால் அந்த தரம் மிக்கவர்களா இப்படி என்று எண்ணத் தோன்றிவிடும். ஆம், மிக உயர்ந்த படைப்பாகிய மனிதர்கள் தன்னோடு எந்த விதத்திலும், நிலையிலும் ஒப்பிட்டே பார்க்க முடியாத, அந்த தகுதி அறவே இல்லாதவற்றை யயல்லாம் வணங்கி வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். கல்லும், மண்ணும், மரமும், மட்டையும், பாம்பும், எலியும், பல்லியும், பறவையும் இவர்களின் இறைவனாகிப்போய் இவர்களை ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவர்கள் :
வழிகாட்ட வந்தவரையே வணங்கத் துவங்கியவர்கள். பிறப்பும், பசியும், தாகமும், இயலாமையும், பலவீனமும், தூக்க மும், துக்கமும், எரிச்சலும், கோபமும், கடைசியில் இறப்பும் கொண்ட மலஜல குடலை சுமந்துக் கொண்டு வாழ்ந்த ஒருவரை இறைவனின் சந்ததி என்றாக்கி அவருக்கு இறை மகன் என்று பெயரிட்டு பின்னர் அவரை கல்லாக்கி, சிலையாக்கி சிலையை நேசிக்கவும், வழிபடவும் துவங்கி விட்டார்கள்.
கற்றுக் கொடுக்கப்படவேண்டிய நேசம் :
முரண்பாடுகள் கொண்ட இந்த அறியாமையை போக்க என்ன வழி? கற்றுக் கொடுப்பது என்பதை தவிர வேறு வழி யில்லை. வலது கையால் உண்ணும் இயல்பான நிலையிலிருந்து மாறி இடது கையால் ஒரு குழந்தை உண்ணும்போது அங்கு அந்த குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பாகி விடுகிறது. அறிவிருந்தும் தெரிந்து கொள்ள சக்தியற்ற மாணவனுக்கு புரியும் விதத்தில் சொல்லிக் கொடுப்பது ஆசிரியரின் கடமையாகி விடுகிறது. அதே போன்று தான் இறை நம்பிக்கையும், இறை நேசமும் பாழ்பட்ட பழக்க வழக்கங்களால் கறைபடியும் போது அதிலிருந்து அவற்றை தூய்மைபடுத்தி மக்களுக்கு புரிய வைப்பது இறைவன் மீது கடமையாகி விடுகின்றது.
அந்த பாடத்தை செவ்வனே மக்களுக்கு போதிக்கும் பணியை இறைவன் இந்த வசனத்தில் துவங்குகிறான்.
“இறைத்தூதரே நீர் கூறும், மக்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று”
இறைவனை நேசிப்பதற்கும் இவரை பின்பற்றுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி இங்கு எழலாம். அர்த்தமுள்ள கேள்விதான். ஒரு அடிப்படையை புரிந்துக் கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.
இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று சொல்லப்பட்டவரும், சொல்பவரும் ஒரு சாதாரண மனிதராக மட்டுமில்லை. அவரை இறைவன் தன் தூதராக தேர்ந்தெடுத்துள்ளான். இறைத் தூதர் என்ற நிலையிலிருந்து அந்த வார்த்தை சொல்லப்படுகிறது. சொல்லக் கூடிய மனிதரை மட்டும் பார்க்காமல் அவருடைய தகுதியையும் பார்க்க வேண்டும்.
அவர் ஒரு இறைத்தூதர். இறைவனை பற்றி மக்களுக்கு அறிவித்து அவன் விரும்பும் விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பணிக்கப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர் அவர். தன் மீது விதிக்கப்பட்ட பணியில் அவர் ஒரு கடுகளவேனும் குறைப்பாடு செய்யவில்லை என்பதால் இறைவனை அறியும் விதத்தையும், அவன் மீதான நேசத்தையும் அவரை பின்பற்றியே பெற்றுக்கொள்ளலாம் என்ற சூழ்நிலை இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.
மனிதர்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற வார்த்தை முஹம்மத்(ஸல்) அவர்கள் தன் விருப்பத்தில் சொன்ன வார்த்தையல்ல. அந்த வசனத்தில் “நீர் சொல்வீராக” என்ற ஏவல் வந்துள்ளது. அதாவது இப்படி சொல்ல வேண்டும் என்ற கட்டளை இறைவனால் பிறப்பிக்கப்படுகிறது. இறைவனே அப்படி சொல்ல சொன்னதிலிருந்து அவனை அடையும் வழியை எவ்வளவு துள்ளியமாக முஹம்மத்(ஸல்) பெற்றுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
அந்த வழியை முஹம்மத் அவர்களை தவிர வேறு யாரும் பெறவில்லையா? என்ற கேள்வி அடுத்து எழலாம். அநேக மக்கள் பெற்றிருந்தனர். அந்த மக்கள் அனைவருமே இறைத்தூதர்கள் என்ற அந்தஸ்தில் இருந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் முஹம்மத் அவர்களின் வருகைக்கு முன்னால் தம் தமது சமூகங்களுக்கு மட்டுமே வழிகாட்ட அனுப்பப்பட்டார்கள். பணியின் வட்டம் சிறியதாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையைபாது காக்கும் ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அது மட்டுமின்றி அந்த இறைத்தூதர்களின் மறைவுக்கு பிறகு அந்தந்த மக்கள் இறைத்தூதர்கள் கொண்டு வந்த வழிமுறையில், போதனையில் பல மாற்றங்கள் செய்து புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டனர். (இதற்கு உதாரணமாக கிறிஸ்துவத்தை குறிப்பிடலாம்.
இயேசு கொண்டு வந்த கொள்கை இன்றைக்கு பைபிளிலோ, கிறிஸ்தவ உலகிலோ இல்லை. இயேசுவிற்கு பிறகு பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டதாக சொல்லிக்கொண்ட பவுல் என்பவரே இன்றைய கிறித்தவத்தை உருவாக்கினார். இதற்கு பைபிளிலிருந்து அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைக்க முடியும். ஒரு பெரிய மதத்தின் நிலையே இதுவென்றால் அவருக்கு முன்னால் வந்தவர்கள் பற்றிய நிலையை நாம் சாதாரணமாக புரிந்துக் கொள்ளலாம்)
இன்னும் தெளிவாக சொல்லப்போனால் முஹம்மத் என்ற இறை தூதரின் வருகைக்கான அவசியத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களே அவருக்கு முன்னால் வாழ்ந்த மக்கள்தான். அவருக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களின் வாழ்க்கை முறை பாதுகாக்கப்பட்டிருந்தால் இன்னுமொரு தூதர் அவசியமில்லாமலே போயிருக்கும். இப்படி ஒரு நிலை இல்லாமல் போனதால் தான் முஹம்மத் அவர்களின் வருகை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.
முஹம்மத்(ஸல்) அவர்களின் பணி உலகளாவிய பணியாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையின் பாதுகாப்பு ஏற்பாடு மிக பலப்படுத்தப்பட்ட நிலையில் இறைவனால் ஆக்கப்பட்டது.
இறைத்தூதரே! நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம் என்று இறைவன் கூறுகிறான். அல்குர்ஆன்:34:28
இந்நிலையில் உலக மக்களில் எவராக இருந்தாலும் அவர்கள் உண்மையில் இறை வனை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த தூதரை பின்பற்றுபவர்களாகத்தான் மாற வேண்டும்.
மக்களே நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று தூதரே நீர் கூறும்.
நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற அறிவிப்பு மிக ஆழம் மிக்கதாகும்.
இறைவனை நேசிப்பதாக இருந்தால் நேராக இறைவனையே பின்பற்றி விட்டு, போக முடியாதா? சத்தியமாக முடியாது. “பின்பற்றுதல்” என்றால் ஒருவரை மாடலாக்கி அவர் செய்வது போன்று செய்வதாகும். அ, ஆ, இ, ஈ என்று சொல்லி கொடுக்கும் ஆசிரியரின் ஓசையையும், உச்சரிப்பையும் அப்படியே திருப்பி சொல்லும் குழந்தைகளின் நிலையே பின்பற்றுவதற்குரிய நிலையாகும். இறைவனை பின்பற்றுவது என்பது, அதாவது அவனைப் போன்றே செயல்படுவது, எவராலும் (எவராலும் என் பதை எவ்வளவு வேண்டுமானாலும் அழுத்தி உச்சரித்துக் கொள்ளுங்கள்) ஒருக் காலமும் முடியாத காரியமாகும். எவராலும் முடியாத அந்த தன்மைகளில் தான் உண் மையான இறை சக்தியே அடங்கியுள்ளது.
அவனை நேசிப்பதற்குரிய அடையாளம் என்னவென்றால் அவன் ஏவியபடி வாழ்ந்து காட்டுவதேயாகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவரே முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் ஆவார்கள். அவர் வாழ்ந்து காட்டிய ஒவ்வொரு அங்குலத்திலும் இறை நேசத்திற்குரிய அடையாளங்கள் குவிந்துக் கிடப்பதால் உலகில் உள்ள எவரும் அவரைத்தான் தனக்கு மாடலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தி இந்த அறிவிப்பையும் முன்னிருத்தி விட்டான்.
அவரை பின்பற்றி இறைவனை அறிதல்:
மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்துபோன இறை நம்பிக்கையில் தான் எத்தனை வேறுபாடுகள், எத்தனை பாகுபாடுகள். கற்கால மனித சிந்தனையில் உதித்த மகா பயங்கரமான, மாயாஜால மிக்க கடவுள் கொள்கையும், மனிதனாகவே கடவுளை வர்ணித்து, வடிவமைத்துக் கொண்ட மனித கடவுள் கொள்கையுமே நாத்திகம் உயிர் பெறுவதற்கான மூலக் கூறுகளை உருவாக்கி கொடுத்துவிட்டது.
உண்மையான இறைவனை அறியும் வழியை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதரிடமிருந்துப் பெற்றால் அந்தப் பாடத்தில் கடுகின் முனை அளவிற்கு கூட பலவீனம் இருக்காது.
இறைவன் ஒருவன் அவன் தனித்தவன், பெறப்பட்டவனோ, பெற்றவனோ அல்ல, அவன் தேவையற்றவன், அவனுக்கு நிகராக எதுவுமில்லை, எல்லா சக்திகளையும் தன் அதிகாரத்திற்கு கீழ் வைத்துள்ளவன் அவன் அவனோடு போட்டி போடக்கூடிய மாற்று சக்தி எதுவுமில்லை. உறக்கம், முதுமை, ஆசை, இச்சை, மறதி, மரணம் என்ற எந்த கறையும் படியாதவன் அவன். எவரது கண் களுக்கும், கருவிகளுக்கும் எட்டாத இடத் தில் இருந்துக் கொண்டு பிரபஞ்சம் அனைத் தையும் அவன் சூழ்ந்தறிந்து அவற்றை இயக் கிக் கொண்டிருக்கிறான். எந்த கண்களும் அவனை கண்டதில்லை. உலக வாழ்வில் எவரும் காணபோவதுமில்லை. எந்த தவறை வேண்டுமானாலும் செய்துவிட்டு, சமூக கொடுமைகளில் சிறப்பாக பங்களித்து விட்டு, எப்படி வேண்டுமானாலும் பொருளாதாரத்தை திரட்டி விட்டு, இறைவனுக்காக உண்டியலில் பணக் கட்டுகளையும், தங்கத் தகடுகளையும் காணிக்கையாக்கி (இறைவனுக்கு லஞ்சம்) விட்டால் போதும் அவன் நம்மை ஆசீர்வதித்து விடுவான் என்ற சிந்தனை உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்கள் அழிவின் பாதையில் செல்கிறீர்கள். ஏனெனில் உண்மையான அந்த இறைவன் நீதி மிக்கவன், லஞ்சமோ, வாதாடுதலோ, பரிந்துப் பேசுதலோ அவனிடம் எடுபடவேபடாது. அப்படிப்பட்ட அந்த மகா சக்திக்கு கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையே தூய்மையான வாழ்க்கை. இதுதான் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் மனிதகுலத்திற்கு வழங்கிய இறைக் கோட்பாடாகும். இந்த இறைக் கோட்பாட்டில்தான் உண்மையான இறை நேசம் அடங்கியுள்ளது. இப்போது அந்த வசனத்தைப் படியுங்கள்.
“மனிதர்களே நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்”
நாம் இறைவனை நேசிக்கிறோம் இறைவன் நம்மை நேசிக்கிறானா….
இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அடுத்தக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். சிறந்த பலனை அடைவதற்காக ஒருவன் கடினமாக உழைக்கிறான். ஒருவன் மிகுந்த சிரத்தையுடன் படிக்கிறான். இந்த உழைப்பாலும், படிப்பாலும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி வாழ்வில் விரக்தியையும் தோல்வியையுமே சந்திப்பார்கள்.
தண்ணீர் என்பது மனித வாழ்க்கைக்கு எத்துனை அவசியமானது! 50 அடி தூரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிந்து “போரிங்” போட்டால் கிடைக்கும் தண்ணீரை கண்டு மனம் குதூகளிக்கிறது. சில இடங்களில் 200 அடி வரை பைப் இறக்கப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் தண்ணீர் எங்கு இருக்கிறது என்ற அறிவு அவர்களுக்கு இல்லாததேயாகும்.
ஐம்பது அடியில் கிடைக்கும் சந்தோம் இருநூறு அடிகளை கடந்த பிறகும் சிலருக்கு கிடைக்காமல் போவதை யோசித்துப் பார்த்தால் “செயலுக்கு முன்னால் அதன் பலன் குறித்து சிந்திப்பது, ஆராய்வது” என்ற வழிக்காட்டுக் கொள்கை தெளிவாகும்.
போய் சேரக்கூடிய ஊரை மட்டும் ஒருவன் தெரிந்துக் கொண்டு அந்த ஊருக்கான வழியை தெரிந்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டு தன் பயணத்தை துவங்குகிறான் என்றால் இந்த பயணத்தின் முடிவு குறித்து யாராலும் தீர்வு சொல்ல முடியுமா?
உலகில் உள்ள அவ்வளவு ஆத்திகர்களுமே நாங்கள் இறைவனை அளவு கடந்து நேசிக்கிறோம் என்ற “இறை நேச தேசத்திற்கு” தன் பயணத்தை துவங்கி விடுகிறார்கள். அதேசமயம் இறைவன் நம்மை நேசிக்கிறானா, என்ற அந்த வழியை, இறை நேச தேசத்தை அடையும் வழியை, அலட்சியப்படுத்தி விட்டுப் பயணிக்கிறார்கள். காற்றா லையில் ஊர்கோலம் போகும் இவர்களின் இந்த ஆன்மீக தேடல் திக்குத் தெரியாமல் தான் அலைந்துக் கொண்டிருக்கும்.
உதாரணமாக தான் நேசிக்கும், உயிரையே வைத்திருக்கும் அந்த பெண் தன்னை நேசிக்கிறாளா அவள் மனதில் தனக்கு இடமுள்ளதா, இருவரும் ஒன்று சேர்ந்து சந்தோ மாக வாழ அவள் தன்னை அங்கீகரிப்பாளா, என்ற முடிவோ, முயற்சியோ, தேடலோ இல்லாமல் போன காதல் ஒருதலை காதலாகவே சிதைந்துப் போகும். இந்த ஒருதலை காதலில் அவ்வப்போது மன ரீதியாக சில சந்தோங்கள் ஏற்படலாம். அவள் நினைவுகளே போதும் என்ற வரட்டு வார்த்தை வெளிப்படலாம். ஆனால் காதலியை மனைவியாக்கி அவளோடு வாழும் காலங்களில் கிடைக்கும் “அற்புதமான இன்பத்தை” இந்த ஒருதலை காதலர்களால் அடைந்துக் கொள்ளவே முடியாது.
இறைவன் நம்மை நேசிக்கிறானா என்று தெரிந்துக் கொள்ளாமல் நாம் இறைவனை நேசிக்கும் அந்த ஆன்மீகம் “ஒருதலை ஆன்மீகமாகவே” அமைந்து போகும். நாம் இறைவனை நேசிப்பது போன்று இறைவனும் நம்மை நேசிக்க வேண்டும் அதுதான் முழுமையான ஆன்மீகமாக இருக்கும். இறைவன் நம்மை நேசிக்கின்றானா?
தொடரும்… இன்ஷா அல்லாஹ்