ஹதீஸ்களின் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும்
தொடர் :2
அபூரஜீன்
இப்பகுதியில் ஹதீஸ்களைப் பற்றி இடைச்செருகலானவை, பலகீனமானவை என்று விமர்சிக்கப்படுவதெல்லாம் “முஹத்தீஸீன்” -ஹதீஸ் கலா வல்லுநர்களே அன்றி நாம் அல்ல. விமர்சனத்திலும் நமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏற்கனவே இமாம் தஹபீ, இமாம் ஹாபிழ் இப்னுஹஜர்(ரஹ்) ஆகியோர் முறையே மீஜானுல் இஃதிதால், தஹ்தீபு அகிய நமது நூல்களில் அறிவிப்பாளர்களைப் பற்றி விமர்சித்துள்ள விமர்சிப்பை அடிப்படையாகக் கொண்டே ஹதீஸ்கள் விமர்சிக்கப்படுகின்றன.
16. “தன்னை அறிந்தவன் தனது ரட்சகனை அறிவான்”
இது அடிப்படையில்லாத ஓர் அறிவிப்பாகும். இதை “யஹ்யாபின் முஆது” அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது. இதை முல்லா அலி(ரஹ்) அவர்கள் தமது இடைச்செருகலின் தொகுப்பில’ இதுவும் இடைச்செருகலானது என்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இவ்வறிவிப்பை நபி(ஸல்) அவர்களின் உண்மையான ஹதீஸ் எனக் கருதி ஹனபி மத்ஹபுகளைச் சார்ந்துள்ள ஒருசிலர் இதுப் பொய்யான ஹதீஸுக்கு விரிவுரையாக ஒரு நூல் எழுதியுள்ளார்கள். இந்நூல் இப்பொழுதும் “ஹலபு” வெனும் நகரத்திலுள்ள நூலகத்தில் உள்ளது.
இவ்வாறே “குளத்து கன்ஜன் மக்ஃபிய்யா………..” (நான் மறைத்துள்ள பொக்கிஷமாக இருந்தேன். பிறர் என்னை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்பிப் படைப்புகளை படைத்தேன்) என்ற மவ்லீது கிதாபுகளின் ஹியாயத்து” களில் இடம்பெற்றுள்ள பொய்யான ஹதீஸுக்கு விரிவுரையாக அதே மத்ஹபுகளைச் சார்ந்த மற்றொருவர் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்நூலும் அதே நூலகத்தில் உள்ளது.
இவ்வாறு பொதுவாக “ஹனபி மத்ஹபுவை சார்ந்துள்ள பலர் பல பொய்யான ஹதீஸ்களுக்கு விரிவு செய்திருப்பதால் அந்த மத்ஹபில் உள்ள அநேக பலகீனமான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டவைகளாக காணப்படுகின்றன.இப்படி கூறுவதால் மற்ற மத்ஹபு நூல்களில் பலகீனமான ஹதீஸ்களை அடிப்படையாக் கொண்டவைகளாக காணப்படுகின்றன. இப்படி கூறுவதால் மற்ற மத்ஹபு நூல்களில் பலகீனமான அறிவிப்புகள் இடம் பெற்றே உள்ளன.
17 பிடறிக்கு மஸ்ஹு செய்வதானது (மறுமையில் அதில்) விலங்கு பிணைக்கப்படுவதிலிருந்துப் பாதுகாக்கும்.”
இதுப் பற்றி ஹாபிழ் இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் விமர்சிக்கும் போது இதை “அபூமுஹம்மதில் ஜவீனீ” என்பவர் அறிவித்துள்ளார். இவர் இதற்காக எடுத்து வைக்கும் ஸனதில் அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகள் இருப்பதால் ஹதீஸ்கலா வல்லுநர்களில் எவரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாக தமது “தல்கீஸுல்ஹபீர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இது இடைச்செருகலானது என்று இமாம் நவவீ, சுயூத்தி(ரஹ்) ஆகியோர் கூறியுள்ளார்கள். இவ்வறிவிப்பின் தரம் மிக மோசமாயிருந்தும், ஹனபி மத்ஹபில் பிடறிக்கு மஸ்ஹு செய்வது முஸ்தஹப்பு-மார்க்கத்தில் விரும்பத்தக்க செயல் என்று கூறப்பட்டிருப்பதால், ஹனபிகள் ஒளூ செய்யும்போது தமது தலைக்கும் காதுகளுக்கும் “மஸ்ஹு” செய்துவிட்டு, தமது பீடறிக்கும் சேர்த்து “மஸ்ஹு” செய்வதைக் காணலாம்.
ஹதீஸ் கலா வல்லுநர்களிடத்தில் இடைச் செருகல் என்பதாக ஒதுக்கி வைக்கப்பட்ட அறிவிப்பு ஹனபிகளிடத்தில் அது “முஸ்தஹப்பு” என்று கூறும் அளவுக்கு ஏற்ப்பட்டிருக்காது விந்தையாக உள்ளது அல்லவா?
18. “நீங்கள் குர்பானி கொடுக்கும் பிராணியைக் கொழுத்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் அமைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு(மறுமையில்) அஸ்ஸிரத்து எனும் பாலத்தின் வாகனமாக உள்ளது.”
இதுவும் நபி(ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள ஹதீஸ்களில் ஒன்றாகும். இதற்கு எவ்வித ஸனது – அறிவிப்பாளர் தொடரும் கிடையாது. இத்தகைய போலியான ஹதீஸை ஜும்ஆத் பிரசங்கத்தில், துல்ஹஜ்ஜு மாத முதல் வாரத்தில் ஹதீஸ்களின் தரம் புரியாத பல இமாம்கள் எடுத்துக் கூறுவதைப் பார்க்கலாம்.
19. “மூமின் குடித்து எஞ்சிய தண்ணீர் குணம் அளிப்பதாக உள்ளது” இவ்வறிவிப்பை “முல்லா அலிய்யில்காரீ” அவர்கள் தமது இடைச்செருகல் தொகுப்பில் பதிவு செய்துவிட்டு இதன்பொருள் “தாருகுத்னி”யில் இடம்பெற்றுள்ள இப்னு அப்பாஸ்(ரழி) வழியாக “ஒருவர் தமது மூமினாகிய சகோதரர் குடித்து எஞ்சியத் தண்ணீரைக் குடிப்பதானது, பணிவு தன்மையில் உள்ளதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள அறிவிப்புக்கு ஒத்துள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.
ஆனால் அவர்களின் கூற்றுப்படி”மூமின் குடித்து எஞ்சிய தண்ணீர் குணம் அளிக்கக் கூடியதாகும்.” என்றக் கருத்து தாருக்குத்னியில் இடம் பெற்றுள்ள அறிவிப்பு ஸஹீஹானதும் அல்ல. காரணம் இதன் அறிவிப்பாளர் தொடரில் “நூஹுபின் அபீமர்யம்” எனும் ஹதீஸ் கலாவல்லுநர்களால் ஒதுக்கப்பட்டுள்ளவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே மேற்காணும் அறிவிப்புக்கு வேறு ஹதீஸ்கள் உடன்பாடானவைகளாக இல்லை. ஆகவே மேற்காணும் அறிவிப்பு இடைச் செருகலானது என்பதே ஊர்ஜிதமாகிறது.
20.”கதீபு – ஜும்ஆ பிரசங்கம் செய்பவர் மிம்பரில் ஏறிவிட்டால் தொழவும் கூடாது, பேசவும் கூடாது”
இது அடிப்படையில் இல்லாத ஓர் அறிவிப்பாகும். ஆனால் இதன் கருத்தில் “இமாம் மிம்பர்மீது இருக்கும்போது உங்களில் ஒருவர் பள்ளிக்குள் பிரவேச்த்தால் இமாம் தமது காரியங்களை முடிக்கும் வரை தொழவும் கூடாது. பேசவும் கூடாது.” என்பதாக இப்னு அம்ரு(ரழி) வாயிலாக தப்ரானியில் ஓர் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் “அய்யுபுபின் நஹீக்” எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றிருப்பதால் இப்னு அபீஹாத்திம், ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) ஆகியோர் இதை பலஹீனமான அறிவிப்பு என்று கூறுகிறார்கள்.
மேற்காணும் இரு அறிவிப்புகளும் ஸஹீஹான பின்வரும் ஹதீஸ்களுடன் மோதுகின்றன. அவையாவன:
* வெள்ளிக்கிழமை இமாம் “குத்பா” ஓதும் போது உங்களில் ஒருவர் வருவாரானால் அவர் இரண்டு ரகாஅத்துக்கள் (தஹிய்யத்து மஸ்ஜித்-பள்ளியின் காணிக்கை என்ற வகையில்) சுருக்கமாக தொழுதுகொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)
இவ்வறிவிப்பு இமாம் “குத்பா” ஓதும் போது வருபவர் இரண்டு ரகாஅத்து தொழவேண்டும் என்பதை வலியுறுத்துவதால் குத்பா ஓதும் போது தொழுவதற்குத் தடை இல்லை என்பது தெளிவாகிறது.
* வெள்ளிக்கிழமை இமாம் குத்பா ஓதிக்கொண்டிருக்கும் போது உமது நன்பரை நோக்கி “நீர் வாய்மூடுவீராக!” என்று நீர் கூறினால் நிச்சயமாக வீண்வேலை செய்தவராவீர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இவ்வறிவிப்பு இமாம் குத்பா ஓதும் அந்த நேரத்தில் மட்டுமே பேசுவது முறை அல்ல என்பதாக அறிவிக்கிறதே தவிர பொதுவாக இமாம் மிம்பர் மீது ஏறிவிட்டால் பேசக்கூடாது என்று தடை விதிக்கவில்லை.
ஆகவே பலகீனமானவை என்று மேற்க்கூறப்பட்டுள்ள இரு அறிவிப்புகளும் பலகீனமானவைதான் என்பதை இந்த இரு ஸஹீஹான அறிவிப்புகளும் எடுத்துக்காட்டுகின்றன.
12. நிச்சயமாக நான் மறக்கவில்லை. எனினும் நான் மறக்கடிக்கப்படுகிறேன் (எனது செயல்முறைகள்) நடைமுறைப் படுத்தப்படுவதற்காக.”
இதை இமாம் கஜ்ஜாலி(ரஹ்) அவர்கள் தமது “இஹ்யா” வில் இடம்பெறச் செய்துள்ளார்கள். இஹ்யாவில் உள்ள ஹதீஸ்களை சரிப்பார்த்துள்ள “ஹாபிழ் இராக்கி” அவர்கள் இக்கருத்தில் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தமது “முஅத்தா” வில் நிச்சயமாக நான் ஒன்றை மறக்கிறேன் அல்லது மறக்கடிக்கப்படுகிறேன். (அதை) நான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எனக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது என்று அறிவிப்பாளர் வரிசை ஏதுவுமில்லாமல் அறிவித்துள்ளார்கள் என்று கூறினார்கள்.
எனவே மேற்காணும் முதல் அறிவிப்புக்கு அறவே அடிப்படை இல்லை. இவ்வாறே இரண்டாம் அறிவிப்பில் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் இவ்வாறு ஒரு செய்தி கிடைத்திருப்பதாக கூறுகிறார்களே தவிர அதற்கான ஸனது எதனையும் காட்டாததால் அது நம்பகமற்றதாகி விடுகிறது.
இந்நிலையில் கீழ்காணும் ஸஹீஹான ஹதீஸ்களுடன் மேற்காணும் அறிவிப்புகள் மோதவும் செய்கின்றன. எவ்வாறெனில்?
“நானோ மனிதன்தான் நீங்கள் மறப்பதுப் போல் நானும் மறக்கவே செய்கிறேன். நான் மறந்துவிட்டால் எனக்கு ஞாபகமூட்டுங்கள்” என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் ஒன்றைத் தாம் மறப்பதனால் அதன் பயனாக ஒரு சட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்ப்பட்டு அதை அவர்கள் மக்களுக்கு எடுத்துக் கூறும் வாய்ப்பும் ஏற்படலாம். ஆனால் அவர்கள் மனிதராக இருப்பதால் மறதி அவர்களுக்கும் ஏற்படவே செய்யும். அவர்கள் மனிததன்மையான மறதிக்கு அப்பாற்ப்பட்ட தெய்வீக தன்மை படைத்தவர்கள் அல்லர் என்பதை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் அறிவும் தெளிவுபடுத்துகிறது. இதன் அடிப்படையில் மேற்காணும் அறிவிப்புகள் அர்த்தமற்றதாகிவிடுகின்றன என்பதை அறிகிறோம்.
22. மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டால் விழித்துக் கொள்வார்கள்.”
இதை இமாம் கஜ்ஜாலி(ரஹ்) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸாக அறிவிக்கிறார்கள். ஆனால் இதுப் பற்றி ஹாபிழ் இராக்கீ, சுப்க்கீ(ரஹ்) ஆகியோர் இது ஹதீஸ் என்பதற்கான சான்றுகள் எதுவுமே இல்லை. இது அலி(ரழி) அவர்களின் “சொல்” என்பதாக கூறுகிறார்கள்.
23. “கடைசி காலத்தில் ஹலாலான முறையில் ஒரு திர்ஹம்-வெள்ளிக்காசு கிடைப்பதும் அரிதாகிவிடும். இவ்வாறே நம்பிக்கை நாணயமுள்ள ஒரு சகோதரர் கிடைப்பதும் அரிதாகி விடும்”
இவ்வறிவிப்பை பலகீனமானது என்று கூறுவதைவிட இடைச்செருகலானது என்று கூறுவதே பொருத்தமாகும். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் “முஹம்மது பின் ஸயீதில் ஹரானீ” என்னும் படுமோசமானவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இதை ஹதீஸ் கலாவல்லுநர்கள் இடைச்செருகலானது என்றே கூறுகிறார்கள்.
24. “தலைப்பகை அணிந்துக் கொண்டு தொழும் ஒரு தொழுகை தலைப்பாகையின்றி தொழும் 25 தொழுகைக்கு ஈடாகும். தலைப்பாகை அணிந்துக் கொண்டு ஒரு தொழும் ஒரு ஜும்ஆவானது தலைப்பாகையின்றி தொழும் 70 ஜும்ஆக்களுக்கு ஈடாகும். நிச்சயமாக மலக்குகள் ஜும்ஆவுக்கு தலைப்பாகை அணிந்தவர்களாகவே ஆஜராகிறார்கள். அவர்கள் (அன்று. தலைப்பாகை அணிந்தவர்களுக்காக சூரியன் மறையும் வரை நற்பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பார்கள்”
இதையும் ஹதீஸ் கலா வல்லுநர்கள் இடைச் செருகலானது என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதன் கருத்தை மேலோட்டமாக பார்க்கும் போதே இதன் குட்டு வெளியாகிவிடும். காரணம் சாதாரணமான ஒரு அமலுக்கு மாபெரும் தவாபு-பலன் என்ற அறிவிப்புகள் அனைத்துமே இடைச்செருகலானவையாகவே இருக்கும். என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். இடைச்செருகலானவற்றை எளிதில் கண்டறிய அதற்கான வழிமுறையை ஹதீஸ் கலாவல்லுநர்கள் இவ்வாறு காட்டிச் சென்றுள்ளார்கள்.