தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பது இஸ்லாமியக் கடமையல்லவா?
Er. H. அப்துஸ்ஸமது B.E., M.Sc.(Eng) சென்னை
உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கத் தலைபடும்போது தன்மையை ஏவுவது எத்துணை அத்தியாவசியமோ அத்துணை இன்றியமையாதது தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பதும், இப்பணியை செம்மையாக செய்துவரும் அந்நஜாத்தை அதற்காகவே விமர்சிக்கவும், வெறுக்கவும், ஒதுக்கவும் முன்வருகின்றனர். நம் சகோதரர்கள். ஆலிம்களைக் குறை கூறுகிறது, வசைப்பாடுகிறது என்றும் சமுதாயத்தில் குழப்பத்தையும், பிரிவினையையும் உருவாக்கும் ஆக்கங்களையேத் தருகின்றது என்றும் தனிப்பட்டவர்கள் மாத்திரமல்லாமல், நன்னோக்கோடு இயங்கும் இயக்கங்களும் விமர்சிக்கின்றன.
நன்மையை ஏவினால் போதும்; தீமை தானே விலகும்” என்றும், ஒளி வந்திட இருள் தானே நீங்கும் என்றும் சித்தாந்தம் பேசுகின்றனர். தீமையை சுட்டிக்காட்டித் தடுப்பது பற்றி, சுமார் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், பாக்கிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாம் இயக்கத்தின் முன்னால் துணை அமீரும் “தத்துபீரே குர்ஆன்” எனும் திருமறை விரிவுரை எழுதியவருமாகிய அறிஞர் அமின் அஹ்சன் இஸ்லாஹி. “தஸ்கியத்துள் னஃப்ஸ்” எனும் நூலில் வரைந்த கருத்துக்களை இங்கே எடுத்தெழுதுகிறேன். சிந்திக்க வேண்டும்; உண்மையை உணர வேண்டும்; முஸ்லிம் சமுதாயம், தான் தாங்கியுள்ள பெயருக்கேற்ப அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிபட்டவர்களாக, மாற்றாருக்கு வழிகாட்டடியாக, முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே எம்நோக்கமும் இலக்குமாகும்.
அறிவு இறை வெளிப்பாடு(வஹி) மூலம் நபிமார்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டதாயினும், அனுபவம் மூலம் பெற்றதாயினும் இறைவனால் நம்மீது சார்த்தப்பட்ட புனிதமான அடைக்கலப் பொருள் (அமானிதம்) ஆகும். அறிவு வழங்கப்பட்ட தலைமுறையினர், அதைப் பேணிப் பாதுகாத்து அதன்மூலம் இயன்ற அளவு அதிகமான பலன்களைப் பெற முனைவதோடு, அதை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிக்கவும் வேண்டுவது கடமையாகும். வஹி மூலம் நல்கப்பட்ட அறிவு பாதுகாக்கப்பட வேண்டும்; அனுபவ அறிவு விருத்தியாக்கப்பட வேண்டும்.
பாரம்பரியமாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையினருக்கு வந்தடையும் இந்த அறிவு விலைமிக்கச் சொத்தாகும். அதை நாணயத்தோடு பேணிப் பாதுகாத்து திரிபும் மறைவும் இன்றி மற்றவர்களுக்குக் கற்ப்பிப்பதன் மூலம் இம்மை வாழ்வில் முன்னேற்றமும் பெற முடியும். அறிவுப்பரிமாற்றத்தில் சோர்வோ, தளர்ச்சியோ குறைவோ ஏற்படுமாயின் வாழ்க்கை அமைதியற்று சீர்குலைந்து விடும். முன் தலைமுறையினர் பெற்ற அனுபவங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்து, அதன் பலாபலன்களை ஆய்ந்து அறிந்து செயலாற்றியதன் மூலமே மனித சமுதாயம் இன்று லெளகீகமாக இத்துணை முன்னேறியுள்ளது. முன்னோரின் அனுபவத்தை அறியாமலிருந்தாலோ அதை விருத்தி செய்யாமலிருந்தாலோ உலகம் எய்தியுள்ள இன்றைய முன்னேற்றத்தை அடையாமல் பின்தங்கியே இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.
இறை வெளிப்பாட்டி(வஹியி)ன் மூலம் வழங்கப்பட்ட அறிவு (இஸ்லாம்) ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அணு அளவு மாற்றமும் இன்றி அறிவிக்க(கற்ப்பிக்க)ப்பட வேண்டும். நிறைவு பெற்று, இறையருளோடு வழங்கப்பட்ட அறிவு அது.” இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் அங்கீகரித்து விட்டேன். (5:3)
இந்த அறிவுப் பரீமாற்றம் (போதனை) தலைமுறையிலிருந்து தலைமுறைக்குத் தொடர்ந்து நடைபெற வேண்டும். இத்தொடர்ச்சியின் சீர்குலைவோ, தடையோ, திரிபோ ஏற்ப்பட்டால் அறிவொளி மங்கி அறியாமை எனும் இருள் கவ்விவிடும். இஸ்லாம் மறைந்து மவ்ட்டீகம் நிலவும். தமக்கு வழங்கப்பட்ட ஷரியத்தி(வாழ்க்கை நெறியி)ன் விதிகளுக்கு உகந்து வாழ்வது மாத்திரமல்லாமல் அந்த ஷரியத்தை மாற்றமும், நீக்கமும், இணைப்பும் இன்றி முழுமையாக அடுத்துவரும் தலைமுறையினருக்கு அறிவிப்பது(சேர்ப்பிப்பது) உம்மத்தினர் ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் யூதருக்கு புனித மறையை வழங்கியபோது கீழ்வரும் உறுதிமொழியை அவர்களிடம் அமுல்படுத்துமாறு கட்டளையிட்டதாக திருக்குர்ஆன் அறிவிக்கின்றது.
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் (உங்களுக்கு கொடுக்கப்பட்ட) வேதத்தை மறைத்துவிடாது மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.”
மேலும் அவர்களுக்கு கீழ்வருமாறு அல்லாஹ் ஆணையிட்டதையும் திருமறைக் கூறுகிறது:-
‘நீங்கள் மெய்யைப் பொய்யுடன் கலக்கவோ, உண்மையை நன்கறிந்து கொண்டே மறைக்கவோ வேண்டாம். (2:42)
யூதர்கள், இவ்வுறுதி மொழியையும் ஆனையையும் மீறி, இம்மையின் சுகபோகத்தைத் தரும் பொருட்கள்(செல்வங்கள்) மீதுக் கொண்ட மோகத்தால் உண்மையை(வேதத்தை) மறைத்தார்கள் எனவே அல்லாஹ் அவர்களுக்கு அருள் வழங்குவதை நிறுத்திக் கொண்டான்.
நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் அருளி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுப்படுத்தியப் பின்பும் எவர் (அவற்றை) மறைக்கின்றனரோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமையுடைய)வர்களும் சபிக்கிறார்கள். (2:159)
எவர் வேதத்தில் அல்லாஹ் அருளியவைகளை மறைத்துவிட்டு, அதற்குக் கிரயமாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்ளுகின்றனரோ, அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பைத் தவிர வேறெதையும் நிரப்பிக் கொள்ளுவதில்லை. அன்றி மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களை (மன்னித்து) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைத் தான் உண்டு. (2:174)
எனவே தான் யூதர்களிடம் சார்த்தப்பட்ட அடைக்கலப் பொருள்(அமானிதம்) அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள், அவர்களுடைய உம்மத்தினரிடம் சேர்ப்பித்ததுப் போலவே, உம்மத்தினருக்கும் அதை மற்றவர்க்கும் எடுத்துரைக்கும் பொறுப்பு சார்த்தப்பட்டது’ உம்மத்தினரை நோக்கி குர்ஆன் கூறுகிறது;
(நம்பிக்கையாளர்களே !) அவ்வாறே நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே நீங்கள் (மற்ற) மனிதர்க்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாளர்களாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருப்பர். (2:143)
இந்த உம்மத்தினர் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஷரியத்தி(இறைக்கட்டளைகளு)க்கு ஏற்ப வாழ வேண்டும். என்பதும் உலகம் முடியும் வரை மற்ற சமுதாயத்தினருக்கு வழிகாட்டியா(சாட்சிகளா)க வாழ வேண்டும் என்பதும் அவர்களின் மீது விதிக்கப்பட்ட கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுவதில் ஏதேனும் குற்றம் குறைவுகள் நேர்ந்தால் அவைகளின் பின்விளைவுகளை இவ்வும்மத்தினர் அனுபவித்தே தீர வேண்டும். இந்தப் பொருப்பினின்றும் தவிர்த்துக் கொள்ளவோ, அல்லது அதை நிர்வகிப்பதில் குறைபாடுகள் ஏற்படவோ உறுதுணையாக அமையும் காரணங்கள் சிலவற்றை எடுத்துரைப்பது அவசியமாகிறது.
இக்காரணங்களையும் அவைகளின் தன்மைகளையும் உணர்ந்துக் கொண்டால், சிறிதளவே ஈமான் உள்ளவராலும் அவைகளைத் தவிர்த்துக் கொள்வது சாத்தியமாகும். காரணகாரியங்களை அறிந்துக் கொண்டால் தான் பிணி(குறை)களுக்கு நிவாரணம் காண முடியும். பிணியால் தாக்கப்பட்டவருக்கு, பிணியிலிருந்து குணமடைந்து ஆரோக்கிய நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் அத்தியாவசியமானவை. மார்க்க அறிவு நலிவுறும் விஷயத்திலும் இதுவேதான் யதார்த்தமாகும்.
சமுதாயத்தின் சீர்த்திருத்தத்தையும், ஒழுங்கு முறைகளையும் பற்றி மக்களில் பெரும்பாலோர் அலட்சியமாகவிருப்பதே மார்க்க அறிவு-உண்மை-(ஹக்) மறைக்கப்படுவதற்கு தலையாயதும் முதன்மையானதும் ஆகும். சொந்தக் காரியங்களை நிர்வகிப்பதோடும், நிறைவேற்றுவதோடும் தம்பொருப்பு தீர்ந்துவிட்டது என்று மக்கள் கருதுகின்றனர். இவைகளை நிறைவேற்றிவிட்டால் இறைமறை நல்கும் நெறிக்கேற்ப தாம் செயல்படுவதாக எண்ணி திருப்தியடைகின்றனர். தாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் நிலையும் கதியும என்ன? கொண்ட ஈமானுக்கேற்ப இறைமறை வழங்கிய அறிவை-உண்மையை சமுதாயத்திற்கு அறிவிப்பதில் தம் பொறுப்பு என்ன? அதை நிறைவேற்றியுள்ளோமா? என்ற கவலையோ சிந்தையோ எழுவதில்லை.
அவர்களது இறையுணர்வும், நேர்மையும், இறைமறை சார்ந்ததும், பொறுப்பை நிறைவேற்றுவதில் இத்தரத்திலேயே உள்ளன. சமுதாயத்திற்கு அறிவு(உண்மையை) சுட்டி அவர்களை நேர்வழிப்படுத்துவது தம் மீதுற்ற கடமை என்ற உணர்வே இல்லை. மற்றவரின் காரியங்களில் தலையிடாமல் இருப்பதுதான் யதார்த்தத்தில் “தக்வா என்பது இவர்களின் எண்ணம். சிலரிடம் இக்கருத்து ஆர்வமாக பதிந்து துறவற மனப்பான்மையோடு, சமுதாயத்திலிருந்து முற்றிலும் விலகி வாழும்படி தூண்டுகிறது. மற்றும் சிலர் முற்றிலும் ஒதுங்கி வாழாவிட்டாலும் சமுதாய சீர்த்திருத்தம், ஒழுக்கம் இவைகளில் தமக்குற்ற பொறுப்பை முக்கியமாக கருதுவதில்லை. உண்மையில் சமுதாய நலனையும் சீரான போக்கையும் பற்றிக் கவலைக் கொள்ளுவதும், அதற்கான ஆவண செய்வதும், ஈமானின் ஒரு அம்சமாகும்.
சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய இப்பணி ஒரு நற்பண்பு மாத்திரமே; அது கடமையல்ல; நிறைவேற்றினால் நற்கூலி கிட்டும் நிறைவேற்றாவிட்டால் நாம் குற்றவாளிகள் ஆகமாட்டோம். என்பது இவர்களின் தீர்வு. அப்படியே சிலர் சமுதாய சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டாலும் அவைகளை கடமையுணர்வோடு நிறைவேற்றுவதில்லை குறிப்பிட்ட ஒரு சிலர் (வர்க்கத்தினர்) செய்ய வேண்டிய வேலைகளை தாமும், சமுதாயத்தினர் மீதுள்ள அனுதாபத்தால் ஏற்றுக் கொள்வதாகப் பிரலாபித்துப் பெயரளவில் அவைகளை மேற்க்கொள்ளுகின்றனர்; செயல்களில் ஊக்கமும் உயிரூட்டமும் காணப்படுவதில்லை. சமுதாயத்தின் மீது தமக்குள்ள கடமையைப் பற்றிய இத்தகைய மனப்பான்மையால், சமுதாயம் அடைந்துள்ள இழிநிலையை அவர்கள் உணருவதில்லை. சமுதாயத்தைப் பற்றி பிடித்துள்ள அறியாமையையும், சீர்கேமுகளையும் அகற்றி சமுதாயம் சீர்திருந்தி நற்பயணும் முன்னேற்றமும் பெறுவதற்காக ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்க்கொள்ளுவதில்லை.
சமுதாய சீர்க்குலைவின் மூலக் காரணங்களைக் கண்டு அவைகளை நீக்க முனையாமல் தற்காலிகமாக, மேலெழுந்தவாரியாக, ஏதோ செய்து, தமக்கும் சமுதாய முன்னேற்றத்தில் ஆர்வமுண்டு என்றுக் காட்டி மக்களை கவர முயல்கின்றனர். சமுதாயத்தில் ஊடுருவியுள்ள தீமைகளைச் சுட்டிக்காட்டி அதைக் களையச் செய்வதற்கான அக்கரையும் மனோ தைரியமும் இவர்களுக்கு இல்லை. நன்மையானவை எனக் கருதப்பட்டு பரவலாக பொது நடைமுறையாகவே மேற்க்கொள்ளப்படும் செயல்களை அவை மார்க்கத்திற்கு முரணானவை(தீயவை) என்றுணர்ந்திருந்தும் உண்மையைக் கூறுவதில்லை.
உண்மையை எடுத்துரைத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயம். மார்க்க அறிஞர்கள் என்றுக் கருதப்படுபவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் துணையோடு செல்வாக்குடையோர்களால் மேற்க்கொள்ளப்படும் முறைகேடுகளை முன்னெவர்களின் நல்லெண்ணத்தையும், பின்னவர்களின் சலுகைகளையும் உதவிகளையும் நாடிக் கண்டிப்பதே இல்லை.இத்தகைய மனப்பான்மையுடையவர்களே குர்ஆனைக் கற்க்கின்றனர்; கற்ப்பிக்கின்றனர். ஹதீதுகளை எடுத்துரைக்கின்றனர். மார்க்க சட்டங்களையும் (ஃபிக்குகளையும்) அதோடு இறைமை இறைவுப்பான்மை-சூபிஸம்-(mystcistim)யையும் கற்ப்பிக்கின்றனர்.
குர்ஆன் நல்கும் அறிவையும் இஸ்லாத்தையும் பரப்பவே இவைகளை இவர்கள் மேற்க்கொண்டுள்ளதாகத் தோன்றும். ஆனால் உண்மை என்ன? ஃபிக்குகளை இறை இணைவுப்பான்மையோடு சூபிஸத்தோடு இணைந்து பழங்காலக் கதைகளைக் கூறுவதுப் போல் மக்களுக்கு ஊட்டுகின்றனர். திருமறையையும் நபிமொழியையும் கற்றறியாது, உலகக் கல்வி பயின்ற சிந்தனையாளர்கள், இவைகளை கேட்டுவிட்டு இஸ்லாம் இக்கால வாழ்விற்கு பொருத்தமற்றது என்றுக் கருதத் தலைப்படுகின்றனர்.
இஸ்லாத்தைப் போதிப்பதாகக் கூறும் மார்க்க போதனையாளர்கள், உண்மையை அறிந்துக் கொண்டே இவைகளைக் கண்டும் காணாதவர்களாக வாழ்கின்றனர். தம்மீது எவ்விதப் பொருப்புகளும் சுமத்தப்பட விரும்பாததும், அப்பொருப்புகளின் யதார்த்த தன்மை என்னவென்பதை உணராததும் இதற்கு மூலக்காரணமாகும். சீர்த்திருத்தத்தை பொருத்தமட்டில் இஸ்லாம் இருவிதமான பொறுப்புகளை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் சுமத்துகிறது. ஒன்று அவனது சொந்த (தனி)நிலைப் பற்றியது. மற்றொன்று அவனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப அவனது குடும்பத்தினர், உறவினர், சமுதாயத்தினர் ஆகியோர் சம்பந்தப்பட்டது.
தான் பெற வேண்டியக் கல்வியும், சீரான பயிற்சியையும் உதாசீனம் செய்வதால் தனிமனிதன் ஒருவன் இவ்வுலகிலும் மறுமையிலும் எவ்வித இன்னல்களுக்கும் இழப்பிற்கும் ஆளாக நேரிடுமோ அதே போலவே சமுதாயத்தின் சீர்த்திருத்தம் கல்வி பயிற்சி ஆகியவைகளில் அக்கறையின்றி வாழ்வதால் இம்மையிலும் மறுமையிலும் துன்புற நேரிடும். இவ்வுண்மைகளை வலியுறுத்தும் நபிமொழிகள் பல உள்ளன.