பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்!
கு. நிஜாமுதீன்
பிறைகள் பற்றி குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம் :
பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். “அது” (அதாவது ஹிலால்) மக்களுக்கு காலம் காட்டுகின்றது. குர்ஆன்: 2:189
பிறைகள்மக்களுக்கு காலம் காட்டுபவை என்று இறைவன் இங்கு குறிப்பிடுகிறான். இது முஸ்லிம்களுக்கு மட்டும் காலம் காட்டவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் காலம் காட்டுபவை.
இன்றும் உலகில் பல சமூகங்கள் பிறை களை நாள்காட்டியாக பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு பிறையை யும் அவர்கள் பார்க்கிறார்கள். அதன் வடிவ வளர்ச்சி மற்றும் வடிவ தேய்வு நிலை. படித்தரங்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப் படியாகிவிட்டது. பண்ணெடுங்காலமாக உலக மக்கள் பிறைகளை வைத்தே தங்களின் நாட்களை கணக்கிட்டு வந்தார்கள். தமிழ் சமூகத்தில் பல குலங்களும் பிறைகளை துல்லியமாக அறிந்துள்ளார்கள். குறிப்பாக மீனவர்களையும், சடங்கு சம்பிரதாயம் செய்பவர்களையும் இங்கு உதாரணமாக்கலாம். அரபு சமுதாயம் அப்படித்தான். மேற்கத்திய நாடுகள் ஆங்கில காலண்டரை உருவாக்கி மக்களின் கவனத்தை அதன் பக்கம் திருப்பிய பிறகே முஸ்லிம்கள் பிறை நாட்காட்டியை மறக்க துவங்கினர். விளைவு இன்றைக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள்.
பிறைகள் மக்களுக்கு காலத்தை அறிவிக்கின்றது என்கிறான் இறைவன். இதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். வெவ்வேறு நாட்களில் பிறைகள் முதல் நாளை அறிவிக்குமா? இது பெரும் அறியாமையில்லையா? என்பதை அறிவில் சிறந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பிறைகளை கணக்கிட்டு வரலாம் அது அறிவார்ந்த மக்களுக்கு மிக எளிது என்பது குர்ஆன் வசனம். அவனே சூரியனை பிரகாசமாகவும், சந்திரனை ஒளியாகவும் படைத்தான்.
ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கால கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்வதற்காக சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தி யுள்ளான். சிந்தித்துணரும் மக்களுக்கு இந்த வசனங்களை விவரிக்கிறான். 10:5
இந்த வசனத்தில் “லி தஃலமு” நீங்கள் அறிந்துக் கொள்வதற்காகக என்ற வாசக அமைப்பை நாம் ஆழந்து சிந்திக்க வேண்டும். ஏதோ பிறை என்பது ரமழானுக்கு இரண்டு நாளும், ஹஜ்ஜுக்கு ஒரு நாளும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எத்துனை ஆண்டுகளை வேண்டு மானாலும் சந்திரனை கணக்கிட்டுக் கொள்ளலாம் என்ற அறிவியலும், அறிஞர்களால் அதை செய்ய முடியும் என்ற பேருண்மையும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கணக்கிடுதல் மார்க்க வழிமுறையே:
பிறைகளை கணக்கிட்டு வந்த நபி(ஸல்) அவர்கள். (பிறைகளை கணிப்பீடு செய்வது மார்க்கத்தில் இல்லை)
ஒரு மாதம் மனைவியோடு சேருவ தில்லை என்று நபி(ஸல்) என்று ஒதுங்குகிறார்கள். 29 நாட்களில் தனது அறையிலிருந்து வெளிவந்து மனைவியரிடம் செல்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டேன் என்று சொன்னீர்களே… என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது என்று பதிலளித்தார்கள்
“தலைப் பிறையை பார்த்துதான் மாதத்தை முடிக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஹதீஃதில் அடியோடு மறுப்பு இருக்கின்றது”
நபி(ஸல்) தங்கள் அறையில் இருந்த நிலையில் மாதத்தை முடித்துக் கொண்டு வெளியேறி இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டதுதான் என்று விளக்கமளித்துள்ளார்கள். இது நாம் முன்பு எடுத்துக் காட்டிய 10வது அத்தியாயத்தின் 5வது வச னத்திற்கு விளக்கமாக உள்ளதை நம் சகோதரர்கள் ஊன்றி கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு பிறையையும் பார்த்து அதன் அடிப்படை விதிகளை அறிந்து நாட்களை கணக்கிட்டு வருவது போன்று பிறைகளைக் கணக்கிட்டு வந்து மாதத்தை முடிப்பதும் (இந்த மாதம் எத்துனை நாட்களில் முடியும் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பதும்) நபி(ஸல்) காலத்து இஸ்லாமிய நடைமுறையாக இருந்துள்ளதை ஆதாரங்கள் சொல்கின்றன.
நபி(ஸல்) ரமழானுக்காக ஃபான் மாதத்துடைய பிறையை கணக்கிட்டு வருவார்கள். (திர்மிதி 687) மாதம் எப்போது முடியும் என்பதை நபி(ஸல்) அறிந்த நிலையிலும் ரமழானை அடைவதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள். கணக்கிட்டு வந்துள்ளார்கள். இதுவும் 10:5வது வசனத்திற்கு விளக்கமாக உள்ளது.
அடுத்த ஆதாரத்தைப் பாருங்கள். இப்னு ஹிப்பான்: 3444
மற்ற மாதங்களை விட கூடுதலாக ரமழானுக்காக ஃபானை நபி(ஸல்) கணக்கிட்டு வருவார்கள் முப்பதாம் நாள் மறைக்கப்பட்டதும் அடுத்த நாள் நோன்பைத் துவங்குவார்கள்.
நபி(ஸல்) பிறைகளைக் கணக்கிட்டு வந்துள்ளார்கள் என்பதற்கு இதுவும் சான்று. இதுவும் 10ம் அத்தியாயத்தின் 5ம் வசனத்திற்கு விளக்கமாக உள்ளது.
பிறைகள் கணக்கீடு பற்றி முக்கிய ஹதீஃத்களைப் பார்ப்போம் :
முன்கூட்டியே மாதத்தின் முடிவை (10ம் அத்தியாயத்தின் 5ம் வசனத்திற்கு விளக்கமாக) அறிந்த நபி(ஸல்) அவர்கள். இந்த மாதத்தில் எத்துனை நாட்கள் மீதமுள்ளன என்று நபி(ஸல்) நபித்தோழர்களிடம் கேட்டார்கள். நபித்தோழர்கள் மீதி 8 நாட்கள் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) இல்லை மீதி 7 நாட்களே இருக்கின்றன என்றார்கள். இப்னு ஹிப்பான் 3450, அஹ்மத் 7423, இப்னு குதைமா 2179, இப்னு ஹிப்பான் 2548, சுன்ன குப்ரா பைஹகி 8539.
பிறைப் பார்த்து (அதிலும் மறையும் பிறையைப் பார்த்து) மாதத்தை துவங்கி அடுத்து மறையும் பிறையை மேற்கில் பார்த்து அடுத்த மாதத்தை துவங்க வேண்டும் என்று ஆதாரங்கள் இல்லாத நூதன வழிமுறையை பிடிவாதமாக பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் மேற்காட்டிய நபிவழியில் அழுத்தமான மறுப்பு உள்ளது.
அன்பு சகோதரர்களே,
ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கால கணக்கையும் அவசியம் அறிய வேண்டும் என்ற இறைக்கட்டளை 10ம் அத்தியாயத்தின் 5ம் வசனத்தில் உள்ளது. சூரியனும், சந்திரனும் வீணுக்காக படைக்கப்படவில்லை தக்க காரணமான சத்தியம் அதில் உள்ளது என்று இறைவன் குறிப்பிட்டு அறிவாளிகளுக்கு இந்த வசனங்கள் விளங்கும் என்கிறான்.
குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி(ஸல்) 10:5 வசனத்திற்கு விளக்கமாகவே பிறைகளை பார்த்தும் கணக்கிட்டும் வந்துள்ளார்கள் என்பதை விளங்கி சந்திர காலண்டரை நடைமுறைப்படுத்தும் வேலையில் நாம் இறங்க வேண்டும்.