S.H. அப்துர் ரஹ்மான்
அன்பு சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாம் பயன்படுத்தும் ஹிஜ்ரி காலண்டரை கணக்கிட பயன்படுத்தும் IDL மற்றும் UTC போன்ற அளவீடுகள் ஆங்கிலேயரால் நிர்ணயிக்கப்பட்டவை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்தவைகள் அல்ல என்று ஏற்கனவே இரண்டு ஆக்கங்களில் பார்த்தோம். செப்டம்பர் 2018 அந்நஜாத்தில் IDL பற்றியும் டிசம்பர் 2018 அந்நஜாத்தில் UTC பற்றியும் விளக்கமாக பார்த்தோம். அதில் உள்ள சந்தேகங்கள் பற்றி ஹிஜிரி கமிட்டி இடமும் கேள்விகள் கேட்டு இருந்தேன். அதற்கும் இது நாள் வரை அவர்களிடம் இருந்து எந்த பதிலையும் பெறமுடியவில்லை. இவைகள் இஸ்லாமிய அடிப்படையிலும் இல்லை. இது மக்கள் அமல்கள் செய்யும் விஷயமாக இருப்பதால் இது பற்றி நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
இஸ்லாமிய சந்திர காலண்டரில் உள்ள அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்து இருக்க வேண்டும். அலாஸ்காவில் வெள்ளிகிழமையை வியாழனாக மாற்றி ஆங்கிலேயரால் போடப்பட்ட IDLஐ முஸ்லிம்கள் ஏற்க முடியாது. காரணம் பூமியில் எந்த பகுதியிலும் உள்ள கிழமை மாற்ற மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான்.
அதேபோல் நள்ளிரவு 00.00மணி முதல் நள்ளிரவு 23.59 மணி வரை உள்ளது தான் தத்தம் பகுதி மக்களின் நாளின் நேரமாக உள்ளது. உலக நேரம் என்பது உச்சி 00.00 UTC முதல் 23.59 UTC உச்சி வரையிலானது என்று ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட நாளின் ஆரம்பம் நள்ளிரவு என்பதை அடிப்படையாக கொண்டது. எனவே UTCயின் கட்டமைப்பையும் முஸ்லிம்கள் ஏற்க முடியாது. காரணம் நாள் பஜரில் இருந்து ஆரம்பம் ஆகி பஜ்ரில் முடிகிறது என்பதில் உறுதியாக உள்ளோம்.
இஸ்லாமிய அடிப்படையில் தத்தம் பகுதி நாள் என்பது பஜர் முதல் பஜர் வரை எனும்போது உலகநாளின் நேரம் UTC என்பது அசருக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நாளின் இறுதி நேரம் என்று ஹதீஃதில் குறிப்பிடப்பட்ட நேரமாகும். அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக் கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் படைத்தான்” என்று கூறினார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம் : 5379 இதன் அடிப்படையில் போடப்படும் காலண்டரே இஸ்லாமிய காலண்டராக இருக்கும்.
அவ்வாறு கணக்கிடும்போது 14:00 UTCக்கு மேல் வரும் சங்கமங்கள் அடுத்த நாளுக்கு தரப்படவேண்டும் என்று ஏற்கனவே எழுதி இருந்தேன். அதன் அடிப்படையில் புதிய காலண்டர் அமைத்து பார்க்கும் போது அது தற்போது சவுதியால் அலுவலக நாள்காட்டியாக பயன்படுத்தப்படும் தற்போதைய உம்முல்குராவை ஒத்ததாக உள்ளது.
IDL மற்றும் UTC இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து சந்திர காலண்டர் போட்டால் அது உம்முல் குராவையே ஒத்து உள்ளது. அதுவே ஏற்று பின்பற்ற தகுந்ததாக உள்ளது.
ஹிஜ்ரி கமிட்டியின் காலண்டர் எப்படி அமைக்கப்பட்டது என்று பார்க்கும்போது ஹிஜ்ரி 1420 (கிபி.2000க்கு) முன் உள்ள உம்முல்குராவை அடிப்படையாக கொண்டுதான். ஹிஜ்ரி கமிட்டி மூத்த அறிஞர் அலிமனிக்பான் அவர்களால் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஹிஜ்ரி 1420ல் அறிஞர் அல்மானிக்பானால் முதல் காலண் டர் பழைய உம்முல்குரா அடிப்படையில் வெளியிடப்பட்டது. ஹி.1420ல் சவுதி புதிய விதிமுறையாக முதலில் சூரியனும் பிறகு சந்திரனும் மறைய வேண்டும் அப்போது தான் ஏற்கப்படும் என்று கூறியதால் மாற்றம் ஏற்பட்டது. அடுத்து இரண்டு ஆண்டுகளில் இன்றும் சிறிது மாற்றப்பட்டு தற்போது உள்ள உம்முல்குரா ஏற்படுத்தப்பட்டது இது பற்றி, சவுதி அரசு முழு விபரத்தையும் வெளிப்படையாக கூறவில்லை.
சவுதியில் ஹிஜ்ரி 1420 முன் உள்ள உம்முல்குராவை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி காலண்டர் அமைக்கப்பட்டதால் அறிஞர் அலிமனிக்பான் அவர்களோ, கமிட்டியினரோ, IDL மற்றும் UTC பற்றி ஆய்வு செய்ததாக தெரியவில்லை. அது பற்றிய ஆய்வு அறிக்கையும் அவர்களிடம் இல்லை. எனவே எது இஸ்லாமிய அடிப்படைக்கு நெருக்கமானது என்று பார்த்தால் தற்போது உள்ள சவுதியின் உம்முல்குராவே நெருக்கமாக உள்ளது.
மக்காவில் மக்ரிப் ஏற்பட்டு விட்டால் சரியான தேதிகோடான அலாஸ்காவில் விடிந்து விடும். அதற்கு மேல் நடைபெறும் சங்கமம் அவர்கள் புதிய மாதத்தை தேதிக் கோட்டில் ஆரம்பித்த பின் நடைபெறும் சங்கமமே ஆகும்.
தேதிக்கோட்டில் புதிய நாளை முதலில் ஆரம்பிக்கும் நாடுகள் சங்கமம் நடப்பதற்கு முன்பாகவே புதிய மாதத்தை துவங்கும் நிலை இந்த ஆங்கிலேயரின் IDL மற்றும் UTCயின் பிழைகளாலேயே நிகழ்கிறது UTC 14:00 மேல் சங்கமம் நடைபெறும் மாதங்களிலேயே முழு நிலவு 16ம் தேதியில் வரும் நிலையும் ஏற்படுவதையும் கடந்த வருட காலண்டர்களில் பார்க்க முடியும். இவை அனைத்திற்கும் காரணம் தவறான ஆங்கிலேயரின் IDLயும் UTCயும் இஸ்லாமிய அடிப்படையில் உள்ளதா என்று ஆய்வு செய்யாமல் பயன்படுத்தியது தான்.
எனவே இது பற்றி ஆய்வு செய்த வகையில் தற்போதைய உம்முல்குரா காலண்டர் இஸ்லாமிய அடிப்படைக்கு நெருக்கமானதாக தெரிகிறது. உம்முல்குரா காலண்டரில் தேதிக் கோட்டில் பஜரில் மாதம் ஆரம்பித்த பிறகு உச்சி வரை சங்கமம் நடைபெறும் பிழை வருவது இல்லை. மேலும் 16ம் தேதியில் முழு நிலவு வருவதும் தவிர்க்கப்படுகிறது. IDL, UTCசரி செய்யப்பட்டு இஸ்லாமிய அடிப்படையில் உள்ளது. எனவே அதனை பின்பற்றுவதே சரியானது என்று கூறி முடிக்கின்றேன்.
இந்த வருட ரமழான் மாதம் ஆரம்ப சங்கமம் மே, 4ம் தேதி 22:45 UTCக்கு நடைபெறுவதால் சரியான தேதிக்கோடு அலாஸ்காவில் அது மே, 5ம் தேதி மாலை 14:45 மணியாக இருக்கும். அது 14.00 UTCக்கு மேல் இருப்பதால் அது மே, 5ம் தேதி நடைபெற்றதாக கணக்கில் கொண்டு மே, 6ம் தேதி முதல் தான் புதிய மாதம் ஆரம்பிக்க வேண்டும். உம்முல் குராவிலும் அந்த அடிப்படையில் 6ம் தேதி முதல் நோன்பு ஆரம்பம் ஆகிறது.
இது பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண். 9345154415 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
அல்லாஹ் நம் அனைவரையும் பிறை விடயத்தில் ஒன்றுபட்ட கருத்தில் கொண்டு வந்து ஒரே காலண்டரை பின்பற்றி ஒரே நாளில் உலகம் முழுவதும் பெருநாள் கொண்டாடும் நிலையை ஏற்படுத்துவானாக. இன்ஷா அல்லாஹ்