அந்நஜாத் ஏப்ரல் 2019
ரஜப் - ஷஃபான் 1440
- தலையங்கம்!
- அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?
- முஸ்லிம்களை காஃபிராக்கும் பிரிவினை இயக்கத் தலைவர்கள்!
- அமல்களின் சிறப்புகள்…
- இஸ்ரா-இரவுப் பயணம்! மிஃராஜ்-விண்ணுலகப் பயணம்!!
- ஜம்வு கஸ்ரு, இணைத்துத் தொழுகை…
- அறிந்து கொள்வோம்…
- “தக்லீத்” ஓர் கூரிய பார்வை!
- நாளின் ஆரம்பம்…
நெஞ்சில் பதிந்த கதறல்!
தொலைக்காட்சி தொலைந்து போனது! சமூக வலைதளங்கள் பரபரப்பாயின! காம வெறி பிடித்த வாலிப கும்பல்! 6 ஆண்டுகள் நூறுக்கும் அதிகமான பெண்கள் மீது பாலியல் வன்முறை! அரசியலின் பெரும் தலைகள் பின்புலம் என்ற பத்திரிகை செய்தி கயவர்கள் தப்பி விடுவார்களோ என்று மக்களை மென்மேலும் அஞ்ச வைக்கிறது. அப்படி ஏதும் இல்லாமலிருந்தால், குற்றவாளிகள் நிச்சயமாக தப்பவே முடியாது.
நம்பிக்கை இழந்த அந்தப் பெண்ணின் கதறல்! நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது! அவன் தன்னை காதலித்தான் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய குரல்! நம்பிக்கை துரோகம் செய்தான்! யார் என்றே தெரியாதவனிடம் பெண்களால் எப்படி நம்பிக்கை கொள்ள முடிகிறது?
பெண்கள் காமத்திற்காக படைக்கப்பட்ட பலி ஆடுகளாக நினைத்த காட்டுமிராண்டி அவன், பெண்களை காதலிப்பதாக நடித்தான். கொத்தடிமைகளைப் போல பெண்களை அடித்து மிரட்டி கொடுமைப்படுத்தி அவர்களிடம் பாலியல் வல்லுறவு கொண்டான். அந்த அந்தரங்களை படம் பிடித்தான். அதைக்காட்டி மிரட்டி நண்பர்களை ஏவிவிட்டு கூட்டு வல்லுறவுக்கு ஏற்பாடு செய்தான்! அதையும் படம் பிடித்து பணம் பார்த்தார்கள்.
பிள்ளைகள் நேரிய வழியில் சம்பாதிக்கிறார்களா என்ற கண்காணிப்பு சில பெற்றோர்களிடம் இல்லை, சம்பாதித்து கொண்டுவந்தால் சரி என்ற மனோபாவம் பெற்றோர்களிடம் வந்துவிட்டதோ என அஞ்சும் நிலை இது!
பொள்ளாச்சியின் பல சிறப்புகளால் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த தமிழகம் இப்போது வெட்கித் தலை குனிந்து வேதனையால் குமுறிக் கொண்டிருக்கிறது.
கொடுமைக்காரர்கள் யார் என படங்கள் காட்டிக் கொடுத்து விட்டன. ஆனாலும் தன் மகன் அப்படிப்பட்டவன் அல்ல என்று ஒரு பெண் உரத்து கதறுகிறார். பிரச்சனையில் சம்பந்தம் இல்லாத ஆனால் சமுதாயத்திற்காக சமூக வலைதளங்களில் அழுது புலம்பி குரல் கொடுத்த இன்னொரு பெண், அப்படிப்பட்டவன் தன் மகனாய் இருந்தால் அவனை கொன்று விடுவேன் என உறுதிபட தெரிவிக்கிறார். காமவெறி கும்பலை விட்டு விடக்கூடாது என குரல்கள் எங்கும் ஒலிக்கிறது. பரபரப்பான இந்த நிகழ்வை, அந்தோ பரிதாபம், ஒருக்கால் சமுதாயம் பின்னாளில் மறந்து விடலாம். ஆனால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
சம்பவங்களின் உச்சத்தைப் பார்க்கும் போது இது தனி நபர்கள் செய்ததாகத் தெரியவில்லை. இயக்கப்பட்டிருப்பார்களோ, இவர்களுக்கு பின்புலம் ஏதும் இருக்குமோ என ஐயுற வேண்டி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வரும் பெண்கள் குறிவைக்கப்பட்டதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
கயவர்கள், பெண்களை எப்படி கவர்வது, எப்படி ஏமாற்றுவது என்பதில் தேர்ச்சி பெற்ற அனுபவஸ்தர்களாய் இருப்பதை சம்பவங்கள் காட்டிக் கொடுக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறும் தருணம் இதுவல்ல. இந்த கொடூர சம்பவத்தால் நிச்சயமாக திசை மாற விரும்புகின்ற பெண்கள் படிப்பினை பெற்றிருப்பார்கள், பெற்றிருக்க வேண்டும்.
ஆனாலும் அகிலங்களைப் படைத்த ஒரே இறைவன் அல்லாஹ்வை இறைவனாக ஏற்று அவனின் கட்டளைகள் அடங்கிய அறிவுரைகளை ஆண்களும், பெண்களும் ஏற்று செயல்பட முன்வாருங்கள்.
அற்பமான உலக இன்பங்களை தேடியவர்களாக, ஆண்கள், அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள். (நிர்ப்பந்தித்தால்) நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்கிறான். அல்குர்ஆன் : 24:33
நடந்துவிட்ட கொடுமையில், ஆண்களும், பெண்களும், பெற்றோர்களும், சமுதாயமும், காவல்துறையும், அரசும் இனி என்ன செய்ய வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பில் நியாயம் இருந்தால் மேற்கொள்ளட்டும்.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குறிப்பாக வாலிப வயதில் கண்காணியுங்கள். வாலிப வயதில் எக்காரணம் கொண்டும் அண்டிராய்டு கைபேசியை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
- மக்களின் எதிர்பார்ப்பில் நியாயம் இருப்பதாகக் கருதினால், சமுதாயத்தின் காவலர்களான காவல்துறை எவ்வித குறுக்கீடுகளுக்கும் அஞ்சாமல் நேர்மையாக, தைரியமாக, கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவசியமாகிறது. “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற உங்களின் வாக்கை நிறைவேற்றிக் காட்ட உங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் இது.
- மக்களின்கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கருதினால், சமுதாயத்தின் தீர்ப்பாளர்களான நீதித்துறை கயவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டியது அவசியமாகிறது.
- ஆண்களும், பெண்களும் தங்கள் பார்வைகளை தாழ்த்துங்கள். கற்பு பெண்ணுக்கு மட்டுமே என்ற பழக்கம் சமூகத்தில் எழுதப்படாத கொள்கையாக இருந்து வருகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் கற்பு பொதுவானது. எனவே, இரு சாராரும் கற்பை பேணிக் கொள்ளுங்கள்.
- காமப் பார்வை கொண்ட ஆண்களிடமிருந்து பெண்கள் விலகி இருத்தல் அவசியமாகிவிட்டது. பெண்ணின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப விரும்பும் ஆண் மகனை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். உங்களை பின்தொடர்ந்து வந்து உங்களிடம் பேச வருபவனை கண்டுகொள்ளாதீர்கள், கண்டு கொள்ளாமல் இருந்ததால், அவன் போய்விட்டானா என திரும்பிப் பார்க்காதீர்கள், திரும்பிப் பார்ப்பது நீங்கள் அவனிடம் சிக்கி விடுவீர்கள் என நம்பிக்கையை அவனுக்கு கொடுத்துவிடும். அப்புறம் உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொலைத்து விடுவது நிச்சயம்.
- பெண்கள் தங்களின் அழகு, அலங்காரங்களை கணவர்மார்களைத் தவிர வேறெவருக்கும் வெளிப்படுத்தாதீர்கள். ஆணின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப விரும்பும் பெண்ணை, ஆண்கள் ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.
ஒரே இறைவன் அல்லாஹ்தான் என்று ஏற்றுக்கொண்டவர்கள், அல்லாஹ் அருளிய நெறிநூல் அல்குர்ஆன் வழியில் பயணம் செய்யுங்கள்.
(நபியே!) விசுவாசம் கொண்ட ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு பரிசுத்தமானதாகும். அல்குர்ஆன் 24:30
(நபியே!) விசுவாசம் கொண்ட பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகு, அலங்காரத்தை அதிலிருந்து வெளியே தெரியக்கூடியதைத் தவிர மற்றதை வெளிக்காட்டக்கூடாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய அழகு, அலங்காரத்தை (பிறர் பார்க்க) வெளிப்படுமாறு, தங்கள் கால்களை பூமியில் தட்டி நடக்க வேண்டாம். (இதில் தவறு நேரிட்டால்) இறைவனிடம் மன்னிப்பு கோருங்கள். அல்குர்ஆன் : 24:31
நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள், அது மானக்கேடானதாகவும், மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது. அல்குர்ஆன் : 17:32
“பெண்களை நீங்கள் பார்க்க நேரிட்டு விட்டால், அது சம்பவம், இரண்டாவது முறை பார்ப்பீர்களேயானால், ஷைத்தான் உங்களைப் பார்க்கத் தூண்டுகிறான். தவிர்த்துக்கொள்ளுங்கள்” என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். (அல்ஹதீஃத்)
“அன்னியப் பெண்களைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்; அவர்களைத் தொடுவது கை செய்யும் விபச்சாரம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்ஹதீஃத்)
தீய வழியை பின்பற்றியவர்களுக்கு இஸ்லாமிய நாடுகள் தரும் இறைவனின் தண்டனைகளுக்கான ஆதாரங்களைப் பாருங்கள்.
விபச்சாரியும், விபச்சாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நீங்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்தை நிறைவேற்றுவதில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தார் நேரில் பார்க்கட்டும். அல்குர்ஆன்: 24:2
அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கொண்டு அதே நேரம் விபச்சார பாவங்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் அமைத்துத் தரும் வாழ்க்கையையும் பாருங்கள்.
விபச்சாரன், விபச்சாரியையோ அல்லது இணைவைத்து வணங்குபவனையோ அல்லாமல் வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டான். (அதேபோல) விபச்சாரி, விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அல்லாமல் வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டாள். இந்த திருமணம் நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. அல்குர்ஆன்:24:3
எனவே இவ்வுலக வாழ்விலும், மறுமை வாழ்விலும் நல்வாழ்க்கை அமைய வேண்டுமானால், அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.