அந்நஜாத் – அக்டோபர் 2019
முஹரம் – ஸஃபர் – 1441
- தலையங்கம்!
- இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை!
- அமல்களின் சிறப்புகள்..
- குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?
- ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
- இஸ்லாத்தின் பார்வையில் – தீபாவளியும், முஸ்லிம்களும்…
- அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்!
- அறிந்து கொள்வோம்…
- இஸ்லாத்தில் கந்தூரி, கூடு, பாதை மறிப்பு உண்டா?
- குர்ஆனை விளக்கும் ஹதீஃத்கள்!
- ஐயமும்! தெளிவும்!! ஷ
**************************
தலையங்கம்!
“நாம் பின்னோக்கி சென்றுவிட்டோம்!”
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் வேதனை…
புதுச்சேரியில் சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியா? இல்லையா? என்ற வினாவை விட, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து உண்டா? இல்லையா? என்ற கேள்வி நம் முன்னே எழுகிறது.
சிறப்பு அந்தஸ்து இல்லை என்று சிலர் கூறுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறப்பு அந்தஸ்து இருக்கிறது என்று இன்னும் சிலர் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் ஆராய்ந்து தன்னுடைய தீர்ப்பை அளிக்கப்போகிறது. அந்தத் தீர்ப்பை எதிர்பார்த்து நாம் காத்திருப்போம்.
புதுச்சேரியில் உள்ள ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது. இந்த மோதலைத் தவிர்க்க வேண்டும் என்றால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம்.
இவ்வாறாக நாம் மாநில அந்தஸ்து கேட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு மாநிலத்தையே யூனியன் பிரதேசமாக மாற்றுகின்றனர். மொழி, மக்கள், பகுதி, சமயம் ஆகியவைகள் அவர்களுக்கு முக்கியம் அல்ல. அதிகார பங்கீடாகத்தான் பிரதேசங்களை அவர்கள் நோக்குகிறார்கள்.
இங்கே (புதுச்சேரியில்) யூனியன் பிரதே சத்திற்கென்றே சட்டப்பேரவை இருக்கி றது. ஆனால், யூனியன் பிரதேசம் என்று சொல்லப்படும் லடாக் மாநிலத்தில் சட்டப் பேரவை இல்லாத சூழலை உருவாக்கி விட்டனர். இது, நாம் பின்னோக்கி சென்று விட்டதை காட்டுகிறது. பிரிட்டிஷார், 100 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த யோசனையாக இது இருக்கிறது.
தலைவர்கள் காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வரமுடியவில்லை. இன்றைக்கு அறிவியலில் நாம் முன்னேறி டிவி, செல்போன், கம்ப்யூட்டர் வைத்துள்ளோம். ஆனால் அங்கு ஒரு இருண்ட காலத்துக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். இதனை நாம் கண்டிக்கவில்லை என்றால், “நாம் இந்தியாவின் குடும்பம்” என்று சொல்லிக் கொள்வதில் தகுதி இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் போட்டியில் விதிகள் மாறியுள்ளதா என்று இளைஞர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கின்றனர். ஆனால், இங்கே ஒரு நாட்டின் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. யூனியன் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதிலும் ஒரு பகுதி சட்டப் பேரவையே இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது.
ராணுவத்தை வைத்து ஆட்சி செய்கின்றனர். அறுபத்தி ஐந்து ஆயிரம் பேர் உள்ளூர் போலீசார் காஷ்மீரில் இருக்கின்றனர். ஆனால், ராணுவத்தினர் எண்ணிக்கையோ ஆறரை லட்சம் பேர். இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு, இராணுவத்தினரின் எண்ணிக்கை பத்து லட்சம் பேராக உயர்த்தப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒவ்வொரு உள்ளூர் போலீசாருக்கும் ஒன்றரை ராணுவத்தினர் என்ற நிலையில், இங்கே இந்த மாநிலம் நிர்வகிக்கப்படுகிறது. இது வெட்கத்தை தருகிறது. உரிமையை நிலைநாட்டுங்கள்- மக்களை நடக்க விடுங்கள் எனக் கூறி, 52 நாடுகள் இதைக் கண்டித்திருக்கின்றன” என்று அவர் பேசினார்.
**************************
இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை!
அபூ அப்தில்லாஹ்
மறுபதிப்பு :
“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மை யுடைய நெறிநூலை இறக்கி வைத்தான். எனினும் அந்நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்”. (அல்குர்ஆன் : 2:213)
எல்லாம் வல்ல அல்லாஹ், ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்து அவர்களிலிருந்தே அவர் மனைவியைப் படைத்தான். அவர்கள் இருவரிலிருந் தும் கோடான கோடி மனிதர்களைத் தோன்றச் செய்தான். எனவே ஆரம்பத்தில், மனிதர்கள் ஒரே கூட்டத்தினராக இருந்தனர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களிடையே ஏற்பட்ட பிரிவுகளுக்கும், பிளவு களுக்கும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையும் பகையுமே காரணமாகும். அடையாளம் தெரிந்து கொள்ள இந்தப் பிரிவுகளும், பிளவுகளும் ஏற்படவில்லை என்பதை குர்ஆனின் மேற்கண்ட வசனமே உறுதியாகத் தெளிவுபடுத்துகிறது. இப்படி போட்டி, பொறாமை, பகை காரணமாகத் தோன்றிய ஒவ்வொரு பிரிவாரும், தாங்கள் தான் நேர்வழியில் இருப்பதாகவும், தங்களுக்கே இறைவனின் பொருத்தமும் சுவர்க்க மும் கிடைக்கும் என்று வாதாடி வருகின்றனர். கல்லை வணங்குகிறவர்கள், கபுரை வணங்குகிறவர்கள், தங்களைப் போன்ற மனித இனத்தைச் சார்ந்த நபிமார்களுக்கும் வலிமார்களுக்கும் தெய்வாம்சங்களைக் கற்பித்து வணங்குகிறவர்கள், மலக்குகளையும் ஜின்களையும் வணங்குகிறவர்கள், தங்கள் மனோஇச்சையை தெய்வமாக்கிக் கொண்டவர்கள், இப்படி ஒவ்வொரு பிரிவாரும் தாங்கள் செய்து வருவதுதான், மிகச் சரியானதாகவும், தாங்களே நேர்வழி நடக்கிறவர்கள், தங்களுக்கே இறைவனின் பொருத்தமும் சுவர்க்கமும் கிடைக்கும் என்று துணிந்து கூறி வருவதையே பார்க்கிறோம். எந்தப் பிரிவாரும் தங்களை வழிகெட்ட கூட்டமென்றோ, நரகத்திற்குச் செல்லும் கூட்டம் என்றோ சொல்லுவதே இல்லை. இதையே அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
“எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்கிப் பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களை போல் ஆகிவிடவேண்டாம். அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்” (30:32)
இன்னும் 23:53 வசனமும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
ஈமான் கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள் இன்னும் அனைத்துப் பிரிவாரும் இவ்வாறு தாங்கள் செய்து கொண்டிருப்பதைக் கொண்டு, சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவினரின் இந்த வீண் வாதம் தவறு. அவர்களின் இறைவனைப் பற்றிய நம்பிக்கை இறுதி நாளைப் பற்றிய நம்பிக்கை, நல்ல செயல்கள், இவையே அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும், மற்றவர்கள் நஷ்டம் அடைவார்கள் என்பதையே 2:62 வசனமும் 5:69 வசனமும் தெளிவுபடுத்துகின்றன. சிலர் வாதம் செய்வது போல், இப்படிப்பட்ட பிரிவுப் பெயர்களை அல்லாஹ் அனுமதித்துள்ளான் என்ற எண்ணம் மிகவும் தவறானதாகும். அவர்கள் சொல்லுவது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள் எவருமே தங்கள் பிரிவுக் கொள்கைகளை விட்டு முஸ்லிம்களாகி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் தங்கள் பிரிவுகளில் இருந்து கொண்டு வெற்றி பெற்றிருக்க முடியும். நபி(ஸல்) அவர்களும் அதை மறுத்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் கலிமா சொல்லி, முஸ்லிம்களாகி நல்லமல்கள் செய் வது கொண்டே வெற்றியடைய முடிந்ததும் இது ஒன்றே பிரிவுகளை ஆதரிப்பவர்களின் வாதம் தவறு என்பதை நிரூபிக்கப் போதுமானது. மேலும்,
“அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்” (22:78)
“உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையே பொருந்திக் கொண்டேன்” (5:3)
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்க இஸ்லாம்தான்” (3:19)
“இஸ்லாத்தையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படமாட்டாது. மறுமையில் அவன் நஷ்டம் அடைந்தோரில் இருப்பான்”. (3:85)
“நீங்கள் முஸ்லிம் அல்லாத நிலையில் மரணிக்க வேண்டாம்” (3:102)
“அல்லாஹ் அளவில் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து, நிச்சயமாக, நான் முஸ்லிம்களில் உள்ளவன், என்று சொல்பவனை விட சொல்லாமல் அழகியவன் யார்?” (41:33)
இன்னும் இவை போன்ற வசனங்கள் இவர்களின் வாதத்தைப் பொய்ப்பிக்கின்றன. உண்மையில் முகல்லிதுகள் (மத்ஹபுப் பிரிவினர்) மத்ஹபுகளைத் தெளிவாக மறுக்கும் 4:115 வசனத்தையே, மத்ஹபுகளுக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவது போல், இவர்களும் பிரிவுகள் மறுக்கும் இந்த 2:62, 5:69 வசனங்களைப் பிரிவுகளுக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுகின்றனர். ஆக இரு கூட்டத்தாரின் வாதங்களும் தவறான வாதங்களேயாகும்.
யூத, கிறிஸ்தவப் பெயர்கள் கோத்திரத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பெயர்கள் என்று சொல்லுவது தவறாகும். அது உண்மையானால்,
“யூதர்கள் கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வீண் ஆசையே ஆகும்.” (2:111)
என்று குர்ஆன் குறிப்பிடுவது போல், அவர்கள் சொல்லி இருக்க முடியாது. வெற்றி பெறும் கூட்டம் என்ற காரணத்தினால் தான் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்கிக் கொள்ளலாம். இதை அடுத்து வரும் வசனம் இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கு முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கி றாரோ அவனுடைய நற்கூலி இறைவனிடம் உண்டு; இத்தகையவர்களுக்கு அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:112)
தன்னை அல்லாஹ்வுக்கு முழுமையாக அர்ப்பணம் செய்துகொண்ட எவனாவது, அல்லாஹ் பெயரிட்ட “முஸ்லிம்” என்ற பெயரை விட்டு சுயமாக ஒரு பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்வானா? என்பது அறிவாளிகளின் சிந்தனைக்கு உரியதாகும். அடுத்து,
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையயாருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.” (49:13)
என்ற இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி, தங்கள் பிரிவு பெயர்களை நியாயப்படுத்த முனைகின்றனர். இங்கும் அவர்கள் தவறே செய்கின்றனர். அல்லாஹ் தெளிவாக “நீங்கள் ஒருவரையயாருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு கிளைகள், கோத்திரங்களாக ஆக்கியிருக்கிறோம்” என்று தெளிவாகச் சொல்லுகிறான்.
“அப்துல்லாஹ்” என்ற மாத்திரத்தில், இன்னார் என்று அறிகிறோம். அப்துல்லாஹ் என்ற பெயர்களுடையவர்கள் அனைவரும் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கவாதிகள் என்று யாரும் சொல்லுவதில்லை. இன்ன கிளையைச் சார்ந்தவர்கள் வழி தவறியவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது. இன்ன கோத்திரத்தார் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கவாதிகள் என்று யாருக்கும் சொல்ல அதிகாரமில்லை.
“அப்துல்லாஹ்”க்களில், கிளைகளில் கோத்திரங்களில் நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்வோரும் உண்டு; தவறான வழி சென்று நரகம் செல்வோரும் உண்டு என்பதே அறி வாளிகள் சொல்லும் உண்மையாகும். ஆக அல்லாஹ் அனுமதித்துள்ள -அடையாளம் தெரிந்து கொள்ள வைக்கும் பெயர்களின் நிலை இதுவேயாகும். ஆனால் இவர்களாக உண்டாக்கிக் கொண்டிருக்கும் பிரிவுப் பெயர்களின் நிலை இதுவல்ல. ஒவ்வொரு பிரிவாரும் தாங்கள் தான் நேர்வழி நடப்பவர்கள் சுவர்க்கம் அடைபவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.
“கபுரு வணங்கிகள் மற்றும் வழிகெட்டவர்களிடமிருந்து தனித்துக் காட்டிக் கொள்ள மட்டும்தான் அந்தப் பெயர் பயன்படுத்தப்படவேண்டும்”
என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதே, அவர்கள் தங்களை நேர்வழி நடக்கும் கூட்டமென்று, பிரித்துக் காட்டவே, இப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றது. அதாவது இஸ்லாத்தில் அவர்கள் அல்லாத வேறு பிரிவினரும் இருக்கிறார்கள் என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இஸ்லாத்தில் பிரிவுகள் உண்டு என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அடிப் படையில் 42:14, 2:213, 6:159, 30:32, 45:17, 21:92,93, 22:52, 53:54 இந்த வசனங்கள் இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லையயன்றே திட்டவட்டமாக அறிவிக்கின்றன.
ஆனால் இன்று தம்மை ஹனஃபி என்றும் ஷாஃபி என்றும், கூறுவோர் குர்ஆன், ஹதீஃத் இரண்டும்தான் அடிப்படையன்று ஒப்புக்கொள்வதில்லை. மாறாக குர்ஆன் ஹதீஃத்களை நம்மால் விளங்க இயலாது என்று விலகிச் செல்வதைத்தான் காண்கிறோம். பெரியார்கள், முன்னோர்கள் சொன்னது மட்டும் போதும் என்பதே அவர்களின் கொள்கை. ஆனால் ஸலஃபி முஜாஹித், அஹ்லே ஹதீஃத் போன்ற பிரிவுகளில் உள்ள எவரும் குர்ஆன், ஹதீஃத் இரண்டும் தான் அடிப்படை என்பதை மறுக்கவில்லை. மறுக்காதது மட்டுமல்ல; குர்ஆன், ஹதீஃத் இரண்டையும் அடிப் படையாகக் கொள்ள மறுப்பவர்களைக் கண்டிக்கவும் செய்கின்றனர்.
அவர்களின் இந்தக் கூற்றை யாரும் மறுக்கவில்லை. அதே சமயம் அவர்களே, அவை பிரிவுப் பெயர்களே என்று ஒப்புக் கொண்டுள்ளதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.
செயல்பாடுகளில் அவர்கள் குர்ஆன், ஹதீஃத்படி நடந்தாலும், அல்லாஹுவோ, அவன் தூதரோ கற்றுத்தராத பெயர்களைக் கொண்டு தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். இப்பெயர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் முன்னோர்களால் இடப்பட்டு, அழைத்து வரப்பட்ட பெயர்களாகும். முன்னோர்களை நம்பி இப்பெயர்களையே அவர்களும் வைத்துக் கொள்வதால், தங்களை அழைத்துக் கொள்ளும் விஷயத்தில், குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் மாறு செய்கிறார்கள். எனவே தங்களை அழைத்துக் கொள்ளும் விஷயத்தில், பெரியார்கள், முன்னோர்கள் சொன்னது மட்டுமே போதும் என்பதே இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
சாதாரண சிறிய சிறிய மார்க்க காரியங்களையே வெள்ளை வெளேறென்று, இரவையும், பகலைப் போன்ற நிலையில் தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கிச் சென்றுள்ள, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே வெற்றி பெறும் கூட்டம் தங்களை இப்படித்தான் அழைத்துக் கொள்ள வேண்டுமென்பதை தெளிவுபடுத்தாமல் சென்றுவிட்டார்களா? அல்லாஹுவும் அவனது தூதரும், இது விஷயத்தில், அக்கறை இல்லாமல் இருந்து விட்டார் கள் என்று இவர்கள் எண்ணுகிறார்களா? அதிலும் குறிப்பாக, “எனது உம்மத் 73 பிரிவுகளாகப் பிரிவார்கள், அவர்களில் 72 பிரிவினர் நரகம் செல்வர், ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே (ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவினர்கள் இல்லை) சுவர்க்கம் செல்வர்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னவுடன், நபித் தோழர்கள் வெகு ஆவலுடன் அக்கூட்டத்தினர் யார் என்று கேட்ட அந்தச் சந்தர்ப்பத் திலும் (அவர்களுக்கென்று ஒரு பெயர் சூட்டாமல்), இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ, அவ்வாறே இருப்பவர்கள்” என்று கோடிட் டுக் காட்டுவதோடு, நிறுத்திக் கொண்டார்கள். இதிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கே வெற்றி பெறும் கூட்டத்திற்கு அப்படி ஒரு தனிப்பெயர் சூட்டிட, அனுமதி இல்லை என்பதும் தெளிவாகிறது. பிரிவுகள் சம்பந்தப்பட்ட ஆயத்துகளை தெளிந்த சிந்தனையோடு பார்ப்பவர்கள் இதனை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அதாவது அப்படியயாரு தனிப் பெயரை சூட்டிக் கொண்டால், இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கிய குற்றத்திற்கு ஆளாக வேண்டி வரும் அதற்கு நபிமார்களுக்கும் அனுமதி யில்லை என்பதே உண்மையாகும். குர்ஆன் 42:13 வசனம் இதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களே செய்யத் துணியாத ஒரு காரியத்தை நாம் செய்ய லாமா? என்பதை ஆழந்து சிந்தித்து விளங்கவும்.
வெற்றி பெறும் கூட்டத்திற்கு இஸ்லாம் அல்லாத பெயரை சூட்ட விரும்புகிறவர்கள். எனவே இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்ற இறை வசனத்திற்கு விரோதமாக, இஸ்லாத்தில் பிரிவினையைக் கற்பித்து இவர்களும் பிரிவினைவாதிகளாக ஆகிவிட்டார்கள். இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்ற அல்லாஹுவின் தெளிவான அறிவிப்புகளில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்குமானால், அல்லாஹுவின் அங்கீகாரம் இல்லாத பெயர்களை சூட்டி கொள்கிறவர்கள் அவர்களாகவே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நாம் முஸ்லிம்கள் என்று மட்டும் சொல்லிக்கொண்டு, இஸ்லாத்தில் நிலைத்து இருப்போம்” என்று முடிவுக்கே வரமுடியும்.
மேலும் மனிதர்கள் சரிகண்டு தேர்ந்தெடுத்திருக்கும் எந்தப் பெயரின் கீழும், மனித சமுதாயத்தை ஒருபோதும் ஒன்று சேர்க்க முடியாது. மனித அபிப்பிராயங்கள் என்று வரும்போது பல அபிப்பிராயங்கள் வருவதைத் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட மனித அபிப்பிராயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு வழிகெட்டு 72 பிரிவுகளில் ஆகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? யார் அந்த உத்திரவாதத்தை தரமுடியும்? எனவே மனித அபிப்பிராயங்கள் அனைத்தையும் விட்டு, அல்லாஹ் பெயரிட்ட “முஸ்லிம்” என்று பெயரின் கீழ் மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியிலேயே நாம் அனைவரும் அவசியம் ஈடுபட வேண்டும். மனித சமுதாயத்தின் ஐக்கியத்தையும், உலக சமாதான சகோதரத்துவ வாழ்க்கையையும் விரும்பும் எந்த நல்ல உள்ளமும் இதை ஏற்காமல் இருக்க முடியாது. இதற்கு மேலும் இது விஷயத்தில் தங்கள் கெளரவம், போட்டி, பொறாமை எண்ணங்கள் காரணமாக மாறுபடும் சகோதரர்களுக்கு இறுதியாக அல்லாஹுவின் இந்த எச்சரிக்கை யைக் கூறி முடிக்கிறோம்.
“எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)\
மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால் எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்துsவிடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார். (2:256)
**************************
அமல்களின் சிறப்புகள்….
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.
இன்ஷா அல்லாஹ், இந்த இதழில் அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் 390வது பக்கத்தின் இரண்டாவது பத்தியில் பிரசுரித்திருப்பதை ஆய்வு செய்வோம். அப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி களை கீழே அடுத்த பத்தியில் மட்டும் தந்துள்ளோம்.
எனினும் மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற ஒருவருடைய மனம் அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் நீங்கியதாக இருந்து, அந்நிலையில் அவர் அல்லாஹ்வை திக்ர் செய்து அழுபவராகவும் இருந்தால், அவரும் தனிமையில் இருந்து திக்ர் செய்பவர்களில் உள்ளவர்தான். ஏனெனில், அவர் தனித்திருப்பதும் கூட்டத்தில் இருப்பதும் இரண்டும் ஒன்றுதான். அல்லாஹ் அல்லாதவற்றை விட்டே அவர் மனம் நீங்கி இருக்கும்போது கூட்டத்தில் இருப்பது என்பது அவருக்கு என்ன இடையூறு செய்யப் போகிறது.
எமது ஆய்வு :
மேலே உள்ளவற்றை சாதாரணமாகப் படித்துவிட்டு பலர் சென்றுவிடுவர். வேறு சிலர், குழப்பம் அடையலாம். இன்னும் சிலருக்கு, மார்க்கம் அறியாதவனின் உளறலாகத் தெரியலாம். அதே சமயத்தில் இப்புத்தகத்தின் ஆதரவாளர்கள், இந்த புத்தக ஆசிரியர் ஒரு தத்துவ ஞானி என நினைத்து ஆசிரியரை மனதளவில் பாராட்டவும் செய்யலாம்.
இப்புத்தகம் என்ன கூற வருகிறது. சொல்லப்பட்ட செய்தியில் இஸ்லாம் பின் பற்றப்பட்டுள்ளதா என்பதை இப்போது ஆய்வு செய்வோம்.
அசி புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதில், முதல் வாக்கியத்தை படித்துப் பார்க்கும் போது, திக்ர் செய்யும் அந்த நபர் மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தாலும், அவரும் தனிமையில் இருந்து திக்ர் செய்பவர்களில் உள்ளவர் என்பதை அந்த வாக்கியம் கூறி இருக்கிறது. இதிலிருந்து திக்ர் செய்யும் அந்த நபர் மக்கள் இருக்கும் இடத்தில் திக்ர் செய்பவர் என்பதை புரிந்து கொள்ளலாம். அதாவது மக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு திக்ர் செய்வாராம். அதுவும் அல்லாஹ் அல்லாதவைகளை விட்டும் அவர் மனம் நீங்கி இருக்குமாம். அதாவது அல்லாஹ்வை மட்டும் நினைத்து திக்ர் செய்பவராம். இதிலிருந்து அந்த நபர், தம்முடன் இருக்கும் மக்களை மறந்து விடுவார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் நீங்கியதாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை மட்டும் நினைக்கக் கூடியவர் என்றால் அர்த்தம் என்ன? அல்லாஹ் அல்லாதவற்றில், மக் களும் அடக்கம்தானே? பிறகு எதற்கு அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் நீங்கியவர், மக்களுக்கு மத்தியில் வரவேண்டும்? அப்படி வந்துவிட்ட மனிதர், மக்களிடம் பேசவும் மாட்டாராம். மக்கள் இருப்பதையே மறந்து விடுவாராம். அதே நிலையில் அதாவது மக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு திக்ர் செய்வாராம். அப்படியானால், தாம் செய்யும் திக்ரை இவர் மக்களுக்கு காண்பிக்க வந்த வெளிப்பகட்டுக்காரரா? அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் நீங்கியவர், வீட்டில் தனிமையில் இருந்து கொண்டு திக்ர் செய்ய வேண்டியதுதானே? எதற்கு மக்களிடம் வருகிறார்?
பத்து பதினைந்து பேருடன் நாமும் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அத்துனை நபர்களும் ஏதோதோ வேலைகள் செய்து கொண்டு இருப்பார்கள் அல்லது எதையாவது பேசிக் கொண்டிருப்பார்கள் அல்லது மார்க்க சொற்பொழிவே நடந்து கொண்டும் இருக்கலாம். எங்கிருந்தோ ஒரு மனிதர் வருகிறார். நம்முடன் உட்கார்ந்து கொள்கிறார். நம்மிடம் எதுவும் பேசவில்லை. திக்ர் செய்ய ஆரம்பித்து விடுகிறார் என்றால், நாமும் நம்முடன் இருக்கும் அத்தனைப் பேரும் என்ன நினைப்போம்? இவன் எதற்கு இங்கே வந்தான்? இங்கே வந்து திக்ர் செய்து கொண்டு இருக்கிறானே. லூசு பயலா இவன்? என்றுதானே நினைப்போம். ஆக மென்ட்டல் தனமாக இருக்கும்படி தமது ஆதரவாளர்களுக்கு இப்புத்தகம் உபதேசிக்கிறது என்ற முடிவுக்கே எவரும் வரமுடியும்.
அந்தப் பத்து பதினைந்து நபர்களும், அந்த நபர் திக்ர் செய்வதைப் பார்க்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதாவது அந்த நபர் திக்ர் செய்து கொண்டே இருப்பார். பத்து பதினைந்து நபர்களும் அவரவர் வேலைகளை அவரவர் செய்து கொண்டே இருப்பார்கள் அல்லது எதையேனும் பேசிக்கொண்டு இருப்பார்கள். தாம் திக்ர் செய்வதை அவர்கள் பார்க்காமல் இருக்கிறார்களே என்பதற்காக அசி புத்தகம் நரித் தந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மார்க்கத்திற்கு எதிரான கருத்துக்களை அவிழ்த்து விடுவதைப் பாருங்கள்.
அல்லாஹ்வை திக்ர் செய்யும் அந்த நபர், திக்ர் செய்வதோடில்லாமல் அழுகவும் செய்கிறார். தங்களோடு இருக்கும் ஒரு மனிதர் அழும்போது அந்த பத்து பதினைந்து நபர் களும், அந்த நபரை பார்க்காமல் இருக்க முடியுமா? அவரவரின் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அல்லது அவரவரின் பேச்சுக்களைப் பாதியிலே விட்டுவிட்டு வந்து விடுவார்கள் அல்லவா? அதாவது இப்போது மக்களின் மனதை தன் பக்கம் அந்த நபர் திருப்பி விட்டார்.
அந்த பத்து பதினைந்து நபர்களில் மார்க்க அறிவு இல்லாதவர்கள் அந்த நபரைப் பார்த்து என்ன செய்வார்கள்? “லா இலாஹா இல்லல்லாஹ்” என்று திக்ர் செய்து கொண்டே அழுகிறாரே என்று எண்ணி அந்த நபரின் பக்தியை மெச்சுவார்கள் இல்லையா? மற்றவைகளை மறந்து விட்டு, அல்லாஹ்வை மட்டும் திக்ர் செய்யும் அந்த நபருக்கு இப்போது முழு மன திருப்தி ஏற்பட்டிருக்கும் அல்லவா? மக்களுக்கு மத்தியில் ஒரு நபரை திக்ர் செய்ய வைத்து, மக்களின் கவனத்தை திக்ர் செய்யும் அந்த நபர் மீது திசை திருப்ப வைத்த அசி புத்தகம், நரித்தந்திரம் தானே செய்திருக்கிறது?
அது மட்டும் அல்லாமல், இப்படி செய்ய வைத்ததன் மூலம் இப்படி திக்ர் செய்த தமது ஆதரவாளர்களை வெளிப்பகட்டுக் காரர்களாகவும் மாற்றிவிட்டது அல்லவா? மார்க்கம் தெரிந்தவர்கள் இவ்வாறு அவர் களிடம் கூறி விட்டால், “ஈடுபாட்டுடன் திக்ர் செய்யும்போது அல்லாஹ்வின் அச்சம் ஏற்பட்டு, அதன் காரணமாக அழுது கொண்டு திக்ர் செய்பவர்களை “வெளிப்பகட்டுக்காரர்கள்” என்று குற்றம் சாட்டுவது நியாயமா என்றும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டும் இல்லாமல், “அல்லாஹ்வின் நினைவில் அழுது கொண்டு திக்ர் செய்வதை” மார்க்கம் அனுமதிக்கிறது என்று பொய்யையும் தைரியமாகக் கூறி விடுவார்கள்.
அல்லாஹ் அல்லாதவற்றை மறக்க வேண்டுமாம். அந்த நிலையில் மக்களிடம் இருக்க வேண்டுமாம். மக்களையும் மறக்க வேண்டுமாம். அந்த மக்கள் மத்தியில் அல்லாஹ்வை மட்டும் நினைத்து திக்ர் செய்ய வேண்டுமாம், அழுக வேண்டுமாம். இப்படி செய்பவர் தனிமையில் இருந்து திக்ர் செய்பவர்களில் உள்ளவராம்.
இதைப் படிப்பவரும், படிப்பதைக் கேட்பதற்காகவென்றே அவரிடம் வந்து உட்கார்ந்து இருப்பவர்களும் அதாவது அப்புத்தகத்தின் ஆதரவாளர்கள் அனைவருமே அப்புத்தகத்தை ஆதரிக்கும் மதரசாக்கள் உட்பட, அவர்கள் எல்லோரையும் வடிகட்டிய முட்டாள்கள் என்று நினைத்துத்தான் இப்படிப்பட்ட புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.
அடுத்த வேடிக்கையைப் பாருங்கள். புதிய கண்டுபிடிப்பு ஒன்றை இப்புத்தகம் வெளியிட்டிருப்பதை கவனியுங்கள்.
“தனித்து இருப்பதும், கூட்டத்தில் இருப்பதும் இரண்டும் ஒன்றுதானாம்”.
ஆஹா! என்ன தத்துவம்!! இந்த கண்டுபிடிப்பைக் கூறிவிட்டு, அப்புத்தகம் தமக் குத்தாமே பீற்றிக்கொள்ளும் வாசகத்தைப் பாருங்கள். “அல்லாஹ் அல்லாதவற்றை விட்டே அவர் மனம் நீங்கி இருக்கும் போது கூட்டத்தில் இருப்பது என்பது அவருக்கு என்ன இடையூறு செய்யப்போகிறது”.
அல்லாஹ் அல்லாதவற்றை நினைப்பதை விட்டு, அல்லாஹ்வை மட்டும் நினைத்திருப்பது சாத்தியமற்றது என்பதை கடந்த செப்டம்பர் இதழில் ஹன்ழலா(ரழி) அவர்களின் ஹதீஃதைக் குறிப்பிட்டு, எப்போதும் ஒரே மாதிரியாக மனிதர்களால் இருக்க முடியாது என்பதை நபி(ஸல்) அவர்கள், “ஹன்ழலா(இப்படிச்) சில நேரம், (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறி தெளிவுபடுத்தி விட்டதிலிருந்து அறிந்தோம்.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் போத னைகளை வேண்டுமென்றே புறக்கணித்து விட்டு, “அல்லாஹ் அல்லாதவற்றை விட்டே அவர் மனம் நீங்கி இருக்கும்போது கூட்டத்தில் இருப்பது என்பது அவருக்கு என்ன இடையூறு செய்யப்போகிறது” என்று கேட்கிறது அசி புத்தகம்.
இதைப் படித்து விட்டு ஆதரவாளர்கள் ஆஹா! ஓஹோ! என்று புகழ்ந்து கொள்வார்கள். இதை தஃலீமில் படிக்கும்போது சிலதுகள் உச்சிக் கொட்டி தங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்ளும். கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணிபுரிபவர்கள், இதைக் கேட்டு தங்களது தலையை வலது இடது புறம் ஆட்டிக் கொண்டு உச்சிக்கொட்டியதைப் பார்த்தபோது, துளியும் சிந்தனை இல்லாமல் தப்லீக் ஜமாஅத் மீது குருட்டு பக்தி கொண்டிருப்பதை எண்ணி எம்மால் வேதனை அடையத்தான் முடிந்தது. எடுத்து சொன்னால் கேட்கக் கூடிய நிலையில் இல்லாத மூளை சலவை செய்யப்பட்ட நபர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
திக்ர் செய்து அழுபவர் எப்போது அழவேண்டும், அதாவது தனித்திருந்து திக்ர் செய்யும் பொழுதா அல்லது கூட்டத்தில் இருந்து திக்ர் செய்யும் பொழுதா என்பதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தெரிவித்திருப்பதை கீழுள்ள ஹதீஃதிலிருந்து அறிந்து கொள்ளுங்கள்.
ரசூல்(ஸல்) அவர்கள் அருளியதை செவியுற்றதாக, அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹுத்த ஆலாவுடைய நிழலன்றி வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்து) நாளில் அல்லாஹுத்த ஆலா தன்னுடைய (ரஹ்மத்தின்) நிழலில் ஏழு நபர்களுக்கு இடமளிக்கிறான்.
- நீதிமானான மன்னன்,
- வாலிபத்தில் அல்லாஹ்வை வணங்குகின்ற வாலிபன்,
- மஸ்ஜிதோடு மனம் தொடர்புள்ள மனிதன்,
- அல்லாஹ்விற்காகவே நட்பு கொண்ட இரு மனிதர்கள், அவர்கள் கூடுவதும், பிரிவதும், அல்லாஹ்வுக்காகவே இருக்கும்,
- அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (தவறான செயலுக்கு) அழைத்தும், நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன்” என்று கூறி விலகிக் கொண்ட மனிதன்,
- வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாத முறையில் மறைத்து தர்மம் செய்கிற மனிதன்,
- தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்தவன் ஆகியோர் ஆவர். (நூல்: புகாரி: ஹதீஃத் எண். 1423, முஸ்லிம் ஹதீஃத் எண்: 1869)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஃதில் எண் 7ஐப் பாருங்கள். “தனித்திருந்து அல் லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்தவன்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
“தனித்திருந்து” திக்ர் செய்பவருக்கு மறுமையில் கிடைக்க இருக்கும் அந்தஸ்தாக நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறிய பின்பும், மக்கள் மத்தியில் திக்ர் செய்யும்படி அறிவுரை கூறும் அசி புத்தகம், இஸ்லாத்தில் இல்லாததைக் கூறி மக்களை வழிகெடுக்கிறது என்பதை அறிவோமாக.
எனவே, முஸ்லிம்களே! தப்லிக் ஜமாஅத்தில் இணைந்து குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் மாற்றமாக செயல்பட்டு மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறோம். (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)
**************************
குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?
ஜி. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை
குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது ஏன்?
கேள்வி : இறைவன் அனைத்தையும் அறிந்த வன் என்றால் அவன் ஏன் முந்தைய இறை நெறிநூல்களைப் பாதுகாக்கவில்லை. எதற் காக ஒரு நெறிநூலை இறக்கி பின்னர் அதை அழியவிட்டு அதன் பின்னர் மற்றொரு நெறிநூலை இறக்க வேண்டும். அனைத்துக் காலத்திற்கும் ஏற்ற வகையில் ஒரு நெறி நூலை வடிவமைத்து இந்த காலத்தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள். இந்தக் காலத் தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு அறிவித்திருக்கலாமே! என்பது கேள்வியின் முக்கியப் பகுதி.
சில அடிப்படைகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது மக்களை நம்பிக்கை என்ற வட்டத்தில் மட்டும் நிறுத்தி எது பற்றியும் சிந்திக்காதே. மாற்றுக் கருத்துக் கொள்ளாதே. கேள்வி கேட்காதே, என்று முடக்கும் ஒரு மார்க்கம் அல்ல. சிந்தித்துப்பார், கேள்வி கேள், விவாதித்துத் தெளிவு பெறு என்று அழைப்பு விடும் ஒரு மார்க்கமாகும். இந்த இஸ்லாமியப் பார்வையை கவனத்தில் வைத்துக் கொண்டு கேள்வியை அணுகுவோம்.
மனித இனம் பூமியில் வாழத்துவங்கிய காலம் தொட்டே முரண்பாடுகள் தோன்றத் துவங்கிவிட்டன. மனித அறிவின் பலவீனங்கள் முரண்பாடுகள் தோன்றுவதற்கும், அது வலுபெறுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய முரண்பாடுகளை நீக்குவதற்கும், மனித அறிவால் தெளிவு பெற முடியாதவற்றிற்கு வழிகாட்டுவதற்கும் இறைவனின் வழிகாட்டல் தேவைப்பட்டது. அந்த வழிகாட்டலை அவன் இறைத்தூதர்களுக்கு வழங்கி நீங்கள் வாழ்ந்துகாட்டுங்கள். அதுதான் பிறருக்கு மாடல் என்ற வழியை ஏற்படுத்தினான். இறைத் தூதர்களுக்கு எது செய்தியாக அறிவிக்கப்பட்டதோ அது அவர்களுக்கு வாழ்க்கையாக அமைந்தது.
ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு செய்தியை அறிவிக்கும்போது சிந்தியுங்கள். இந்த செய்தியை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் சொந்த விருப்பத்தைப் பொருத்தது. ஏற்றீர்கள் என்றால் மரணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை இப்படி இருக்கும். ஏற்கவில்லை என்றால் நீங்கள் மரணத்திற்கு பிறகு இந்த வாழ்க்கையை சந்திப்பீர்கள் என்ற அடிப்படையில் தான் இறைச் செய்திகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டன.
அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த சுதந்திரத்தை இறைவன் மிக நீண்டக் காலம் முழுமையாக வழங்கினான். இந்த சுதந்திரம் அவர்களால் தவறாகவே பயன்படுத்தப் பட்டது. எந்த அளவிற்கென்றால் இறைவனின் நெறிநூலை தங்கள் விருப்பத்திற்கு நாங்கள் மாற்றிக் கொள்வோம் என்ற அளவிற்கு அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தினார்கள். இதற்கு பெரும் ஆராய்ச்சித் தேவையில்லை. கண் முன் கிறிஸ்தவர்கள் கைகளில் இருக்கும் பைபிள் இதற்கு தெளிவான சான்றாகும். இயேசு கொண்டு வந்து போதித்த சுவிசேஷங்களுக்கும் இன்றைய கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் பைபிளுக்கும் தொடர்பில்லை எனும் அளவிற்கு அந்த மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி நெறிநூலை மாற்றினார்கள். பவுல் என்பவர் இதில் பெரும் பங்கு வகித்தார்.
மனிதர்களுக்கு இறைவன் சுய சுதந்திரத்தை வழங்காமல் சட்டங்களை-நெறிநூலை அவர்கள் மீது திணித்திருந்தால் அது அவர்களால் மாசுப்படுத்தப்படாமல் தான் இருந்திருக்கும். ஆனால் இறைவன் அதை ஒருபோதும் விரும்பவில்லை. அவனை ஏற் பதிலும், அவன் சட்டங்களை ஏற்பதிலும், அவன் நெறிநூலை பாதுகாப்பதிலும் அவர் களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திரம் பாழ்படுத்தப்படும் போது என்ன கெடுதிகள் ஏற்படுமோ, அது இறுதி நூல் அல்லாத மற்ற இறை நெறி நூல்களுக்கும் ஏற் பட்டது பல நெறிநூல்கள் வருவதற்கு இது தான் அடிப்படைக் காரணமாக இருந்தது.
எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்க வில்லை. இதை ஏற்க மாட்டேன் என்பதற்கும், எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்கவில்லை அதனால் நான் இந்தக் கொள்கையை மாற்றுவேன் என்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. முந்தைய சமுதாயம் குறிப்பாக அதன் தலைவர்கள் பிந்தையதை செயல்படுத்தினார்கள்.
முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்ட நெறிநூல் ஏன் பாதுகாக்கப்பட்டது. அப்படியானால் முஹம்மதை ஏற்றுக் கொண்ட வர்களுக்கு சுய சுதந்திரம் வழங்கப்பட வில்லையா? நெறிநூல் வசனங்கள் திணிக்கப்பட்டதா என்ற குறுக்கு விசாரணை இங்கு வரலாம். இறைவன் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதியில் அவன் எந்த மாற்றமும் செய்துக் கொள்ள மாட்டான். மனிதர்களுக்கான சுய சுதந்திரம் என்பது முதல் மனிதருக்கு எப்படி வழங்கப்பட்டதோ அதே சுதந்திரம் உலகின் கடைசி மனிதருக்கும் உண்டு. இறைவன் அதை நிறைவாக வழங்கியுள்ளான். முந்தைய மக் களுக்கு என்ன அறிவிப்பு வழங்கப்பட்டதோ அதே அறிவிப்பு இன்றைக்கு குர்ஆனிலும் உண்டு. அதுதான் இதை விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம் என்பதாகும்.
முஹம்மத் அவர்கள் சந்தித்த அரேபிய மக்களுக்கு இறை நெறிநூல்களை மாற்றும் மனப்பான்மை இல்லை. அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த முதல் நெறி நூல் இதுதான். (கடைசி நெறிநூலும் இதுதான்) இறைவன் பிற பல்வேறு சமுதாயங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இறைத் தூதர்களை அனுப்பி நெறிநூல்களை வழங்கி கெளரவித்தபோதும் அவர்கள் அதை பாழ்படுத்தினார்கள். ஆனால் அன்றைய அரேபியர்கள் தமது சமுதாயத்திற்கு இறை நெறிநூல் வந்துள்ளது என்றவுடன் அதைப் பாழ்படுத்த துணியவில்லை.
“விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம்” என்ற சுதந்திரத்தில் முஹம்மத் அவர்கள் கொண்டு வந்த கொள்கையை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அதை நிராகரித்து வெளியில் நின்றார்களே தவிர இறை நெறிநூலை மாற்றிக் கொள்வோம் என்ற முயற்சியில் யாரும் இறங்கவில்லை. முஹம்மத் அவர்கள் இறைத்தூதராக இருக்க முடியுமா? என்ற சந்தேகம் சிலருக்கு அன்றைய பொழுதுகளில் தோன்றிய போது அவரை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் அசைக்க முடியாத ஒரே ஆதாரம் குர்ஆன் தான். எனவே அவர் விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டால் இதுபோன்ற ஒரு நெறிநூலைக் கொண்டு வாருங்கள் என்று முதலில் அவர்களுக்கு சவால் விடப்பட்டது. பின்னர் சவாலை மிக இலகுபடுத்தி முழு நெறிநூலைக் கொண்டுவர முடியாவிட்டாலும் பரவாயில்லை இதுபோன்று சில வசனங்களையாவது கொண்டுவர முயற்சியுங்கள் என்று சொல்லப்பட்டு முஹம்மத் அவர்களின் இறைத்தூதுத்துவம் நிரூபிக்கப்பட்டது.
ஒரு நெறிநூல் மாசு படாமல் பாதுகாக்கப்படுவதற்கும், பாழ்பட்டுப் போவதற்கும் அந்த நெறிநூல் வழங்கப்பட்ட மக்களே பெரும் பங்கு வகிக்கின்றார்கள் என்ற உண் மையை புரிந்து கொண்ட எவரும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக அரேபிய மக்களை கருத்தில் கொள்வார்கள்.
பொதுவாகவே பிற நெறிநூல்களுக்கும், குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் பிற நெறிநூல்கள் அந்தந்தப் பகுதி அல்லது மொழி பேசும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் குர் ஆன் முழு உலகுக்கும் இறைச் செய்தியை எத்தி வைக்கக் கூடிய பொது நெறிநூலாகும் அதனால் அதன் பாதுகாப்புக்கு கூடுதல் கவ னம் தேவைப்பட்டது. அந்தப் பொறுப்பை இறைவன் தன் வசம் எடுத்துக் கொண்டான். “இந்தநெறிநூலை நாமே இறக்கினோம் நாமே அதை பாதுகாப்போம்” (குர்ஆன்) முந்தைய நெறிநூல்களுக்கும், குர்ஆனுக்கும் வித்தியாசங்கள் இப்படித் துவங்குகின்றன.
முந்தைய நெறிநூல்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாமே என்ற சந்தேகங்கள் தோன்றலாம். “புதுப்பித்தல்” என்பது நெருக்கடியையும், புதிதாக உருவாக்குதல் என்பது விசாலத்தையும் குறிப்பதாகும். ஒரு வீட்டை புதுப்பிப்பதற்கும், அதை இடித்து விட்டு விசாலமாக புதிதாக கட்டுவதற்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு முன் வைக்கலாம்.
முந்தைய நெறிநூல்கள் பகுதிக்குட்பட்டதாக இருந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டோம். குர்ஆன், பகுதி என்ற அந்த எல்லை நீக்கப்பட்டு முழு உலகம் என்று விசாலப்படுத்தப்பட்ட தாகியது.
சட்டங்களில் மாற்றம் :
விசாலமாக இறைவன் குர்ஆனை கொண்டு வந்ததற்கு காரணம் முந்தைய நெறிநூல்களில் இருந்த சட்ட நெருக்கடிகளையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு கொடுக்கப்பட்ட சட்டம் பொது சட்டமாக ஆக வேண்டுமானால் அதற்கு மிகப் பொருத்தமான காரணங்கள் இருக்க வேண்டும். சீக்கியர்கள் குறுவாள் வைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு பகுதிக்கான அல்லது ஒரு இனத்தவருக்கான சட்டம். இதை உலகின் பொது சட்டமாக ஆக்க வேண்டும் என்று கூற முடியாது. அவ்வளவு ஏன் இந்தியாவிற்குள்ளேயே இதை பொது சட்டமாக கொண்டு வாருங்கள் என்று சொல்ல முடியாது. சொல்பவர்கள் நிச்சயம் சட்டத்தையும், கலாச்சாரத்தையும், இடங்களையும் பற்றிய அறிவில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
காலகட்டத்திற்கு ஏற்ப பல சட்டங்களை முந்தைய நெறிநூல்களில் வகுத்த இறைவன் காலகட்டங்களில், சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டவுடன் அதற்கு ஏற்ப சட்டங்களை கொண்டு வந்தான்.
இறைவனுக்கு பிந்தைய காலம் பற்றிய அறிவில்லையா அவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் பிந்தைய காலகட்டத் திற்குரியவற்றையும் முன்னரே கூறி இருக்கலாமே என்ற கேள்வி அவ்வப்போது பலரால் முன் வைக்கப்படுகின்றது.
தன்னை சிந்தனைவாதி என்று எண்ணிக் கொள்பவர்கள் சற்றும் பொருத்தமில்லாத கேள்விகளை எப்படித்தான் வைக்கிறார்களோ என்பது உண்மையில் வருந்தத் தக்கதுதான்.
ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு மென்மையான உணவுகளை கொடுக்கிறாள் என்றால் அவளுக்கு அந்த குழந்தை வளர்ந்த பிறகு கடின உணவு உண்ணும் என்ற அறிவு இல்லை என்று யாரும் கூறுவார்களா? பிற்காலத்தில் குழந்தை உண்ணும் என்பதற்காக அதன் ஒரு வயதிலேயே எல்லா உணவுகளையும் வாங்கி பாதுகாத்து வைப்பாளா?
நிச்சயம் அந்த தாய்க்கு தன் குழந்தை பிற்காலத்தில் என்ன உணவு உண்ணும் என் பது தெரியும் ஆனாலும் இன்றைக்கு அந்த உணவை கொடுக்கவும் மாட்டாள். அதை வாங்கி பாதுகாக்கவும் மாட்டாள், இறைவனுக்கு அனைத்தும் தெரிந்தாலும் அவன் சூழ்நிலைக்கு தகுந்த சட்டங்களைத்தான் மக்களுக்கு வழங்குவான். நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை வழங்கி சடங்காக வைத்துக் கொள்ள வழிகாட்டமாட்டான்.
எனவே,
v முந்தைய மக்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அவர்களால் பாழ்படுத்தப்பட்டதாலும்,
v முந்தைய நெறிநூல்கள் சில பகுதிகள், சில மக்கள் என்று குறிப்பிட்ட நிலையை கொண்டிருந்தாலும்,
v அரேபியர்கள் இறை நெறிநூலை பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள் என்பதாலும், குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?
v குர்ஆன் முழு உலகிற்கும் பொது சொத்தாக விசாலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்ததாலும்,
v சூழ்நிலைகளும், காலகட்டங்களும் பெருமளவு மாறி விட்டதாலும்,
v முந்தைய நெறிநூல்கள் முடிவுக்கு வந்து புது நெறிநூலாகவும், உலக நெறிநூலாகவும் இறுதி நெறிநூலாகவும் குர்ஆனை இறைவன் வெளிப்படுத்தி அதை பாதுகாத்து வருகிறான்.
**************************
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்
M.T.M. முஜீபுதீன், இலங்கை
2019 செப்டம்பர் மாத தொடர்ச்சி…..
ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் தருகாபன் (கஅபா ஆலயம்) மனிதனுடையதல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக. அது நீ சொர்க்கம் செல்ல பரிந்துரை செய்யும். (ரிக் : 10:155:3)
ஆதி இந்திய வேதங்களிலும் கஅபா இறை இல்லம் பற்றி விவரிக்கப்படுகிறது. இன்றும் சில இந்திய மக்கள் கஅபா போன்ற உருவங்களை வைத்து வலம் வருவதைக் காண முடிகின்றது. ஆனால் பல தெய்வங்களை கற்பனை செய்து வணங்குவது மடமையானதும், பாவமானதும் ஆகும். மேலும் அல்குர்ஆன் ஆதி இறை இல்லம் பற்றிக் கூறுவதை கவனியுங்கள்.
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணை வைக்காதீர். என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜுது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக)
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள். (எனக் கூறினோம்)
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாலுகால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்) எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும். (அல்குர்ஆன்: 22:26-29)
ஹஜ்ஜுடைய கிரிகைகள் ஓர் இறைவனை வணங்கி வழிபட வழிகாட்டுகின்றது. விக்ரகங்களையும், படைப்புகளையும் வணங்கி வழிபடுவது பாவமானதும், அசுத்தமானதுமாகும் என வழிகாட்டுகின்றது. ஹஜ் கிரிகையின் போது ஹாஜிகள் மொழிகின்ற பிரார்த்தனையை, தல்பியாவையும் அதன் உட்பொருளையும் கவனியுங்கள். அதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்படிய வேண்டும் என்ற ஏகத்துவ நாதம் ஒலிப்பதைக் காணலாம். கவனியுங்கள்.
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல ஹம்த வந்தி அமத்த லக்க, வல்முல்க்க, லா ஷரீக்க லக்” என்பது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்ன “தல்பியா” ஆகும்.
பொருள் : இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமிலர். (முஸ்லிம்: 2206)
ஹஜ்ஜின் போது ஹாஜிகள் இஹ்ராம் கட்டும்போதும், பல நிலைகளிலும் தல்பியாச் சொல்வார்கள். ஆகவே ஹஜ் அல்லாஹ்வை முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ வழிகாட்டும் ஓர் வணக்க வழிபாடாகும். ஹஜ் துறவு வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டவில்லை. அது தூய்மையான இல்லற வாழ்க்கைக்கும் மறுமையின் வெற்றிக்கும் வழிகாட்டுகிறது.
ஹஜ்ஜின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காட்டித்தந்த எல்லைகளில் ஹஜ் செய்வதற்காக உறுதிமொழி எடுத்து, ஹஜ் யாத்ரிகர்கள் அணிய வேண்டிய எளிமையான வெண்மையான ஆடையை அணிந்து கொண்டவர்களாக ஹஜ் கடமையை ஆரம்பிக்க வேண்டும். இக்கடமையின் போது புனித கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருதல், ஸஃபா- மர்வா மலைக் குன்றுகளுக்கிடையே ஓடுதல் (சயீ) செய்தல், மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய புனிதத் தலங்களில் தங்கி வழிபாடு செய்தல். மீண்டும் மினாவில் தங்குதல் அந்த நாட்களில் உரிய இடங்களில் கல்லெறிதல், தலைமுடி நீக்குதல், குர்பானி கொடுத்தல் போன்ற கிரியைகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளின் உள்ளடக்கம் ஹஜ் ஆகும். அத்துடன் உம்ராவுக்கு கால எல்லை குறிப்பிடாவிட்டாலும், ஹஜ்ஜின் போது உம்ரா செய்வது நபி வழியாகும்.
உம்ரா என்னும் சொல்லுக்கு “சந்தித்தல்” என்பது சொற்பொருள் ஆகும். அதில் புனித கஅபா சென்று அதைச் சுற்றி (தவாஃப்) வருவதும், ஸஃபா- மர்வா மலைக் குன்றுகளுக்கிடையில் ஓடுதல் (சயீ) செய்தல் என்பன உம்ரா வழிபாட்டில் இடம் பெறும் செயற் பாடுகள் ஆகும்.
ஹஜ் கடமை முஹம்மது(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட வணக்க வழிபாடு எனக் கருதிவிடாதீர்கள். இக்கடமை இப்ராஹீம்(அலை) அவர்கள் காலம் முதல் செயற்பாட்டில் இருந்து வருகின்றது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவ்வணக்க வழிபாட்டில் மூட நம்பிக்கை அறியாமை சார்ந்த மூட சடங்கு சம்பிர தாயங்கள் ஷைத்தானின் தூண்டுதலினால் உட்புகுத்தப்பட்டன. இதனால் கஅபா ஆலயத்தில் விக்கிரக ஆராதனையும், மூட நம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்களும் உட்புகுந்தன. இதனால் மக்கள் கஅபாவை நிர்வாணமாக வலம் வந்தனர். சிலை வணக்க வழிபாடுகள் காணப்பட்டது. துறவறம் சார்ந்த மூடப் பழக்கங்கள் ஹஜ் வணக்க வழிபாடாக மாறி இருந்தது. ஆனால் அல்லாஹ்வின் அருளினால் அல்குர்ஆன் அருளப்பட்டது. சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கமைய தூய ஹஜ் கடமை அல்லாஹ்வின் நோக்கின்படி சீரமைக்கப்பட்டது. ஆகவே ஹஜ் கடமை ஓர் இறைவனை வணங்கி வழிபடுவதற்காக இறை நம்பிக்கையாளர்களில் சக்தி பெற்றவர்களை புனித மக்காவில் ஒன்று கூட்டி வழிகாட்டும் ஓர் வணக்க வழிபாடாகும். இது ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் நடைபெறும் வணக்கமாகும்.
ஹஜ் ஒருபோதும் துறவறத்திற்கு வழிகாட்டவில்லை. இம்மை மறுமை வெற்றிக்கே வழிகாட்டுகின்றது. ஹஜ் ஓர் தூய்மையான வணக்க வழிபாடாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவதை கவனியுங்கள்.
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம்மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் கைரானது (நன்மையானது) தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும். எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்( அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலனை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத் திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள் (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜு கிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையாரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப் போல், இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள். மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகின்றார்கள் இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா! எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
இவ்வாறு, (இம்மை, மறுமையிரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத் தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக் கியங்கள் உண்டு தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் : 2:197-202)
ஹஜ் கடமையை நபி(ஸல்) காட்டிய முறையில் நிறைவு செய்வது கொண்டு இம் மையிலும் மறுமையிலும் நன்மையை பெற்றுக் கொள்ள முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள்.
மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், யார் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்” இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார். (புகாரி: 1819)
ஆகவே ஹஜ் கடமை நம்மை தீமைகளிலிருந்து பாதுகாக்கின்றது. மறுமையை ஞாபகமூட்டுகின்றது இறை அச்சத்தை அதிகரிக்கின்றது. அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபட வழிகாட்டுகின்றது. இறுதி ஹஜ்ஜின் போது நபி(ஸல்) அவர்கள் அரபா பேருரையின்போதும் 10ம் நாள் மினாவிலும் நிகழ்த்திய உரைகளை கவனியுங்கள்.
ஹிஜ்ரி 10ஆவது ஆண்டு துல்ஹஜ் மாதம் நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். இதனை விடை பெறும் ஹஜ்ஜு என அழைப்பர். அந்த ஹஜ்ஜில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு உரையாற்றினார்கள். (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)
**************************
இஸ்லாத்தின் பார்வையில் – தீபாவளியும், முஸ்லிம்களும்…
M.J. சாதிக், காரமடை, கோவை.
இஸ்லாம் பல்வேறு காரணங்களால் மற்ற மதங்களை விட்டு வேறுபட்டு நிற்கிறது. இஸ்லாமியர்கள் அதை விளங்கா மல் பெரும்பாலான வியங்களில் மாற்று மதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
தீபாவளிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையயன்றாலும் போலித் தனமான காரணங்களை கூறி, தங்களையே ஏமாற்றிக்கொண்டு (குர்ஆன், ஹதீஃதையும் மறுத்துவிட்டு) மறுமை வாழ்வை பாழாக்குகிறார்கள்.
நரகாசுரன் என்ற அசுரன் அழிக்கப்பட்டதற்காக அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத் தத்தான் அவர்கள் பட்டாசு வெடிக்கிறார்கள். எனவே இது இந்து மத நம்பிக்கை அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. பிற மதக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் பின் பற்றுவதை நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
v “யார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் அவர்களையே சேர்ந்தவர்கள்” என, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் : 3512)
வீணான செலவு :
v ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எப்படி செலவு செய்தான்? என்பதற்கு பதில் அளிக்காதவரை மறுமையில் அவன் இரு கால்களும் நகராது” என, நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள். (புகாரி : 893)
நம்முடைய வீட்டில் வீணாக ஒரு மின் விசிறி சுற்றினால் கூட அதைக் கண்டதும் நாம் சம்பாதித்த காசை நாமே கரிக்கிறோம் என்பதை உணர முடிகிறது.
குர்ஆன் இதைப் பற்றி கூறுகையில்….
v உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள், வீண் விரயம் செய்ப வர்களை அல்லாஹ் விரும்பமாட்டான். (7:31)
v வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான். (17:27)
படைப்பினங்களுக்கு நாம் செய்யும் தீமை:
v ஒரு பூனையை துன்புறுத்தியதற்காக வேண்டி ஒரு பெண்மணி நரகத்திற்கு தூக்கி எறியப்பட்டாள். (புகாரி:745) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நாம் வெடி வெடிப்பதினால் எறும்பு முதல் யானைவரை உள்ள அனைத்து உயிரினங் களுக்கும் துன்பத்தை தருகிறோம். இனியும் நாம் இதை தவிர்த்து கொள்ளவில்லை என் றால், இதற்கும் சேர்த்து தண்டனை பெற வேண்டிய நிலை ஏற்படும்.
பெற்றோர்களே பிள்ளைகளுக்கு செய்யும் தீமை!
ஒரு பிள்ளையை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களே, பிள்ளைகளை தவறான செயலுக்கு தள்ளுவது மிகவும் கொடுமையாகும். பிள்ளைகளின் துணி தீயில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிள்ளைகளை விளக்கின் அருகில் கூட செல்ல அனுமிக்காத நாம், அவர்கள் கையி லேயே நெருப்பை கொடுத்து விளையாடச் சொல்கிறோம்.
v நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவன் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளி யவான், அதைப் பற்றி அவன் விசாரிக்கப் படுவான். ஒரு பெண் தன் வீட்டிற்கு பொறுப்பாளியாவாள். அதைப் பற்றி அவள் கேட்கப்படுவாள். அறிவிப்பவர் : உமர்(ரழி) அவர்கள் : புகாரி : 2409
நம்முடைய பிள்ளைகளைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரிடமும் இறைவன் கேள்வி கேட்கப்படும்போது என்ன பதிலை வைத்திருக்கின்றீர்கள்?
சிறு வயதில் நாம் கற்றுக்கொடுக்கும் இத்தீமை அவர்கள் பெரியவர்களானதற்கு பிறகு அவர்களும் செய்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து, வம்சாவளியாக தொடரும் அவலமும் முன்மாதிரி யைக் காட்டிய பாவமும் பெற்றோருக்கு வந்து சேரும். இதனால் நம்முடைய மரணத் திற்குப் பிறகும் இப்பாவத்தில் ஒரு பங்கு நம்மிடம் சேர்ந்து கொண்டு வரும்.
அல்லாஹ்வின் எச்சரிக்கை :
v உங்களையே நீங்கள் கொன்று வீடாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்பு டையோனாக இருக்கிறான். (4:29)
பட்டாசு வெடிப்பதினால் நம்மை நாமே அழித்துக் கொண்டு, பிறரையும் கஷ்டப்படுத்துகிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.
v அல்லாஹ் சீர்கேட்டை விரும்பு வதில்லை. (2:205)
v சீர்கெடுப்பவர்களின் செயலை அல்லாஹ் சீராக்குவதில்லை. (10:81)
v “உங்கள் கரத்தால் நீங்கள் நாசத்தை தேடிக்கொள்ளாதீர்கள், நன்மை செய்யுங்கள், நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (2:195)
தீ என்று சொன்னால் சுட்டுவிடாது, தொட்டால்தான் தெரியும் என்ற பழமொழி நம் வழக்கத்தில் உண்டு. தீ என்று தெரிந்தும் அதை தொடுவது, அது வெடிப்பதில் ஏதோ ஒரு இன்பத்தை ஷைத்தான் நமக்கு காட்டுகிறான் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
அன்பான சகோதர சகோதரிகளே! எந்த ஒரு மதத்தினுடைய விழாவாக இருந்தாலும் சரி, அந்த விழா பிறருக்கு துன்பம் தரக்கூடியதாகவும், தொல்லை தரக்கூடிய தாகவும், பிறர் மனது புண்படக்கூடியதாகவும் இருக்கக் கூடாது என்பதையே உலக மக்கள் அனைவரும் விரும்பக்கூடியது. இதை வெளியிடுகிற நாமும் அதையே விரும்பு கிறோம். ஆனால் இந்த தீபாவளியை பொறுத்தவரை பிறருக்கும் துன்பம், ஆபத்து தரக்கூடியது. ஆகவே இஸ்லாமிய சமுதாயமே இதை விட்டு விலகி வாழுங்கள். காசை கரியாக்கும் இது நம்முடைய விழாவாகக் காட்டித் தரப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அன்பான முஸ்லிம் சமுதாயமே! இந்த விஷயங்களை நீங்கள் படித்த பின்பும் இந்த விழாவில் நீங்கள் கலந்து கொள்வீர்கள் என்றால், கீழே உள்ள குர்ஆன் வசனத்தை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.
v “எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றனரோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகின்றனரோ, அவரை அவன் (அல்லாஹ்) நரகத்தில் புகுத்துவான். அதில் அவர் நிரந்தரமாக இருப்பார். அவருக்கு அழிவு தரும் வேதனையும் உண்டு. (4:14)
அன்பான முஸ்லிம்களே! இந்த விழாவில் கலந்து கொள்ளும் (அல்லது) ஆதரவு கொடுக்கும் உங்களுக்கு மறுமை நாளில் மிகப் பெரிய இழப்பு ஒன்று உள்ளது. அது என்னவெனில், மார்க்கத்தில் புதுமையைப் புகுத்தியதற்காக கவ்ஸர் என்ற நீர் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்களின் கையில் தண்ணீர் அருந்த முடியாமல் போகும் என்ற நபிமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.
நஊதுபில்லாஹ்-அல்லாஹ் இந்த பெரும் துர்பாக்கிய நிலையிலிருந்து உங்களையும், என்னையும் பாதுகாப்பானாக!\
அன்பான முஸ்லிம்களே! (88:21-25,5:67) இந்த குர்ஆன் வசனப்படி சொல்வதுதான் எங்கள் மீது கடமை நீங்கள் இதை ஏற்று நடப்பதும் நடக்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம் என்பதை சொல்லி கொள்கிறோம்.
**************************
அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் எனும் வாக்கியத்திலுள்ள “அர்ரஹ்மான்” மற்றும் “அர்ரஹீம்” ஆகிய இரு சொற்களும் அர்ரஹ்மத் கருணை எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மிகைப் பெயர்களாகும் “அதிகமாகக் கருணை புரிகிறவன்” என்பதே இவ்விரு சொற்களின் பொருளாகும். (1:2 தஃப்சீர் இப்னு கஸீர்: 1:391)
ஹதீஃத் குத்ஸியில் : அல்லாஹ் கூறுகிறான். நான் “ரஹ்மான்” (அளவற்ற அருளாளன்) ஆவேன். நானே “ரஹீம்” எனும் இரத்த உறவைப் படைத்து அதற்கு (ரஹ்மான் எனும்) எனது பெயரிலிருந்தே ஒரு பெயரை “ரஹீம்” (என்பதை)த் தேர்ந்தெடுத்தேன். ஆகவே யார் இரத்த உறவைப் பேணி வாழ்கிறாரோ அவருடன் நானும் உறவாடுவேன் யார் இரத்த உறவை முறிக்கிறாரோ அவருடன் நானும் உறவை முறித்துக் கொள்வேன் (அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி), குர்துபீ (ரஹ்) திர்மிதி, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர், பாகம்1, பக்கம் : 39)
கருணை புரிவதைத் தனக்குத்தானே கடமையாக்கிக் கொண்டவன் :
உங்கள் இறைவன் கருணை புரிவதைத் தனக்குத்தானே கடமையாக்கிக் கொண்டான். (6:12,54)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்(படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியணைக்கு மேலே வைக்கப்பட்டிருந்தது தனது பதிவேட்டில் “எனது கோபத்தை விட எனது கருணை முந்திவிட்டது” விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 3194, 7404, 7422, 7453, 7553, 7554, முஸ்லிம்: 5307-5309)
அல்குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “அர் ரஹ்மான்” எனும் சொல்லுக்கு “அனைத்துப் படைப்புகளிடமும் கருணை காட்டுபவன்” என்றும் “அர்ரஹீம்” எனும் சொல்லுக்கு “இறை நம்பிக்கையாளர்கள் மீது கருணை காட்டுபவன்” என்று பொருள் கொள்ளப்படும் என்று அந்த அடிப்படையிலேயே தனது ஆட்சியதிகாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது “ரஹ்மான் அரியாசனத்தின் மீது தனது ஆட்சியை நிலைநாட்டினான்”(20:5) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(தஃப்சிர் இப்னு கஸீர்: 1:40)
இதிலிருந்து “அர்ரஹ்மான்” என்பது இம்மை மறுமை ஆகிய ஈருலகிலும் அனை வருக்கும் பொதுவாகக் கருணை காட்டுபவன் என்ற பொருளையும், “”அர்ரஹீம்” என்பது இறை நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் கருணை காட்டுபவன் என்ற பொருளையும் பொதிந்துள்ளது.
“இறை நம்பிக்கையாளர்கள் மீது அவன் மிகவும் கருணை கொண்டவன் ஆவான் (33:43) இங்கு அர்ரஹீம் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
(நபியே!) எனது அடியார்களுக்கு அறி விப்பீராக நான் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த அன்புடையோனும் ஆவேன். 15:49
உம்முடைய இறைவன் நிச்சயமாக மிகவும் மன்னிப்போனும் நிகரற்ற அன்புடையோனும் ஆவான். (6:165, 25:68,69,70)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை மறுப்பாளர் இறைவனின் கருணையைப் பற்றி அறிந்தால் அந்தக் கருணையின் மீது நம்பிக்கை இழக்கமாட்டார்கள். (அபூ ஹுரைரா(ரழி), முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்:1:47)
அல்லாஹ் கருணையை நூறு வகை களாகப் படைத்தான். அவற்றில் ஒரு வகையைத் தனது படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான் ஜின்கள் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் ஆகிய அனைத்தும் அந்த ஒரேயயாரு கருணையின் மூலம்தான் தங்களுக்கிடையே பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக்கொள்கின்றன. எந்த அளவிற்கென்றால் மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் தான் குதிரை தனது (குட்டி பால் குடிப்பதற்காகக்) குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. மீதியுள்ள தொண்ணூற்று ஒன்பது வகை கருணைகளையும் மறுமை நாள் வரை தன்னிடமே அல்லாஹ் வைத்துக் கொள்வான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அபூ ஹுரைரா(ரழி), அபூ சயீத், அல்குத்ரி(ரழி), சல்மான் அல்ஃபாரிஸ்(ரழி), ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அவ்பஜலி (ரழி), புகாரி : 6000, 6469, முஸ்லிம், அபூதாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர்: 3:912,913)
ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்து(வேதனைப் படுத்தியதால்) அவள் பாலூட்டுவதற்காக (த் தனது குழந்தையைத் தேடினாள் அவளது குழந்தை கிடைக்கவில்லை. எனவே அங்கிருந்த) கைதிகளில் எந்தக் குழந்தை யைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தனது குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தனது வயிற்றோடு அணைத்துக் கொண்டு பாலூட்டலானாள். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா? சொல்லுங்கள் என்றார்கள். நாங்கள் இல்லை எந்நிலையிலும் அவள் நெருப்பில் எறியமாட்டாள் என்று சொன்னோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பை விடப் பல மடங்கு அன்பை அல்லாஹ் தனது அடியார்கள் மீது வைத்துள்ளான் என்று சொன்னார்கள். (உமர் பின் கத்தாப்(ரழி), புகாரி : 5999)
ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். என்னிடம் யாசகம் கேட்டு ஒரு பெண்மணி வந்தாள் அவளுடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது மூன்று பேரீத்தம் பழங்களை அவளுக்கு நான் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டுத் தனக்குரியதைச் சாப்பிடு வதற்காகத் தனது வாய் அருகில் அதைக் கொண்டு சென்றபோது அதையும் அவளின் இரு பெண் மக்களே சாப்பிடக் கேட்டனர் தான் சாப்பிட விரும்பிய அந்தப் பழத்தை இரண்டாகப் பிளந்து குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தாள். அவ ளின் இச்செயல் எனக்கு ஆச்சரியத்தை ஏற் படுத்தியது. (புகாரி: 1418,5995,முஸ்லிம்: 2629, 2630, ரி.ஸாலிஹீன்: 268,269) இந்தத் தாயை விடப் பன்மடங்கு படைப்பினங்களின் மீது அல்லாஹ் கருணையுள்ளவன்.
உங்களின் அல்லாஹ் மிகவும் இரக்க முள்ளவன். நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என்று நிர்ணயித்து) எழுதிவிட்டான் பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மையை செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணிவிட்டாலே அதனைச் செயல்படுத்தாவிட்டாலும், அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து மடங்கு நன்மைகளாக, ஏழுநூறு மடங்காக, இன்னும் அதிகமானதாக அல்லாஹ் பதிவு செய்கிறேன். ஆனால், ஒருவர் ஒரு தீமையை செய்ய எண்ணி (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால் அதற்காக அவருக்கு தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். அவர் எண்ணிய படி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ அதற்காக ஒரேயயாரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (6:160, 27:89, 10:27, இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி:42:47, 6491, முஸ்லிம் : 207,208, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 3:676.
மேலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனது சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் (சிறிய சிறிய தீய) எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப் படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அதற்குத் தண்டனை வழங்குவதில்லை) எனக்காக மன்னித்துவிடுகிறான் என்று (அபூ ஹுரைரா(ரழி), புகாரி : 2528, 5269, 6664, முஸ்லிம் : 201, 202, திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 1:918)
மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “எங்கள் உள்ளத்தில் சில (சில மனக் குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக் கூட மிகப் பெரும் (பாவச்) செயலாகக் கருதுகிறோம். (இது பற்றி)தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் “அதுதான் ஒளிவு மறைவற்ற இறை நம்பிக்கை” என்று கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), முஸ்லிம் : 209, 211)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தமது இஸ்லாத்தை (நம்பிக்கையாலும், நடத்தையாலும்) அழகுபடுத்திக் கொண்டால் அவர் செய்யும் ஒவ் வொரு நற்செயலுக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து ஏழுநூறு மடங்கு வரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது அவர் செய்யும் ஒரு தீமைக்கு அதற்கேற்ப ஒரு தீமை மட்டுமே அவர் இறைவனைச் சந்திக்கும் வரை பதிவு செய்யப்படுகிறது என்று (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்:205)
மேலும் யார் ஓரு நன்மை செய்கின் றாரோ அவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு (பிரதிபலன்) கிடைக்கும் (ஆனால்) யார் ஒரு தீமையை செய்கின்றாரோ அவருக்கு அதைப் போன்ற (ஒரு மடங்கு) தண்டனையே வழங்கப்படும் அவர் அநீதி யிழைக்கப்படமாட்டார். (6:160, 27:89, 10:27)
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான். எனது அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மாத்திரம் பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையா கப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி விட்டாலே அதைச் செய்யா விட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து ஏழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் என்று உத்தரவிடுகின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 7501,6664, ஹதீஃத் குத்ஸி : 37-39, முஸ்லிம்)\
ஒரு அடியான் தவறு செய்ய எண்ணுவதை நன்றாகவே அறிந்துள்ள அல்லாஹ்விடம் இறைவா! உன்னுடைய இன்ன அடியான் இன்ன பாவத்தைச் செய்ய எண்ணுகின்றான் என்று மலக்குகள் கூறுவார்கள். அவனை விட்டு விடுங்கள் (அவன் எண்ணிய) அதை அவன் செய்தால் அவனுக்கு அது போன்ற ஒரு குற்றத்தையே எழுதுங்கள் அதை அவன் (செய்வதை) விட்டுவிட்டால் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள் அவன் அதனை (ச் செய்யாமல்) விட்டது “எனக்கு அவன் அஞ்சியதே காரணமாகும்”என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), முஸ்லிம், ஹதீஃத் குத்ஸீ : 40)
உங்களது உள்ளத்தில் உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினால் அல்லது மறைத் தாலும் அவற்றைக் குறித்து அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். (2:284) என்று இவ்வசனம் கூறுகின்றது. இதன்படி மனிதன் ஒரு குற்றத்தைச் செய்ய வேண்டும் என்று அவனது மனத்தளவில் மட்டும் நினைத்தால் கூட அதுவும் குற்றமாகக் கணிக்கப்பட்டுக் கணக்குக் கேட்கப்படும். இது போன்றே உள்ளத்தில் ஊசலாடக் கூடிய கெட்ட எண்ணங்களுக்குக் கூட அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற நெருக்கடி நிலை தோன்றும்.
உள்ளத்தில் தோன்றும் அற்ப ஆசைகள் தீய எண்ணங்கள் சிறு சிறு சலனங்கள் இவற்றுக்கெல்லாம் அவற்றைச் செயல்படுத்தினாலும் செயல்படுத்தப்படாவிட்டாலும் தண்டனை உண்டு என்றால் அது மனிதனுக்குப் பெரும் சுமையாகிவிடும். இதனால்தான் இவ்வசனம் அருளப்பட்டபோது அது நபித் தோழர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களிடம் சென்று மண்டியிட்டு அமர்ந்தவாறு “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை, நோன்பு, அறப்போர், ஹஜ், ஜக்காத் போன்ற எங்களால் இயன்ற கடமைகள் எங்கள் மீது விதியாக்கப்ப்டடிருந்தன. இப்போது இந்த வசனம் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. இதற்கு நாங்கள் சக்தி பெற மாட்டோமே யார் ஸூலுல்லாஹ் என்று கவலையுடன் முறையிட்ட போது….
அல்லாஹ் எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பெரும் பொறுப்புக்களைச் சுமத்துவதில்லை என்னும் (2:286) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(3:29, 20:7, அபூஹுரைரா(ரழி), புகாரி, பாகம் 5, பக்கம் 174, பாடம் 54,55 & 4545,4546, முஸ்லிம்: 125,199, முஸ்னத் அஹ்மத், ரியாதுஸ், ஸாலிஹீன்:168, தஃப்சீர் இப்னு கஸீர்:1:914-920)
மனிதனின் அன்றாட செயல்கள் அனைத்தும் (பதிவு செய்யப்பட்டு) முத்திரையிடப்படாமல் இருப்பதில்லை. ஓர் இறை நம்பிக்கையாளர் நோயுற்றுவிட்டால் வானவர்கள் எங்கள் இறைவா! (நல் வணக்கம் செய்யும்) உன்னுடைய இன்ன அடியானை (நோயைக் கொடுத்து நல்லறம் புரியவிடாமல்) தடுத்து விட்டாயே! என்று கூறுவார்கள். அப்போது வல்லமையும், மாண்பும் மிக்க (கருணையும் நிறைந்த) இறைவன் (சொல்வான்) அந்த அடியான் குணமடையும் வரை அல்லது மரணமடையும் வரை அல்லது (அவன்) பிரயாணத்தில் (அமல் செய்ய முடியாத நெருக்கடியான நிலையிலிருந்து மீளும் வரை) அவன் “ஆரோக்கியமானவனாக” ஊரில் இருக்கும்போது (தொடராகச்) செய்யும் நற்செயல்களுக்குக் கிடைத்ததைப் போன்ற (அதே அளவு) நன்மைகளை அவனுக்குப் பதிவு செய்யுங்கள் என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூமூஸா அஷ்அரீ(ரழி), உக்பா பின் ஆமிர்(ரழி), புகாரி: 2996, முஸ்னத் அஹ்மத், ஹாகிம், தப்ரானி, தஃப்சீர் இப்னு கஸீர் : 5:202,203)
நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் இரு மலக்குகளும் இரவில் அல்லது பகலில் குறித்த மனிதனிடமிருந்து சேகரித்தவைகளுடன் அல்லாஹ்விடம் வருவார்கள். அவர்கள் கொண்டுவந்த அவ்வேட்டில் ஆரம்பத்திலும் அதன் இறுதியிலும் ஒரே ஒரு நன்மையே இருப்பதாகவும் அதன் இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் பாவமாகவே இருப்பதாகவும் அல்லாஹ் காண்பான். அப்போது மலக்குகளிடம் இந்த ஏட்டில் இரு ஓரத்திற்கும் இடையே உள்ளவற்றை என் அடியானுக்கு நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக ஆக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அனஸ் இப்னு மாலிக்(ரழி), திர்மிதி, ஹதீஃத் குத்ஸி : 9)
நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரான (தபுக் போரில்) ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (நம்முடன் இந்த யுத்தத்திற்கு வரமுடியாமல் சில சங்கடங்கள், நோய்கள் காரணமாகத் தக்க காரணங்களுடன் தங்கிவிட்ட) சிலர் “மதீனாவில்” இருக்கின்றார்கள். (ஆனாலும்) நாம் எந்த மலைக் கணவாயையும், பள்ளத்தாக்கையும் கடந்து வந்ததனால் அதர்கான நன்மைகளை முழுமையாக அடைந்து கொண்டோமோ அதே அளவு முழுமையான நன்மைகளை அவர்களும் அடைந்து கொண்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரழி), புகாரி : 2839,முஸ்லிம்: 1911, அபூ தாவூத், ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப்)
கலீஃபா உமர்(ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் விபச்சாரம் புரிந்துவிட்ட ஒரு பைத்தியக்காரப் பெண் கொண்டு வரப்பட்டாள் அவளுக்கு விபச்சாரக் குற்றத்திற்காகத் தண்டனை வழங்க உமர்(ரழி) அவர்கள் எண்ணியபோது, அவர்களிடம்,
- பைத்தியக்காரனிடமிருந்து அவன் புத்தி சுவாதீனம் தெளிவு அடையும் வரை,\
- சிறுவனிடமிருந்து அவன் பருவ வயதை அடையும் வரை,
- தூங்குபவனிடமிருந்து அவன் கண் விழிக்கும் வரை.
அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது. மேலும் “அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும் என்று அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள். (புகாரி:7, பக்கம்: 298, பாடம்: 22, பக்கம்:298, பாடம்: 22, பக்கம்303, பாடம் 26, பாகம் 6, பக்கம் 23-26, பாடம் 11, 6815, 6821, 6822,1936,1937, 2600, 5368, 6087, 6709-6711, 5271, 4687, அபூ தாவூத், திர்மிதி, பஃத்ஹுல் பாரி, உம்தத்துல் காரீ)\
“எனது சமுதாயத்தார் அறியாமையி னாலும், மறதியினாலும், நிர்பந்தத்தாலும் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு மாஜா, ஹாக்கிம், ஸஹீஹ் இப்னு ஹிப்பான், தப்ராணி, அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்:1:926, 7:262)
அல்லாஹ், எனது சமுதாயத்தார் செய்த மூன்று வகையான தவறுகளை மன்னித்து விட்டான்.
அவை : 1. அறியாமையால், 2. மறதியால், 3.நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட தவறுகள் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உம்முத் தர்தா(ரழி) அவர்கள், இதன் அறி விப்பாளர்களின் ஒருவரான அபூபக்கர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஃதை ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) அவர்களிடம் நான் கூறியபோது அவர்கள் கூறினார்கள் உண்மைதான் இதை (உணர்த்தும்) குர்ஆன் வசனத்தை நீங்கள் ஓதவில்லையா? (அல்லாஹ் கூறுகின்றான்) எங்கள் இறைவா! நாங்கள் மறந்துவிட்டாலோ தவறிழைத்து விட்டாலோ எங்களை நீ தண்டித்து விடாதே! (என்று வேண்டுங்கள் 2:286) இவ்வாறு மக்கள் பிரார்த்தித்த போது “உங்கள் பிரார்த்தனையை ஏற்று அவ்வாறே நான் செய்தேன்” என்று இறைவன் பதிலளித்தான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம் 200, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் : 1:927, 7:261)
எங்கள் இறைவா! எங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது (பளுவைச்) சுமத்தியதைப் போன்று எங்கள் மீது பளுவைச் சுமத்திவிடாதே! எங்கள் இறைவா! எங்களால் இயலாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்க(ள் குற்றங்க)ளை மறைப்பா யாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன் 2:286. அதாவது எங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தார் மீது சுமைகளையும் கடினமான விதிகளையும் ஏற்படுத்தியதைப் போன்று எங்கள் மீது கடினமான பொறுப்புகளைச் சுமத்தி எங்களைச் சிரமப்படுத்ததி விடாதே! அவை எங்களால் செய்யத் தக்கவையாக இருந்தாலும் சரியே! (இப்னு கஸீர்(ரஹ்) 1:927)
“நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தியங்களுக்காக உங்களை அல்லாஹ் தண்டிக்கமாட்டான்” (2:225). அதாவது உங்களிடமிருந்து வெளிவரும் (தற்செயலான) அர்த்த மற்ற சத்தியங்கள் மூலம் அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கவோ கட்டுப்படுத்தவோ அதற்காகத் தண்டிக்கவோ மாட்டான். அர்த்தமற்ற சத்தியங்கள் என்பவை சத்தியம் செய்பவர் உள்ளத்தால் நாடிச் செய்யாத சத்தியங்கள் ஆகும். (இப்னுகஸீர் (ரஹ்) 1:716) (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)
**************************
அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- சுவனத்தில் எது இருக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்?
பசி, நிர்வாணம், தாகம், வெயில். அல்குர்ஆன் : 20:118,119 - மதினா வேறெந்த பெயரில் அல்லாஹ் கூறுகிறான்?
“யத்ரிப்”. அல்குர்ஆன்: 33:18 - அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சஹாபி யார்?
“ஸைத் பின் ஹாரிஸ்(ரழி) குர்ஆன்:33:37 - இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
“மூஸா(அலை) அல்குர்ஆன்:26:62 - தொழாதவர்களுக்கு சித்தப்படுத்தி வைத்திருக்கும் நரகத்தின் பெயர் என்ன?
“ஸகர்” அல்குர்ஆன்: 74:41,42,43 - ஆயத்துல் குர்ஸி அல்குர்ஆனில் எந்த பாகம், எந்த அத்தியாயத்தில் உள்ளது?
பாகம்: 3, அத். 2:255 - அல்குர்ஆனில் நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் உள்ளன?
ஆறு சூராக்கள். 1.யூனுஸ்(அத்.10), 2.ஹுத்(அத்.11), 3.யூசுப்(அத்.12), 4.இப்ராஹிம்(அத்.14), 5. நூஹ்(அத்.71) 6. முஹம்மத் (அத்.47) - மூஸா(அலை) அவர்களோடு அல்லாஹ் பேசிய இடம் எது?
“துவா பள்ளத்தாக்கு”. அல்குர்ஆன்: 20:12 - கைபர் போரில் இஸ்லாமிய கொடியை நபி(ஸல்) அவர்கள் யாரிடம் கொடுத் தார்கள்?
“அலி(ரழி) அவர்களிடம். புகாரி :3009 - ஷஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது?
“கடன்”. முஸ்லிம் : 3832 - கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் 70,000 நபர்களில் உள்ளவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உக்காஷா(ரழி) இப்னு மீஹ்சன்(ரழி) புகாரி: 5705 - ஸீஹாக் ஸித்தா என்று கூறப்படும் ஹதீஃத் நூல்களின் பெயர் என்ன?
புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா. - ஏமன் நாட்டு காபா என்ற அழைக்கப்பட்ட ஆலயம் எது?
“துல்கலஸா”. புகாரி: 3820, 3823 - அல்லாஹ்வின் போர்வாள் என்றழைக்கப்பட்ட சஹாபி யார்?
“காலித் இப்னு வாலித்”(ரழி) புகாரி:4262 - முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் பிறந்த வருடத்தை வரலாற்று ஆசிரியர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
“யானை ஆண்டு” - யாருக்கு உதாரணம் கூறாதீர்கள் என்று கூறும் வசனம் எது?
அல்லாஹ்வுக்கு. அல்குர்ஆன்:16:74 - “ஸலாமுன் அலாநூஹின் ஃபில் ஆலமீன்” என்றால் என்ன?
அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக. அல்குர்ஆன்: 37:79 - ஜிப்ரயீல்(அலை) அவர்கள் எந்த அளவிற்கு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்?
(வளைந்து வில்லின் இரு முனைகளைப் போல் அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்கள். அல்குர்ஆன்: 53:9 - யாரை கடினமான பிடியால் பிடித்துக் கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான்?
தூதருக்கு மாறு செய்த ஃபிர்அவ்னை. அல்குர்ஆன் : 73:16 - அல்லாஹ்வின் பகைவர்களை எப்படி பிரிக்கப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
(நரகத்) தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில் (தனித்தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். அல்குர்ஆன் : 41:19
**************************
இஸ்லாத்தில் கந்தூரி, கூடு, பாதை மறிப்பு உண்டா?
எம். சையத் முபாரக், நாகை
புகை, மது வகைகள், சினிமா, டிவி, செல்போன், இன்டர்நெட், கேம்ஸ், செல்ஃபி, மால், ஆன்லைன் ஷாப்பிங் போன்றவைகள் இளைஞர்களை எப்படி யயல்லாம் சீரழிக்கின்றது என்பதை நாம் அடிக்கடி நேரிடையாகவும், செய்தியாகவும் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், “நன்மை” என்ற போர்வையில் நமது இளைஞர்களைப் பல அனாச்சாரங்கள்வழிகெடுத் துக் கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் அறியாமல் அந்தத் தவறுகளைச் செய்து தமது இம்மை, மறுமை வாழ்வுகளைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
உலக காரியங்களில் எவைகள் தடுக்கப்பட்டுள்ளனவோ (ஹராமோ) அவைகளைத் தவிர மற்றவைகள் அனுமதிக்கப்பட்டவைகள் (ஹலால்) ஆகும். ஆனால், மார்க்கக் காரியங்களில் (வணக்க வழிபாடுகளில்) எவைகள் அனுமதிக்கப்பட்டவைகளோ அவைகளைத் தவிர மற்றவைகள் தடுக்கப்படடவைகள் ஆகும். இதை நாம் அறியாது “நல்லதுதானே” என்று பலவற்றை வணக்க வழிபாடுகளாகத் செய்து வருகிறோம்.
கந்தூரி, கூடு போன்றவற்றைப் பாருங் கள். இவைகளை அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கின்றானா? அல்லது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்திருக்கிறார்களா? நபி(ஸல்) அவர்கள்ளுக்கு முன் எத்தனை எத்தனை நபிமார்கள், எத்தனை எத்தனை நல்லடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். யாருக்காவது நபி(ஸல்) அவர்கள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தினார்களா? அல்லது நடத்துவதற்கு அனுமதி தந்தார்களா? சீர்தூக்கிப் பாருங்கள்.
இது காலம் காலமாக நடந்து கொண்டி ருக்கிறது. முன்னோர்கள் தவறு செய்வார்களா? இது தவறு என்றிருப்பின் அவர்கள் செய்திருப்பார்களா? என்று பலர் வக்காலத்து வாங்குவர். ஆனால் இது பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறானா? நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்திக் காட்டினார்களா? என்பது பற்றி என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
கந்தூரி, கூடு போன்றவற்றிற்காக நாம் செலவழிக்கும் பணம் யாருக்காவது உப யோகப்படுகிறதா? இவைகள் தெருவில், காலையில் செல்லும்போது, அப்பாதையில் செல்பவர்களுக்கு கடந்து செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துகிறதா? இல்லையா? தெருவிலுள்ள பந்தல்கள் பிரிக்கப்படுவதி லிருந்து, மின்தடை ஏற்படுவது வரை பல பாதிப்புகளை மக்கள் அடைகிறார்களா? இல்லையா? மற்றவர்களுக்குத் தொல்லைக் கொடுக்கக் கூடாது என்ற இஸ்லாமியக் கட்டளைக்கு நாம் என்ன மதிப்புக் கொடுக்கின்றோம்?
“எவன் மற்றவனுக்குத் தீங்கு செய்தானோ அல்லாஹ் அவனுக்குத் தீங்கு செய்வான். எவன் ஒருவனைக் கஷ்டத்தில் ஆழ்த் துகிறானோ அல்லாஹ் அவனைக் கஷ்டத்தில் ஆழ்த்துவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதி)
சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற, பணத்தை ரசாயனச் சாம்பலாக்கும் வானவேடிக்கைகளை நாம் நிகழ்த்துகின்றோம் அல்லது கண்டுகளிக்கின்றோம். இவைகளையும், கந்தூரி, கூடு போன்றவை களையும் நாம் செய்வது வீண் விரயமும், அனாச்சாரமும் இல்லையா?
“நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள் ஷைத்தானோ தன் இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 17:27)
கந்தூரி, கூடு பழமையானது, ஆனால், இப்போது பார்ப்போரை, குழந்தைகளை, வீட்டில் இருப்போரை அதிரவைக்கும், கஞ்சா, மது போதையுடன் தாரை, தப் பட்டை முழங்க, பாண்டு சப்தம் நடக்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பழமையானதா? இது இடையில் புகுந்தது தானே. இதுபோல, கந்தூரி, கூடு போன்ற வைகளும் இடையில் புகுத்தப்பட்டதாகத்தானே இருக்கும் என்பதை ஏன் உணர மறுக்கின்றோம்?
சில வருடங்களுக்கு முன் நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் உயிர் இழந்தார்கள். இதையும் மனதில் இருத்திச் சிந்தியுங்கள்.
ரமழான் மாத இரவுகளை உயிர்ப்பிக்கிறேன் என்று பல இளைஞர்கள் தெருவில் கேரம் போர்டு விளையாடுவது என்ன! சீட்டு விளையாடுவது! கண்கொள்ளாக் காட்சிகள். இவை மட்டுமா? கிரிக்கெட் விளையாடுவது ஒருபுறம். நம் மாதம் (ரமழான்) அல்லவா இது. மற்றவர்களிடம் வம்புதும்புகளில் ஈடுபடாவிட்டால் இம்மாதம் சிறப்பு அடையுமா? என்று வம்பு வளர்ப்பது மற்றொரு புறம். இந்தச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் இவைகள் இஸ்லாத்தில் உள்ளதா என்று சிந்திக்க மாட்டார்களா?
“பொய் பேசுவதை, அதன்படி செயல்படுவதை விடாத ஒருவர் தன் உணவு, பானத்தை விடுவதால் (நோன்பு பிடிப்பதால்) அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர்-ஐ அடைந்து கொள்ளுங் கள். நன்மைகளை அதிகம் பெறுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கூற்று. இதற்கு மாறாக நடந்து கொண்டு இளைஞர்கள் சீரழிவதுடன் இஸ்லாத்தின் பெயரையும் கெடுக்கின்றனர். இவர்களின் அட்டகாசங்களைக் காவல்துறையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு இளைஞர்களின் அளப்பறை நாறிக் கிடக்கின்றது. இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் இவர்கள் முஸ்லிம்கள்தானா?
“பாதைகளில் அமர்வது குறுத்து உங்களை நான் எச்சரிக்கிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் “அல்லாஹ் வின் தூதரே! நாங்கள் பேச எங்களுக்குச் சபைகள் தேவைப்படுகிறதே என்றார்கள். அதற்கு, நீங்கள் பேசித்தான் ஆகவேண்டும் என்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் “அதன் உரிமைகள் யாவை? என்று வினவியபோது, நபி (ஸல்) அவர்கள்” பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், பிறர்க்குத் துன்பம் கொடுக்காதிருப்பதும், சலாமிற்குப் பதிலளிப்பதும், நன்மை புரியக் கட்டளையிட்டு தீமையிலிருந்து தடுப்பதும் தான் அவை” எனப் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்) நேரம் எப் படிப்பட்டது என்பதை அறியாமல் நேரத்தை வீணடித்துக் கொண்டும், வீண் விரயங்களை அனாச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கும் இளைஞர்களே! இவை களைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
“விதவைகளுக்காகவும், வறியவர்களுக்காகவும் பாடுபடுபவர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிபவரைப் போன்றவர். மேலும் அவர் இரவு முழுக்க அல்லாஹ்வின் சந்நிதியில் நின்று களைப்படையாமல் வணங்கிக் கொண்டிருப்பவரைப் போன்றவர். பகலில் உண்ணாமல் தொடர்ந்து நோன்பு நோற்ற வண்ணமிருக்கும் நோன்பாளி போன்றவர்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : முஸ்லிம்)
ஆகவே, நமக்குக் கிடைத்த நேரத்தையும், பொருளாதாரத்தையும் பயன் உள்ள வகையில் செலவு செய்யுங்கள். அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவான்.
அல்ஹம்துலில்லாஹ்.
**************************
ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : ஹரமில் அமைந்துள்ள கஃபா, நான்கு பக்கமும் சம அளவு கொண்ட சதுரமா? இல்லை வெவ்வேறு அளவுகள் கொண்டதா? M.அபூ நபீல், தேங்காய்பட்டணம்
The Kaaba is a cuboid stone structure made of granite. It is appoximately 13.1m (43ft.) high (some claim 12.3m (39.5 ft.), with sides measuring 11.03m (36.2ft.) by 12,86m (42.2ft.)
தெளிவு : இதைப் பற்றிய விவரங்கள் எமக்குத் தெரியாது. இருப்பினும் விக்கி பீடியாவில் (ஆங்கிலம்) குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளை அறியத் தருகிறோம்.\
(கனசதுர கிரானைட் கல்லால் கஃபா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உயரம் ஏறக்குறைய 13.1 மீட்டர் (43 அடி) (சிலர் 12.3 மீட்டர் (39.5 அடி என்றும் கூறு கின்றனர்) இதன் பக்கங்களின் அளவு 11.03 மீட்டர் (36.2 அடி) x 12.86 மீட்டர் (42.2 அடி) ஆக இருக்கிறது.
ஐயம் : ஃபஜ்ர் & அஸர் தொழுகைக்குப் பின் கஃபாவை தவாப் செய்துவிட்டு சூரிய உதய & அஸ்தமனத்திற்கு முன் இரண்டு ரகாஅத் சுன்னத் தொழலாமா?
வார்னர் நதீர், நாகர்கோவில்
தெளிவு : தொழக்கூடாது என்பதை கீழ்காணும் ஹதீஃத்கள் தெரிவிக்கின்றன.
ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும், அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத் தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர்(ரழி) ஆவர். ஹதீஃத் எண் : 581, அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி), புகாரி: 582.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள். சூரியன் மறை யத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரழி) ஹதீஃத் எண்: 583, புகாரி.
எனவே தவாப் செய்தபின், சூரிய உதயத்திற்குப் பின் சூரியன் பனைமர அளவு உயரும் வரை காத்திருந்து தொழவும், அதே போல சூரிய அஸ்தமனம் ஆகும்போது தொழாமல் சூரியன் முழுமையாக அஸ்த மித்த பின் தொழவும்.
**************************