விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவான வேதமும் உங்களிடம் வந்துள்ளது(5:15). இந்த வசனத்தில் பேரொளி என்பது எதைக் குறிக்கிறது? நபி(ஸல்) அவர்களை ஏன் குறிக்காது? எம்.ஏ.ஹாஜி முஹம்மது, நிரவி
அல்ஹம்துலில்லாஹ்! தங்களைப் போன்றோர் குர்ஆனை புரட்ட ஆரம்பித்து விட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள இறைவசனத்தை முழுமையாக பார்ப்பீர்களேயானால் பேரொளி எது என்பது தெளிவாகிவிடும். குர்ஆனே குர்ஆனுக்கு தப்ஸீர் (விளக்கம்) என்பதை மறந்துவிடாதீர்கள். இப்போது முழு ஆயத்தைப் பாருங்கள்.
வேதமுடையவர்களே! நிச்சயமாக உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவான வேதமும் உங்களிடம் வந்துள்ளது. (5:15)
இறைவசனத்தில் அல்லாஹ்(அஹ்லு கிதாபு) வேதமுடைய கிறித்துவ, யூத மக்களைப் பார்த்துக் கூறுகிறான். அவர்களுக்கு முன்னர் அருளப்பட்ட வோதநூல்களை அவர்கள் களங்கப்படுத்தி வைத்து, அவ்வேதங்கள் கூறியதை மறைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை இந்நபி(முஹம்மது(ஸல்) அவர்கள் விளக்கி காட்டுவார் என்கிறான் அல்லாஹ். மேலும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்களில் உள்ள பல பழைய (OUT OF DATE) சட்டங்களை இந்நவீன (UP OF DATE) உலகிற்க்கொப்ப சட்டங்களாகத் தருவார்கள். எனவும் பிரகடப்படுத்துகிறான். இவ்விதமாக அல்லாஹ்வின் ஆணைகளை உள்ளது உள்ளபடி எவ்வித தயவுதாட்சனையுமின்றி தனது சொல், செயல் அங்கீகாரம் மூலம் எடுத்துக் காட்டியதைத்தான் அல்லாஹ் பேரொளி என்கிறான்.
இவ்வசனத்தின் முடிவில் இரு விஷயங்கள் வந்துள்ளதாக கூறுகிறான் ஒன்று; பேரொளி, மற்றொன்று தெளிவான வேதம். தெளிவான வேத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது தான் மக்களின் உள்ளங்களில் உள்ள இருள் அகன்று பெரொளி உருவாகும் அதற்கு தற்சமயம் உங்களைப் போன்றோரிடம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ ஏறப்பட்டிருக்கும் உத்வேகமே நல்ல சான்றாகும். இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் பட்டவர்த்தனமாக நம்முன் எடுத்துத் தரப்படும்போது நம்மிடமிருந்த, இருந்துக் கொண்டிருக்கும் இருள்களான சம்பிரதாய சடங்குகள், மூடநம்பிக்கைகள் விலகி அல்லாஹ்வின் பேரொளி(ஈமான்) உருவாகிறது. வலுபடுகிறது. அதேப் போல் நபி(ஸல்) தனக்கு அருளப்பட்ட தெளிவான வேத சட்டங்களை நடைமுறைப்படுத்தியப் பொழுது (சுன்னத்) மக்களிடையே தெளிவானது. அறியாமை இருள் விலகியது. எனவே நேர்வழிக் காட்டும் குர்ஆன் சட்டப்படி வாழ்ந்த அருமை நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறி(சுன்னத்) இங்கு பேரொளியாக பொருள்படுவதைக் விளங்கலாம்.
மேலும் தாங்கள் கடைசியாகக் கேட்டுள்ளபடி பேரொளி என்பது நபி(ஸல்) அவர்களைக் குறிக்காது என்பதைக் குர்ஆன், ஹதீஸ்கள் விளக்குகின்றன. நபி(ஸல்) அவர்களை பேரொளி எனக் கொள்ளலாம் என்றால் நபி(ஸல்) அவர்கள் தனது 40 வயது வரை எப்படியிருந்தார்கள்? என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். இறை நம்பிக்கை, நாகரீகம் அற்ற அன்றைய அரபிகளிடையே அவர்கள் தனது 40 வயது வரை எப்படியிருந்தார்கள்? தான் சிலைகளை வணங்கவில்லை; அவர்களது அநீத வாழ்வில் பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்களை திருத்துவதற்குரிய வழி அறியாமல் தானே! இருந்தீர்கள்; இதனை நாம் சொல்லவில்லை. அல்லாஹ் சொல்வதைப் பாரீர்;
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? இன்னும் உம்மை வழியற்றவரதகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். (93:6,7)
எனவே நபி(ஸல்) அவர்கள் தனது 40 வயதுவரை நேர்வழி எதுவென அறியாதக் குழப்பத்திலேயே இருந்திருக்கிறார்கள். அதனையே அல்லாஹ் ழலாலத்” (வழிகேடு) என்கிறான். 40 வயதுக்குப்பின் அல்லாஹ்வின் வஹி பெற்ற பின்பே நேர்வழி இன்னது என அடையாளம் காணுகிறார்கள். அதனை தனது நடைமுறை(சுன்னத்) மூலம் மக்களிடையே உருவாக்கினான். அதாவது தான் அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் குர்ஆன் என்ற பேரொளியை மக்களுக்கு தருகிறார்கள். இது குர்ஆன் மூலம் நாம் பெறும் விளக்கம்.
நபி(ஸல்) அவர்கள் பேரொளியாக இருந்திருந்தால்; தாங்கள் குறிப்பிட்ட ஆயத்தில் உள்ள நூர்-பேரொளி தன்னையே குறிக்கும் என அறிந்திருந்தால் கீழ்வருமாறு தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்களா? என்ற சாதாரண வினாவை எழுப்பிப்பாருங்கள்.
யா அல்லாஹ்! எனது இதயத்தில் பேரொளியையும்!
எனது கண்களில் பேரொளியையும்!
எனது காதுகளில் பேரொளியையும்!
எனது வலதுப் புறத்தில் பேரொளியையும்!
எனது இடது புறத்தில் பேரொளியையும்!
எனக்கு மேலேப் பேரொளியையும்!
எனக்குக் கீழேப் பேரொளியையும்!
எனக்கு முன்னால் பேரொளியையும்!
எனக்குப் பின்னால் பேரொளியையும்!
உண்டாக்கி, என்னையே பேரொளியாக்கி விடுவாயாக! என்று தமது பிரார்த்தனையில் கூறிக் கொண்டிருந்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ)
எனவே மேலேக் கண்ட குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நூர்-பேரொளி என்பது அல்லாஹ்வின் அருட்கொடையான குர்ஆனை அல்லது அக்குர்அன் சட்டபடி தனது வாழ்வை வாழ்ந்துக் காட்டிய வழிமுறை (சுன்னத்)யை குறிக்கும். தனிப்பட்ட நபரைக் குறிக்காது. நபி(ஸல்) அவர்களைக் குறிக்காது என்பதை அறியலாம். அல்லாஹ் நன்மனைவருக்கும் நேர்வழிக் காட்டி பேரொளி தருவானாக! ஆமின்.
*அந்நஜாத் மார்ச் மாத இதழில் ஐயமும் தெளிவும் பகுதியில் ஷபே பராஅத் என்ற இரவுக்கு திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை என்று விளக்கமாக பதில் தந்துள்ளீர்கள்.
ஆனால் இத்துடன் அனுப்பியிருக்கும் பரகத்துடைய பராஅத் இரவு என்ற சிறு நூலில் அல்குர்ஆன், 44:4 வசனத்தை எழுதி அதன் பொருளையும் எழுதி, இது இவ்விரவை(பராஅத்) பற்றி குறிப்பிடுகிறது. தாங்கள் தந்திருக்கும் தெளிவிற்கு நேர்மாற்றமாக இருப்பதால் சரியான விளக்கத்தை வரும் மே மாத இதழில் பிரசுரிக்க வேண்டுகிறேன். மேலும் அது தவறான விளக்கமாக இருந்தால் அதன் வெளியீட்டார் ஆசிரியர் அவர்களுக்கு எழுதிக் கருத்தறிந்து திருத்திக் கொள்வது நலம். இல்லை எனில் தவறான போதனைகள் மக்களை ஃபித்அத்தின் பால் இட்டுச் சென்று விடும். (எம், எஸ். அஹ்மது முஹிதீன், சென்னை-1)
தாங்கள் அனுப்பியுள்ள சிறு பிரசுரத்தைப் பார்வையிட்டோம். அதில் காணப்படும் விஷயங்கள் வெறும் கற்பனையும் அன்றி குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானவை அல்ல. 44:4 வசனத்தைப் படிப்பவர்கள் அதற்கு முன்னுள்ள 44:2,3 வசனங்களையும் அதற்கு பின்னுள்ள 44:5,6 வசனங்களையும் இணைத்துப் படித்துப் பார்த்தால் இதில் குறிப்பிடும் இரவு ரமழானில் உள்ள “லைலத்துள் கத்ரு” உடைய இரவே அன்றி ஷஃபான் 15வது இரவு அல்ல என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும்.
அது ஷஃபானுடைய 15வது இரவைக் குறிக்கும் என்பதாக சிலர் கூறியுள்ளதாகக் காணப்படும் அறிவிப்புகள் அனைத்தும் மறுக்கப்பட வேண்டியவைகளாகும். காரணம் அவை நேரடியாக குர்ஆனுடன் மோதுகின்றன. ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் குர்ஆன் அருளப்பட்டது.(2:185) இவ்வாறு அல்லாஹ் மிகத் தெளிவாக ரமழானில் குர்ஆனை இறக்கி வைத்திருப்பதாகக் கூறும்போது அது ஷஃபான் 15ல் இறக்கி வைக்கப்பட்டது என்று கூறுவது எப்படி முறையாகும்?
இவ்வாறே “ஒரு ஷஃபானில் இருந்து அடுத்த ஷஃபான் வரை மக்களின் ஆயுள்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஒருவர் மணமுடித்து குழந்தையும் பெற்றிருப்பார். ஆனால் அவருடைய பெயரோ மரணமாவோரின் ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்திருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மூகிரத்துப்னுல் அக்னஸ்(ரழி)
இவ்வாறு ஒரு பலகீனமான அறிவிப்புக் காணப்படுகிறது. இதன் நிலை என்னவென்றால் அறிவிப்பாளர் தொடரில் அறிவிப்பாளர்கள் விடுப்படடுள்ளனர். அதனால் இது ஏற்புக்குரியதல்ல.