இஸ்லாமிய இல்லறவீயல்
அபூஃபவ்ஜிய்யா
பெற்றோர் நலம் பேணல் குறித்து அல்குர்அனின் போதனைகள்:
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் இருவருக்கும் (நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸயத்துச் செய்துள்ளோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் அடைந்தவர்களாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்கு பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே நீ எனக்கும் உன் பெறடறோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உனது மீட்சியிருக்கிறது.
(31:14)
மேற்காணும் வசனத்தில் மனிதன் தன் பெற்றோருக்கு ஏன் நன்றி செலுத்த வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறும் இறைவன் முதன்முதலாக தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் சூசகமாக கூறியுள்ளான். எவ்வாறெனில் மனிதன் குழந்தையாக தனது தாய் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு பெற்றோர் இருவரும் காரணமாயிருந்ததுப் போல், அவனை தனது தாய் வயிற்றில் குழந்தையாக மனித வடிவில் உருவாக்கியவன் வல்ல அல்லாஹ்வாயிருக்கிறான் என்பதை அவன் மறந்து விடக் கூடாது.
ஆகவே மனிதன் முதற்கண் தன்னை மனிதனாக உருவாக்கிய ரப்புல் ஆலமீனுக்கும், அடுத்து தன்னை இவ்வுலகில் குழந்தையாகப் பெற்றெடுத்த பெற்றோருக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளான். இதை உணர்த்துவதற்காகவே “நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக” என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
மனித சமுதாயத்தின் வழிகாட்டிகளான நபிமார்கள் தமது பெற்றோர் நலம் பேணல்
யாஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் (என கூறினோம்) இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து விட்டோம். அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்த தன்மையையும்(அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் பயபக்தியுடையவராகயிருந்தார். மேலும் தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவுமிருந்தார். அவர் பெருமை அடிப்பவராகவோ, அல்லாஹ்வுக்கு மாறு செய்பவராகவோ இருக்க வில்லை. (19:12,13,14)
( ஈஸா(அலை) கூறுகிறார்கள்) நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறான். மேலும் என்னை நபியாகவும் ஆக்கியிருக்கின்றான். இன்னும் நான் எங்கிருந்தாலும் முபாரக்கானவனாக (நற் பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும் நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸிய்யத்துச் செய்து(கட்டளையிட்டு) இருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறுக் கெட்டப் பெறுமைக்காரர்களாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:30,31,32)
மேற்காணும் வசனங்களிலிருந்து ஒருவர் முழுமையாக தன் பெற்றோருக்கு தாம் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அவர் பெருமை சுபாவம் அற்றவராகவும், அல்லாஹ்வுக்கு மாறு செய்யாதவராகவும் இருப்பதோடு, தக்வா பயபக்தி, இறையுணர்வு மிக்கவராகவும் இருத்தல் வேண்டும் என்பதை அறிகிறோம்.
******************************************
தமது பெற்றோருக்காக நபிமார்கள் செய்துள்ள பிரார்த்தனை:
என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் இறை விசுவாசிகளாய் பிரவேசித்தவர்களுக்கும், மூமினான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீ மன்னித்தருள்வாயாக! (என்று நூஹ்(அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்) (71:28)
(இப்ராஹிம் அவர்கள் தமது தந்தையை நோக்கி) உம்மீது ஸலாம்(சாந்தி) உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழைப் பொறுக்கத் தேடுகிறேன். நிச்சயமாக அவன் என்மீது கிருபையுடையவனாகவே இருக்கிறான் என்று கூறினார். (19 : 47)
மேற்காணும் வசனங்களில் நூஹ்(அலை) அவர்களும், இப்றாஹிம்(அலை) அவர்களும் தனது பெற்றோருக்குச் செய்துள்ள பிரார்த்தனைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஒருவர் தமது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செயல்வடிவில் காட்டுவதோடு, அவர்களுக்காக நற்பிரார்த்தனையும் செய்யவேண்டிய கடமைப்பட்டுள்ளார் என்பதையும் மேற்காணும் வசனங்கள் உணர்த்துகின்றன.
பெற்றோருக்காக பிரார்த்திப்பதற்கு அல்லாஹ் கற்ப்பிக்கும் அழகிய துஆவும், அவர்களிடம் பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டிய முறையும்:
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கி வழிபடக் கூடாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் முதுமை அடைந்து விட்டால் அவர்களைப் பார்த்து உஃப்(சீ) என்று அலட்சியமான வார்த்தை எதுவும் சொல்லி விடாதீர். அவ்விருவரையும் (உம்மைவிட்டு) விரட்டவும் செய்யாதீர். அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான வார்த்தையே பேசுவீராக!
மேலும் (அவர்கள் மீது) இரக்கம் கொண்டவராக பணிவு என்னும் இறக்கையை அவ்விருவரக்காகவும் நீர் தாழ்த்துவீராக! (அவர்களின் எதிரில் உமது நெஞ்சைத் தூக்கி நிமிர்ந்து நிற்காமல் புஜங்களைத் தாழ்த்தி பணிவன்போடு நிற்பீராக!) மேலும் எனது ரட்சகனே! நான் சிறுபிள்ளையாயிருக்கும் போது என் பெற்றோர் என்னைக் கிருபையாய் வளர்த்ததுப் போல் அவ்விருவருக்கும் நீ கிருபை செய்தருள்வாயாக என்று கூறி அவர்களுக்காக பிரார்த்திப்பீராக!(17:23,24)
அரபியில் :
“ரப்பிர்ஹம்-ஹுமா-கமா-ரப்யானீ-ஸகீரா”
மேற்காணும் வசனத்தில் பெற்றோர்களிடம் பேசும் போது அலட்சியமான வகையில் எதுவும் பேசி விடாது, மிக கண்ணியமான முறையில் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்பதையும், மேலும் அவர்கள் எதிரில் நிற்கும்போது புஜங்களைத் தாழ்த்திய நிலையில் பணிவன்போடு நிற்க வேண்டுமே அன்றி நெஞ்சை உயர்த்தி நிமிர்ந்த நிலையில் நிற்கக் கூடாது என்பதையும் அல்குர்ஆன் அறிவுரைப் பகர்கிறது.
பெற்றோர் நலம் பேணல் குறித்து ஹதிஸின் போதனைகள்:
பிள்ளைகள் சுவர்க்கம், நரகம் அடைவதற்கு பெற்றோரே காரணம்:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும், உமக்கு நரகமுமாவார்கள்” என்று கூறினார்கள். (அபூஉமாமா(ரழி), இப்னுமாஜ்ஜா)
பிள்ளைகள் சுவர்க்கமோ, நரகமோ செல்வதென்பது அவர்கள் தமது பெற்றோரிடம் நடந்துக் கொள்ளும் முறையைப் பொறுத்ததேயாகும். முறையாக நடந்துக் கொண்டால் சுவர்க்கமும், முறைகேடாக நடந்துக் கொண்டால் நரகமும் கிடைக்கும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.
பெற்றோரின் விருப்பு வெறுப்பில் அல்லாஹ்வின் நிலை:
தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும், தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி), திர்மீதி)
பெற்றோரிருந்தும் சுவர்க்கம் செல்லும் வாய்ப்பை இழந்தவன் மிகவும் மோஷம் அடைந்தவன் ஆவான்:
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் அவன் மோசமடைந்து விட்டான், அவன் மோசமடைந்து விட்டான், அவன் மோசமடைந்து விட்டான் என்று மும்முறைக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! யார் (அவன் ) என்றுக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “எவன் தனது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ வயோதிக நிலையில் கண்டு பின்னர் (தான்) சுவர்க்கம் புகவில்லையோ அவன்தான்” என்றுக் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
வளமான வருவாயுக்கும், நீண்ட ஆயுளுக்கும்:
* எவர் தமது வருவாயும், வாழ்நாளும் அதிகரிக்க விரும்புகிறாரோ, அவர் தனது சொந்த பந்துகளை ஒட்டி வாழ்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), புகாரீ,முஸலிம்)
பந்துத்துவம் உடையவர்களில் பெற்றோரே பிரதான ஸ்தானம் வகிக்கிறார்கள். ஆகவே பந்துத்துவம் உடையவர்களில் தமது பெற்றோருக்கு அடுத்து மற்றவர்களையும் நேசித்து அவர்களுடன் இணைந்து வாழும்போது, வாழ்நாளிலும், வருவாயிலும் நிச்சயம் பரகத் சுபிட்ச நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
பந்துத்துவத்தை முறித்து வாழ்வோர் சுவர்க்கம் செல்லத் தடை!
* பந்துத்துவத்தை முறித்து வாழ்வோர் சுவர்க்கம் புகமாட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஜுபைருபின் முத்இம்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
பெற்றோரில் மிகவும் நன்றிக்குரியவர் தாயேயாவர்!
* நான் நபி(ஸல்) அவர்களிடம் யாருக்கு நான் மிகவும் நன்றி செய்யக் கடமைப் பட்டுள்ளேன் என்றுக் கேட்டேன் அதற்கவர்கள் “உமது தாயுக்கு” என்றார்கள். பிறகு யாருக்கு என்றேன்? அதற்கும் “உமது தாயுக்கு” என்றார்கள்.பிறகு யாருக்கு என்றேன். “உமது தாயுக்கு” என்றார்கள். பிறகு யாருக்கு என்றேன் “உமது தந்தைக்கும்” என்றுக் கூறிவிட்டு பின்னர் அதற்கு அடுத்தடுத்து உள்ளவர்களுக்கு என்றார்கள்.
(பஹ்ஜமுபின் ஹக்கீம்(ரழி), தீர்மிதீ, அபூதாவூத்)
பெற்றோரின் மறைவுக்குப் பின்னும் அவர்களுக்காக செய்ய வேண்டியவை:
* நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்த போது பனீஸலமாவைச் சேர்ந்த ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோரின் மறைவுக்குப்பின் அவர்களுக்காக நான் செய்ய வேண்டியவை எவையேனும் எஞ்சியுள்ளனவா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஆமாம் என்று கூறிவிட்டு அவர்களுக்காக நல்ல துஆ செய்வது, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது, அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, அவர்களின் பந்நத்துவத்துடன் நெருங்கி வாழ்வது, அவர்களின் நண்பர்களுக்கு மரியாதை செய்வது ஆகியவையாகும் என்றார்கள்.
(அபூஉஸைத்(ரழி), அபூதாவுாத், இப்னுமாஜ்ஜா)
பெற்றோரைக் கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனை அடைவர் !
* “பெற்றோரைக் கொடுமைப்படுத்துவதைத் தவிர மற்றப் பாவங்களில் தான் நாடியவற்றை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆணால் பெற்றோரைக் கொடுமைப்படுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்கு முன் இவ்வுலக வாழ்விலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூபக்கர்(ரழி), பைஹகி)
* மற்றோர் அறிவிப்பில் “நிச்சயமாக (பெற்ற) தாய்மார்களைக் கொடுமைப்படுத்துவதை அல்லாஹ் ஹராமாக்கி தடைசெய்து வைத்துள்ளான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று உள்ளது. (முகீரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
பெற்றோர் முஸ்லிம் அல்லாதவராயிருப்பினும் அவர்களைக் கவனித்தாக வேண்டும் !
ஆணால் நீ அறியாத ஒன்றை எனக்கு இணை வைக்கும்படி(பெற்றோராகிய) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால், அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபடவெண்டாம். ஆயினும் இவ்வுலகில் நன்மையான காரியங்களில் அவ்விருவருடனும் கனிவுடன் இசைந்து வாழ்ந்து கொள்! (எவ்விஷயத்திலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியை நீ பின்பற்றுவாயாக! (31:15)
மக்கள் பெற்றோருக்கு இசைந்து நடப்பது அவசியமானதாயிருப்பினும், பாவமான காரியங்களில் அவர்களுக்கு அறவே வழிபட்டு நடப்பது கூடாது. என்பதாக அல்லாஹ் எச்சரிக்கை செய்துவிட்டு, கொள்கை ரீதியாக அவர்கள் மாறுபட்டியிருப்பினும் பெற்றோர் எனும் வகையில் நடைமுறைக்கேற்ப அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாக வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளான்.
எனவே “ரப்பிர்ஹம்-ஹுமா-கமா-ரப்பானீ-ஸகீரா” என்பதாக அல்குர்ஆன் கற்ப்பிக்கும் துஆவை முஸ்லிமல்லாத பெற்றோருக்காவும் கேட்பது அவசியம். காரணம் இந்த துஆவில் பெற்றோருக்கு ரஹ்மத்ச் செய்யும்படி அல்லாஹ்விடம் கேட்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் தமது தாய், தந்தையருக்காகக் கேட்கும்போது, கிருபையுள்ள ரஹ்மான் அதன் பயனாக அவர்களுக்கு ஹிதாயத்துச் செய்து அவர்கள் நேர்வழியடைய வாய்ப்புள்ளது.
முஸ்லிமல்லாத பெற்றோருக்காக அல்லாஹ்விடம் ரஹ்மத் செய்யும் படி அருள்புரியும் படி மாத்திரம் பிரார்த்தனை செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் பாவங்களை மன்னிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை அவன் தடை செய்துள்ளான்.
இணை வைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்டப் பின் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் முறை அல்ல. இப்றாகிம்(நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம் அவர் தமது தந்தைக்கு செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை. மெய்யாகவே (அவர் தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹிம் இரக்கம் உடையவராகவும் பொறுமையும், சாந்தமும் உடையவராகவும் இருந்தார். (9:113,114)
* இப்றாஹீமிடமும், அவரோடு இருந்நவர்களிடமும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன் மாதிரி உண்டு. தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும் நாங்கள் நிராகரித்து விட்டோம். அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை நமக்கும் உமக்குமிடையில் பகைமையும் வெறுப்பும் நிரந்தரமாக ஏற்ப்பட்டு விட்டன” என்றார்கள். ஆணால் இப்ராஹிம்(அலை) தம் தந்தையை நோக்கி “அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்கு சக்திக் கிடையாது. ஆயினும் உமக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன்மாதிரியிருக்கிறது.) (60:4)
ஆகவே நபி இப்றாஹீம்(அலை) அவர் தமது தந்தைக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடியதானது தமது தந்தை அல்லாஹ்வின் விரோதி என்பதைத் தாம் அறிவதற்கு முன்பு நடந்ததாகும் என்பதை அறிகிறோம்.