அமல்களின் சிறப்புகள்….
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.
தப்லீக் ஜமாஅத்தினர் கூறும் ஈருலக ஈடேற்றத்துக்கான 6 நம்பர்(?) பற்றி சென்ற இதழில் சுருக்கமாகப் பார்த்தோம். இந்த இதழிலும் இன்ஷா அல்லாஹ் சுருக்கமாகவே தொடர்வோம்.
தப்லீக் ஜமாஅத்தில் இருப்பவர்கள் மறந்தும் இறைநெறி நூலான குர்ஆனை திறந்து பார்த்து விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்திட்டம் வகுத்து வைத்துள்ளனர். பள்ளிவாசலில் பிறருக்கு படித்துக் காட்டுவதும் அமல்களின் சிறப்பு (அசி) புத்தகத்தைத்தான். வீட்டில் குடும்பத்தினருக்கு படித்துக்காட்டுவதும் அசி புத்தகத்தைத்தான்.
இதைத்தவிர ஜமாஅத்தில் செல்லும்போது குர்ஆனின் வசனங்களை எப்படி மனனம் செய்வார்கள் தெரியுமா? குர்ஆன் வசனங்களை மனனம் செய்ய குர்ஆன் வேண்டுமல்லவா? குர்ஆன் இல்லாமலே குர்ஆனைத் தொடாமலே குர்ஆனிலுள்ள சிறிய சூரா ஒன்றிலுள்ள ஒரு வசனத்தை ஓதத் தெரிந்த ஒருவர் ஓதுவார். வட்டமாக அமர்ந்திருக்கும் மற்றவர்கள், ஓதியவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஓதப்பட்ட வசனத்தையே திரும்ப ஓதி மனனம் செய்வார்கள். இதை “ஹல்க்கா-தஃலீம்” என்பர். இப்படியாக சிறு சிறு சூராக்களை மனனம் செய்வார்கள். இந்த முறை அரபி எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு சரியான முறையாக இருந்தாலும், அரபி தெரிந்தவர்கள் இந்த முறைக்கு வந்து விடவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவர்களால் குர்ஆனை உபயோகிக்க முடியாமல் போய் விடுகிறது.
இது திட்டமிடப்பட்ட செயல் குர்ஆனை அவர்கள் தஃலீமில் படிப்பதற்கு தடையேதும் இல்லை என்று எவரேனும் கூறுவதற்கு முன் வருவார்களேயானால், “ஒருமுறை கூட இதுவரை எந்த தஃலீமிலும் எவரும் குர்ஆனை வைத்து ஓதியதே கிடையாது” என்பதுதான் எனது பதில். இதே நிலைதான் ஹதீஃதிலும் கையாளப்படுகிறது. ஆக, குர்ஆனையும், ஹதீஃதையும் பின்பற்ற வேண்டும் என்பது இவர்களின் வாயளவு உபதேசமேயன்றி, செயலில் கிடையாது.
இஸ்லாம் கூறும் ஐந்து நம்பர்களை கவனியுங்கள் :
- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை யன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல் (2) தொழுகையை நிலை நிறுத்துதல், (3) ஜகாத்து வழங்குதல், (4)ஹஜ் செய்தல், (5) ரமழானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரழி) அறிவித்தார். (ஹதீஃத் 8, அத்தியாயம்:2, ஈமான் எனும் இறை நம்பிக்கை) முஸ்லிம்: 21, அத்தியாயம்:1, இறைநம்பிக்கை)
இஸ்லாம் இந்த ஐந்து கடமைகளை மட்டும் தான் தெரிவிக்கிறது என்று நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல் தெரிகிறது. ஆகவே நான் இஸ்லாம் கூறும் ஐந்து நம்பருக்கு போட்டியாக ஆறு நம்பரை நல்ல பிள்ளை வேம் போட்டு வெவ்வேறு விஷயங்களாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். எனவே, இஸ்லாம் கூறக்கூடிய மற்ற சில கடமைகளையும், அறியாமையில் இருக்கும் தப்லீக் ஜமாஅத்தின் ஆதார வாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எமது கடமையாகும்.
- மரணம் நெருங்கும்போது சொத்தை பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் மரண சாசனம் (வசியத்) செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. பயபக்தி உடையோர் மீது இது கடமையாகும். (அல்குர்ஆன்:2:180)
- தலாக் சொல்லப்பட்ட பெண்களின் கணவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய் மார்களை அமர்த்தி பாலூட்ட விரும்பினால் தாய்மார்கள் நிரப்பமாக இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு, உடை கொடுப்பது குழந்தையின் தகப்பன் மீது கடமை. குழந்தையின் தந்தை இறந்து விட்டால் அதை பரிபாலிப்பது வாரிசுகள் மீது கடமை, இன்னும், தாய் தந்தை இருவரும் பரஸ்பரம் இணங்கி பாலூட்டுவதை நிறுத்த விரும்பினால், அதில் குற்றமில்லை, செவிலித்தாயைக் கொண்டும் பாலூட்டலாம், ஆனால், குழந்தையின் தாய்க்கு குழந்தையின் தந்தையிடமிருந்து சேர வேண்டியதை முறைப்படி செலுத்திட வேண்டும். (அல்குர்ஆன்: 2:233)
- பெண்களை தீண்டும் முன் அல்லது மஹரை நிச்சயம் செய்யும் முன், தலாக் சொன்னால், நியாயமான முறையில் அப்பெண்களுக்கு உதவி செய்வது நல்லோர் மீது கடமை. (அல்குர்ஆன் : 2:236)
- தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமாக பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்பது பயபக்தி உடையவர்கள் மீது கடமை. (அல்குர்ஆன் : 2:241)
- மார்க்கத்தை சொல்லுவது கடமை. (அல்குர்ஆன் : 3:20, 5:92, 5:99)
- திருமணம் செய்ய மஹர் கொடுப்பது மணமகனின் கடமை. (அல்குர்ஆன்: 4:24)
- பெருந்தொடக்குக்கு குளிப்பு கடமை. (அல்குர்ஆன் : 5:6)
- அறுவடை செய்யும்போது அதற்குரிய பாகத்தைக் கொடுப்பது கடமை. (அல்குர்ஆன்: 6:141)
- அல்லாஹ்வின் மீது உண்மையல்லாத வற்றை சொல்லாமலிருப்பது கடமை. (அல்குர்ஆன் : 7:105)
- ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை நீங்கள் பொறுப்பாளி அல்ல. அந்நாள், மார்க்க வியத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒருசமூகத்துக்கு விரோதமாக உதவி செய்யக் கூடாது. (அல்குர்ஆன் : 8:72)
வாழ்வதற்கு இவ்வளவு தெளிவான வழிகாட்டலை அல்குர்ஆன் போதனை செய்திருந்தும், அல்குர்ஆனை படிக்காமலும், பின்பற்றாமலும், வாழ்ந்து கொண்டிருக்கும் தப்லீக் ஜமாஅத்தினரின் இஸ்லாம் அல்லாத வழி அல்லாஹ்விடம் நிச்சயமாக அங்கீகரிக்கப்படாத வழி ஆகும் என்பதை உணர்வார்களாக.