ஆதாரப்பூர்வமான  சரித்திர ஏடுகளிலிருந்து…..

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

ஆதாரப்பூர்வமான  சரித்திர ஏடுகளிலிருந்து…..
“AMAMA’

சுன்னத் வல்-ஜமாஅத் என தங்களை அழைத்துக் கொள்ளும் பிரிவார் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றியே ஆகவேண்டும். அவர்களே உண்மை முஸ்லிம்கள். இதனைப் பின்பற்றாதவர்கள் உண்மை முஸ்லிம்களல்லர் எனக் கூறி வருகின்றனர். நான்கு மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவது தான் குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றியதாக – பற்றிப் பிடித்ததாக – ஆகுமென நம்பிச் செயல்பட்டு வருபவன் நான் என புரசை மவ்லவி நிஜாமுத்தீன் போன்றோரும், அவரது முல்லா சகாக்களும் கூறி வருகின்றனர். இவர்களது இக்கூற்றுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் உண்மையான, சரித்திரப் பூர்வமான ஆதாரங்கள் உண்டா? நம்மிடையே இருக்கும் ஆதாரபூர்வமான சரித்திர ஏடுகள் இவர்களது கூற்றுக்கு சாதகமாக உள்ளனவா? பாதகமாக உள்ளனவா? என்பதை இக்கட்டுரையில் காண்போம். இந்நான்கு மத்ஹபுகளை ஹனபி, மாலிகி, ஷாஃபிஈ ஹன்பலி ஆகியவற்றை உருவாக்கியதாக மேற்படி மவ்லவிகள் கூறும் இமாம்கள், அவர்களது இயற்பெயர்கள், மக்களால் அழைக்கப்படும் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த காலங்கள் முதலியவற்றை முதலில் பார்ப்போம்.

மத்ஹபு                    இயற்பெயர்கள்                 அழைக்கப்படும் பெயர்கள்                    காலம் ஹிஜ்ரியில்

1.     ஹனபி                 நுஃமான்                             இமாமுல் அஃஜம்                                   80/150

          இப்னு                 அல்லது அபூ

          தாபிக்                 ஹனிபா (ரஹ்)       

2.     மாலிகி                 மாலிக்                               அபூ அப்துல்லாஹ்                                 93/179

                                                          இப்னு  அல்லது                     மாலிக் (ரஹ்)       

          அனஸ்

3.     ஷாஃபிஈ                              முஹம்மது                            அபூஅப்தில்லாஹ்                                150/204

                                                         பின்இத்ரீஸ்  அல்லது

                                                         ஷாஃபிஈ(ரஹ்)

4. ஹன்பவி                அஹ்மது                               அஹ்மத் அல்லது                                164/241

                                                          இப்னு                                  ஹன்பல்(ரஹ்)

                                                          முஹம்மது

இப்பொழுது மேல் குறிப்பிட்ட சுன்னத் வல்-ஜமாஅத்தாரிடம் ஒரு சில கேள்விகளை முன் வைப்போமாக.

ரசூல்(ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10ல் இவ்வு-லகை விட்டுப் பிரிந்தார்கள். அதற்குப் பிறகு சரியாக 70 ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரி 80ல் ஹனபி மத்ஹபின் இமாமாகக் கூறப்படும் அபூ ஹனீபா(ரஹ்) பிறந்துள்ளார்கள். பிறந்தவுடனே, ஈஸா(அலை) போல, இமாமாக ஆகி இருக்க முடியாது. அவரது 20 வயதில் இமாமானார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி எனில் ஹிஜ்ரி 100ல் அபூஹனீபா(ரஹ்) இமாமானார்கள். இவர்தான், நான்கு மத்ஹபு இமாம்களாக கூறப்படுபவர்களில் முதலில் வந்தவர். இவரே நபி(ஸல்) அவர்களது இறப்புக்குப் பின் 90 வருடங்கள் கழித்து தான் உருவாகியுள்ளார். இவர்களது கூற்றுப்படி ஹனபி மத்ஹபு உருவாகியுள்ளது. இவரது வருகை வரை, இருந்த முஸ்லிம்கள் எந்த மத்ஹபை பின்பற்றினார்கள்? இவர்கள் உண்மை முஸ்லிம்கள் இல்லையா? இந்த ஹிஜ்ரி முதல் நூற்றாண்டின் முஸ்லிம்களின் நிலை என்ன?

இக்காலத்தில் தான் பற்பல நபித்தோழர்கள், தாபிஈன்கள், தபஉ தாபிஈன்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களது காலத்தில்தான் இஸ்லாம் உலகளாவிய அளவில் பரவியது. ஐரோப்பாவில் ஸ்பெயின் வரை சென்றது. தென்னாப்பிரிக்காவில் குடியேறியது. இந்தியா, சைனா வரை பரவியது. இவர்களது காலத்தை நபி(ஸல்) அவர்களும் புகழ்ந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்க. இக்கால கட்டத்தில்தான் அளவுக்கதிகமாக குழப்பங்கள், அநீதங்கள் நடந்தன. எனவே தான் இமாம்கள் தோன்றினார்கள் என எல்லா தக்லீது முல்லாக்களும், சரித்திர ஆதாரமின்றி கூறுவதைப் போல கூறாமல், ஆதாரப்பூர்வமான சரித்திர சான்றுகளில் பதில் தேடுங்கள். இம்முல்லாக்களின் மேற்படிக் கூற்று சரியென்றால் பதில் தேடுங்கள். இம்முல்லாக்களின் மேற்படிக் கூற்று சரியென்றால் அக்காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்கள், தாபிஈன்கள், தபஉ தாபிஈன்களின் காலத்தை இவர்கள் எப்படி கணித்துள்ளார்கள்? இவர்களது மத்ஹபு பக்தி எந்த அளவு இவர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ஹிஜ்ரி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லடியார்கள் எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. அவர்களிடையே மார்க்க விசயத்தில் சண்டைச் சச்சரவுகளில்லை. அல்லாஹுவின் அருள்வேதம் குர்ஆனையும், நபி மொழியையும் மட்டுமே பின்பற்றினார்கள். இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதில் பிளவுகளில்லை. பிரிவுகளில்லை. எனவே ஒற்றுமையாக இஸ்லாத்தை உலகளாவிய அளவில் பரப்பினார்கள் என்பதை நீங்கள் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிக் கொள்ளலாம். ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் வந்த கண்ணியமிக்க இமாம்களும் அதே வழியில் தான் சென்றார்கள். அவரவர்களுக்குக் கிடைத்த நபி மொழிகளுக்கு ஒப்ப மார்க்க சட்டங்களை வகுத்தளித்தனர். இமாமுல் அஃஜம் என பெருமைப்படுத்தி அழைக்கப்படும். நான்கு இமாம்களில் மூத்தவரான அபூஹனீபா(ரஹ்) அவர்களும் இதனையே வலியுறுத்தினார்கள். உண்மையான ஹதீஸே எனது வழி எனக் கூறத் தயங்கவில்லை. நாம் மேல் குறிப்பிட்ட நாற்பெரும் இமாம்களுக்கு இதே நிலையில் தான் வாழ்ந்தார்க்.

அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எந்த நூலையும் எழுதியுள்ளதற்கு ஆதாரமில்லை. காரணம்: அல்லாஹுவின் அருள்மறை குர்ஆனும், அக்காலத்தில் பற்பல அறிவிப்பாளர்கள் வரிசையில் கூறப்பட்டு நடைமுறையில் இருந்த நபிமொழிகளும் இருக்கையில் தான் ஏன் தனி நூல் எழுத வேண்டுமென, எழுதவில்லையோ? என்னவோ? அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம், ஹனபி மத்ஹபை பின்பற்றுவதாகக் கூறும் மவ்லவிகள் அபூஹனீபா(ரஹ்) எழுதியதாக ஒரு நூலையும் காட்ட முடியாது என்பதே உண்மை. ஆனால் அபூஹனீபா(ரஹ்) அவர்களுக்குப் பின் வந்தவர்கள் ஹனபி மத்ஹபு கிதாபுகள் என்ற பெயரில் பல நூல்களை எழுதினார்கள். தங்களது பெயரில் அரங்கேற்ற முடியாது என்பதை நன்கறிந்து அன்னாரின் பெயரில் அரங்கேற்றினார்கள். அவையே இன்று நம்மிடையே ஹனபி நூல்களாக சுழன்று வருகின்றன. இந்நூல்களுக்கும் அபூஹனீபா(ரஹ்) அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

மேலும் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மாலிகி மத்ஹபின் இமாமாகக் கூறப்படும் மாலிக் இப்னு அனஸ்(ரழி) அவர்களும் வாழ்ந்துள்ளார்கள். ஹிஜ்ரி 80ல் பிறந்து 150ல் அபூஹனீபா(ரஹ்) வபாத்தானார்கள். ஹிஜ்ரி 93ல் பிறந்து 179ல் மாலிக்(ரஹ்) வபாத்தானர்கள். அபூஹனீபா(ரஹ்) வாழ்ந்தது கூஃபா என்ற – தற்சமயம் ஈராக்கிலுள்ள – ஊரிலாகும். மாலிக்(ரஹ்) மதீனாவிலேயே பிறந்து, வளர்ந்து வாழ்ந்தார்கள். இவருக்கு இமாமு தாருல் ஹிஜ்ரஹ் (ரசூல்(ஸல்) குடியேறிய மதீனாவின் இமாம்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவ்விருவரும் ஹிஜ்ரி 93லிருந்து 150களில் இவ்வுலகில் வாழ்ந்துள்ளனர்.

நான்கு பெரும் இமாம்களில் அபூஹனீபா(ரஹ்) அவர்களைத் தவித மற்ற மூவரும் பெரும் பெரும் ஹதீஸ் நூட்களைத் தொகுத்துள்ளனர். ஹதீஸ்கலா வல்லுநர்களும் இம்மூவர் வாயிலாக அறிவித்த ஹதீஸ்களை தத்தமது நூல்களில் பதிவுச் செய்து வைத்துள்ளனர். மாலிக்(ரஹ்) அவர்களின் மாணவராக ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் இருந்திருக்கிறார்கள். ஷாஃபிஈ(ரஹ்) அவர்களின் மாணவராக அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) இருந்திருக்கிறார்கள். இம்மூவருக்கிடையில் ஒருவருக்கு ஒருவர் ஆசிரியர், மாணவர் என்ற உறவுகள் இருந்திருக்கின்றன. இருப்பினும் தங்களது ஆசிரியரின் மார்க்கத் தீர்ப்பே முடிவானது என இந்த இமாம்கள் முடிவெடுக்கவில்லை.

“இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் நூறு கிதாபை பார்ப்பதை விட அது மிகப் பெரிய ஆதாரமாகும்” என்று இன்றைய இந்த முல்லா வர்க்கம் மடமை வாதம் பேசுவது போல் அந்த இமாம்கள் செயல்படவில்லை. அவரவர்கள் உண்மையான ஹதீஸ்களைத் தேடுவதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் அடிப்படையில் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்புகளை வழங்கினார்கள். அவரவரது மார்க்கத் தீர்ப்புகளை தம் கைப்படவே எழுதி வைக்கவும் மறக்கவில்லை. ஹனபி மத்ஹபின் இமாமாக கணிக்கப்படும். அபூஹனீபா(ரஹ்) அவர்களுக்கும் இரு மாணவர்கள் இருந்தார்கள். ஒருவர் முஹம்மது இப்னு அல்ஹஸன் அஷ்ஷெய்பானி(ரஹ்-காலம்: 131-189ஹி). மற்றொருவர் அபூயூசுப் (ரஹ்-இறப்பு 183ஹி). இதில் அபூயூசுப்(ரஹ்) தனது மார்க்கத் தீர்ப்புகளை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வெளியிடாமல், தனது ஆசிரியர் அபூஹனீபா(ரஹ்) அவர்களது பெயரிலேயே அரங்கேற்றினார். இதனை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கீழ் காணும் கூற்று தெளிவாக்குகிறது.

அபூயூசுபே! என்னிடமிருந்து கேட்டவற்றை எல்லாம் எழுதி வைத்து விடாதே. ஏனெனில் இன்று ஒரு அபிப்பிராயத்தைக் கொண்டு (ஒரு தீர்ப்பு அளிப்பேன்) நாளை அதனை விட்டு விடுவேன். நாளை ஒரு அபிப்பிராயம் கொண்டு (தீர்ப்பளிப்பேன்) நாளை மறுநாள் அதை (தீர்ப்பளித்ததை) விட்டு விடுவேன். ஆதாரம்:தாரிக் – இப்னு முயீன்(ரஹ்) பா.6, பக்.177.

இன்று ஹனபி மத்ஹபின் பிக்ஹு சட்ட நூல்களாக உள்ளவற்றிலும் அதிகமானவைகள் அபூயூசுப்(ரஹ்) அவர்கள் தனது ஆசிரியரிடமிருந்து பெற்றதாக கூறும் மார்க்கத் தீர்ப்புகளைக் கொண்டுள்ளதை நாம் கவனிக்கலாம். அபூயூசுப்(ரஹ்) தனது இமாம் பெயரில் மார்க்க சட்டங்களை அரங்கேற்றினார்கள். அதற்கு அவர் வகித்த காஜி பதவியும் உதவி செய்தது. அவர் கூறியது உண்மையாக இருக்கலாம். ஆனால் பின்னால் வந்தவர்கள் அபூஹனீபா(ரஹ்) அவர்களிடமிருந்து அவரது மாணவர் அபூயூசுப் (ரஹ்) கேட்டு அறிவித்ததாக பற்பல மார்க்க சட்டங்களை தாங்களாகவே அரங்கேற்றினார்கள். இதனை நாம் ரத்துல் முஹ்தார், துர்ருல் முஹ்தார், பத்வாயே ஆலம்கீர் போன்ற நூல்களில் காணலாம். இவை அனைத்தும் சுமார் 300, 400 வருடங்களுக்கு முன் ஹனபி (பிக்ஹு) மார்க்க சட்ட நூல்கள் என ஹனபி இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் பெயரில் தொகுக்கப்பட்டவையாகும். அபூஹனீபா(ரஹ்) அவர்கள் 1100 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க.

இவர்கள் குர்ஆன், ஹதீஸ்களின் ஆதாரங்களை தருவதற்கு பதிலாக தங்களது முன்னோர்களின் கூற்றுகளையே ஆதாரமாக தந்தனர். அதனை அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரில் அரங்கேற்றினார். அவர்களது மார்க்க தீர்ப்புகளுக்கு எவ்வித சரித்திர ஆதாரமோ, அறிவிப்பாளர் தொடர்களோ, இல்லை என்பதே உண்மையாகும். ஹனபி, மத்ஹபின் மூலக்கருவாக கணிக்கப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எவ்வித நூலையும் எழுதி வைத்து செல்லவில்லை என்பதும் சரித்திர உண்மையாகும். கூஃபாவில் வாழ்ந்த இமாமுல் அஃஜம் அபூ ஹனீபா(ரஹ்) ஏன் மார்க்க நூல்களை எழுதவில்லை? அப்படியே எழுதியிருந்தால் அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை? என்ற பெரும் வினாக்கள் தம்முன் நிற்கிறது. அதற்கு நாம் அன்னார் வாழ்ந்த காலத்தில், கூஃபாவில், நிலவில் ஹதீஸ்களின் நிலையைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

அபூஹனீபா(ரஹ்), மாலிக்(ரஹ்) ஆகியோரின் காலத்தில் உமைய்யாக்கள், ஷீயாக்கள் என்ற இரு அரசியல் பிரிவுகள் தங்களது சுய அரசியல் லாபத்திற்காக மார்க்கப் பெயரில் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை புனைய ஆரம்பித்தனர். அதனை அரங்கேற்றவும் செய்தனர். இதனால் அரசியல் லாபமடைய விரும்பினர். இதில் இராக் முதலிடம் பெற்றது. இதற்கான காரணத்தை ஹிஜ்ரி 57/58ல் இன்னுயிர் நீத்த அன்னை ஆயிஷா(ரழி) கூறும் கூற்று கவனிக்க தக்கது.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

இராக் வாசிகளே! ஷாம் நாட்டவர்கள் உங்களை விடச் சிறந்தவர்கள். காரணம்: அங்கு அதிகமான நபித்தோழர்கள் சென்றார்கள். நாங்கள் அறிந்த செய்திகளையே அறிவித்தார்கள். ஆனால் உங்களிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்களே வந்தார்கள். ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும், அறியாத பல விஷயங்களையும் நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்கள். நாங்கள் அறியாத பல விஷயங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன. (ஆதாரம்: தாரீகுல் கபீர் பாகம் 1, பக்கம் 69)

இராக்கிலிருந்து ஒரு கூட்டம், மக்காவிலிருந்து அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரழிஇ 65ஹி) அவர்களிடம் வந்து “எங்களுக்கு ஹதீஸ் (நபிமொழி)களைச் சொல்லுங்கள்” என வினவினார்கள். அதற்கு இராக்கில் ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்கள் பொய்யான ஹதீஸ்களைச் சொல்லி, கேலி செய்வார்கள்” என்று கூறினார்.

ஆதாரம்: தபகாத் இப்னு சஅது: பாகம் 4, பக்கம் 267

இவ்விதமாக இராக் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு முதலிடமாக இருந்ததால் ஹதீஸ்கலா வல்லுநர்கள் இராக் அறிஞர்களின் ஹதீஸ்களை தீவிரமாக தீர ஆய்ந்த பின்னரே ஏற்றனர். இமாமுல் அஃஜம் அபூஹனீபா(ரஹ்) வாழ்ந்த கூஃபா, இராக்கின் அப்போதைய தலைநகர் என்பது கவனிக்கத் தக்கது. அரசியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்ட பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முதலில் தலைநகரான கூஃபாவில் பிறந்து வளரலாயிற்று என்பதை கீழ்காணும் ஆதாரம் நிரூபிக்கிறது. அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி(ரஹ் இ: 198ஹி) என்பவர் ஒருமுறை  இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் மதீனாவில் 40 நாட்களாக கேட்ட ஹதீஸ்களை ஒரே நாளில் இராக்கிலிருந்து கேட்கிறேன். இது குறித்து உங்கள் கருத்தென்ன? என வினவினார்கள். அதற்கு “உங்களிடம் உள்ளது போன்ற நாணய இரவிலே அச்சடிக்கிறீர்கள். பகலிலே செயலவு செய்கிறீர்கள். என மாலிக்(ரஹ்) கூறி, இராக்கில் பொய்யான ஹதீஸ்கள் பரவும் வேதத்தை விளக்கினார்கள். (ஆதாரம்: அல்முன்தகா: பக்கம் 88)

“அல் கூஃபீ லாயூஃபீ (கூஃபாகாரர்களிடம் வாய் சுத்தமிருக்காது) என்ற அரபி பழமொழியும் இதன் அடிப்படையிலேயே உருவானது. கூஃபாவிலிருந்து ஏறத்தாழ 2000 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த மதீனாவில் வாழ்ந்த மாலிக்(ரஹ்) கூஃபாவில் உருவாகும் பொய்யான ஹதீஸ்களின் வளர்ச்சியை அறிந்திருந்தார்கள். எனில், கூஃபாவிலேயே வாழ்ந்த அபூஹனீபா(ரஹ்) அவர்கள் அறியாமல் இருக்க முடியுமா? எனவே தான் இவ்விதமாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகரில் வாழ்ந்த அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஹதீஸ்களை தீவிரமாக ஆராய்ந்து எடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் பலஹீனமான ஹதீஸ்களும், பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகளும் கிடைக்கவே அதனை அறவே விட்டு தங்களது பகுத்தறிவு பாதையில் எவ்வித இடைச்செருகலுமற்று இருந்து வரும் குர்ஆனுக்கு விளக்கம் அறிக்க முற்பட்டார்கள்.

என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என் சொல்லைக் கொண்டு பத்வா (மார்க்கத் தீர்ப்பு) அளிப்பது ஹராம் என அபூஹனீபா(ரஹ்) கூறியிருப்பது கவனிக்கத்தக்க விஷயம். ஆதாரம்: மீஸான் ஷஃரானி, பாகம் 1, பக்கம் 55.

எனவே தான் இவரை “இமாமுர் ரஃயீ எனவும் ஹதீஸ் கலா வல்லுநர்கள் அழைக்கின்றனர். அதே சமயம் உண்மையான ஹதீஸுக்குக் கொடுக்க வேண்டிய சிறப்பைத் தரவும் மறக்கவே இல்லை. “இதா ஸஹ்ஹல் ஹதீஸு பஃஹுவ மத்ஹபி” ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக கிடைக்கும்போது அதனைப் பின்பற்றுவதே எனது வழியாகும்” என அபூஹனீபா(ரஹ்)  கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆதாரம்: ஹாஷியா இப்னு ஆபிதீன் பா. 1, பக். 63, ரஸ்முல் முஃப்தீ பா.1ஈ பக். 4, ஈகாழுல் ஹிமம் பக்கம் 62.

கூஃபாவில் நிலவிய பொய்யான ஹதீஸ்களில் தெரிவு செய்து மிகக் குறைந்த ஹதீஸ்களையே அபூஹனீபா(ரஹ்) அறிந்திருந்தார்கள். பல மார்க்க விசயங்களுக்கு தேவையான உண்மையான ஹதீஸ்கள் அவருக்கு கிடைக்காத காரணத்தினால், நிர்பந்தத்தின் நிமித்தம் பகுத்தறிவு பாதையில் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அறித்து மார்க்க தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். எல்லா ஹதீஸ் வல்லுநர்களும், மற்ற மூன்று இமாம்களின் வாயிலாக பல ஹதீஸ்கள் பெற்றுள்ளதை  தங்களது நூல்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அபூஹனீபா(ரஹ்) வாயிலாக அவர்கள் ஹதீஸ் பெற்றுள்ளது. குதிரைக் கொம்பாக தெரிவதிலிருந்து இது புலனாகும் உண்மையாகும்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டியதிருக்க தான் பகுத்தறிவு பாதையில் தீர்ப்பு வழங்குவது தவறு என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார்கள். இமாமு அஃஜம் அபூஹனீபா(ரஹ்) தக்வா (இறை உணர்வு) கொண்ட அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கீழ்காணும் கூற்று இதனை மெய்ப்பிக்கிறது. அல்லாஹ்வுடைய வேதத்திற்கும், நபி(ஸல்) அவர்கள் வழி முறைக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால், என் சொல்லை விட்டு விடுங்கள். (குர்ஆன், ஹதீஸை பின்பற்றுங்கள்) ஆதாரம்: ஈகாழுல் ஹிமம்: பக்கம் 50)

எனவே தான் அல்லாஹ்வின் அச்சம் கொண்ட இமாமுல் அஃஜம் அபூஹனீபா(ரஹ்) எந்த நூலையும் எழுதி வைக்கவில்லை போலும் மற்ற இமாம்கள் போல, இவர் கூஃபாவில் நிலவிய ஹதீஸ்களை தொகுத்திருந்தால் அவை இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை கொண்டதாகிவிடுமோ? என்று அஞ்சியிருக்கலாம். எனவே தொகுக்கவில்லை போலும் இவ்விதமாக நாம் அவர் மீது நல்லெண்ணம் கொள்வோமாக!

இவரது கூற்றும், செயற்பாடும் இவரது மாணவரான முஹம்மது (ரஹ் 131-184ஹி) அவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதும் நினைவு கூறத்தக்கது. முஹம்மது(ரஹ்) அவர்கள் மாலிக்(ரஹ்) மாணவரான இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு உறவினரானார்கள். மக்கா, மதீனாவைக் கொண்ட ஹிஜாஜ் மாகாணத்தில் வாழ்ந்தபோது உண்மையான பல ஹதீஸ்களைப் பெற்றார்கள். அதனை தொகுக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன்னோடியாக இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றினார்கள். எனவே தான், தான் தொகுத்த ஹதீஸ் நூலுக்கு இமாம் மாலிக்(ரஹ்) தனது ஹதீஸ் நூலுக்கு பெயரிட்டது போல “முஅத்தா” எனப் பெயர் வைத்தார்கள்.

மாலிக்(ரஹ்) எழுதிய ஹதீஸ் நூல் முஅத்தா மாலிக் என்றும், அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் மாணவரான முஹம்மது(ரஹ்) எழுதிய ஹதீஸ் நூல் முஅத்தா முஹம்மது என்றும் இன்றைய வரை நிலவி வருவது சரித்திர உண்மையாகும். முஸன்னப், முன்னது என பல ஹதீஸ் நூல்கள் இவர்களது காலத்திலேயே பலர் தொகுத்திருக்க அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மாணவர் முஹம்மது(ரஹ்) தனது ஹதீஸ் தொகுப்புக்கு மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி பெயரிட்டிருப்பது அவர் ஹதீஸ் கலா வல்லுநர்களுக்கு முதலிடமளித்து, தனது ஆசிரியரான அபூஹனீபா(ரஹ்) கூற்றை மெய்ப்பித்துள்ளார் என்பதை அறியலாம். முஅத்தா என்ற பெயரில் இவ்விரு நூல்கள் பெற்ற பிரசித்தம் வேறு எந்த நூலும் பெறவில்லை.

மாலிக்(ரஹ்) அக்காலத்தில் வாழ்ந்த ஹதீஸ் கலாவல்லுநர்களில் தலைசிறந்தவராகவும், ரசூல்(ரஹ்) அவர்களின் பள்ளியிலேயே குர்ஆன், மார்க்க சட்டங்களை உண்மையான ஹதீஸ்களின் அடிப்படையில் மக்களுக்கு உபதேசித்தும் வந்தார்கள். தனக்கு உண்மையான நபிமொழி கிடைக்கவில்லையெனில் அதற்கு பதிலளிக்க மாட்டார்கள். ஏன் பதில் அளிக்கவில்லையெனக் கேட்டால், நபி(ஸல்) அவர்களின் கப்ரைச் சுட்டிக்காட்டி அன்னாரின் ஆதாரம் என்னிடம் இல்லை. எனவே இதற்கான பதில் எனக்கு தெரியாதென வெட்கப்படாமல் கூறுவார்கள். ஒரு தடவை ஒரு நபர் 6 மாத பிரயாணம் செய்து மதீனா வந்தடைந்தார். அவர் மஸ்ஜிதுன்னபவியில் மாலிக்(ரஹ்) அவர்களை சந்தித்து தான் 6 மாத பிரயாண தூரத்திலிருந்து பல மார்க்க விஷயங்களுக்கு பத்வா(தீர்ப்பு) வாங்க வந்துள்ளேன்.

தாங்கள் மார்க்க தீர்ப்பளிக்க வேண்டுமென வேண்டினார். மாலிக்(ரஹ்) ஒவ்வொன்றாக கேளுங்கள் என்றார். வந்தவர் கேள்வி கேட்க மாலிக்(ரஹ்) குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்துக் கொண்டே வந்தார்கள். ஒரு சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. வந்தவர் ஏன் ஒரு சிலவற்றிற்கு பதிலளிக்கவில்லை? நான் திரும்பிச் சென்று எனது ஊராருக்கு என்ன பதிலளிப்பது? என வினவினார். அதற்கு மாலிக்(ரஹ்) அவர்கள் என்னிடம் நபி(ஸல்) அவர்களின் (ஹதீஸ்) ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தெரியாதென சொன்னதாக சொல்லும்! என பதிலளித்தார்கள். இந்நிகழ்ச்சியை மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்களுடனே இருந்த அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தி(ரஹ்-இ 198ஹி) அவர்களிடமிருந்து கேட்டதாக அஹ்மது இப்னு ஸினான்(இ 259) கூற, அதனைப் பெற்றதாக இப்னு அபீஹாதம்(ரஹ். இ:240-327ஹி) தனது சிறப்புமிக்க அல்ஜர்ஹு-வத்தஃதீல் (பா.1, பக்.18) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாலிக்(ரஹ்) குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் மார்க்க தீர்ப்பு வழங்குவார்களாயின் அன்றைய நிலையில் மதீனாவில் உயிர் வாழ்ந்த எல்லா மார்க்க அறிஞர்களும் ஏற்கக் கூடியதாகவே இருந்தது. மாற்றுக் கருத்து ஏற்பட வழி இல்லாத வகையில் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள் என்ற செய்தியையும் இப்னு அபீஹாதம்(ரஹ்) கூறுகிறார்கள். இப்படிப்பட்ட மாலிக்(ரஹ்) பற்பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மாறாக மிகைப்படுத்தி அபூஹனீபா (ரஹ்) அவர்களை புகழ்ந்ததாக எவ்வித ஆதாரமுமின்றி புரசை மவ்லவி புழுகியுள்ளார்.

கண்ணியமிக்க மாலிக்(ரஹ்) ஹதீஸ்களைத் தொகுப்பதிலும் ஒரு தனி பாணியைப் பின்பற்றினார்கள். பெரும்பாலும், ஹதீஸ் கலாவல்லுநர்களும் எங்கெங்கே நபித் தோழர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் சென்று நபிமொழி (ஹதீஸ்)களைத் தொகுத்தார்கள். பலர் நாடு விட்டு நாடு சென்று கூட ஹதீஸ்களைத் தொகுத்துள்ளார்கள். (மேல் விளக்கத்திற்கு நபிவழி தொகுப்பு வரலாறு – அந்நஜாத் பதிப்பு பார்க்க) ஆனால் மாலிக்(ரஹ்) மதீனாவிலிருந்து கொண்டே ஹதீஸ்களை தொகுக்கலானார்கள். வெவ்வேறு ஊர், நாடுகளிலிருந்து ஹஜ்ஜுச் செய்ய வருபவர்கள் மதீனாவிற்கு ஜியாரத்திற்கு வருவார்கள் அல்லவா?

அவர்களிடமிருந்து ஹதீஸ்களைப் பெற்று நாம் பிரித்து தொகுக்கலானார்கள். அந்நூலுக்கு முஅத்தா எனப் பெயரிட்டார்கள். மாலிக்(ரஹ்) தனது 23வது வயதிலேயே (ஹி.116) மஸ்ஜிதுன்னபவியில் அமர்ந்து பத்வா (மார்க்க தீர்ப்பு) வழங்கக் கூடிய சிறப்புப் பெற்றார்கள். அக்காலத்தில் ஹஜ் செய்ய வந்தவர்கள் மதீனா ஜியாரத்தின் போது மாலிக் (ரஹ்) அவர்களை மஸ்ஜிதுன்னபவியில் சந்தித்து இருக்கிறார்கள். உரையாடியிருக்கிறார்கள். கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளார்கள் என்பது அஸ்மா உர்-ரிஜால் போன்ற சரித்திரச் சான்றுகள் கூறும் உண்மையான கூற்றுக்களாகும்.

ஆனால் அதே காலத்தில் கூஃபாவில் வாழ்ந்த அபூஹனீபா(ரஹ்) அவர்கள் மாலிக்(ரஹ்) அவர்களை சந்தித்துள்ளதற்கு எங்கேயும் ஆதாரத்தைக் காண முடியவில்லை. மாலிக்(ரஹ்) அவர்கள் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி விமர்சித்துள்ளதற்கு எவ்வித ஆதாரமுமில்லை மாலிக்(ரஹ்) “முஅத்தா” ஹதீஸ் நூல் மட்டுமின்றி கீழ்க்காணும் ரிஸாலாக்களையும், கிதாபுகளையும் எழுதி உள்ளார்கள்.

        1.    ரிஸாலாஹ் இலா இப்னு வஹ்புஃபில் கத்ர்

        2.    ரிஸாலாஹ் பிஃல் அஃக்திய்யாஹ்

        3.    ரிஸாலாஹ் இலல் லைஃத் இப்னு சஅத்

        4.    ரிஸாலாஹ் இலா இப்னு கஸ்ஸான்

        5.     கிதாபு ந் நுஜும்

        6.    தஃப்ஸீர் லி கஃரீபில் குர்ஆன்.

        7.    கிதாபுஸ் ஸியர்

        8.    கிதாபுல் மனாஸிக்

இவற்றில் ஒருசில காலப் போக்கில் அழிந்து விட்டன. ஒரு சில இன்றும் பதிப்பிலுள்ளன.

இந்நூல்களிலும் மருந்துக்குக் கூட அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதே உண்மை. ஆனால் பின்னால் வந்த ஹனபி மத்ஹபு பக்தர்கள் மாலிகி மத்ஹபை விட தங்களது மத்ஹபு உயர்வானது எனக் காட்ட, சந்திக்காதவர்களை சந்திக்க வைத்துள்ளனர். பேசாததை பேச வைத்துள்ளனர். அதற்கு புரசை மெளலவி நிஜாமுத்தீன் கடிதமே சான்றாகும். மாலிக்(ரஹ்) அவர்கள் கூஃபாவில் வாழ்ந்த அபூஹனீபா(ரஹ்) அவர்களைக் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லையே தவிர, கூஃபாவையும், ஈராக்கையும் முழுமையாக விமர்சித்துள்ளதற்கு ஒரு உதாரணத்தைக் கொடுத்துள்ளோம். (மேல் விபரத்திற்கு நபிவழி தொகுப்பு வரலாறு-பார்க்க)

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ்ந்த, மார்க்கத் தீர்ப்பு வழங்கிய மாலிக்(ரஹ்) அவர்களை பின்பற்றி, அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மாணவராக இருந்த முஹம்மது(ரஹ்) அவர்கள், மாலிக்(ரஹ்) அவர்களைத் தனது ஆசிரியராக ஏற்று, ஹதீஸ் நூல் எழுதியதும், அதற்கும் மாலிக்(ரஹ்) போல முஅத்தா எனப் பெயரிட்டதும் கவனிக்கத்தக்கது. ஒரு தடவை முஹம்மது(ரஹ்) அவர்களுக்கும், இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்களுக்குமிடையில் நிகழ்ந்த உரையாடலை அப்படியே தருகிறோம்.

இமாம் முஹம்மது இப்னு அல்-ஹஸன் அஷ்ஷெய்பானி(ரஹ்): அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் மாணவர்.

இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ் ஷாஃபிஈ(ரஹ்): மாலிக்(ரஹ்) மாணவர்.

ஷாஃபிஈ(ரஹ்) : நம்மிரு ஆசிரியர்களில் எவர் சிறந்த அறிஞராக திகழ்ந்தார்கள்?

முஹம்மது(ரஹ்): உண்மையாக இந்த கேள்வியை நீர் கேட்கிறீரா?

ஷாஃபிஈ(ரஹ்) : ஆமாம்! அல்லாஹ்வின் ஆணையாக! குர்ஆனுக்கு விளக்கமளிப்பதில் எவர் சிறந்தவர்? உங்களது ஆசிரியர்-அபூ ஹனீபா(ரஹ்) அவர்களா? அல்லது எனது ஆசிரியர்-மாலிக்(ரஹ்)-அவர்களா?

முஹம்மது(ரஹ்): உனது ஆசிரியர்-மாலிக்(ரஹ்) அவர்கள் தான்.

ஷாஃபிஈ(ரஹ்) : ஹதீஸ் ஞானத்தில் சிறந்த அறிஞர் உங்களது ஆசிரியரா? எனது ஆசிரியரா?

முஹம்மது(ரஹ்): அல்லாஹுவின்மீது ஆணையாக! உனது ஆசிரியர் தான்.

ஷாஃபிஈ(ரஹ்): சஹாபாக்களின் (அஃதர்) ஆதாரங்களை அறிந்திருந்ததில் சிறந்த அறிஞர் உங்களது ஆசிரியரா? எனது ஆசிரியரா?

முஹம்மது(ரஹ்): அல்லாஹுவின் மீது ஆணையாக! உனது ஆசிரியர் தான்.

ஷாஃபிஈ(ரஹ்) : அப்படியெனில் உங்களது ஆசிரியர் அதிகமாக ஊகங்களை (கியாஸுக்கு)களுக்கு முக்கியமளித்தாரா?

முஹம்மது(ரஹ்) : குர்ஆன், ஹதீஸ் நபித்தோழர்களின் (அஃதர்) ஆதாரங்களை ஒருவரது பகுத்தறிவு ஊகம்(கியாஸ்) வென்று விடுமா? அது சிறப்பாகுமா?

இந்த உரையாடலில் இடம் பெற்றிருப்பவர்கள் இரு பெரும் இமாம்களின் மாணவர்கள் என்பதையும், அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் சிறந்த மாணவரான முஹம்மது(ரஹ்) அவர்கள் தனது ஆசிரியரைப் பற்றி கூறிய சொந்த வாக்குமூலத்தையும் சிந்தனையுடன் பார்வையிடுங்கள். இவ்வுரையாடல், புரசை மவ்லவி போல, பொய்யான ஆதாரங்களில் தரப்படவில்லை. ஹிஜ்ரி 240ல் பிறந்த 327ல் இவ்வுலகை நீத்த இப்னு அபீ ஹாதம் அர்-ராஜி(ரஹ்) அவர்கள் சரியான அறிவிப்பாளர்கள் வரிசையில் தனது நூலான அல்-ஜர்ஹு வத்தஃதீல் என்ற நூலில் (பா.1, பக். 4,12)ல் குறிப்பிட்டுள்ளதை எடுத்து வைத்துள்ளோம்.

இதன் அறிவிப்பாளர் வரிசையையும் தருகிறோம்:

இமாம் முஹம்மது இப்னு அல்-ஹஸன் அஷ்ஷெய்பானி, காலம்: 131-189 ஹி்

இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாஃபிஈ: காலம்: 150-204 ஹி. த.ஃபீஈ(ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதாக உரைப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்துல் ஹகம்(ரஹ்), காலம்: 187-268 ஹி.

இவரிடமிருந்து அறிவிப்பவர்: முஹம்மது இப்னு ஹஸன். (ரஹ்-இ : 261 ஹி.)

இவரிடமிருந்து அல்ஜர்ஹு வத்தஃதீல் ஆசிரியர் இப்னு அபீ ஹாதம்(ரஹ்) பெற்று, பதிவு செய்துள்ளார்கள். இவரது காலம்: 240-327 ஹி.

இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் எல்லா ஹதீஸ்கலா வல்லுநர்களாலும், அப்பழுக்கற்றவர்கள்: நம்பிக்கைக்குரியவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள். இவர்களது காலத்திற்கு பின் வந்த ஹதீஸ் ஆய்வாளர்களான தஹபி(ரஹ்), இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) போன்றோர்கள் கூட இப்னு அபி ஹாதம்(ரஹ்) அவர்களின் நூல்களை ஏற்று, அதிலிருந்து ஆதாரங்களை எடுத்து தந்துள்ளதை மீஜானுல் இஃதிதால், அத்தஹ்தீப் வத்தஹ்தீப் போன்ற நூல்களில் காணலாம்.

இவ்வளவு ஆதாரங்களை நாம் கொடுக்கக் காரணம், பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட கப்ஸாக்களையும், கதைகளையும் வரலாற்று உண்மைகள், சரித்திரச் சான்றுகள் எனக் கூறி மக்களை, தனது மவ்லவி, பள்ளி இமம் என்ற முஸ்லிம் புரோகிதர் போர்வையில், வழிகெடுத்து வரும் புரசை மவ்லவி நிஜாமுத்தீன் போன்றோர், தங்களது கூற்றுக்களுக்கு இது போல சான்றுகள் தர வேண்டுமென்பதற்காகத்தான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல,  ஒரு சில ஆதாரங்களைச் சரித்திர ஏடுகளிலிருந்து தந்துள்ளோம். இனியும் அவரது கப்ஸாக்களை, சரடுகளை ஆதாரமின்றி கூறி, மக்களை வழிகெடுப்பாரேயானால், சரியான ஆதாரங்களில் அவரையும் அவரைப் போன்றோரையும் அடையாளம் காட்டத் தயங்க மாட்டோம்.

அநாகரீகமான சொற்றொடர்களையும், ஒருமையில் விழிப்பதையும், அவமதிப்பான கூற்றுக்களையும் விட்டு கருத்தை கருத்தால் வாதிடுவார். ஆதாரத்தை பலமான ஆதாரத்தால் விளக்குவார் என ஆசைப்படுகிறோம். அவரது இன்றைய நிலை நீடிக்குமானால் அவரையும், அவரது முல்லா சஹாபாக்கள் சார்ந்துள்ள ஹனபி மத்ஹபின் நிலைகளையும் ஆதாரப்பூர்வமான செய்திகளின் அடிப்படையில் ஒவ்வொன்றாக நாம் வெளியிடுவோம். அவர்களை தோலுரித்துக் காட்டுவோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

எனினும் யார் (தங்கள்) தவறுக்காக மனம் வருந்தித் தங்களைத் திருத்திக் கொண்டு, இன்னும் உண்மையை எடுத்துக் கூறுகிறார்களோ, அவர்களை தான் மன்னித்து விடுகிறேன். நான் மிக மன்னிப்போனாகவும், அளவிலா அன்புடையோனுமாக இருக்கிறேன். யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிக்கும் காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வுடையவும் மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (அல்குர்ஆன் 2:160,161)

(புரசை மவ்லவி, சென்னை மக்கா பள்ளி இமாம் போன்ற முல்லாக்களுக்கு இந்த இறைவசனத்தை சமர்ப்பிக்கிறோம்)

Previous post:

Next post: