நோன்பை பற்றி குர்ஆன், ஹதீஃத் சொல்வது என்ன?
S.T. முஹம்மது ரபீக், மறவாங்குடி
வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா? ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்க்கும் வசந்தம், நோன்பு.
இஸ்லாத்தில் ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமை தான் நோன்பு :
ஆண்டு தோறும் ஒவ்வொரு முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் மீதும் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும்.
இறைவன் கூறுகிறான் :
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டிருக்கிறது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். (அல்குர்ஆன் : 2:183)
நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள், அதில் கூறுகிறார்கள், ஒரு சிறந்த கண்ணிய மிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமை மிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில்எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி), நூல் : பைஹகி
இறைவன் கூறுகிறான் :
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். (அல்குர்ஆன் : 2:183)
ரமழான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
நோன்பு கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விட்டுவிட்டு ரமழான் மாதத்தை மட்டும் ஏன் இறைவன் தேர்வு செய்தான் என்பதை கவனியுங்கள்.
இறைவன் கூறுகின்றான் :
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்) தெளிவான சான்று களைக் கொண்டதாகவும் (நன்மை, தீமை களைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.(அல்குர்ஆன் : 2:185)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமழான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன் னிக்கப்படும். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி) நூல் : புகாரி.
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாத மாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம் மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ் வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் (ஏடுகள்) அருளப்பட்டது. நமது தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: அஹமது, இப்னு கதீர்.
இறைவன் கூறுகின்றான் :
திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம்.
மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன?
மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும், ரூஹூம் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகின்றார்கள்.
அந்த இரவு முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது. வைகறை உதய மாகும் வரை. (அல்குர்ஆன்: 97:1-5)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமழான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஃத் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும். (என்று அல்லாஹ் கூறுகிறான்) என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். புகாரி.
பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது :
வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.
தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.
பிறர் மீதான அக்கறையும் இல்லாதோ ருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.
பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழி வகுக்கிறது.
நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமழானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர்(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி முஸ்லிம், திர்மிதி)
யார் மீது நோன்பு கடமை இல்லை?
- தள்ளாத வயதினர்
- நோயாளிகள்
(நோயாளிகள் இரண்டு வகை உண்டு ஒன்று தீரும் நோய், மற்றொன்று தீரா நோய்) - பயணிகள்.
இறைவன் கூறுகின்றான் :
(நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரம் அவர்கள் மீது ஃபித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிப் பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிகமாக கொடுத்தால் அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (அல்குர்ஆன்:2:184)
நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரழி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நீ விரும்பி னால் நோன்பு நோற்றுக் கொள். விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல்: புகாரி.
இறைவன் கூறுகிறான் :
ஆனால், எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங் கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றிட அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி) உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது?) (அல்குர்ஆன் : 2:185)
- மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் :
நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா(ரழி) நூல்: முஸ்லிம்.
- கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் :
குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாகக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல் : நஸயீ.
இன்ஷா அல்லாஹ் இந்த வருடம், ரமழான் மாதத்தை பிறைக் கணக்கீட்டின் அடிப்படையில் சரியான நாளில் துவங்கி, சரியான நாளில் முடித்து, ஷவ்வால் முதல் பிறையின் சரியான நாளில் பெருநாளை அடைவோம். இன்ஷா அல்லாஹ்.
சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸஹ்ல் (ரழி), நூல்: புகாரி: முஸ்லிம்.
ஆகவே, நாம் அனைவரும் இந்த நோன்பை சரியான முறையில் நோற்று, அதன் நன்மைகளை இறைவனிடத்தில் முழுமையாக பெறக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக. இன்ஷா அல்லாஹ்!