நபி வழியில் நம் தொழுகை

in 1990 மார்ச்

நபி வழியில் நம் தொழுகை

தொடர்: 39    அபூஅப்திர் ரஹ்மான்

   

என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்”

என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

சென்ற இதழில் இப்பகுதியில் “தோளோடு தோள், காலோடு கால் சேர்த்து ஸஃப்பு நிற்க வேண்டும்” எனும் பகுதியின் தொடர்:

மேற்காணும் ஹதிஸின்படி ஒருவர் பிறர் தோளோடு தமது தோளைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் பிறர் முட்டுக்காலோடு தமது முட்டுக்காலையும், கரண்டை மொளியோடு தமது கரண்மை மொளியையும் சேர்த்து வைத்துக் கொள்வதென்பது சிரமமானதும் சாத்தியமில்லாததும் கூட. ஆகவே இவ்வாறு அந்த ஹதீஸில் சேர்த்து வைத்தக்கொள்வது பற்றி கூறியிருப்பதன் பொருள், அந்த அளவு மிக நெருக்கமாக பிறர் முட்டுக்காலுக்கு அருகில் தமது முட்டுக்காலையும், கரண்டை அமாளிக்கு அருகில் தமது கரண்டை மொளியையும் வைத்திருந்தார்கள் என்றெ கொள்ள வேண்டும்.

எதற்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம்!

தோளோடு தோள், காலோடு கால் சஹாபாக்கள் தாமாகவே சேர்த்து வைத்திருந்ததாக ஹதீஸில் காணப்பட்டாலும் இவ்வாறு அவர்கள் சேர்த்து வைத்தவர்களாக, நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுததை நபி(ஸல்) அவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புகாரீயின் அறிவிப்பிலிருந்து தெரிய வருகிறது. அதாவது நிச்சயமாக நான் உங்களை எனது முதுகுக்குப் பின்னாலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதன்படி சஹாபாக்களின் இச்செய்கையை நபி(ஸல்) அவர்களும் தமது முதுகுக்குப் பின்னால் பார்த்திருப்பதால் இவ்வாறு தோளோடு தோள், காலோடு கால் சேர்த்து நிற்பதற்கு நபி(ஸல்) அவர்களின் அங்கிகாரமும் ஆதாரமாக உள்ளது என்பதை அறிகிறோம்.

தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்?

1. “தொழுகைக்கு “இகாமத்” சொல்லப்பட்டால் என்னைப் பார்க்காத வரை நீங்கள் எழுந்திருக்க வேண்டாம். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

2. தொழுகைக்கு “இகாமத்” சொல்லப்படும், நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் புறப்பட்டு வருவதற்கு முன்பே நாங்கள் எழுந்து வரிசைகளை சரிசெய்து கொண்டிருப்போம். பினனர் அவர்கள் வந்து தமது இடத்தில் நின்று கொள்வார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

3. பிலால்(ரழி) அவர்கள் (ளுஹ்ரு தொழுகைக்கு) சூரியன் சாய்ந்தவுடன் பாங்கு சொல்வார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிலிருந்து) புறப்படும்வரை “இகாமத்” சொல்லமாட்டார்கள். அவர்கள் (வீட்டை விட்டும்) புறப்பட்டு அவர்களைத் தாம் பார்க்கும் போது தான் “இகாமத்” சொல்லுவார்கள். (ஜாபிருபின் ஸமுரா(ரழி), முஸ்லிம்)

4. அனஸ்(ரழி) அவர்கள் முஅத்தின்-பாங்கு சொல்பவர் “கத்காமத்திஸ்ஸலாத்” என்று கூறும் போதுதான் (தொழுகைக்காக) எழுந்து நிற்பார்கள்.(இப்னு முன்திர்)

சிலர் கூறுவதுப்போல் “இகாமத்” சொல்ல ஆரம்பித்தவுடன் எழுந்து நின்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கோ, மற்றும் சிலர் கூறுவதுப் போல்  “இகாமத்” சொல்லி முடிந்தவுடன் எழுந்திருக்க வேண்டும் என்பதற்கோ ஹதீஸ்களில் ஆதாரமில்லை.

இகாமத் சொல்லும்போது இன்னக்கட்டத்தில்தான் மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட வரையளவு இருப்பதாக யாரும் கூற நான் கேட்டதில்லை” என்று இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தமது “மு அத்தா” வில் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே மேற்காணும் ஹதீஸ்களின் படி பொதுவாக இகாமத் சொல்லும் போது மக்கள் எழுந்து தமது வரிசைகளை சரிசெய்துக் கொள்ள வேண்டும் என்பதையும் “இகாமத்” சொல்பவர் இமாமுடைய நிலையை கவனித்து “இகாமத்” சொல்ல வேண்டும் என்பதையும் அறிகிறோம்.

ஓர் இமாம் தாம் “இமாமாக நின்று தொழ வைக்கிறேன்”

என்று நிய்யத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை:

* நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் (தனித்துத்) தொழுது கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் வந்து அவர்களின் சமீபத்தில் ஒரு பக்கமாக (தொழுவதற்காக) நின்று கொணடேன். பிறகு மற்றொருவர் வந்து அவரும் நின்று கொண்டார். இருதியாக ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது. நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தமக்குப் பின்னால் (இருந்து தொழுதுக் கொண்டு) இருப்பதை உணர்ந்து (தொழுகையை நீட்டாமல்) குறைந்த பட்ச அளவுள்ள தொழுகையாக தொழ வைத்து முடித்தார்கள்.  (அனஸ்(ரழி), முஸ்லிம்)

நான் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடப்புறத்தில் நின்றுக் கொண்டிருந்ததேன். அப்போது அவர்கள் (தாம் தொழும்போதே) எனது தலையைப் பிடித்து இழுத்து தமது வலப்புறம் நிற்கும்படி செய்தார்கள்.

(இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம்)

மேற்காணும் இரு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் தனிமையாக நின்றுத் தொழுதுக் கொண்டிருக்கும் போது பிறர் அவருடன் சேர்ந்து தொழுதுள்ளார்கள் என்பதைப் பார்க்கின்றோம். ஆகவே அவர்கள் ஆரம்பத்தில் இவர்களுக்கு தாம் இமாமாக நின்று தொழ வைப்பதாக நிய்யத்து செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் ஆரம்பத்தில் தனிமையாகவே தொழுதுக் கொண்டிருந்தோர் என்பதை அறிகிறோம்.

மேற்காணும் இரு ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் நபிலான தொழுகைக்கு இமாம், தாம் “இமாமாக நின்று தொழ வைக்கிறேன்” என்று நிய்யத்து செய்ய வேண்டிய தேவையில்லை. ஆணால் பர்ளான தொழுகையாயிருந்தால் நிய்யத்து செய்தாக வேண்டும் என்கிறார்கள். அதுவும் சரியானதல்ல.

காரணம் நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை தமது சஹாபாக்களுக்கு தொழ வைத்தார்கள். அதன் பிறகு நபித்தோழர்களில் ஒருவர் அங்கு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தைக் கூறிவிட்டு தொழுவதற்கு நின்று விட்டார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் இவருடன் சேர்த்து தொழுது இவருக்கு உதவி செய்வோர் உங்களில் எவரும் இல்லையா? என்று கேட்டார்கள். உடனே ஒருவர் எழுந்து அவருடன் சேர்ந்து தொழுதார். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்)    

இவ்வறிவிப்பில் ஒருவர் பர்ளான தொழுகையின் ஜமாஅத்தைத் தவறவிட்டு அவர் தனிமையாகத் தொழுகையில், பர்ளு தொழுது கொண்டிருக்கும் அவரை, மற்றொரு பின்பற்றித் தொழுதுள்ளார். அவர் ஆரம்பத்தில் தான் இமாமாக நின்று தொழ வைப்பதாக நிச்சயித்துச் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிவதுடன் நபி(ஸல்) அவர்களும் அவரை நோக்கி இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நீர் நிச்சயித்துச் செய்துக் கொள்ளும் என்று கூறவுமில்லை, என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நிய்யத்து செய்ய வேண்டும் என்பதற்கு ஹதீஸ்களின் வாயிலாக ஆதாரம் இல்லை என்பதை அறிகிறோம்.

இமாம் மக்களின் நிலையை உணர்ந்து தொழுகையைச் சுலபமாக்கி கொள்ள வேண்டும்:

* உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்தால் அவர் (தொழுகையைச்) சுலபமாக்கிக் கொள்வாராக!

ஏனெனில் அவர்களில் இயலாதவர் நோயாளி, வயோதிகர் ஆகியோர் உள்ளனர். உங்களில் ஒருவர் தனிமையாகத் தொழுதால் தமது விருப்பத்திற்கேற்ப (தொழுகையை) நீட்டிக் கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

* ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதானையாக இன்ன நபர் எங்களுக்கு தொழுகையை நீட்டி தொழ வைப்பதால், நான் காலைத் தொழுகைக்கு காலதாமதமாக செல்கிறேன் என்று கூறினார். அன்று நபி(ஸல்) அவர்களுக்கு பிரசங்கத்ததின் மீது ஏற்ப்பட்ட கோபத்தைப் போன்று நான் பார்த்ததே இல்லை. அப்போது அவர்கள் நிச்சயமாக உங்களில் மக்களை வெறுப்படைய செய்வோர் இருக்கிறீர். ஆகவே உங்களில் எவரேனும் பிறருக்கு தொழ வைக்க நேரிட்டால் (தொழுகையைச்) சுலபமாக்கி கொள்வீராக! ஏனெனில் அவர்களில் இயலாதவர், வயோதிகர், சுயதேவையுடையவர் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறினார்கள்.

(அபூமஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

* நபி(ஸல்) அவர்களை விட மிகச் சுலபமான தொழுகையாகவும் ஆனால் மிகவும் சம்பூணமான தொழுகையாகவும் வேறு யாதொரு இமாமுக்குப் பின்னால் நான் தொழுததில்லை. அவர்கள் குழந்தையின் அழுக்குரலைக் கேட்டு அக்குழந்தையின் தாய் சிரமம் அடைவார் என்பதை அஞ்சி தொழுகையைச் சுலபமாக்கிக் கொள்வார்கள் என்பதாக அனஸ்(ரழி) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

(ஷரிக்குப்பின் அப்தில்லாஹ்(ரழி), புகாரீ)

நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தால் தொழுகையை சுலபமானதாகவும் ஆனால் அதைச் சம்பூரணமானதாகவும் ஆக்குவார்கள்

(அனஸ்(ரழி), புகாரீ)

* மு ஆதுபின் ஜபல்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டு தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்குத் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு பிறகு தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்கு “இமாமத்” செய்தார்-தொழ வைத்தார். அப்போது அவர் “சூரத்துல் பகரா” (என்னும் நீண்டதோர் சூரா)வை ஓதத் துவங்கி விட்டார். உடனே ஒருவர் திரும்பி ஸலாம் கொடுத்துவிட்டு, பிறகு தாம் தனிமையாகத் தொழுதுவிட்டு (வீடு) திரும்பிவிட்டார்.

அப்போது அவரை நோக்கி மக்கள் நீர் முனாபிக்காகி விட்டீரா? என்று கேட்டனர். அதற்கு அவர் இல்லை, இறைவன் மீது ஆணையாக இல்லவே நான் நிச்சயமாக நபி(ஸல்) அவர்களிடம் வந்து இச்செய்தியைக் கூறுவேன் என்று கூறிவிட்டு பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தண்ணீர் இறைக்கும் ஒட்டகத்தை வைத்துக் கொண்டு பகல் முழுதும் வேலை செய்துக் கொண்டிருக்கிறோம்.

‘மு ஆத்” என்பவர் உங்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு தமதுக் கூட்டத்தாரிடம் வந்து, (தாம் தொழவைப்பவராக) சூரத்துல் பகரா’வைத் துவங்கி விடுகிறார் என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் முஆதை நோக்கி, முஆதே! நீர் குழப்பக்காரரா? என்று கேட்டுவிட்டு, நீர் வஷ்ஷம்ஸி வளுஹாஹா – வள்ளுஹா வல்லைலி இதாஸஜா – ஸப்பி ஹிஸ்ம் ரப்பிக்கல் அஃல ஆகியவற்றை ஓதுவீராக! என்றார்கள்.

(ஜாபிர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஜமா அத்தில் யாரை மையமாக வைத்து தொழுகையை சுலபமாக்க வேண்டும்?

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, நீர் உமது கூட்டத்தாருக்கு இமாமாக உள்ளீர். அதனால் அவர்களில் மிகவும் பலகீனமானவரை மையமாகக் கொண்டு அவர்களைக் கணித்துக்கொள்வீராக! என்றார்கள். (உஸ்மானுபின் அபில் ஆஸ்(ரழி), அபூதாவூத், நஸயீ)

முதல் ரகாஅத்தை மக்கள் அடைந்துக் கொள்வதற்காக இமாம் அதை நீட்டுவது நல்லதாகும்

தொழுகைக்கு “இகாமத்” சொல்லப்பட்டுவிடும், ஒருவர் “பகீஃ” எனும் இடத்திற்குச் சென்று தமது சுய தேவையை பூர்த்தி செய்தவிட்டு ஒளு செய்துவிட்டு வருவார். அதுவரை அவரை நபி(ஸல்) அவர்கள் (கிரா அத்) ஓதிக் கொண்டு) முதலாம் ரகா அத்தை நீட்டியவர்களாக அதிலேயே இருந்துக் கொண்டிருப்பார்கள்.  (அபூஸயிதில் குத்ரி(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

இந்த அறிவிப்பின்படி மக்கள் முதல் ரகா அத்தை அடைந்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு முதல் ரகா அத்தை மட்டும் நீட்டுவது வரவேற்கத்தக்கது என்பதை அறிகிறோம்.

இமாமைப் பின்பற்றித் தொழுவோர் எந்தச் செயலிலும் இமாமை முந்துவது கூடாது.

*  இமாமுக்கு முன் தமது தலையை உயர்த்துவோர் அவரது தலையைக் கழுதையின் தலையாகவோ அல்லது அவரது உருவத்தை கழுதையின் உருவமாகவோ அல்லாஹ் மாற்றி விடுவான். என்பதை நீங்கள் பயந்துக் கொள்ள வேண்டாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (முஹம்மதுபின் ஜியாத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

* நபி(ஸல்) அவர்கள் “ஸமீ அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறுவார்களானால் அவர்கள் ஸஜ்தாவுக்குச் சென்றடையும்வரை எங்களில் எவரும் தமது முதுகை வளைக்கமாட்டார்கள். அதற்குப் பின்னரே நாங்கள் ஸஜ்தா செய்வோம் என்று பர்ராஉ(ரழி) அவர்கள் கூறினார்கள்.

Previous post:

Next post: