அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?
ஜி. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை
ஆல இம்ரான் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் 31 வசனத்தின் விளக்கத்தை முன் தொடரில் ஓரளவு கண்டோம். இறை நேசம் என்ற ஆன்மீகத் தேடலின் வழிகாட்டல் முஹம்மத்(ஸல்) அவர்களிடமே இருக்கின்றது என்பதை அந்த வசனத்தின் வழியாக இறைவன் சொல்லியுள்ளான் என்பதை உதாரணங்களுடன் விளக்கினோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
“(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக!
ஆன்மீகம் என்பதே இறைவனை நேசிப்பதற்குரிய அவனை அடைவதற்குரிய வழியாகும் என்பதில் எந்த ஆத்திகரும் மாற்று கருத்துக் கொள்ளமாட்டார். அவர்களில் பெரும்பான்மையோர் ஒரு விஷயம் குறித்து எப்போதும் சிந்திப்பதே இல்லை என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும்.
இவர்கள் “நாங்கள் இறைவனை நேசிக்கின்றோம்’ என்ற பெயரில் ஏராளமான சடங்குகள், சம்பிரதாயங்கள், வணக்கத் தளங்கள், வணக்க வழிபாடுகள், யாத்திரை கள், செலவுகள் என்று குதூகல ஆர்ப்பாட்டங்கள் செய்துக் கொண்டிருக்கிறார்களே தவிர “நாம் இறைவனை நேசிக்கின்றோம், இறைவன் நம்மை நேசிக்கின்றானா? என்ற எதிர்மறையான-அலட்சியப்படுத்தவே முடியாத-அலட்சியப்படுத்தக் கூடாத கேள்வியை தங்களுக்குள் என்றைக்கும் இவர்கள் கேட்டுக் கொள்வதே இல்லை.
மனம்போன போக்கிலோ, மதகுருக்களின் போக்கிலோ கண்மூடித்தனமாக போவதே ஆன்மீகம், இறை நேசம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனம் போன போக்கில் நடந்தால் இறைவனை அடைந்துக் கொள்ள முடியும் என்ற இவர்களின் மாய சித்தாந்தம் தான் “தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்’ என்றும் “எந்த நதியாய் இருந்தால் என்ன கடலில் கலப்பது தான் முக்கியம்’ என்றும் தீர்மானமற்ற தத்துவங்களை ஆன்மீக அடையாளமாக முன் வைக்கின்றது.
இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல் பெறாத, மனிதனாக உருவாக்கிக் கொண்ட இத்தகைய ஆன்மீகத் தத்துவங்களை அதை உருவாக்கியவர்களாலேயே தங்கள் வாழ்க்கைக்கு முன்னுதாரனமாக கொள்ள முடியாது. தெய்வம் என்றால் அது தெய்வம் சிலையயன்றால் வெறும் சிலைதான் என்பவர்கள், அது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது என்று விளக்கம் கூறுபவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இதை பொருந்திப் பார்க்க சம்மதிப்பார்களா? அவர்கள் வீட்டில் உள்ள பொருளை ஒருவன் எடுத்துக் கொண்டு “இது உன் பொருள் என்றால் உன் பொருள், என் பொருள் என்றால் என் பொருள்தான்’ என்கிறான். “இது எந்த தத்துவத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டல் என்பதால் இது உன் பொருளா? என் பொருளா? என்பதை நீயே தீர்மானித்துக் கொள்’ என்பார்களா?
“எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன’ என்று தீர்மானங்கள் இன்றி பாய்ந்தோடும் நதிகளை உதாரணமாக்குவோர் “அனைத்து நாடுகளின் அரசியல் சாசனமும் நல்லதைத் தான் ஏவுகின்றன’ என்று பிற நாட்டு அரசியல் சாசனத்தை நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவார்களா?
ஒரு கருத்தை அழகாக சொல்கின்றோமா என்பதை விட அறிவுப்பூர்வமாக சொல்கின்றோமா என்பதுதான் முக்கியம். சில அழகியல் தத்துவங்கள் மனிதனின் அறிவை உறங்க வைத்துவிடும் என்பதற்கு நாம் எழுதிய இவைகளே சான்றாகும்.
நாம் இறைவனை நேசிக்கின்றோமா என்பது எவ்வளவு முக்கியமான கேள்வியோ அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக “இறைவன் நம்மை நேசிக்கின்றானா’ என்ற கேள்வி நம் உள்ளங்களில் பிறக்க வேண்டும். இறைவன் நம்மை நேசிக்கும் வழியை அறிந்தால்தான் நாம் அவனை நேசிக்கும் வழி இடற்பாடுகள் இல்லாமல் காணப்படும்.
இறைவனும் நம்மை நேசிக்கின்றானா என்பதை நாமாக சொந்த முயற்சியில் அறிந்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அது உணர்வியலுக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நிலையாகும்.
இறைவன் நம்மை நேசிப்பதாக இருந்தால் “நான் இந்த வழியில் உங்களை நேசிக்கிறேன்’ என்று அவன் சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்வதின் வழியாகத்தான் நாம் அதை அடைந்து கொள்ள முடியும்.
உணர்வியலுக்கும், அறிவியலுக்கும் கட்டுப்படாத அந்த மகத்தான வழியை இறைவன், நாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.
“(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் வழியாக) அவன் உங்களை நேசிப்பான் என்று (தூதரே) நீர் கூறும்’.
முஹம்மத் என்ற அந்த இறைத்தூதரை பின்பற்றுகிறவர்கள் எவரோ அவர்களை இறைவன் நேசிப்பான் என்று இந்த வசனம் உறுதி கூறுகிறது.
அவரை பின்பற்றுவதில் அலட்சியம் கூடாது :
இது ஒரு சாதாரண உபதேசம் அல்ல. தேடலின் இலக்கு இதுதான். இறைவனை நம்பி வாழும் உலக ஆன்மீகவாதிகள் அனைவருமே இறைவனிடம் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களில் நிலைக்கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய ஆனந்தமோ, அச்சமோ அவர்களை அவன்பால் இயங்க வைக்கும் உந்து சக்தியாக இருக்கின்றது. இந்நிலையில் “இந்த வழியாகத்தான் என்னை அடைய முடியும்’ என்ற வழிகாட்டல் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும்போது அதை ஆன்மீகவாதிகளால் அலட்சியப்படுத்த முடியுமா?
மதம் கடந்த மனநிலை வேண்டும் :
“இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு ஹிந்து’, “இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு கிறிஸ்தவன்’, “நான் புத்த மதத்தவனாக இருக்கும் நிலையில் இறைவனை நேசிக்கிறேன்’ முஹம்மதை பின்பற்றுவதன் வழியாகத்தான் இறைவன் எங்களை நேசிப்பான் என்றால் நாங்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற வேண்டுமா! என்ற கேள்வி இங்கு பிறக்கத்தான் செய்யும்.
சில அடிப்படைகள் மீது தெளிவின்மையின் காரணமாகவே இந்த கேள்விகள் பிறக்கின்றன :
இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானவனும் அல்ல, முஹம்மத் முஸ்லிம்களுக்காக மட்டுமே அனுப்பப்பட்ட தூதரும் அல்ல, முஸ்லிம்களாக அறியப்படும் இவர்களும் ஆன்மீகவாதிகளே, இறைவனை அடையும் வழியை முஹம்மத் என்ற இறைத்தூதர் வழியாகப் பெற்று அதில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் முதல் கட்டமாக இவர்களை “கட்டுப்பட்டவர்கள்’ (முஸ்லிம் என்ற இறைத்தூதர் வழியாக இறைவனை அடையும் வழியை பெறும் எவரும் “கட்டுப்பட்டவர்-முஸ்லிம்’ என்ற அந்த இடுகுறிப் பெயருக்குள் வந்துவிடுவார். “முஸ்லிம்’ என்பது ஒரு இனத்திற்கு சூட்டப்பட்டப் பெயரல்ல என்பதை விளங்குவது அவசியம். எனவே இறைவன் நம்மை நேசிக்க வேண்டும் என்ற தேடலில் நாம் இறங்கும் போது ஏற்கனவே நாம் இருக்கும் மதத்தை ஒரு அடையாள சின்னமாக்கிக் கொண்டு அந்த தேடலை துவங்கக் கூடாது. அது பல முட்டுக்கட்டைகளை நமக்கு ஏற்படுத்தி விடும். ( தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் )