நபி வழியில் நம் தொழுகை
தொடர்: 40
அபூ அப்திர் ரஹ்மான்
“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
சென்ற இதழின் “இமாமைப் பின்பற்றித் தொழுவோர் எந்தச் செயலிலும் இமாமை முந்துவது கூடாது” எனும் தலைப்பின் தொடர் :
* ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தொழுகை முடிந்தவுடன் எங்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு இமாமாக இருக்கின்றேன். ஆகவே நீங்கள் ருகூஃ, சுஜுது நிலை, தொழுகையை (நிறைவு செய்து) விட்டுத் திரும்புதல் ஆகியவற்றில் எனக்கு முந்திவிடாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை எனக்கு முன்னும் பின்னும் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு, முஹம்மதுவின் உயிர் யாருடைய கைவசத்தில் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக, நான் பார்ப்பவற்றை நீங்கள் பார்த்துவிட்டால், குறைவாகவே சிரித்து அதிகமாகவே அழுவீர்கள் என்றார்கள்.
அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? என்றார்கள் அதற்கு அவர்கள் நானோ சுவர்க்கத்தையும், நரகத்தையும் பார்க்கிறேன் என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)
மேற்காணும் ஹதீஸ் ஒன்றில் “ருகூஃ, சுஜுது முதலியவற்றில் இமாமுக்கு முன்னால் ஒருவர் தமது தலையை உயர்த்தினால், அவருடைய தலையை கழுதையின் தலையாகவோ அல்லது அவருடைய உருவத்தை கழுதையின் உருவமாகவோ மாற்றப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.
மற்றொரு ஹதீஸில் “ருகூஃ, சுஜுது, நிலை, ஸலாம் கொடுத்தல் முதலியவற்றில் இமாமுக்கு நீங்கள் முந்தி விடாதீர்கள்” என்று கூறப்பட்டிருப்பதால் இதிலிருந்து இமாமுக்கு முந்துவதுதான் கூடாது. ஆணால் அவரைத் தொடர்ந்து அவருடனே ருகூஃ, சுஜுது முதலியவற்றைச் செய்வது ஆகும் என்பதாகத் தெரிய வந்தாலும், மேற்காணும் பர்ராஉ(ரழி) அவர்களின் அறிவிப்பின்படி இமாம் ஒரு செய்கையைச் செய்ய முற்ப்பட்ட பின்னரே, அவரைப் பின்பற்றித் தொழுவோர் அந்தச் செய்கையைச் செய்வதற்கு முற்படுவதுதான் மேலாகும் என்பதை அறிகிறோம்.
இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுவோர் எவ்வாறு தொழ வேண்டும்?
* ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்து, அவர்களின் வலப்புறம் அடிப்பட்டுவிட்டது. அப்போது அவர்களை நலம் விசாரிப்பதற்காக நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அதுசமயம் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது அவர்கள் எங்களுக்கு தாம் உட்கார்ந்துக் கொண்டு தொழ வைத்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தவர்களாகவே தொழுதோம். அவர்கள் தொழுகை முடிந்தவுடன் பின்வருமாறு கூறினார்கள்:
ஒருவரை இமாமாக நியமிக்கப்படுவதெல்லாம், அவரைப் பின்பற்றுவதற்காக வேண்டித்தான். ஆகவே அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள். அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள் அவர் ஸமீ அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறினால் நீங்கள் “ரப்பனாவலக்கல்ஹம்து” என்று கூறுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதபோது, சஹாபாக்களும் உட்கார்ந்து தொழுத சம்பவமானது, நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒருமுறை ஏற்ப்பட்டுள்ள சுகக்குறைவின் போது தான். ஆனால் அதற்குபின் ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொண்டு தொழுதபோது மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நின்றவர்களாகவே தொழுதுள்ளார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்களை உட்கார்ந்து தொழும்படி ஏவவில்லை. இதன் மூலம் அவர்கள் தமக்குப் பின்னால் நின்று தொழுததை அங்கீகரித்து விட்டார்கள் என்பதை அறிகிறோம்.
ஆகவே நபி(ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தைய செயலையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும். என்பதாக ஹுமைதீ(ரஹ்) அவர்கள் கூறுவதாக புகாரீயில் இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (ஃபத்ஹுல்பாரீ பாகம் 2, பக்கம் 173)
நபில் தொழும் ஒருவரை பர்ளு தொழுபவர் பின்பற்றித் தொழுவது கூடும் :
* முஅதுபின் ஜபல்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டு, தமது கூட்டத்தாரிடம் வந்து அதே தொழுகையை அவர்களுக்குத் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (ஜாபிர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
“அவருக்கு(மு ஆதுபின் ஜபல்(ரழி) அவர்களுக்கு) அது நபிலாகவும், அவர்களுக்கு (அவரைப் பின்பற்றித் தொழுபவருக்கு) பர்ளாக்கப்பட்டுள்ள இஷாவாகவும் உள்ளது” என்று தாருகுத்னீயின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
மேற்காணும் அறிவிப்பில் நபித் தோழரில் ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு, தமதுக் கூட்டத்தாரிடம் வந்து, அதேத் தொழுகையைத் தொழ வைத்திருப்பதாகப் பார்க்கிறோம். பர்ளு தொழுத ஒருவர் மீண்டும் அத்தொழுகையைத் தொழும்போது அது அவருக்கு நபிலாகி விடுகிறது.
இதே அமைப்பில் தான் முஆதுபின் ஜபல்(ரழி) அவர்கள் தமது பர்ளான இஷாத் தொழுகையை நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு, தமது கூட்டத்தாரிடம் வந்து அதே தொழுகையைத் தொழ வைத்துக் கொண்டிருக்கும் போது, நீண்ட சூராவைத் தாம் ஓதியதால் பிரச்சனை ஏற்ப்பட்டு, நபி(ஸல்) அவர்களிடம் அவரைப் பற்றிப் புகார் செய்யப்பட்ட போது அவர்கள் அவரை நோக்கி நீர் குழப்பம் செய்கிறீரா? நீர் குழப்பக்காரரா? என்று மிகக் கடுமையாகக் கேட்டு விட்டு சிறிய சூராக்களை ஓதித் தொழ வைக்குமாறு அவருக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
ஆகவே முஆதுபின் ஜபல்(ரழி) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் நபி(ஸல்) அவர்களும், நபீல் தொழும் ஒருவரை பர்ளு தொழுபவர் இவ்வாறு பின்பற்றித் தொழுவது ஆகும் என்று அதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
பர்ளு தொழும் ஒருவரை நபில் தொழுபவர் பின்பற்றித் தொழக் கூடும் :
* நான் நபி(ஸல்) அவர்களுடன் அவர்களின் ஹஜ்ஜின்போது ஆஜராகியிருந்தேன். அப்போது “மஸ்ஜிதுல் கைஃப்” எனும் பள்ளியில் அவர்களுடன் சுப்ஹுத் தொழுகையைத் தொழுதுவிட்டு திரும்பி உட்கார்ந்தபோது, அக்கூட்டத்தாரின் கடைசியில் இரு நபர்கள் தம்மோடு தொழாதவர்களாக இருந்து கொண்டிருப்பதைக் கண்டு அவ்விருவரையும் தம்முடன் அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள். உடன் அவ்விருவரும் வெடவெடத்த நிலையில் அழைத்து வரப்பட்டனர்.
அப்போது அவர்களை நோக்கி “நீங்கள் இருவரும் ஏன் எங்களுடன் தொழாதவர்களாக நின்று கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் கூடாரங்களிலேயே தொழுதுவிட்டோம் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அவர்களை நோக்கி, நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டது முறை அல்ல – கூடாது என்றார்கள். நீங்கள் உங்கள் கூடாரங்களில் தொழுதவர்களாயிருப்பினும் பின்னர் ஜமாஅத் நடந்துக் கொண்டிருக்கும் ஒரு பள்ளிக்கு வருவீர்களேயானால், அவர்களுடன் சேர்ந்து நீங்களும் தொழுதுக் கொள்ளுங்கள். ஏனெனில் இத்தொழுகை உங்களுக்கு நபீலாகிவிடும் என்றார்கள.
(ஜாபிருபின் யஜீத்(ரழி), தீர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், ஹாக்கிம்)
மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக நபில் தொழுது கொண்டிருப்பவரையே பர்ளு தொழுபவர் பின்பற்றி தொழுவதுக் கூடும் என்றிருக்கும் போது, நபீல் தொழுபவர் பர்ளு தொழுபவரை பின்பற்றித் தொழுவதில் என்ன இருக்க முடியும்? ஆகவே நபில் தொழும் ஒருவரை பர்ளு தொழுபவரும், பர்ளு தொழும் ஒருவரை நபீல் தொழுபவரும் பின்பற்றித் தொழுவது தாராளமாக கூடும் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிகிறோம்.
சிலர் கூறுவதுப் போல் பர்ளு தொழுபவரை மட்டும் நபில் தொழுபவர் பின்பற்றித் தொழுவதுக் கூடும். ஆனால் நபில் தொழுபவரை பர்ளு தொழுபவர் பின்பற்றித் தொழுவதுக் கூடாது” என்பதற்கு ஹதீஸ்களின் வாயிலாக முறையான ஆதாரம் எதுவுமில்லை. என்பது உறுதி.
இமாமின் கோளாறுகளை ஆண்கள் தஸ்பீஹ் மூலமும், பெண்கள் கைகளைத் தட்டுவதன் மூலமும் உணர்த்துதல் வேண்டும்.
*ஒருமுறை நபி(ஸல்) அவாகள் “பனு அம்ரிபீன் அவ்ஃபு(ரழி) அவர்களிடத்தில் அவர்கள் சம்பந்தப்பட்டதோர் பிரச்சனையை ஒழுங்குப்படுத்துவதற்காகச் சென்றிருந்தார்கள். அப்போது தொழுகை நேரம் வந்து விட்டது. முஅத்தின் பாங்கு கூறுபவர் அபூபக்ரு(ரழி) அவர்களிடம் வந்து நான் இகாமத்துச் சொல்கிறேன். நீங்கள் மக்களுக்குத் தொழவைக்கிறீர்களா? என்று கேட்க, அதற்கு அவர்கள் “சரி” என்றார்கள். உடனே அபுபக்ரு(ரழி) அவர்கள் மக்களுக்குத் தொழ வைக்கத் துவங்கி விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் அதே நிலையில் வந்து, தாமும் வரிசையில் சேர்ந்து நின்று கொண்டார்கள்.
மக்கள் கைகளைத் தட்டினார்கள். அபூபக்ரு(ரழி) அவர்களோ தொழுகையில் திரும்பிப் பார்க்காதவர்களாக இருந்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் கைத்தட்டலை அதிகமாக்கியபோது, அவர்கள் திரும்பியவுடன் நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூபக்ரு(ரழி) அவர்களை தமது இடத்திலேயே இருக்கும்படி சமிக்கை செய்தார்கள். உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதர் இதற்காக சமிக்கை செய்து கட்டளை இட்டமைக்காக (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையில்) தனது இருக் கைகளையும் ஏந்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக பின்னால் வந்து வரிசையில் சேர்ந்ததார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள் முன்னால் சென்று தொழ வைத்துவிட்டு, அபூபக்கரே! நான் உம்மை உங்கள் இடத்திலேயே நிற்கும்படி சமிக்கையாக கட்டளையிட்டும் எதற்காக அதை மறுத்து (பின்னால் வந்து)விட்டீர்கள் என்றார்கள். அதற்கு அபூபக்கர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வுடைய ரசூலுக்கு முன்னால் அபூகுஹாஃபாவின் மகன் நின்று தொழ வைப்பதற்கு அருகதை இல்லையே என்றார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, நீங்கள் கைத்தட்டலை அதிகப்படுத்தும் நிலையில் உங்களை நான் ஏன் பார்க்க வேண்டும்? ஒருவருக்கு தமது தொழுகையில் கோளாறு ஏற்ப்பட்டுவிட்டால், அவர் தஸ்பீஹ் செய்ய வேண்டும். அவர் தஸ்பீஹ் செய்தால் அவர் அதனை உணர்ந்து கொள்வார். கைத்தட்டல் என்பதெல்லாம் பெண்களுக்குரியதாகும்(ஆண்களுக்கல்ல) என்று கூறினார்கள்.. (ஸஹ்லுபின் ஸஃது(ரழி),புகாரீ,முஸ்லிம்)
ஒருவர் இமாமை காணும் எந்நிலையிலும் பின்பற்றுவது கூடும். ஆணால் ருகூஃவில் முழுமையாக தாம் சேர்ந்து கொள்ளாதவரை, அதை ஒரு ரகாஅத்தாக கணக்கிடுவது கூடாது:
* நாங்கள் ஸஸ்தாவில் இருக்கும்போது நீஙகள் வந்தால் (நீங்களும்) ஸஜ்தா செய்துக் கொள்ளுங்கள் ஆணால் அதைக் கணக்கிட்டு ஒன்று எனக் கருதி விடாதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு எவர் ருகூஃவை அடைந்துக் கொள்கிறாரோ, அவர் அந்த தொழுகை(யில் ரகாஅத்தையே) அடைந்துக் கொண்டார் என்று கூறினார்கள்.
(அபூஹுரைரா(ரழி), ஹாக்கிம், அபூதாவூத்)
* எவர் தொழுகையிலிருந்து ஒரு ரகாஅத்தை, இமாம் தமது முதுகு எலும்பை (ருகூஃவிலிருந்து) நிமிர்த்துவதற்கு முன்னர் அடைந்துக் கொள்கிறாரோ நிச்சயமாக அவர் அந்த ரகாஅத்தை அடைந்துக் கொண்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு ஹிப்பான்)
* நபி(ஸல்) அவர்கள் ருகூஃவில் இருந்துக் கொண்டிருக்கும் போது அபூபக்ரா(ரழி) அவர்கள் பள்ளியில் நுழைந்தார்கள். தமக்கு ருகூஃ தவறிவிடும் என்ற பயத்தால் உடனே ருகூஃ செய்துவிட்டு பிறகு ஒருசில காலடிகள் வரிசையை நோக்கி எடுத்து வைத்துக் கொண்டார்கள். தொழுகை முடிந்தவுடன், இது விஷயத்தை அபூபக்ரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூற, அதற்கவர்கள் அல்லாஹ் உமக்கு ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! மீண்டும் செய்யாதீர் என்றார்கள்.
(அபூபக்ரா(ரழி), புகாரீ,அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான்)
மேற்காணும் ஸஹீஹான பல ஹதீஸ்களின் வாயிலாக ஒருவர் இமாமை ருகூஃவில் முழுமையாக பெற்றுக் கொள்வாரேயானால் அவருக்கு அந்த ரகாஅத்து கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. சிலர் இமாமுக்குப் பின்னால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியப் பிறகு ருகூஃவில் சேர்ந்தால் தான் அந்த ருகூஃவை ஒரு ரகாஅத்தாக கணக்கிடப்படும், ஆணால் சூரத்துல் பாத்திஹாவை ஓதாமல் ருகூஃவில் சேர்கிறவர்களுக்கு அந்த ருகூஃவை ஒரு ரகாஅத்தாக கணக்கிட முடியாது என்று கூறுகிறார்கள். அவர்களின் கூற்றுகளுக்கு சரியான ஆதாரம் இல்லை. மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக இமாமை ருகூஃவில் முறையாக அடைந்துக் கொள்பவர் அந்த ரகாஅத்தையே தாம் அடைந்துக் கொள்வர் என்பதை அறிகிறோம்.
*****************
யார் ரமழான் நோன்பு நோற்று விட்டு அதனை ஒட்டி ஷவ்வாலில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலம் முழுதும் நோன்பு நோற்றவரைப் போலாவார். (அபூ அய்யூபில் அன்ஸாரீ(ரழி), முஸ்லிம்,அபூதாவூத்,தீர்மிதி,இப்னு மாஜ்ஜானை)