தலையங்கம்!  வர்த்தகப் பிரச்சனை!

in 2019 மார்ச்,தலையங்கம்

அந்நஜாத் மார்ச் 2019

ஜ.ஆகிர்-ரஜப் 1440

தலையங்கம்!  வர்த்தகப் பிரச்சனை!

உலகிலுள்ள அத்தனை நாடுகளுமே சில்லறை விற்பனையிலிருந்து பெரும்பெரும் வர்த்தகம் வரை பற்பல வணிகங்களில் பயன் அடைந்து கொண்டிருப்பது உண்மை! அதிலும், குறிப்பாக நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதி இறக்குமதி துறையில், பல நாடுகள் அதிக அளவில் பயன் அடைந்து வருவது நிதர்சனமான உண்மை. இத்துறை யில் ஏதேனும் பிரச்சனை உருவாகுமேயானால், சிக்கலைத் தீர்க்க இயன்ற அளவு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி யமையாத தேவையாக உணரப்பட வேண்டும். இதுதான் வர்த்தகத்தில் மேம்பாட்டை அதிகரிக்கும் வழி ஆகும்.

இந்த வகையில் வல்லரசு நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தற்போது வர்த்தகப் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நம்மில் பலர் அறிந்திருக்கலாம்.

நம் தாய்நாட்டின் இந்தியாவின் நிலை என்ன என்பதை உற்று நோக்குவோம். இந்தியாவுக்கும், அமெரிக்காவிற்குமான வர்த்தகம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுமூக உறவுடன் நடந்து கொண்டு இருக்கிறது. காரணம், அமெரிக்கா அரசு தாராளத் தன்மையுடன் நம் நாட்டுக்கு “பொது விற்பனை அனுமதி” வழங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியா, அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பொருட்களை வரியே இல்லாமல் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இது ஆச்சர்யமான விசயம் ஆகும். இதுவரை அமெரிக்கா இயல்பாகவே இந்தியாவுடன் சாதகமாக நடந்து வருகிறது. இதன் பின்னணி எதுவாக இருந்தாலும் வர்த்தக ரீதியாக, அமெரிக்காவின் அணுகு முறை மகிழ்வைத் தந்துகொண்டிருப்பதுதான் நிஜம்.

இந்த சூழலில், சில்லறை விற்பனையில் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பல நாடுகளின் வர்த்தகத்திற்கு எதிராக அமைந்துள்ளது. இதில் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பது அமெரிக்க நிறுவனங்கள்தான்.

கடந்த ஒருசில ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகமாகவும், அதே சமயத்தில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு குறைவாகவும் இருப்பது பொருளாதார வல்லுநர்களை கூர்ந்து கவனிக்கும்படி செய்துவிட்டது. மேலும், இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருக்கின்ற அமெரிக்க தயாரிப்பான “ஹார்லி டேவிட்சன்” மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா அதிக இறக்குமதி வரி விதித்திருக்கிறது. இதனைக் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டிசம்பர் நமது பிரதமர் மோடியுடன் மூன்று முறை பேசியதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

ஆனால், மத்திய அரசு வரியை குறைக்கவில்லை. அதேசமயத்தில் அமெரிக்க தயாரிப்பான அந்த பைக்குகள் விற்பனை யிலும், பயன்பாட்டிலும் பெரும் பணக்காரர்கள் மட்டும் பங்கெடுத்திருக்கிறார்கள் என்றும் அதனால் வரி குறைக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறும் காரணம் ஏற்புடையதாகவும் இருக்கிறது. இதனால் வருமானம் அதிகரிக்கும் வழியும் கிடைக்கிறது என்பது அரசுக்கு இன்னும் கூடுதலான விசயமாகவும் இதைப் பார்க்க வேண்டியும் இருக்கிறது.

ஆனால், இதன் தொடர்பாக கடந்த ஆண்டில் அமெரிக்கா இந்திய பொருட்கள் சிலவற்றின் மீது வரி விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா, பல அமெரிக்கப் பொருட்கள் மீது 20 கோடி டாலர்களுக்கும் கூடுதலாக வரி விதிக்க மத்திய அரசு தீர்மானித்து இருப்பதாக பத்திரிகை செய்தி ஒன்று தெ5ரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில், வரியே இல்லாமல் இந்தியா அமெரிக்காவில் விற்பனை செய்துவரும் பொருட்களை அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனையால், இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான “பொது விருப்ப அனுமதியை” அமெரிக்கா திரும்பப் பெற்றுக்கொண்டு இறக்குமதிக்காக வரி விதித்து விடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு இந்திய ஏற்றுமதியாளரையும் கவ்விப் பிடித்திருக்கிறது. இதனால், வர்த்தகத்தில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டு விடுமோ எனும் அச்சமும் வர்த்தக வட்டாரங்களில் உருவாகியிருக்கிறது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு அடுத்த வாரம் வரவிருக்கும் செய்தி, இவ்விஷயத்தில் இரு நாடுகளுக்கிடையே சமாதானம் ஏற்பட்டு, வர்த்தகம் மேம்படும் எனும் எதிர்பார்ப்பை வர்த்தகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இல்லையேல் நாட்டின் வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகிவிடும். பல வர்த்தகங்கள் மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். இறுதியில் வர்த்தகம் நசுங்கி வர்த்தகர்கள் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். இது மத்திய அரசுக்கு தெரியாத விசயம் அல்ல. நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் நம் நாட்டிற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்ப்பது போல நாமும் எதிர்பார்க்கிறோம்.

 

Previous post:

Next post: