ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்
M.T.M. முஜீபுதீன், இலங்கை
2019 ஜூன் மாத தொடர்ச்சி…..
கடன் வாங்கும்போதும், கடன் பெறும் போதும் எவ்வாறு மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அல்லாஹ் அல்குர்ஆனில் மேற்கண்டவாறு விபரிக்கின்றான். ஒரு மனிதன் கடன் பெறும்போது அவன் மனதில் பின்வருமாறு நினைத்தல் வேண்டும் என ஹதீஃத்கள் விளக்குகினறன. கவனியுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எவன் மக்களின் பணத்தை அல்லது பொருட்களை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை ஏமாற்றி அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். (புகாரி : 2387)
ஆகவே மனிதர்கள் கடன் வாங்கும் போது தன்னால் அக்கடனைத் திருப்பிக் கொடுத்து விட முடியும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குதல் வேண்டும். அத்துடன் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் போது நல்ல முறையில் நடந்து கொள்ளுதல் வேண்டும். கவனியுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), “நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது வசதி உள்ளவர்க்கு அவகாசம் கொடத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (புகாரி : 2391)
கடனை அடைக்க சக்தி பெறாதவர்களின் கடனை தள்ளுபடி செய்து மன்னிப்பது சிறந்த நற்கருமமாகும். ஆனால் ஒரு கடன்காரர் வசதியிருந்தும் கடனை உடனடியாக அடைக்காமல் தவணை சொல்லி தள்ளி இழுத்தடிப்பது அநியாயமாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். கவ னியுங்கள் நபிமொழியை: வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். (புகாரி : 2400)
மனிதர்கள் கடன் படும்போது மிகவும் கவனமாக தான் எடுத்த கடனை திருப்பி வழங்கிவிட வேண்டும். நபி(ஸல்) அவர்க ளும் கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுபவராக இருந்தார்கள் கவனியுங்கள்.
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் துவா செய்யும் போது, “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான் வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள். (புகாரி : 2398)
மனிதர்கள் கடன் படும்போது அதை அடைக்க முடியாத போது பல தவறுகளை அடுக்கடுக்காக செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகம் ஏற்படுகின்றது. ஆகவே கடன் வாங்குபவர்கள் மிக கவனமாக அக்கடனை அடைக்க முயல்வது அவசியமாகும். ஆகவே இஸ்லாம் கடன் பெறுவதை சில நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. அந்த நிபந்தனைகளை கடன் சம்பந்தப்பட்ட இருகட்சியினரும் கடைப் பிடிப்பதன் மூலம் கடன் படும்போது எழும் பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் கடனை அடைக்கும்போது மிக அழகான முறையில் கடனை அடைத்தல் வேண்டும். கடன் கொடுத்தவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துதல் கூடாது. கவனியுங்கள் : புகாரி: 2393ம் ஹதீஃத்)
இந்த நவீன உலகில் கொடுக்கல், வாங்கல் செய்யும் சட்டரீதியான சாதனமாக சட்ட நாணயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நாணயங்கள் அநேகமான வைகள் உள்ளீட்டுப் பெறுமதி அற்றவை. அரசின் அங்கீகாரத்தின் அடிப்படையில் முகப் பெறுமதியின் அடிப்படையிலேயே நடந்த கொடுக்கல் வாங்கலுக்கு பரிமாற்றம் சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் பிரதான குறைபாடு இத்தாள் நாணயங்கள் சேமித்து வைக்கும் சாதனமாகவும், கடன் கொடுக்கும் சாதனமாகவும் பயன் படுத்தப்படுகின்ற போது பணவீக்க தாக்கங்களுக்கு உட்படுவதாகும்.
இதனால் தாள் நாணயங்களின் அடிப்படையில் கடன் கொடுக்கும் போது பண வீக்கங்களினால் கடன் கொடுத்தவர் அல்லது கடன் பட்டவர் பாதிப்புக்கு உட்படுகின்றார். உதாரணமாக ஒருவர் இன்னும் ஒருவருக்கு ரூபா ஆயிரம் கொடுத்து உடன் இரண்டு ஐந்நூறு ரூபாக்களுடன் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் ஒருவர் இன்னும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாவைக் கொடுத்து விட்டு ஒரு வருடத்தின் பின் அதே பெறுமதியைத் திரும்ப வாங்கும்போது ரூபாவின் பெறுமதி தேய்வுக்குட்படின், அந்த கடன் பரிமாற்றம் வட்டியாக மாறாதா? இஸ்லாமிய அறிஞர்களே இக்கொடுக்கல் வாங்கலில் வட்டி அல்லது பாதிப்புகள் நேராதா? ஆய்வுக்கு உட்படுத்துங்கள். அதாவது இந்த நஷ்டத்திலிருந்து கடன் கொடுத்தவரை காப்பாற்றுவது எவ்வாறு? அவ்வாறாயின் இதைத் தவிர்க்க விலைச் சுட்டிகளை பயன்படுத்தினால் வட்டியாக மாறுமா? பொரு ளாதார அறிவுடைய இஸ்லாமிய அறிஞர்களே! இதனை உங்கள் கவனத்திற்கு விட்டு விடுகிறேன். பொருளாதார அறிவுடன் ஆய்வுக்குட்படுத்துங்கள். பின்வரும் ஹதீஃத்கள் எதனை வலியுறுத்துகின்றன. கவனியுங்கள்.
மாலிக் பின் அவ்ஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது :
நான் நூறு தீனார்களை(திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உமைதில்லாஹ்(ரழி) அவர்கள் என்னை அழைத்தார்கள். அவரிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங் களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு “காபாவிலிருந்து நமது கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லரை தரமுடியாது” என்றார்கள். இதை உமர்(ரழி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் “தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம்பழத்திற்குப் பேரீச்சம்பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! என்று கூறினார்கள். என்று உமர்(ரழி) அவர்கள் சொன்னார்கள். (புகாரி : 2174)
மேலுள்ள ஹதீஃதின்படி பணமாகவோ அல்லது பண்டமாற்றாகவோ பொதுவாக மக்களினால் பயன்படுத்தும் பொருட்கள் சமமான பெறுமதிக்கே மாற்றவேண்டும். அன்றி பின்னர் கொடுப்பவனாக பணத்தினைப் பயன்படுத்தி கடன் பெறும்போது தவணைக்கு பின் அதே முகப் பெறுமதி பணத்தை மீள வழங்கும் போது அப்பணத்தில் பணவீக்கம் காணப்படின் கடன் கொடுத்தவர் பாதிக்கப்பட முடியும் அல்லவா? இது வட்டியாக மாறாதா? அறிஞர் களே சிந்தியுங்கள். மேலுள்ள ஹதீஃத் உங்கள் கவனத்திற்கே ஆகும்.
பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் வட்டியைத் தடை செய்யும் மார்க்கம் இஸ்லாம் :
இன்று உலகில் காணப்படும் பொருளா தாரங்களில் பொருட்கள் சேவைகளுக்கும் பண்டமாற்றுச் சாதனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றன. இதில் நன்கொடைகளுக்கும், வட்டிக்கும் இடையில் எதிர்மாறான தொடர்பு காணப்படு கின்றது. நன்கொடைகள் பிரதி உபகாரமின்றி ஒருபக்கக் கொடுப்பனவாக செல்வந்தர்களினால் ஏழைகளுக்குக் கொடுக்கப்படு கின்றன. இதனால் ஏழைகளின் மெய் வரு மானம் அதிகரிக்கின்றது. வருமான ஏற்றத் தாழ்வு குறைகின்றது. ஆனால் வட்டி இதற்கு மாற்றமாக நிதி அல்லது பொருள் பற்றாக்குறைய எதிர்நோக்கும் ஏழைகள் அல்லது கடன் பெற்றவர்கள் தான் பெற்ற கடனின் மெய்ப்பெறுமதிக்கு மேலதிகமாக கொடுக்கும் ஒருபக்கக் கொடுப்பனவாகும். வட்டி என்பது நிதிப் பிரச்சினைகளுக்கு உட்பட்டவர்களும், பொருளாதாரப் பிரச்சினைக்கு உட்பட்ட ஏழைகளும், குறுங் கால, நீண்டகால நிதிப்பிரச்சினைகளுக்கு உட்படாத கடன் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கும் ஒரு பக்கம் கொடுப்பனவாகும். இக்கடன் வட்டியை ஏழை செல்வந்தவர் களுக்குக் கொடுக்கவேண்டிய பலவந்த மான நன்கொடை எனலாம்.
ஏழைகளின் உழைப்பைச் சுரண்டும் இந்தச் செயற்பாட்டை சில நிதி வியாபாரி கள் வியாபார இலாபம் என்கின்றனர். ஆனால் அல்லாஹ் அல்குர்ஆனில் வட்டி என்கின்றான். வட்டி செல்வந்தனை மேலும் செல்வந்தனாக்கும். ஆனால் ஏழையை மேலும் வறுமையில் தள்ளும். இதனால் பொருளாதாரத்தில் வருமான சமத்துவம் பாதிப்படையும். பொருளாதாரத்தில் சுருக்கத்தினைத் தோற்றுவிக்கும். இது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவித்து, அபிவிருத்தி பின்னடைவுக்கு அடிப்படை களில் ஒன்றாக அமையும். வட்டியைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதை கவனியுங்கள்.
யார் வட்டியை (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய்) எழமாட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாகும் அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்தபின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகளாவார்கள் அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடு வார்கள்.
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான் இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 2:275,276)
வட்டி வியாபார இலாபம் அல்ல. வட்டி வாங்குபவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு பயந்து கொள்ளுதல் வேண்டும். அல்லாஹ் தான தருமங்களை கொடுக்கும்படி கட்டளையிட்டு, வட்டியை தடை செய்துள்ளான். அல்லாஹ் வட்டி பற்றி மேலும் கூறுவதை கவனியுங்கள்.
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
தவிர(நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காகச் சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்:3:130, 131)
ஆகவே, ஏழைகளின் உதிரத்தை உறிஞ்சி குடிக்கும் வட்டியை எடுக்காதீர்கள். வட்டி எடுத்து தனது வயிற்றை நிறைந்தவர்கள் நரகையே சென்றடைவர். இது ஏழைகளின் பொருளாதாரத்தில் பெரும் சீரழிவைத் தோற்றுவிக்கும். நபி(ஸல்) அவர்கள் வட்டியை பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! வாற்கோது மைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம்பழத்திற் குப் பேரீச்சம்பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! (புகாரி : 2170)