சின்னஞ்சிறிய விஷயங்கள்தான் ஆனாலும்…!
சென்ற இதழ் தொடர்
அபூஃபாத்திமா
அழிவே இல்லாத நித்யமான மறு உலக வாழ்க்கையை வளப்படுத்தும் செயல்களை சின்னஞ்சிறிய செயல்கள் என்று எண்ணுவது தவறு என்பதைச் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். அவ்வாறுக் கூறும் அறிவு ஜீவிகள் பெரும் பெரும் செயல்களாக எவற்றை கருதி செயல்படுகின்றனர் என்பதை இந்த இதழில் விரிவாக ஆராய்வோம்.
இன்றைய அரசியல்வாதிகளையும், அரசியலையும் அளவுக் கடந்து விமர்சிப்பது, இகாமத்துத்தீன் என்றால் நாட்டின் ஆட்சியைப் பிடிப்பது தான் என அறியாமல் பிதற்றுவது, ஆபாச சினிமா போஸ்டர் போராட்டம், பாபரி மஸ்ஜித், காஷ்மிர் விவகாரம் என்றும் உலகின் பல பகுதிகளில் நடந்துவரும் ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சியைக் கைப்பற்றல், அவற்றிற்காகச் செய்யப்படும் போராட்டங்கள் போன்ற இன்றைய தினசரிகளில் செய்திகளாக வரும் விஷயங்களில் அளவுக்கதிகமாக அக்கறைக் கொண்டு செயல்படுவது, இவைதான் அவைகளின் பெரும் பெரும் விஷயமாக இருக்கின்றன. அழிந்துப் போகும் அற்ப உலகின் ஆதாயங்களே அவர்களுக்குப் பெரும் பெரும் விஷயங்களாகத் தெரிகின்றன.
இன்னும் ஒருபடி மேலே சென்றால் இயற்கையின் சீற்றங்களினாலோ பாதிக்கப்படும் மக்களின் இவ்வுலகத் தேவைகளை நிறைவு செய்யப்பாடுபடுவது கொண்டு தாங்கள் பெரும் பெரும் காரியங்களை சாதித்துவிட்டதாக மெல் எண்ணம் கொள்வதாகும். இவ்வாறு நாம் எழுதுவதால் இவை எல்லாம் தேவையற்ற செயல்கள் என்றோ, அவற்றில் ஈடுபடுவதால் நன்மைகள் கிடைக்காது என்றோ நாம் சொல்லுவதாக யாரும் தவறாக எண்ண வேண்டாம்.
இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதும் அவசியம் தான். ஆயினும் அழிந்துப் போகும் இவ்வுலக காரியங்களான இவற்றில் மட்டும் பெரும் கவனஞ் செலுத்துவதால் ஒரு முஸ்லிமின் கடமைகள் முடிவடைந்து விடுவதில்லை. இவற்றில் கவனஞ்செலுத்துவதுப் போல் அதைவிட பன்மடங்கு அழிவற்ற மறுமைக்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு மக்களிடையே மறுமைக்குரிய செயல்கள் உயிரோட்டம் பெற பாடுபட வேண்டும் என்றே வலியுறுத்துகின்றோம்.
உலக சம்பந்தப்பட்ட லாபங்களை மக்கள் நிதானமாகப் பார்க்கிறார்கள். அவற்றில் பாடுபடும்போது தினசரிகளில் செய்திகள் இடம்பெறுவதால் எளிதாக விளம்பரம் கிடைத்து பெயர் புகழை ஈட்டிக் கொள்ள முடியும். ஆகவே சுய வேட்கையோடு பல மாதங்களைச் சார்ந்த பலரும் இப்படிப்பட்டக் காரியங்களில் முன்வருவர். உள்ளத்திற்கு உவகை தரும் இப்படிப்பட்டக் காரியங்ளில் ஈடுபடுவது யாருக்குமே அலுப்பைத் தராது. அதுவும் அரசியல் முயற்சிகளில் சுயநலம் கருதி மக்களில் மிகப் பெரும்பான்மையினர் ஈடுபடவே செய்வர். மதங்களில் நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்கள் மட்டுமல்ல, மதங்களிலோ, மறுமையிலோ, இறைவனிலோ நம்பிக்கையே இல்லா நாஸ்திகர்களும் அரசியலிலும், மேலே நாம் குறிப்பிட்டுள்ள காரியங்களிலும் உவகையுடன் ஈடுபடவே செய்வார்கள். மறுமையில் நன்மைக் கிடைக்கும் என்றோ, இறைவனின் பொருத்தம் கிடைக்கும் என்றோ அவர்கள் இதில் ஈடுபடவில்லை. இவ்வுலகிலேயே ஆதாயம் கிடைப்பதோடு பெயர் புகழும் கிடைக்கின்றது என்பதை நிதர்சனமாகப் பார்ப்பதாலேயே ஈடுபடுகின்றானர். இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்த அறிவு ஜீவிகள் பெரும் பெரும் காரியங்களாக எண்ணித் தங்கள் முழு கவனத்தையும் செலுத்தும் காரியங்களில் ஈடுபட மறுமைப் பற்றிய நம்பிக்கையோ, இறை உணர்வோ (தக்வா) அவசியேமில்லை. சுய வேட்கையே மனிதனை இவற்றில் ஈடுபடத் தூண்டும் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.
அப்படியானால் ஒரு முஸ்லிம் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடும் முறைக்கும் பெருத்த வேறுபாடு இருக்க வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள் ஈடுபடும் முறைக்கும் பெருத்த வேறுபாடு இருக்க வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள் ஈடுபடும்போது மக்களின் பொருத்தமும், அதன் மூலம் பொருளும் பெயரும் புகழும் கிடைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு ஈடுபடுபவர். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் பொருத்தத்தைக் குறிக்கோளாகக் கொண்டு மட்டுமே ஈடுபட முடியும். அல்லாஹ்வின் பொருத்தத்தை பொருட்படுத்தாமல் மக்களின் பொருத்தத்தை குறிக்கோளாகக் கொண்டு இவற்றில் ஈடுபடும் ஒருவன் நிச்சயமாக உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது. மக்களின் பொருத்தத்தை நாடாதவன் அவர்களின் திருப்திக்காக சத்தியத்தை வளைக்கவோ, மறைக்கவோ முற்ப்படமாட்டான். சத்தியத்தை அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி எவன் வளைக்கவோ மறைக்கவோ முற்ப்படுகிறானோ அவன் மக்களின் பொருத்தம் மூலம் பொருள். பெயர், புகழ் ஈட்டப் பாடுபடுகிறான் என்பதே உண்மையாகும்.
ஒரு உண்மையான முஸ்லிம் தன் முன் எந்த ஒருப் பிரச்சனை வந்தாலும் உடனடியாக இது விஷயமாக அல்லாஹ் குர்ஆனில் என்னக் கட்டளையிட்டிருக்கின்றான், நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து உடன் அதை செயல்படுத்த துணிந்துவிடுவான். அதல்லாமல் அதைச் செயல்படுத்துவதால் மக்களின் எத்தனை சதவிகிதத்தினர் அதனை ஏற்றுக் கொள்வர். எத்தனை சதவிகிதத்தினர் அதனை நிராகரிப்பார்? அதிகமான மக்கள் நிராகரிக்கும் விஷயம் குர்ஆன், ஹதீஸுக்கு பொருத்தமாக இருந்தாலும் இதனை நாம் செயல்படுத்தக் கூடாது என்ற தவறான எண்ணத்தில் முழ்கமாட்டான். இப்படிப்பட்ட சிந்தனைகளில் மூழ்குபவன் இறைப் பொருத்தத்தை விட மக்களின் பொருத்தத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றான் என்பதே உண்மையாகும்.
பெரும்பான்மையான மக்களின் சிந்தனை சத்தியத்திற்குத் தூரமாகவே இருக்கும் என்பதை அல்லாஹ் குர்ஆனின் 6:116 வசனத்தில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். உதாரணமாக இன்றைய பாபரி மஸ்ஜித் விவகாரத்தை எடுத்து ஆராய்வோம்.
பாபரி மஸ்ஜித்
பாபரி மஸ்ஜித் விவகாரம் அறிவு ஜீவிகளிடையே மிகப் பெரிய ஒரு விஷயமாக இருந்து வருகின்றது. முஸ்லிம்களின் கெளரவ பிரச்சனை, இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்வா சாவா? என்பதை முடிவு செய்யும் பிரச்சனை என்றெல்லாம் பேசி விஷயத்தை முற்ற வைத்துள்ளனர். முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கேற்றவாறு செயல்பட்டு மிகப்பெரும் சிக்கலை உண்டாக்கி வைத்துள்ளனர்.
இப்போது நாம் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு அழகிய முன்மாதிரியை எடுத்து ஆராய்வோம். ஹி. 6ம் ஆண்டு நபி(ஸல்) அவர்களும், அவர்களின் அருமைத் தோழர்களும் உம்ராவை நிறைவேற்றும் நோக்கத்துடன் இஹ்ராம் அணிந்து குர்பானி மிருகங்களோடு மதீனாவிலிருந்து மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். ஹுதைபியா என்ற இடத்தில் அவர்கள் குறைஷ்களால் தடுக்கப்படுகின்றனர். அங்கு முஸ்லிம்களுக்கும் குறைஷ்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வருகின்றனர்.
உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்:
1. முஸ்லிம்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் குர்பானி மிருகங்களுடன் வந்திருந்தும் அந்த ஆண்டு மக்கா செல்லாமல் அங்கிருந்து மதீனா திரும்பி விட வேண்டும்.
2. மக்காவிலிருந்து யாரும் முஸ்லிமாகி மதீனா வந்தால் அவர்களை மீண்டும் குறைஷ்கள் வசம் ஒப்படைத்து விட வேண்டும்.
3. மதீனாவில் முஸ்லிமாக இருப்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி மக்கா வந்தால் அவரை முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டியதில்லை.
இந்த மூன்று நியாயமற்ற கோரிக்கைகளும் நபி(ஸல்) அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதன்பின் உடன்படிக்கை எழுத ஆரம்பிக்கும் போது “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” என்று ஆரம்பத்தல் எழுதப்பட்டது. குறைஷ் தரப்பில் வந்திருந்த ஸுஹைல் பின் அம்ரு என்பவர் இதனைத் தடுத்து “பிஸ்மிக்கல்லாஹும்ம” என்று குறைஷ்கள் வழக்கப்படி எழுதும்படி வற்ப்புறுத்தி அதுவும் நபி(ஸல்) அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு “அல்லாஹுவின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதப்படுகிறது. அதனையும் ஸுஹைல் ஆட்சேபித்து “முஹம்மதுப் பின் அப்துல்லாஹ்” என்று எழுதும்படி வற்ப்புறுத்துகிறார். நபி(ஸல்) அவர்கள் அதனையும் ஏற்று, எழுதிக்கொண்டிருந்த அலி(ரழி) அவர்களிடம் அதனை மாற்றி எழுதும்படி சொல்கிறார்கள். அலி(ரழி) அவர்கள் “முஹம்மதுர் ரஸுரில்லாஹ்” என்று எழுதியதை அடித்து எழுதத்தயங்கவே நபி(ஸல்) அவர்கள் “முஹம்மதுர்ரஸுரில்லாஹ்” என்ற பதம் எங்கு எழுதப்பட்டிருக்கின்றது என்றுக் காட்டச் சொல்லி அதனை அவர்களின் புனிதக் கரங்களாளேயே அடித்து விடுகிறாார்கள்.
இவ்வாறு குறைஷ்களுக்காக வந்திருந்த ஸுஹைலினுடைய கோரிக்கைகளை எல்லாம் ஏற்று ஒப்பந்தம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகி அமுலுக்கு வரவில்லை. இந்த நிலையில் ஸுஹைலினுடைய மகனார் அபூ ஜந்தல்(ரழி) அவர்கள் விலங்கிடப்பட்டவராக முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்து சேர்கிறார். அவர் இஸ்லாத்தைத் தழுவிய ஒரே காரணத்திற்காக குறைஷ்களால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். என்பதனை அவரது பரிதாபத்திற்குரிய புண்பட்ட உடல் படம் பிடித்துக் காட்டுகிறது. அவரைப் பார்த்ததும் முஸ்லிம்களின் உள்ளங்கள் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டன. ஆணால் ஸுஹைலோ அபூ ஜந்தல்(ரழி) யை மீண்டும் தம்மிடம் ஒப்படைத்து விட வேண்டும் என பிடிவாதம் செய்கிறார். நபி(ஸல்) அவர்கள் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகி அமுலுக்கு வரவில்லையே. அதனால் இவரை மட்டும் நம்மோடு விட்டு விடும் என்று கேட்கிறார்கள். ஸுஹைல் ஒப்புக் கொள்வதாக இல்லை. அப்போது அபூ ஜந்தல்(ரழி) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து “முஸ்லிம் கூட்டத்தார்களே! நிச்சயமாக, நான் முஸ்லிமாகி வந்திருக்க, என்னை இணைவைப்பாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க போகின்றீர்களா? நிச்சயமாக நான் பட்டிருக்கும் துன்பத்தை நீங்கள் பார்க்கவில்லையா? என்று தழுதழுத்தக் குரலில் வேண்டுகோள் விடுக்கிறார். அவரது பரிதாப நிலையைப் பார்த்து உருகாத மனித உள்ளங்கள் இருக்க முடியாது. ஆனால் கல்மனம் கொண்ட குறைஷ்கள் பிடிவாதமாக இருந்தனர். இந்த அளவு விட்டுக்கொடுத்து சமாதான உடன்படிக்கை செய்யப்படுவதை முஸ்லிம்களால் ஜீரனிக்க முடியவில்லை. இந்த உம்மத்திலேயே அபூபக்கர்(ரழி) அவர்களுக்குப்பின் சிறப்புக்குரியப் பதவிகளை வகித்தவர் உமர்(ரழி) அவர்களாவர். இரண்டாவது கலிஃபா, சொர்க்கத்து நன்மாரயம் பெற்ற பத்துப் பேரில் ஒருவராவார். நீதி வழுவாது ஆட்சி செய்துக் காட்டி மங்காத சரித்திரம் படைத்தவர். அப்படிப்பட்டவர்களால் கூட இந்த சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தன்னிலை இழந்து நபி(ஸல்) அவர்களிடம் நிகழ்த்திய உரையாடல் வருமாறு:
உமர்(ரழி) : அல்லாஹ்வுடைய நபியே! உண்மையில் தாங்கள் அல்லாஹ்வுடைய நபியல்லவா?
நபி(ஸல்) : ஆம்!
உமர்(ரழி) : நாம் உண்மையான மார்க்கத்திலும் நம் விரோதிகள் பொய்யான மதத்திலும் இருக்கவில்லையா?
நபி(ஸல்) : ஆம்!
உமர்(ரழி) : அவ்விதமானால் நாம் ஏன் நம்முடைய (சத்திய) மார்க்கத்திற்கு இழிவை ஏற்க வேண்டும்.
நபி(ஸல்) : நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதரே! நான் அவனுக்கு மாறு செய்யமாட்டேன். அவனே எனக்கு உதவிப் புரியக் கூடியவன்.
நபி(ஸல்) அவர்களிடம் உரையாடி விளக்கம் பெற்றும் உமர்(ரழி) அவர்களால் திருப்தியடைய முடியவில்லை. அபூபக்கர்(ரழி) அவர்களிடம் சென்று அடுத்து நிகழ்த்திய உரையாடல் பின்வருமாறு:
உமர்(ரழி) : அபூபக்கரே! இவர்கள் அல்லாஹ்வுடைய உண்மையான நபியல்லவா?
அபூபக்கர்(ரழி) : ஆம்!
உமர்(ரழி) : நாம் உண்மையான மார்க்கத்திலும் ம் விரோதிகள் பொய்யான மதத்திலும் இருக்கவில்லையா?
அபூபக்கர்(ரழி) : ஆம்!
உமர்(ரழி) : அவ்விதமானால் நாம் ஏன் நம்முடைய (சத்திய) மார்க்கத்திற்கு இழிவை ஏற்க வேண்டும்.
அபூபக்கர்(ரழி) : மனிதரே! நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரே! அவர்கள் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள். அவன் அவர்களுக்கு உதவிப் புரியக் கூடியவர்கள். எனவே அவர்களின் கயிற்றை (அடிச்சுவடுகளை) வலுவாகப் பற்றிப் பிடியும். இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக அவர்கள் உண்மையின் மீதுதான் இருக்கிறார்கள்.
(பின்னர் உமர்(ரழி) அவர்கள் இந்த அதிகப் பிரசிங்கத்தனமான வினாக்களுக்குப் பகிரங்கமாகப் பல நற்காரியங்களைச் செய்ததாக அவர்களேக் கூறுகிறார்கள்.)
இப்படி குறைஷ்கள் தாங்கள் தான் பெரும்பான்மையினர் என்ற அகந்தையில் முட்டாள்த்தனமாக விதித்த நியாயமற்ற பலக் கோரிக்கைகளை ஏற்று உடன்படிக்கை செய்தப்பின், நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் அந்த இடத்திலேயே குர்பானியை அறுத்துவிட்டு தலைமுடியைக் களைந்து இஹ்ராமிலிருந்து வெளியாகும்படி கூறினர். நபி(ஸல்) அவர்கள் இதனை மூன்று முறைக் கூறியும் நபித் தோழர்கள் யாரும் இதனை நிறைவேற்ற எழுந்திருக்கவில்லை. அதனால் நபி(ஸல்) அவர்கள் தனதுக் கூடாரத்திற்குள் சென்று தனது மனைவி உம்முஸலமா(ரழி) அவர்களிடம் தங்களுக்கு ஏற்ப்பட்ட மனக்கவலையை வெளியிட்டனர். அதற்கு உம்முஸலமா(ரழி) அவர்கள் நபியே! நீங்கள் உங்கள் குர்பானியை அறுத்துவிட்டு முடியையும் களைத்து விடுங்கள்” என்று ஆலோசனைக் கூறினார்கள். நப(ஸல்) அவர்கள் வெளியில் வந்து தனது மனைவிக் கூறிய வண்ணமே செய்தார்கள். இதனைக் கண்ட நபித்தோழர்களும் கவலைத் தோய்த்த முகத்துடன் எழுந்து குர்பானிகளை அறுத்துவிட்டு முடியையும் களைந்துக் கொண்டனர்.
இப்படி முஸ்லிம்களில் அதிகமானவர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட மிகப்பெரும் தோழ்வி என்றும், இஸ்லாத்திற்கு ஏற்ப்பட்ட இழிவு என்றும் எண்ணியதை அல்லாஹ் ஒரு தெளிவான வெற்றி என்று அறிவிக்கின்றான். அதுமட்டுமல்ல தனது உம்மத்திலுள்ள மிகப்பெரும்பான்மையினர் கடுமையாக எதிர்த்தும் அதைப் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக் கொண்டதினால், நபி(ஸல்) அவர்களின் முன், பின் தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தனது அருட்கொடையை பூர்த்தி செய்து நேரான வழியில் நடத்துவதாகவும் உறுதி அளிக்கின்றான். ஒரு வலிமைமிக்க உதவியாக உதவி செய்வதாக கூறுகிறான். முஸ்லிம்கள் தங்கள் ஈமானுடன் மேலும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காகவும், அவர்களின் உள்ளங்களில் அமைதியை அளிக்கவும், அவர்களைச் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யவும் இதை நிகழ்த்தியதாகவும், முஸ்லிம்கள் தோழ்வி என்று எண்ணியதை மகத்தான வெற்றி என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். (பார்க்க 48:1-5)
அப்போது குறைஷ்கள் முஸ்லிம்களை கஃபாவை விட்டும் தடுத்தது, குர்பானி மிருகங்கள் அவற்றிற்குரிய இடத்தை அடைய முடியாமல் தடுத்தது எவ்வளவு பெரிய கொடுஞ்செயல் வைராக்கியத்திலும் முட்டாள்தனமான வைராக்கியம். ஆயினும் அந்த இடத்தில் முஸ்லிம்கள் அதனைத் தங்கள் கெளரவப் பிரச்சனையாகக் கருதாமல் அல்லாஹ்வின் விருப்பப்படி விட்டுக் கொடுத்து சமாதான உடண்படிக்கை செய்துக் கொண்டது அல்லாஹ்வின் அருளே இந்த விபரங்களை அல்லாஹ் 48:25,26 வசனங்களில் விவரிக்கின்றான். (இந்த விபரங்களை பெரும்பாலான ஹதீஸ் நூல்களில் ஹுதைபியா உடன்படிக்கை என்ற பாடத்தில் காணலாம்.)
இந்த சரித்திர முக்கியத்துவமுள்ள வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து இன்று முஸ்லிம்கள் படிப்பினை பெற வேண்டாமா? அன்று குறைஷ் மதவெறியர்கள், கடைப்பிடித்த முட்டாள்தனமான வைராக்கியம், அணு அளவும் நியாயமில்லாதக் கோரிக்கை, அகந்தை, வரட்டு கெளரவம் இவற்றால் மற்றவர்களை மனிதர்களாக மறக்காத மனிதாபிமானமற்றக் போக்கு இவையனைத்தைம் இன்றைய ஹிந்து மதவெறியர்கள் கைக் கொண்டு பாபரி மஸ்ஜித்தை இராமர் கோவிலாக்க வேண்டும் என்று முட்டாள்தனமான வைராக்கியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மக்களைத் தூண்டி வருகின்றனர். இராமர் அங்கு பிறக்கவுமில்லை. அந்த இடத்தில் உலகம் தோன்றியதிலிருந்து என்றுமே கோவில் இருந்ததில்லை. அங்கு இருந்த ஒரு கோவிலை இடித்துவிட்டு மன்னர் பாபர் மஸ்ஜித் கட்டினார் என்பது கலப்படமே இல்லாதப் பொய். பாபரி மஸ்ஜித் கடந்த 400 ஆண்டுகளாக முஸ்லிம்களுக்குரிய சொத்து. அதனை நியாயமற்ற முறையில் ஹிந்து மத வெறியர்கள் கைப்பற்ற முனைகின்றனர் என்பது போன்ற உண்மைகளை இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல மனிதத்தன்மையுள்ள எந்த மதத்தினருமே மறுக்கமாட்டார்கள். அன்று குறைஷ்கள் தாங்கள் தான் பெரும்பான்மையினர் என்ற அகந்தையில் செயல்பட்டதுப் போல், இன்று ஹிந்து மத வெறியர்கள் தாங்கள் தான் பெரும்பான்மையினர் என்ற அகந்தையில் செயல்படுகின்றனர்.
அல்லாஹ் 48:26 ல் குறிப்பிட்டதுப் போல் ஹிந்து மத வெறியர்களின் முட்டாள்தனமான வைராக்கியத்தை முறியடிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அன்று அல்லாஹ்வின் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருளச் செய்து அவர்களுக்கு இறையுணர் (தக்வா)வுடைய வாக்கியத்தின்மீதும் அவர்களை நிலைப் பெற செய்தான். அவர்களோ அதற்கு மிகவும் தகுதி உடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் (பார்க்க 48:26)
அதேப் போல் இன்றைய முஸ்லிம்கள் அதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் ஆக வேண்டாமா? அதற்கு இன்றும் முஸ்லிம்கள் தங்கள் கெளரவத்தையோ, தங்கள் மார்க்கத்திற்கு இழிவு ஏற்படுகின்றது என்பதையோ பார்க்காமல் விட்டுக்கொடுத்து அதன் மூலம் வெற்றிப் பெற முன் வர வேண்டும். முட்டாள்தனமான வைராக்கியத்துடன் பாபரி மஸ்ஜித் இடத்தில் இராமர் கோவில்க் கட்ட வேண்டும். என்ற வீண் பிடிவாதம் பிடிக்கிறீர்களா? உங்கள் பிடிவாதம் காரணமாகவும் இரண்டு சமூகங்களுக்கிடையே சுமூகமான உறவு நீடிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் நாங்கள் விட்டுக்கொடுக்கின்றோம். பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்கின்றோம். நீங்கள் பொய்யாக வாதிப்பதுப் போல் அதனை ஒரு புனிதமான இடமாக பொய்யாகவோ, மெய்யாகவோ நாங்கள் வாதிக்கவில்லை. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் அது இறைவனை வணங்குவதற்கு கட்டப்பட்ட ஒரு மஸ்ஜித் மட்டுமே. வேரொரு இடத்திலும் மஸ்ஜிதைக் கட்டி இறைவனைத் தொழ முடியும். ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் தொழுவதற்காக வேறு இடத்தில் ஒரு மஸ்ஜிதைக் கட்டித் தந்துவிட்டு பாபரி மஸ்ஜிதை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் உள்ளங்கள் இதனை வெறுத்தாலும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி இதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். என்று முஸ்லிம்கள் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்.
ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இருந்துவரும் அல்லாஹ்வின் புராதன இல்லம் கஃபா. இப்ராஹிம்(அலை) அவர்கள் அதனைப் புதுப்பித்து அல்லாஹ்வை மட்டும் வணங்கும் இடமாக தன்னுடைய சந்ததிகளிடம் வாக்கு வாங்கிக் கொண்டு விட்டுச் சென்றார்கள். (பார்க்க 2:132) அந்த அல்லாஹ்வின் வீட்டில் இடைக்காலத்தில் சிலை வணக்கம் செய்துக் கொண்டிருந்தார்கள் குறைஷ்கள். சிலை வணக்கம் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் போதித்து வந்தார்களே அல்லாமல் பலாத்காரமாக கஃபாவைக் கைப்பற்றும் முயற்சியில் நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. ஹுதைபா உடன்படிக்கை சமயம், நல்ல சந்தர்ப்பம் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையில் ஒன்றுப்பட்டு உயிர் இழக்கும் வரையில் போராடி சஹீதாக தயாராக இருந்தார்கள். அதற்காக நபி(ஸல்) அவர்களிடம் கைப்பிடித்து உறுதியளித்தும் இருந்தனர். இதனையே பைஅத்து ரிழ்வான் என்று சொல்லுகிறோம். (பார்க்க 48:10) இன்று முஸ்லிம்களிடையே இருப்பதுப் போல் ஆளுக்கொருக் கொள்கை, நாளுக்கொரு இயக்கம்(அமைப்பு) என்ற நிலை இருக்கவில்லை. அன்று போராடி இருந்தால் முஸ்லிம்கள் வெற்றிப்பெற்று கஃபாவைக் கைப்பற்றும் வாய்ப்பும் இருக்கத்தான் செய்தது. இதற்கு முன் நடைபெற்ற தற்காப்பு போர்களில் முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றுத் தான் இருந்தார்கள். இவ்வளவு சாதகமான சூல்நிலைகள் இருந்தும் நபி(ஸல்) அவர்கள் கெளவரத்தைப் பார்க்காமல், இஸ்லாத்திற்கு இழிவு ஏற்படுகிறது என்று எண்ணாமல் விட்டுக் கொடுத்த சமாதான உடன்படிக்கை செய்துக் கொள்கிறார்கள். கஃபாவை அதன் இடத்திலிருந்து வேரொரு இடத்திற்கு மாற முடியாது. கஃபா புனிதமான இடம். அதற்க்கென்று தனிச்சிறப்புகள் பல உண்டு.
இந்த நிலையில் கஃபா விஷயத்திலேயே நபி(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள் என்றால் பாபரி மஸ்ஜித் விஷயமாக விட்டுக் கொடுப்பதுத் தவறில்லை என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். நபி(ஸல்) அவர்கள் விட்டுக்கொடுத்தக் காரணத்தால் அடுத்த நான்கு ஆண்டுகளிலேயே இரத்தம் சிந்தாமல் கஃபா முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் குறைஷ்களில் பலர் தங்களுக்கிடையே இருந்தக் காழ்ப்புணர்ச்சிகள் மறைந்து, உண்மை இஸ்லாத்தை விளங்கி இஸ்லாத்தை தழுவுகின்றனர், அன்று விட்டுக்கொடுத்ததால் கஃபா காலங்காலமாக அல்லாஹ்வுக்கு இணையாக சிலைகளுடைய இடமாக இருந்து விடவில்லை. நான்கு ஆண்டுக் காலத்திலேயே புனிதமிக்க இடமாக மீண்டும் ஆகி விட்டது. நபி(ஸல்) அவர்களின் நபித்துவக் காலத்திலிருந்து சுமார் 21 ஆண்டுகள் கஃபாவில் சிலைகள் இருக்கும் நிலையிலேயே நபி(ஸல்) அதனை எதிர்த்து சத்தியப்பிரச்சாரம் செய்துக் கொண்டும், மதீனா சென்றதிலிருந்து கஃபாவை நோக்கித் தொழுதுக் கொண்டும் இருந்தனர் என்பதனை முஸ்லிம்கள் கவனத்தில்க் கொள்ள வேண்டும். இதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் எந்த அளவு விட்டுக் கொடுத்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதனைப் பாடமாக கொள்ள வேண்டும். இவ்வளவு அழகிய முன்மாதிரியைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இன்று அதற்கு மாற்றமாக தங்களின் சொந்த மனோ இச்சைக்கும், வரட்டு கெளரவத்திற்கும், மலிவான அரசியல் ஆதாயத்திற்கும் ஆளாகியிருப்பது உண்மையில் வேதனைக்குரியது. பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுப்பதால் ஏற்படும் விளைவுக்காக அறிவு ஜீவிகள் சொல்லும் கூற்றுகளில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.
பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுப்பதால் முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படை உரிமையை இழந்து விடுகிறார்கள், இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்பது அவர்களின் கூற்று.
பாபரி மஸ்ஜிதாக இருக்கட்டும் அல்லது எந்த மஸ்ஜிதாக இருக்கட்டும். அவை அனைத்தும் முஸ்லிம்களால் கட்டப்பட்டவை. அதே சமயம் ஹிந்து மத வெறியர்களே முஸ்லிம்களுக்கென்று ஒரு மஸ்ஜிதை கட்டித் தந்துவிட்டு பாபரி மஸ்ஜிதை எடுத்துக் கொள்வதாக இருந்தால் முஸ்லிம்களும் இந்த நாட்டு பிரஜைகளே என்பற்கு இந்து மத வெறியர்களே ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்பதற்கு இது வருங்காலத்தில் பெரிய சான்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்திய மண்ணில் அவர்கள் கைகளாலேயே முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் கட்டித் தந்தால் அதன் பொருள் என்ன? முஸ்லிம்களும் இந்தியப் பிரஜைகளே என்பதனை அவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தானே. இந்த ஒரு மஸ்ஜிதை விட்டுக் கொடுத்தால் அடுத்து ஒவ்வொரு மஸ்ஜிதாக ஆக்கிரமிக்க முற்படுவார்கள் என்பது இன்னொருக் கூற்று. இது முஸ்லிம்களைத் தூண்டிவிடும் தவறானக் கூற்றாகும். பாபரி மஸ்ஜித் கடந்த ஒரு நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒரு சர்ச்சையாகும். அதுவும் வெள்ளையர்கள் ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து அவர்கள் லாபம் அடைய வேண்டும் என்ற தவறான நோக்கத்தில் எழுதி வைத்த சரித்திரப் புரட்டாகும். அப்படிப்பட்ட தவறானக் கூற்றுகளை ஆதாரமாக வைத்தே ஹிந்து மத வெறியர்கள் வெறியாட்டம் ஆடுகிறார்கள். எல்லா மஸ்ஜிதுகள் சம்பந்தமாக இப்படி வெறியாட்டம் ஆட வழியில்லை என்பதே உண்மையாகும். அப்படியே தவறான வாதம் செய்ய முற்ப்பட்டாலும் ஒவ்வொரு மஸ்ஜிதுக்கும் பகரமாக வேறு ஒரு மஸ்ஜிதை அவர்கள் கைகளாலேயேக் கட்டித் தந்துவிட்டுத் தானே எடுக்கப் போகிறார்கள். பழங்கால வசதிகள் குறைந்த பள்ளிகளுக்குப் பகரமாக நவீன வசதிகளுடன் கூடிய பள்ளிகள் கட்டித் தந்தால் நல்லது தானே, அவர்களே அவர்கள் கைகளாலேயே பல பள்ளிகளைக் கட்டித் தந்தால் முஸ்லிம்களும் இந்த நாட்டு பிரஜைகளே என்பற்கு இந்து மத வெறியர்களே ஒப்புதல் அளித்து விட்டு பின்னால் அவர்களாலும் அதை மறுக்க முடியுமா? அந்தப் பள்ளிகள், கோவில்கள் இருந்த இடங்களில் கட்டப்ட்டவை என்று பொய்ப் பிரச்சாரம் செய்து ஹிந்துப் பழங்குடி மக்களைத் தூண்டவும் அவர்களுக்கு வகை இல்லாதுப் போகுமே. முஸ்லிம்களும், ஹிந்துக்களும் பாஸ்பரம் ஒற்றுமையாகவும், அந்நியோன்யமாகவும் வாழ இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்ப்படுத்தித் தரும் என்பதில் ஐயம் இருக்க முடியுமா?
அதுமட்டுமல்ல இந்த பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தங்கள் மனோ விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பதால் பல நன்மைகள் விளையலாம். இன்று இரு சமுதாயத்திருக்குமிடையே கெளரவப் பிரச்சனைக் காரணமாக நிலவி வரும் கசப்புணர்வு நீங்கி விடும். ஹிந்து சமுதாயத்தவர் ஆத்திரமும், குரோதமும் தீர்ந்து தன்னிலைக்கு வந்து நிதானமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அதனால் அவர்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஹுதைபியா உடன்படிக்கைக்கு குறைஷ்கள் சார்பாக முன்னணியில் நின்ற ஸுஹைல் இஸ்லாத்தைத் தழுவியது போல் இன்று ஹிந்துக்களுக்காக முன்னணியில் நிற்கும் பலர் இஸ்லாத்தை தழுவவும் செய்யலாம். பாபரி மஸ்ஜிதுக்கு பகரமாக தனியொரு மஸ்ஜித் கட்டித் தந்துவிட்டு அதனை எடுத்துக் கோவிலாக்கியவர்கள், பின்னால் அதனை தங்கள் கைகளாலேயே மீண்டும் மஸ்ஜிதாக ஆக்கும் வாய்ப்பும் வரலாம். அல்லாஹ்வின் ஆணைக்கு அடிப் பணிந்தால் இத்தனையும் நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்கு 48ம் அத்தியாயம் தக்க சான்றாகும்.
அரபிய நாட்டைச் சார்ந்த இஸ்லாம் மயமாக்க கஃபாவைக் கொண்டு அல்லாஹ் வைத்த சோதனையில் அன்றைய முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். அதே போல் இந்திய நாட்டை இஸ்லாமயமாக்க அல்லாஹ் வைத்திருக்கும் சோதனையான பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது வேணவாவாகும். முஸ்லிம்களை இந்தக் கோணத்தில் சந்திக்க வைக்க அறிவு ஜீவிகள் முன்வர வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முன்மாதிரிக்கு மாறாக முஸ்லிம்கள் இன்று தங்கள் மனோ இச்சைக்கு அளானதால், அதற்கு இந்த அறிவு ஜீவிகளும் தூபம் போட்டதால் என்னென்ன கேடுகள் விளைந்திருக்கின்றன என்பதனையும் சிந்திக்க வேண்டும். பாபரி மஸ்ஜித் இடத்தின் பெறுமதியைவிட கோடிக்கணக்கான மடங்கு பெருமதி வாய்ந்த சொத்துக்களையும், நிலங்களையும் முஸ்லிம்கள் இழந்தள்ளனர். அது மட்டுமல்ல அன்றிலிருந்து இன்று வரை பல லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் உயிரை இழந்ததோடு, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் விலை மதிக்க ஒண்ணா தங்கள் கற்பை இழக்க நேரிட்டது. லட்சக்கணக்கானோர் ஊனமுற்றோர்களாக நரக வேதனையை இவ்வுலகிலேயே அனுபவிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் விவகாரம் காரணமாக முஸ்லிம் சமுதாயம் அனுபவித்து வரும் துன்பங்களும், தொல்லைகளும் எழுத்தில் வடித்து மாளாது. இந்த விவகாரம் முடிவுக்கு வராவிட்டால் இது போல் எத்தனைக் கோடித் துன்பங்களை முஸ்லிம் சமுதாயம் அனுபவிக்க வேண்டி வருமோ? அது மட்டுமா? முஸ்லிம்களின் இந்த மனோ இச்சைக்கு ஏற்ற தவறான போக்கின் காரணமாக இந்த நாட்டில் ஹிந்து மத வெறியர்கள் வளர்நது வருகிறார்கள். 1948-ல் தேசபிதா என இந்தியப் பெரும்பான்மை மக்களால் போற்றப்படும் திரு எம்.கே. காந்தியைச் சுட்டுக் கொன்றதால் ஹிந்து சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்பட்டிருந்த R.S.S. காரர்களும், அவர்களைச் சார்ந்த அரசியல்க் கட்சிகளும் செழித்து வளர இந்த பாபரி மஸ்ஜித் விவகாரம் நல்ல உரமாகப் போய் விட்டது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் 2 பிரதிநிதிகளைக் கொண்ட B.J.P. இந்த நாடாளுமன்றத்தில் 86 பிரதிநிதிகளை வெற்றிகரமாக நுழையச் செய்ய இந்த பாபரி மஸ்ஜித் விவகாரமே பெரிதும் உதவியது என்றால் அது மிகையாகாது. ஆட்சியைப் பிடிக்க கனவுக் கொண்டிருந்த B.J.P யினர் சில மாநிலங்களில் ஆட்சி அமைக்க வழி வகுத்துக் கொடுத்தது. இந்த பாபரி மஸ்ஜித் விவகாரமே என்பதை யாரால் மறுக்க முடியும். இப்படி முஸ்லிம்களுக்கு விரோதமான சக்திகள் இந்த நாட்டில் வளர்வதற்கு முஸ்லிம்களே துணைப் போகிறார்கள் என்றால் உண்மையான முஸ்லிம்கள் வேதனைப்படாமல் இருக்க முடியுமா? இந்தப் போக்கு நீடித்தால் ஹிந்து மத வெறியர்கள் இந்திய நாட்டின் ஆட்சியைப் பிடிக்க முஸ்லிம்களே உதவி செய்தாகத்தான் முடியும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினரின் மனோ நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டு அவர்களின் அன்பையும், அபினானத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் செயல்பட்டு அறிவு ஜீவிகளே இவற்றிற்க்கெல்லாம் காரணம் என்றால் அதில் தவறு இருக்கிறதா? மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடும் தலைவர்கள் ஒழிந்து அனைவரும் வெறுத்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டும் ஒரு தலைவனை இந்தச் சமுதாயம் பெறாதவரை விமோசனம் இல்லை. அன்று முஸ்லிம்களின் மாபெறும் வெற்றிக்கு ஹுதைபியா உடன்படிக்கை சமயம் முஸ்லிம்கள் அனைவரின் மனோ விருப்பத்திற்கு விரோதமாக அல்லாஹ்வின் விருப்பத்தை நிலைநாட்டும் மனோ உறுதியை நபி(ஸல்) அவர்களுக்கு அளித்ததுப் போல் அப்படிப்பட்ட ஒரு சமுதாயத் தலைவனையும், அந்தத் தலைவனுக்கு அல்லாஹ்வின் விருப்பத்தை நிலைநாட்டும் மனோ உறுதியையும் அளிக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். இதுப் போல் பல சம்பவங்களை ஆதாரமாகத் தர முடியும். தொழுகை சம்பந்தப்பட்ட பல விஷயங்களையே சின்னஞ்சிறிய விஷயங்கள் எனக் கூறிக் கொண்டு மனமுரணாக நபி மொழிக்கு மாறு செய்வதுப் போல், பெரும் விஷயங்களாக இந்த அறிவு ஜீவிகள் எண்ணி செயல்படும் காரியங்களிலும் நபி வழிக்கு முரணாகவே செயல்படுகின்றனர் என்பதே உண்மையாகும். அடுத்து இந்த அறிவு ஜீவிகளின் இந்தத் தவறான போக்கிற்குரிய அடிப்படைக் காரணங்களையும், அவற்றைவிட்டு விடுபட வழிவகைகளையும் ஆராய்வோம்.