நபிவழியில் நம் தொழுகை

in 1990 ஜூன்

நபிவழியில் நம் தொழுகை

தொடர் : 42

அபூ அப்தீர்ரஹ்மான்

  சென்ற இதழின் தொடர் :

“பித்அத் முதலிய தவறுகள் செய்யும் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதன் நிலை:

*    ஒருமுறை ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய “பித்அத்” அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள்.  ஹிஷாமுபின் ஹஸ்ஸான்(ரஹ்), முஸ்னத் ஸயீதுபின் மன்சூர்)

*  ‘அதிய்யுபின் கியார்” என்பவர் உஸ்மான்(ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த போது, அவர்களிடம் வந்து நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் நிலையில் உங்களுக்கு துன்பம் வந்து சம்பவித்துள்ளது.

(இப்போது) எங்களுக்கு  குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும்  பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார். அதற்கு அவர்கள் தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகாகச் செய்யும் போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுற செய்துக் கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாயிருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக என்றார்கள். (அதிய்யுபின் கியார்(ரஹ்), புகாரீ)

மேற்காணும் உஸ்மான்(ரழி) அவர்களின் கூற்றிலிருந்து தொழ வைப்பவர் முஸ்லிமாக இருந்தால் போதும், அவர் “பித்அத்” காரராகவோ, அல்லது வேறு வகையான தவறுகள் செய்பவராகவோ இருப்பினும், நாம் ஜமாஅத்துடைய பலன் இழந்து, நஷ்டம் அடைவதைவிட, இத்தகையோருடன் சேர்ந்து ஜமாஅத்தாக தொழுவதே மேல் என்பதை அறியமுடிகிறது.

பின்பற்றி தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும்போது, இமாம் முறை கேடாகத் தொழுது, இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால் அவரைப் பின்பற்றித் தொழுவோரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

*  உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள் அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லது தான். அன்றி அவர்களுக்கு கேடு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

*  ஒருக் கூட்டத்தார் வந்து உங்களுக்கு தொழ வைப்பார்கள். அவர்கள்(தொழுகையை) நிறைவாகச் செய்வார்களேயானால், அவர்களுக்கும் உங்களுக்கும் நல்லது தான். (அவ்வாறின்றி) அவர்கள் தொழுகையில் குறைபாடு செய்வார்களேயானால் அவர்களுக்குத் தான் கேடு. உங்களுக்கு நல்லது தான். (அவர்கள் தொழுகையில் செய்துள்ள குறைபாட்டால்  உங்களுக்கு பாதிப்பு ஏவுவுமில்லை.) என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரழி), ஷாபீயீ)

*  இப்னு உமர்(ரழி) அவர்கள் “ஹஜ்ஜாஜுபின் யூசுப்” எனும் மிகக்கொடிய அநியாயம் அக்கிரமம் செய்துக் கொண்டிருந்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம்புகாரீ(ரஹ்) அவர்களும், அபூஸயீதில் குத்ரீ(ரழி) அவர்கள் பெரும் குழப்பவாதியாக இருந்த “மர்வான்” என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாகவும் இமாம்முஸ்லிம்(ரஹ்) அவர்களும் மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ்பின் ஜுபைர்(ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர்(ரழி) அவர்கள் “கஷ்பிய்யா, காரிஜிய்யா” ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால் அவர்கள் தமக்குள் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.

அது சமயம் அவர்களை நோக்கி தமக்குள் சண்டை செய்துக் கோண்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்குப் பின்னால் நின்றுத் தொழுகீறீர்களா? என்றுக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் யார் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுக்கிறாரோ, அவருக்கு பதில் அளிப்பேன்.

யார் “ஹய்யஅலல் ஃபலாஹ்” (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்கு பதில் அளிப்பேன். ஆனால் யார் “ஹய்ய அலா கத்லி அகீக்கல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ” (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுக்கின்றாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள். (நாபிஉ(ரழி), ஸுனனு ஸயீதுபின் மன்சூர்)

“ஒளூ” இல்லாத இமாமுக்குப் பின்னால் தொழுதவர்களின் தொழுகை நிறைவேறிவிடும்:

ஒருவர் அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழவைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள். (ஸலீம்(ரழி), தாருகுத்னீ)

குளிப்பு கடமையாக உள்ள இமாமுக்குப் பின் தொழுதவர்களின் தொழுகையும் கூடிவிடும்!

* ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி-குளிப்புக்கடமை உள்ளவர்களாயிருக்கும் போது, (விஷயம் தெரியாமல்) மக்களுக்கு தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரியவே அவர்கள் மட்டும் ) தொழுகையை மீட்டி தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை.(அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாருகுத்னீ)

மேற்காணும் ஹதீஸ்கள் அதர்-ஸஹாபாக்களின் சொற் செயல்களின் வாயிலாக தொழவைக்கும் இரு இமாம் அவர் எப்படி உள்ளவராக சரி, அவர் தொழுகையில் என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் சரி. அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும்போது, அவற்றால் இவர்களின் தொழுகைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெளிவாக அறிகிறோம்.

தொழவைக்கும் இமாம்கள் சிறந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்ற ஹதீஸின் நிலை:

“உங்கள் இமாம்களை சிறந்தவர்களாக நியமித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் தான் உங்களுக்கும் உங்கள் ரட்சகனுக்கும் இடையில் தூதுக் குழுவினர்களாவர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) தாருகுத்னீ)

இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஸலாமுபின் சுலைமானில் மதாயானீ” எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றிருப்பதால் ஹதீஸ்கலாவல்லுநர்கள் இவ்வறிவிப்பை பலகீனமானது என்கிறார்கள் இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுவந்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் கோளாறுடையவைகளாகவே காணப்படுகின்றன.

தொழும்போது “ஸஃப்பு”- தொழும் வரிசையில் சேராமல், பின்னால் நின்று தொழுவோரின் நிலை :

*  ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஸஃப்புக்குப் பின்னால் தனித்து தொழுது கொண்டிருக்கும் ஒருவரைப’ பார்த்து (அவர் தொழுது முடிக்கும் வரை) அவ்விடத்திலேயே நின்று, அவர் தொழுது முடித்தவுடன் அவரை நோக்கி “நீர் உமது தொழுகையை மீண்டும் தொழுவீராக! ஏனெனில் ஸஃப்புக்குப் பின்னால் தனித்துத்தொழுவோருக்கு தொழுகை என்றார்கள். (அலிய்யுபின் ஷைபன்(ரழி), இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

*  ஒரு முறை அபூபக்ரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ருகூஃவில் இருக்கும் போது (அவசரமாக) ஸஃபில் தாம் சேர்வதற்கு முன்பே, ருகூஃ செய்துவிட்டார்கள். (மற்றொரு அறிவிப்பில் ருகூஃ செய்துவிட்டு ருகூஃ செய்த நிலையிலேயே நடந்தவர்களாக ஸஃபில் செய்து கொண்டார்கள் என்று உள்ளது) பிறகு இது விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம்ம தாம் எடுத்துக் கூறிய போது, அல்லாஹ் உமக்கு ஆர்வத்தை அதிகமாக்குவானாக; மீண்டும் செய்யாதீர்! என்றார்கள்.  (அபூபக்ரா(ரழி), புகாரீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

மேற்காணும் அலிய்யுபின் ஷைபான்(ரழி) அவர்களின் அறிவிப்பில் “ஸப்பில் சேராமல் பின்னால் தனித்தவராக நின்று தொழுவோரின் தொழுகை நிறைவேறாது” என்று கூறப்பட்டிருப்பது, உண்மையில் தொழுகை நிறைவேறாது” என்ற அர்த்தத்தில் கூறப்பட்டதல்ல.

“பள்ளியின் அண்டை வீட்டவருக்கு பள்ளியில் அன்றி தொழுகையில்லை” இவ்வாறும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதன் பொருள் பள்ளியின் அண்டைவீட்டார் பள்ளியில் தொழுவதே மேல் என்பதே தவிர சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் தொழுதுவிட்டால் அவர் தொழுகை நிறைவேறாது என்பதல்ல.

இவ்வாறுதான், தொழுபவர் ஸஃப்பில் சேர்த்து தொழுவதுதான் மேல். ‘ஸப்புக்குப் பின்னால் தனித்துத் தொழுபவருக்கு தொழுகை இல்லை” என்றால் இவ்வாறு தொழுவது முறைஅல்ல. இதனால் தொழுகையின் முழுமையான பலனை அடைந்துக்கொள்ள முடியாது என்பதே தவிர, தொழுகை கூடாது-நிறைவேறாது என்பதல்ல.

இவ்வாறு உண்மையில் தொழுகை நிறைவேறாது என்றிருக்குமானால், ” அலிய்யுபின்ஷைபான்(ரழி)” அவர்களின் அறிவிப்பில் காணப்படுவதுப் போல், ஸஃப்புக்குப் பின்னால் தனித்து தொழுதுக் கொண்டிருப்பவரை அவர் தொழுது முடிக்கும்வரை நபி(ஸல்) அவர்கள் எதிர்ப்பார்த்து, நின்றுக் கொண்டிருக்க வேண்டிய தேவையிருந்திருக்காது.

அவர் முறைகேடாக, ஸஃப்புக்குப் பின்னால் தொழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தமாத்திரத்திலேயே உமது தொழுகைக் கூடாது-நிறைவேறார் என்று சொல்லியிருப்பார்கள். எனவே அவருடைய அத்தொழுகை கூடும் – நிறைவேறிவிடும் என்ற நிலை இருந்ததினால் தான் அவ்விடத்திலேயே நின்று அவர் தொழுது முடிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்ததுக் காட்டுகிறது. மீண்டும் அவர் இத்தகைய தவறு செய்துக் கொண்டிருக்கும் வகையில் தான் மறுமடியும் தொழும்படி கூறியுள்ளார்கள்.

இவ்வாறே அடுத்து “அபூபக்ரு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ருகூவில் இருக்கும் போது (அவசரமாக) தாம் ஸஃப்பில் சேருவதற்கு முன்பே ருகூஃ செய்துவிட்டார்கள். பிறகு இது விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறியபோது அல்லாஹ் உமக்கு ஆர்வத்தை அதிகமாக்குவானாக! மீண்டும் (இவ்வாறு) செய்யாதீர் என்று கூறினார்களே தவிர, அவருடைய தொழுகையை மீட்டும்படிக் கூறவில்லை. இதன் மூலமாகவும் ஸஃப்புக்கு பின்னால் தனித்துத் தொழுபவரின் தொழுகை முறியாது என்பதை அறிகிறோம்.

அபூபக்ரு(ரழி) அவர்கள் ஸஃப்பில் சேராமல் ஸஃப்புக்குப் பின்னால் அவசரப்பட்டு ருகூஃ செய்துவிட்டு பிறகு ருகூஃ செய்த நிலையிலேயே ஸஃப்பில் போய் சேர்ந்துக் கொண்டாலும், ஸஃப்பில் கொண்டுப் போய் சேரும்வரை உள்ள அந்தத் தொழுகை நிறைவேறிவிடும் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

“ஸஃப்புக்குப் பின்னால் தனித்துத் தொழுவோரின் தொழுகை கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு ஸஃப்பில் இடமில்லாத போது ஸஃப்பில் உள்ள ஒருவரைப் பின்னால் இழுத்து தம்மோடு வைத்துக் கொண்டு தொழ வேண்டும் என்ற வகையில் வந்துள்ள அறிவிப்புகளின் நிலை:

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஸஃப்புக்குப் பின்னால் தொழுவோரைப் பார்த்து, தொழுகையாளியே! நீர் ஸஃப்பில் சேர்ந்திருக்கக் கூடாதா? அல்லது ஸஃப்பிலிருந்து ஒருவரை (உன் பக்கம்) இழுத்துக் கொள்ளக் கூடாதா? நீர் உமது தொழுகையை மீட்டுவீராக! என்றார்கள்.           (வாபிஸா(ரழி), தப்ரானீ, பைஹகீ)

இந்த அறிவிப்பின் தொடரில் “ஸிர்க்குய்யுபின் இஸ்மாயில்” என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் கலா வல்லுநர்களால் ஒதுக்கப்பட்டவர். ஆகவே இந்த அறிவிப்பு பலகீனமானது என்ற ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது  “தல்கீஸுல்ஹபீர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

***************************************

அழகிய தோற்றமுள்ள கிடாயே குர்பானிக்கு மேலாகும்.

நபி(ஸல்) அவர்கள் இருக் கொம்புகளை உடைய கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தையுடைய இரு கிடாய்களை குர்பானிக் கொடுத்தார்கள். அவ்விரண்டையும் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறி தமது கையால் அறுத்தார்கள். அப்போது அவ்விரண்டின் விலாப்புறத்திலும் தமது காலை வைத்(துமிதி)தவர்களாக “பிஸ்மில்லாஹு வல்லாஹ அக்பர்” என்று அவர்கள் கூறுவதைக் கண்டேன். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

Previous post:

Next post: