முஸ்லிம்களை காஃபிராக்கும் பிரிவினை இயக்கத் தலைவர்கள்!
எஸ்.ஹலரத் அலி, திருச்சி
அன்றைய ஜாஹிலியா அரேபியாவில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குள் குலம், கோத்திர பெருமையில் ஓயாது சண்டையிட்டுக் கொண்டும், கண்ணில் படும் சிலைகளை எல்லாம் வணங்கிக் கொண்டும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நரக நெருப்பின் விளிம்பில் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். இப்படி வழிகேட்டில் வாழ்ந்த மக்களை குர்ஆனைக் கொண்டு ஒற்றுமைப்படுத்தி, ஒரே சகோதரர்களாக, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக மாற்றியது அல்லாஹ்வின் நாட்டமே.
அல்லாஹ்வின் பெருங்கருணையால் நபி(ஸல்) அவர்களின் தொடர் உழைப்பினாலும் நபித்தோழர்களின் கடும் முயற்சியாலும், இன்றைய இஸ்லாமிய சமுதாயம் பல்கிப் பெருகியுள்ளது. அன்றைய உழைப்பின் காரணமாகவே, இன்றும் மக்கள் இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஒன்றுபட்ட இஸ்லாமிய உம்மத்தில் முதல் பிரிவினையை தொடங்கி வைத்த கவாரிஜிகள், குர்ஆன் வசனங்களை தவறாக விளங்கி, அந்த தவறான விளக்கத்திற்கு முஸ்லிம்
தலைவர்களின் செயல்பாட்டையே காரணமாக காட்டி, உம்மத்தை இரண்டாக பிரித்தனர்.
இஸ்லாத்தில் முதல் பிரிவு : கவாரிஜிகள்- ´யாக்கள் :
அரசியல் காரணமாக அலி(ரழி) அவர்களுக்கும், முஆவியா(ரழி) அவர்களுக்கும் இடையில் நடந்த போர் நிறுத்த சமாதான உடன்படிக்கையால், அலி(ரழி) அவர்கள் மேல் கொண்ட வெறுப்பின் காரணமாக “கவாரிஜிகள்” என்ற முதல் பிரிவு ஏற்பட்டது. இந்த வழிகெட்ட கூட்டத்தினர் ஒரு தனித் தலைமையை ஏற்படுத்தியும், தனிப் பள்ளியை கட்டிக் கொண்டும், ஒட்டு மொத்த ஸஹாபா பெருமக்களை காஃபிர் என தீர்ப்பளித்து தனியே பிரிந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் பெயரால் பொய்களைப் பரப்பியும், குர்ஆனுக்கு மனோ இச்சைப்படி தவறான விளக்கம் கொடுத்தும் மக்களைக் குழப்பினர்.
´யா என்றொரு கூட்டமானது, அலி (ரழி) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்தும், அவர்களின் குடும்பத்து வாரிசுகளே 12 இமாம்கள் இஸ்லாமிய பரம்பரை என்றும் கூறிக்கொள்கின்றனர். இன்று உலகிலுள்ள எல்லா வழிகேட்டு இயக்கங்களின் கொள்கையிலும், கவாரிஜி மற்றும் ஷியாக்களின் கொள்கையின் சாரமும் சத்தும் இருப்பதை அறியலாம். இணை வைக்கும் முஸ்லிம்களை பின்பற்றக் கூடாது என்று சொல்லும் தவ்ஹீது இயக்க தலைவர்களும், எங்களிடம் பைஅத் பெறாதவர்கள், காஃபிர் மற்றும் ஜாஹில்கள் என்று தீர்ப்பு வழங்கும் இலங்கை “”ஜமாதுல் முஸ்லிம்” மற்றும் நாகர்கோவில் “ஜமாதுல் முஸ்லிம்” இயக்கத்தினரும் பின்பற்றுவது வழிகேட்டில் வீழ்ந்த கவாரிஜி, ஷியா கொள்கைகளையே!
கவாரிஜிகளின் முக்கிய பண்புகளை ஆய்வு செய்து பார்க்கும்போது, இன்றைய பிரிவினை கூட்டத்தாரிடமும் அவை பிரதி பலிப்பதை பார்க்கலாம். அவைகள், மார்க் கத்தில் தீவிர போக்கை மேற்கொள்ளல், மார்க்கம் பற்றிய அடிப்படை அறிவில்லாமை, பாவம் செய்பவர்களை, பித்அத் செய்பவர்களை, காஃபிராக முத்திரை குத்தியும், முஸ்லிம்களுக்கு ஸலாம் சொல்லுவதை தவிர்த்தும், அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்ளுதல், அதே சமயம் காஃபிர்களுடன் மென்மையாக நடந்து கொள்ளல், இந்த காரிஜியாக்களைப் பற்றியே நபி(ஸல்) அவர்கள் கூறிய முன்னறிவிப்பு குறிப்பிடத்தக்கது.
“என் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள், அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள், அவர்களது ஓதுதலுடன் உங்க ளின் ஓதுதலை ஒப்பிட்டுப் பார்த்தால், உங்கள் ஓதுதல் ஒன்றுமில்லை! அவர்களின் நோன்புடன் உங்களது நோன்பு எதுவுமேயில்லை, தங்களுக்கு சாதகமான ஆதாரம் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகவே இருக்கும். அவர்களது தொழுகை, அவர்களது கழுத்தெலும்பைத் தாண்டிச் செல்லாது”. முஸ்லிம்: 1934
இந்தக் கவாரிஜிகள் இஸ்லாத்தின் அடிப்படையான மென்மைப் போக்கை கைவிட்டு, தீவிரவாத கடினப் போக்கை கைக்கொண்டதால், நடுநிலை பேணும் பண்பு இவர்களிடம் இல்லாமல் போய் விட்டது. தங்கள் மனோ இச்சைக்கு தகுந்தாற்போல் குர்ஆன் வசனங்களின் பொருள் எடுத்து முஸ்லிம்களை காஃபிராக்கினார்கள். இந்த தீவிரப் போக்கின் விளைவு என்னவாக மாறியது என்றால், இவர்களின் கருத்து மற்றும் சிந்தனையுடன் ஒத்துப் போகாத முஸ்லிம்களை காஃபிர்கள் என்றும், இணை வைப்பவர்கள் என்றும் ஜாஹில்கள் என்றும் பட்டம் கொடுத்து ஒதுக்கினார்கள்.
உலகத்தில் இன்று ஏராளமான அமைப்புகள் இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு, முஸ்லிம்களின் ஈமானையும் அவர்களின் செல்வங்களையும் சுரண்டி திண்பதற்காக உருவாக்கப்பட்டு உலா வருகின்றன. அதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் உள்ள “ஜமாதுல் முஸ்லிமீன்” என்ற அமைப்பும் அடங்கும். இவர்கள் தங்கள் இயக்கத்திற்கு “ஜமாதுல் முஸ்லிமீன்” என்று பெயர் வைத்தாலும், இவர்கள் பின்பற்றும் கொள்கையானது, முழுக்க முழுக்க கவாரிஜிகள் வழிமுறையையே.
தவ்ஹீத் பைஅத் இயக்கங்கள் :
இந்தியா மற்றும் இலங்கையில் உருவான தீவிரவாத இயக்கங்கள், தங்கள் பிடிவாத போக்கினாலும், தங்கள் குருட்டு சிந்தனையாலும், இஸ்லாம் காட்டித்தராத நபி(ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை மார்க்கமாக வடிவமைத்துக் கொண்டார்கள். “தவ்ஹீத்… தவ்ஹீத்” என்றும், “பைஅத் இல்லையேல் மையத்” என்ற வெற்று கோஷத்தை, சக சகோதர முஸ்லிம்களை காஃபிராக்கவே கையாண்டார்கள். கவாரிஜிகளின் வழிமுறைப்படி ஹராமான பிரிவினை இயக்கம் நடத்துபவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நடுநிலை மென்மைப் போக்கை காணமுடியாது. மார்க்கத்தில் தீவிரவாத போக்கை கடைப்பிடிப்பதையும், கடினப் போக்கை கைக்கொள்வது குறித்தும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். ஏனெனில் இவை இரண்டும் இஸ்லாத்தின் நெகிழ்வுத்தன்மைக்கும் நடுநிலைத் தன்மைக்கும் முரணானதாகும். இந்த தீவிரப் போக்கு அழிவிற்கே இட்டுச் செல்லும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது கவனிக்கத்தக்கதாகும்.
நிச்சயமாக இந்த மார்க்கம் என்பது எளிதானதாகும். அதில் யார் தீவிரவாத போக்கை கடைப்பிடிக்க முயற்சிக்கின் றாரோ அது அவரை மிகைத்து விடும். ஆகவே நடுநிலைமையையே மேற்கொண்டு அல்லாஹ்வை நெருங்குங்கள். புகாரி : 39
“அல்லாஹ் என்னை எடுத்துரைப்பவ னாகவே அனுப்பியுள்ளான். அவன் என்னைக் கடினப்போக்கு உள்ளவனாக அனுப்பவில்லை” முஸ்லிம்:2952
மார்க்கம் பற்றிய அறிவின்மை :
கவாரிஜிகளின் பண்புகளில் மிகவும் ஆபத்தான பண்புதான் குர்ஆன் மற்றும் சுன்னாவின் போதிய அறிவு இல்லாமல் இருந்ததாகும். அதை அவர்கள் பிழையாக புரிந்து கொண்டு, அதை முஸ்லிம்களை காஃபிராக்குவதை நியாயப்படுத்தினார்கள். இவர்களின் இஸ்லாமிய ஆய்வு என்பது அவர்களின் கொள்கையை ஏற்றிருப்பவர்கள் செய்யும் ஆய்வே. இந்த பிழையான வழிமுறையை கையாண்டே, தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தும், தொழுகையில் இணை வைப்பவர்களை பின்பற்றக் கூடாது என்று தீர்ப்புச் சொல்லி ஒட்டுமொத்த உலக சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களையும் காஃபிராக்கினார்கள்.
காஃபிர்களுக்கு இறக்கப்பட்ட வசனங்களை முஃமீன்கள் மீது பிரயோகித்தார்கள். அதே சமயம் காஃபிராக இருந்த பிற சமுதாயத்தினருக்கு “இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” என்று அழைத்து அவர்களை கண்ணியப்படுத்தினார்கள். முஸ்லிம்களை காஃபிராக்கி, காஃபிர்களை கண்ணியப்படுத்துவது தான் இயக்க இஸ்லாமானது, பாவிகளுக்கு காஃபிர், ஃபத்வா கொடுத்த கவாரிஜிகளின் பித்அத ஆன செயலை, தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதும் தவ்ஹீத் இயக்க ஆலிம்களே!
அவர்கள் மூஃமினிடம் பணிவாக நடந்து கொள்வார்கள், காஃபிர்களுடன் கடுமையாக இருப்பார்கள். அல்குர்ஆன் : 5:54
கவாரிஜிகளின் வழிமுறையை பின்பற்றும் தவ்ஹீத் இயக்க ஆலிம்கள் மற்றும் பைஅத் பிரிவினை இயக்க ஆலிம்கள் அனைவரும் முஸ்லிம்களை காஃபிராக்கி கடினமாக நடந்துகொள்வார்கள். அடிப்படை ஸலாம் கூட சொல்ல மாட்டார்கள். ஆனால் பிறமத நிராகரிப்பவர்களை கண்ணியப்படுத்துவார்கள். இவர்களின் இச்செயலுக்குக் காரணம், ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் இவர்கள் சிக்கிக் கொண்டதே!
ஷைத்தானுடைய தீய வலையில் சிக்காமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவன் மோசமான செயல்களை அழகான, கவர்ச்சிமிக்கதாகக் காட்டி நம்மை ஏமாற்றி வழிகெடுத்து விடுவான். “சத்தியத்திற்கும், உண்மைக்கும் இந்த மார்க்க உயர்வுக்கும் நீ உழைக்கின்றாய்” என்று சொல்லியே, மோசமான செயல்களை நியாயப்படுத்திக் காட்டுவான். இந்த சூழ்ச்சி வலையில் இருந்து தப்பிக்க நல்ல மார்க்க அறிவு இருக்க வேண்டும். மார்க்கம் பற்றிய அறிவு இல்லாதவன் இதில் மாட்டிக் கொண்டு தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்து விடுவான்.
ஸஹீகான ஹதீஃதைக் காட்டி தவறான கொள்கையை நியாயப்படுத்துதல் :
ஒரு முஸ்லிமை வழிநடத்துவதும், கட்டுப்படுத்துவதும் அல்குர்ஆனும், சுன்னாவும் மாத்திரமே, இதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சியாளரும், அவரின் பிரதிநிதிகளும், முஸ்லிம்களின் மீது அதிகாரம் செலுத்த தகுதியுடையவர்களாகிறார்கள். இவ்வாட்சி அதிகாரம் கொண்டவர்களுக்கு கலீஃபா, சுல்தான், இமாம், அமீர் என்று பல பெயர்கள் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஜனநாயக வழியில் ஆட்சி செய் யப்படும் நாடுகளிலுள்ள அப்பாவி முஸ்லிம்களிடம் சில வழிகெட்ட பிரிவினை இயக்கங்கள் தோன்றி, தாங்களே இமாம் என்றும் அமீர் என்றும் விவாதித்தும், சரியான ஹதீஃத்களை தங்கள் பொய்யான இயக்கத்துக்கு தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் இயக்கத்தில் இணையாதவர்கள் இணைவைப்பவர்கள் என்றும், தங்களிடம் பைஅத் செய்யாதவர்கள் ஜாஹில்கள் என்றும் காஃபிர்களென்றும் தீர்ப்பளிக்கிறார்கள்.
ஒரு இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டிலுள்ள ஆட்சியாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, நம் நாடுகளில் தோன்றிய சில சுயநல இயக்கதாரிகள் கையிலெடுத்துக் கொண்டு, தமது இயக்கத்தை நோக்கி முஸ்லிம்களை அழைப்பது மடமையிலும் மடமையானது. இந்த வழி தவறிய ஹராமான அமைப்பை நிறுவிய முல்லா மவுலவிகளுக்கு மார்க்கம் தெரியாது. இவர்களே அசல் ஜாஹில்களாக இருக்கின்றனர்.
தங்களின் பிரிவினை ஜமாஅத்தை தூக்கிப் பிடிக்க அவர்கள் காட்டும் ஹதீஃத் களில் ஒன்றுதான். புகாரி : 3606, முஸ்லிம்:3764லில் இடம் பெறும். நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களின் தலைவரையும் பற்றிக்கொள். என்று ஹுதைஃபா(ரழி) அறிவிக்கும் ஹதீஃத். இந்த ஹதீஃத் ஆனது தனி இயக்கத்தில் முஸ்லிம்கள் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, எந்த பிர்க்கா பிரிவினை ஜமாஅத்திலும் சேர்ந்து கொள்ளக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறது.
ஜாஹிலியா மரணம் :
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கும் தலைமைக்கு கட்டுப்படுகின்ற செயலிலிருந்து கையை விலக்கிக் கொண்டவர், தமது செயல்பாடுகளுக்கும் அதற்கான சாக்குப் போக்குக்கும் எந்தச் சான்றும் இல்லாமலே மறுமை நாளில் இறைவனைச் சந்திப்பார். (தம் ஆட்சியாளரிடம் அளித்திருந்த) உறுதி மொழிப் பிரமாணம் இல்லாத நிலையில் யார் இறக்கிறாரோ, அவர் ஜாஹிலியா கால மரணத்தையே தழுவுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். முஸ்லிம் : 3771
ஜாஹிலியா மரணம் என்னும் இந்த ஹதீஃதை அறிவிக்கும் இப்னு உமர்(ரழி) அவர்கள், இந்த ஹதீஃதை எப்படி விளங்கிப் பின்பற்றினார் என்பதை அறிந்து கொண்டாலே, இலங்கையில் பைஅத் கோரும் பையத் கூட்டத்தை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
ஆரம்பத்தில் அலி(ரழி) அவர்களுக்கும், மூஆவியா(ரழி) அவர்களுக்கும் இடையில் நடந்த கிலாபத் என்னும் ஆட்சியுரிமை சண்டையின் காரணமாக இவ்விருவருக்குமே இப்னு உமர்(ரழி) அவர்கள் பைஅத் செய்யவில்லை. சிரியாவுக்கு கவர்னர் பொறுப்பு கொடுத்ததையும் ஏற்கவில்லை. பின்பு மூஆவியா(ரழி) அவர்கள் ஹஸன் பின் அலி(ரழி) அவர்களுடன் சமாதானமாக போனபோது மக்கள் அவருக்கு பைஅத் செய்தார்கள். மூஆவியா(ரழி) இறந்த பின் அவர் மகன் யஸீதுக்கு இப்னு உமர்(ரழி) பைஅத் செய்தார்கள். ஒரு ஆட்சித் தலைவருக்குத்தான் பைஅத்.
மீண்டும் கிலாபத்தில் பிரச்சனை கலீபா மர்வானுக்கு எதிராக இப்னு ஜூபைர் (ரழி) தனியாக மக்காவை ஆட்சி செய்த போது, இப்னு உமர்(ரலி) அவர்கள் மர்வானுடைய அமீர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப்புக்கும், கலீஃபா உரிமை கோரிய இப்னு ஜுபைர்(ரழி) ஆகிய இருவருக்கும் பைஅத் செய்ய மறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். பிறகு மீண்டும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியமும் அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சியின் கீழ் வந்தபோது அவரிடம் இப்னு உமர்(ரழி) அவர்கள் பைஅத் செய்தார்கள். பத்ஹுல் பாரி, 13/195, அல்பிதாயா வல் நிஹாயா : 3:30
இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது. ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பொறுப்புதாரியாக இருக்கும் ஆட்சியாளருக்கு மட்டுமே பைஅத் செய்யவேண்டும். இன்று இலங்கை போன்றுள்ள நாடுகளில் ஐநூறு ஆயிரம் அப்பாவிகளை சேர்த்துக் கொண்டு ஆங்காங்கே “ஜமாதுல் முஸ்லிமீன்” பெயரை வைத்து கம்பெனி நடத்தும் கள்ள ஜமாஅத்துகளுக்கு பைஅத் செய்வது பித்அத் ஆகும்.
முஸ்லிமில் இடம் பெற்ற எவர் பைஅத் இன்றி இருப்பவர் ஜாஹிலிய மரணத்தை அடைகிறார். மற்றொரு ஹதீஃதான ஒரு தலைவரிடம் பைஅத் செய்தபிறகு மற்றொருவர் வந்து பைஅத் கேட்டால் அவரை கொன்று விடுங்கள். இந்த ஹதீஃதிற்கு விளக்கம் கொடுத்த இமாம் நவவீ(ரஹ்) அவர்கள், (பத்ஹுல் பாரி) ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைவரையே இந்த ஹதீஃத் குறிப்பிடுவதாக கூறுகிறார்கள்.
ஷேக் ஸாலிஹ் அல் பெளசான்(ரஹ்) அவர்கள் கூறுவது, பைஅத் பற்றி வரும் அனைத்து ஹதீஃத்களும் ஆட்சி அதிகாரம் மிக்க ஒரு நாட்டுத் தலைவரிடம் எடுக்கும் பைஅத்-யே குறிக்கிறது. இன்றுள்ள பல குழுத் தலைவர்களால் கோரப்படும் பைஅத் என்பது ஒரு பித்அத்ஆன செயல். ஒரு நாட்டு முஸ்லிம்கள் அந்த நாட்டு முஸ்லிம்களின் தலைவருக்கு மட்டுமே பைஅத் செய்ய வேண்டும். ஒரு நாட்டிலுள்ள பல பிரிவினை தலைவர்களுக்கு செய்யப்படும் பைஅத் என்பது பித்அத் ஆகும். அல்முன்தகாமின் பதாவா அல் ஷேக் ஸாலிஹ் அல் பெளசான். 1:367
பைஅத் என்னும் உறுதிமொழி எவரொருவரின் கழுத்தை விட்டு அகன்று விடுகிறதோ அவர் ஜாஹிலியாவில் மரணிக்கிறார். அஹமத்
இந்த ஹதீஃதை பதிவு செய்த இமாம் அஹமது அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, இமாம் என்றால் யார் என்று தெரியாதா? ஒன்றுபட்ட முஸ்லிம் கூட்டம் இவர் எங்கள் தலைவர் என்று எவரை கூறுகிறார்களோ அவரே இமாம், தலைவர். முஹம்மத் பின் ஈசாக் “மஸாயீல் : 2:185, அல்கல்லாளின் “அல்ஈமான்’.
ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஃதில் இடம்பெறும் வாசகம் “நரகத்தின் வாசலுக்கு அழைப்பவர்கள் கூப்பிடுவார்கள். எவர் ஒருவர் அவ்வழைப்பை ஏற்கிறாரோ அவர் நரகம் செல்வார். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? என்று கேட்டபோது, அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். முஸ்லிம் : 3764
நபி(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பானது, நான்கு கலீஃபாக்களின் கடைசி காலத்தில் கிலாபத்திற்காக (அப்பாஸியா மற்றும் உமையாக்கள்) ஏற்பட்ட சண்டையை குறிக்கிறது.
இதனையே இப்னு உமர்(ரழி) அவர்களின் காலத்தில் நடந்த பைஅத் செய்திகள் தெளிவாக்குகின்றன. ஹதீஃத்களை முறையாக விளங்கத் தெரியாத சுயநல ஆலிம்கள் இவைகளை வைத்து பைஅத் முரீது என்னும் பித்அத் வியாபாரத்தை இன்று நடத்திக் கொண்டு வருகிறார்கள்.
மேற்கண்ட ஹதீஃத் மூலம், கண்ட கண்ட கழுதைகளுக்கும் பைஅத் செய்ய வேண்டியதில்லை என்று விளங்கலாம். ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைவருக்கு மட்டுமே பைஅத் செய்ய வேண்டும். அப்படி ஒருவரும் இல்லை என்றால் எல்லா பிரிவையும் விட்டு ஒதுங்க வேண்டும். இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு தலைமை ஒன்றும் இல்லாததால், நரகத்திற்கு அழைக்கும் எல்லா பிர்க்கா பிரிவினை இயக்கங்களை விட்டும் ஒதுங்க வேண்டும். ஹுதைபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஃதும் இதைத்தான் கூறுகிறது.
ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பற்றிப் பிடிப்பாராக! அவர்களுக்கு ஒரு ஜமாஅத்தோ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது?) என்று கேட்டேன் அப்போது நபி(ஸல்) அவர்கள், அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு விலகி ஒதுங்கி விடு! ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு வந்தாலும் சரி(எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்து விடாதே!) என்று விடையளித்தார்கள். புகாரி : 3606
அன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அரசியல் குழப்பத்தில் சிக்கி, முஸ்லிம்கள் தனித்தனி தலைமையில் இருந்தபோது, நபித்தோழர்கள் எவர் பக்கமும் சேராது ஒதுங்கி இருந்த நிலையை வரலாற்றில் பார்க்க முடிகிறது. உதாரணமாக அலி(ரழி) அவர்களுக்கும், முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடந்த கிலாபத் பிரச்சனையில் தமக்கு உதவி செய்யுமாறு முஹம்மது இப்னு முஸ்லிமாவை அலி(ரழி) அவர்கள் அழைத்தார்கள். அதற்கு இப்னு முஸ்லிமா(ரழி) மறுத்து கூறினார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள், இந்த போர் வாளை எனக்கு அளித்துச் சொன்னார்கள். “எவ்வளவு காலம் முடியுமோ அதுவரை அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்வின் விரோதிகளை எதிர்த்து போர் செய்யுங்கள்… ஆனால், என்று முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கிறார்களோ அன்று உமது வாளை கல்லில் அடித்து உடைத்துவிட்டு மரணம் வரும் வரை வீட்டில் ஒதுங்கி விடுவீராக அல்லது அவர்கள் உம் வீட்டில் நுழைந்து உம்மைக் கொல்லும் வரை”.
இதைக் கேட்ட அலி(ரழி) அவர்கள், தம் ஆட்களிடம், “அவரை அப்படியே விட்டு விடுவீராக! என்று கூறிச் சென்றார்கள். முஸ்னது அஹமது : 4:225
தைசா பின்த் அபான்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஈராக் பாஸ்ரா நகருக்கு வந்த அலி(ரழி) அவர்கள், என் தந்தையிடம் வந்து, “அபூ முஸ்லிம் அவர்களே! எனக்கு உதவி செய்ய மாட்டீர்களா? என்று கேட்டார்கள். என் தந்தை ஒரு பணிப் பெண்ணிடம் தம் போர் வாளை எடுத்து வரும்படி கூறினார்கள். பிறகு வாளை உறையிலிருந்து உருவினார்கள், அது மரக்கட்டையால் செய்யப்பட்ட வாளாக இருந்தது.
என் பிரியமுள்ள தோழர் அலி(ரழி) அவர்களே! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் பைஅத் எடுத்தார்கள். எதன்படி என்றால், முஸ்லிம் சமூகத்தில் குழப்பம் நேரிடும்போது மரக்கட்டை வாளை பயன்படுத்தச் சொல்லி உறுதி மொழி வாங்கினார்கள். “நீங்கள் விரும்பினால் நான் உங்களுடன் வரத் தயார் என்றார்கள். இதைக்கேட்ட அலி(ரழி) அவர்கள், “உங்கள் உதவியும் வேண்டாம், உமது வாளும் வேண்டாம்!” என்று சொல்லி வெளியேறினார்கள். இப்னு மாஜா, கிதாப் அல் பித்ன் : 2:1309, முஸ்னத் அஹமத்:5:69
குழப்பமும், சோதனையும் நிறைந்த காலகட்டத்தில் உட்கார்ந்திருப்பவனை விட படுத்திருப்பவன் சிறந்தவன், நிற்பவனை விட உட்கார்ந்திருப்பவன் சிறந்தவன், நடப்பவனை விட நிற்பவன் சிறந்தவன், போருக்கு விரைபவனை விட நடப்பவன் சிறந்தவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ பக்ரா(ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! குழப்ப காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஒட்டகங்கள் இருந்தால் அதைப் பார்த்துக்கொள். ஆடுகள் இருந்தால் அதை பார்த்துக் கொள்” அல்லாஹ்வின் தூதரே! இவை எதுவும் இல்லையயன்றால்? என்று அபூ பக்ரா(ரழி) மீண்டும் கேட்டபோது, “உன் உடை வாளை கல்லில் அடித்து உடைத்து, உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினார்கள். (ஹதீஃத் சுருக்கம்) அபூதாவூத், 4:99
முஸ்லிம்களுக்குள் பிரிவினை ஏற்பட்டு பல தலைமைகள் ஏற்பட்டு குழப்பம் ஏற்படும்போது ஒரு உண்மை முஸ்லிம் எந்த பிரிவிலும் சேராமல் தனித்திருக்கவேண்டும் என்பதே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை. பிரிவினை பைஅத் இயக்கங்கள் நரகத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.
பைஅத் என்னும் சொல்லுக்கு வியாபாரம் என்று அரபியில் பொருள். அதாவது பொருளை வாங்குபவருக்கும், விற்பவருக்குமிடையில் ஒரு ஒப்பந்தம். இன்றுள்ள பல பித்அத் இயக்கங்கள் “ஜமாத்துல் முஸ்லிமீன்” என்னும் பெயரில் அப்பாவி முஸ்லிம்களின் ஈமானையும், செல்வத்தையும் (பைஅத்) வியாபாரமாக மாற்றி சுரண்டிக் கொழுக்கிறார்கள். இவர்கள் விற்றுத் திண்பது நரக நெருப்பேயாகும்.
இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே இவர்களுடைய இந்த வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. அல்குர்ஆன்:2:16
இலங்கையிலுள்ள ஐந்து “ஜமாதுல் முஸ்லிமீன்” பிர்க்கா பிரிவு கம்பெனிகளும் அப்பாவி முஸ்லிம்களை வலை விரித்துப் பிடிக்க போடும் தூண்டில்கள் தான் ஸஹீகான ஹதீஃத்கள், ஒன்றுபட்ட முஸ்லிம்கள் தலைமைக்குச் சொல்லப்பட்ட ஹதீஃதை வளைத்து திரித்து ஏமாற்றுகிறார்கள். அந்த ஹதீஃத்களில் சில…
ஒரு விசுவாசியின் உள்ளம் மூன்று விசயங்களில் துரோகம் செய்யாது. செயல்களை அல்லாஹ்வுக்கென தூய்மையாக்குதல், தலைவர்களுக்கு கட்டுப்படுதல், ஜமாத்துல் முஸ்லிமீனோடு இணைந்திருத்தல்… முஸ்தரக் ஹாக்கீம் : 294
எவர் ஜமாத்துல் முஸ்லிமீனுக்கு ஒரு சாண் மாறு செய்கிறாரோ அவர் இஸ்லாத்தின் வளையத்தை தன் கழுத்திலிருந்து களைந்து விட்டார். முஸ்தரக் ஹாக்கீம்:402
இதுபோன்ற ஏராளமான ஹதீஃத்கள் குறிப்பிடும் ஜமாஅத் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைமையையே குறிக்கிறதே தவிர, இன்றுள்ள பிரிவினை ஜமாஅத்துக்களை அவை குறிப்பிடவில்லை. “காஃபிர் நிலையில் ஜாஹிலியா மரணம்” போன்ற ஹதீஃத்களைப் பற்றி ஷேக் அபூ முஹம்மத் மஹ்மூத் இப்ன் அஹ்மத் அவர்கள் விளக்கும்போது, காஃபிர்களாகி மரணிப்பார்கள் என்று அதற்குப் பொருள் அல்ல. ஒரு முஸ்லிம் ஒன்றுபட்ட தலைமையை விட்டு பிரிவதென்பது, கீழ்ப்படியாமை நிலையில் மரணம் என்பதையே குறிக்கிறது. உம்ததுல் காரீ, கிதாப், அல்பின்த், பாப் :2
ஜாஹிலிய்யா மரணம் என்பது ஒரு முஸ்லிம் காஃபிராகவே மரணிப்பான் என்னும் பொருளை அந்த ஹதீஃத் சொல்லவில்லை. ஒரு முஸ்லிமின் ஒழுங்கீனத்தையும், கீழ்ப்படியாமையையுமே அது குறிக்கிறது என்று இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பத்ஹுல் பாரி, விளக்கம் : 6530
ஜாஹிலியா நிலையில் மரணிப்பார் என்பதன் பொருள், அன்றைய அரபி பிரதேசத்தில் எந்த ஒரு ஒட்டுமொத்த தலைமையும் இன்றி எவ்வாறு தனித்தனிக் குழுக்களாக தங்களுக்குள் அடித்துக்கொண்டு மாண்டனரோ, அந்த நிலையையே இந்த ஹதீஃத் குறிப்பதாக இமாம் நவவீ(ரஹ்) அவர்கள் தமது முஸ்லிம் “ஸரஹ்’ விளக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். ஒரு ஆட்சித் தலைவருக்கு கட்டுப்படாமல் கீழ்ப்படியாமை எனும் குற்றத்தில் மரணமடைகிறார் என்பதே அதன் பொருள்.
இந்த வழிகேட்டு ஆசாமிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு ஹராமான இயக்கத்தை ஆரம்பித்து, இது அல்லாஹ்வின் ஜமாஅத் என்ற பொய்யைச் சொல்லி, எங்களிடம் பைஅத் வாங்காதவர்கள் காஃபிர் என்று நாங்கள் சொல்லவில்லை. இஸ்லாம் சொல்வதை சொல்கிறோம் என்று இஸ்லாத்தின்மேல் பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். சமுதாயத்தை பிரித்த இவர்களே ஜாஹில்கள்.
பருவ வயதையடைந்த ஒவ்வொரு வரும் இலங்கை வந்து இவர்கள் அமீரிடம் பைஅத் வாங்க வேண்டுமாம். ஆனால் அந்த அமீர் யாரிடமும் பைஅத் வாங்கியதாகத் தெரியவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரழி) அவர்கள் தம் சிறு வயது மகனை அழைத்து வந்து பைஅத் கொடுக்கச் சொன்னார்களாம். ஆகவே முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் இவர்களிடம் வந்து பைஅத் வாங்கி முஸ்லிமாக வேண்டுமாம். இவர்களின் கிறுக்குத்தனத்தை என்ன சொல்வது? குலபாயே ரஷிதூன் கலீஃபாக்கள் ஆட்சியின் போது, எந்த நபித் தோழர்கள் தம் குழந்தைகளை பைஅத் வாங்கி, இஸ்லாத்தில் நுழைய கூட்டி வந்தார்கள்? ஏதேனும் ஆதாரம் உண்டா?
அல்லாஹ்வின் தூதரிடத்தில் செய்யப்படும் பைஅத் அல்லாஹ்விடமே செய்வது போன்றது. இந்த சிறப்பு அவர்களுக்கு மட்டும் உரியது. ஏனெனில் இதற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் இருக்கிறது.
உங்களுடைய கையைப் பிடித்து வாக்குறுதி செய்கின்றார்களோ, அவர்கள் கை மீது அல்லாஹ்வின் கைதான் இருக்கிறது. அல்குர்ஆன் : 48:10, 48:12, 48:18
இலங்கை கள்ள இயக்கமான ஜமாதுல் முஸ்லிமீனின் அமீரிடம் கொடுக்கப்படும் பைஅத் கையின் மேல், அல்லாஹ்வின் கை இருக்க முடியாது. அது அல்லாஹ் தேர்ந் தெடுத்த நபிமார்களுக்கு மட்டும் கொடுத்த சிறப்பு, போலி அமீர்களிடம் கொடுக்கப்படும் பித்அத்தான பைஅத்தில் இருப்பது, இப்லீஸ் எனும் ஷைத்தானின் கை என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை. இது நரகத்திற்கு ஆள் பிடித்து கொடுக்கும் தரகு வேலையையே இவர்கள் செய்து வருகிறார்கள்.
ஆட்சியாளர்களுக்கு மட்டுமே பைஅத் செய்யவேண்டும். அதுவும் ஒன்றுபட்ட முஸ்லிம்களின் ஒரு தலைமைக்கு மட்டுமே பைஅத் செய்யவேண்டும். பல தலைமைகள் உருவாகும்போது எவருக்கும் பைஅத் செய்யக்கூடாது. பைஅத் தராததற்காக ஸையித் பின் முஸைப் (ரழி) அவர்கள் அடிக்கப்பட்டார்கள். இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் துன்பம் அனுபவித்தார்கள். இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் நைஸாபூரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
இரண்டு பேர் கலீஃபா பதவிக்கு போட்டியிட்டதால், அமீர் யஜீதுக்கு பைஅத் செய்ய மறுத்தவர்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரழி, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), அப்துர்ரஹ்மான் இப்னு அபூ பக்கர் (ரழி), ஹுசைன் பின் அலி(ரழி), கண்ணியமிக்க நபித்தோழர்கள் பைஅத் செய்ய ஏன் நிர்ப்பந்திக்கமாட்டார்கள்? இஸ்லாத்தில் நுழைந்து ஈமானை புதுப்பிக்கவா? ஒன்றும் இல்லை, அரசியல் காரணங்களுக்காக கட்டாய பைஅத் கூடாது என்பதற்கும், இரு தலைமைகளுக்கு பைஅத் செய்யக் கூடாது என்ற சுன்னாவை நிலைநாட்டுவதற்கே!
அன்புச் சகோதரர்களே! இஸ்லாத்தில் நுழைவதற்கு பைஅத் என்பது கட்டாயம் அல்ல. அது கட்டாயம் என்பது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சார்பாக இருக்கும்போது மட்டுமே! பிறரிடம் பைஅத் செய்யும்படி அல்லாஹ் கட்டளையிடவில்லை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் ஏவவில்லை. இன்றுள்ள மனிதர்கள் எவருக்கும் அந்த தகுதியோ, அந்தஸ்தோ ஒன்றும் இல்லை. இன்று பைஅத் கோரும் அமீர்கள் அனைவரும் இப்லீஸின் ஏஜெண்டுகள் என்பதும், நரக வாசலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நாடும்போது, ஒட்டுமொத்த முஸ்லிம் தலைமைக்கும் ஓர் ஆட்சியாளர் உருவாகும் போது மட்டுமே அவருக்கு பைஅத் செய்யவேண்டும். இன்றுள்ள ஹராமான பிரிவினை இயக்க அமீர்களுக்கு செய்யப்படும் பைஅத் என்பது ஒரு தெளிவான பித்அத். இந்த பித்அத், பைஅத் நம்மை கொண்டு சேர்க்கும் இடம் நரகமே! எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் இந்த முஸீபத்தான செயலிலிருந்து பாதுகாக்க துவா செய்வோம்! இன்ஷா அல்லாஹ்.