ஐயமும், தெளிவும்

ஐயம் : சிலர் ‘ஜனாஸா’ தொழுகையின் போது தமது செருப்பு முதலிய காலணிகளைக் கழற்றி விட்டும் மற்றும் சிலர் தமது காலணிகளைக் கழற்றி விட்டு அதன் மீது நின்று கொண்டும் தொழுகிறார்களே! இவ்வாறு தான் தொழ வேண்டுமா?     – முஹம்மது யூனுஸ், சேலம்

தெளிவு : ஒரு முறை நான் அனஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தமது காலணி-செருப்புகளுடன் தொழுதுள்ளார்களா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். (அபூ மஸ்லமா ஸயீது பின் யஜீத்(ரழி), புகாரீ)

இவ்வறிவிப்பின்படி நபி(ஸல்) அவர்கள் ஐங்காலத் தொழுகைகளையே பாத அணிகளோடு தொழுதிருப்பதாக அறிகிறோம். இதன்படி ஜனாஸா தொழுகைகளையும் பாத அணியை அணிந்துக் கொண்டே தாராளமாகத் தொழுவதுக் கூடும். செருப்பில் ஏதேனும் அசுத்தம் இருப்பின், அதை பூமியில் தேய்த்து விட்டால் போதும். அது சுத்தமாகி விடும்.

‘உங்களில் ஒருவர் தமது செருப்புகளில் அசுத்தத்தை மிதித்து விட்டால் நிச்சயமாக மண்ணே அதனை சுத்தம் செய்யும் பொருளாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    (ஆயிஷா(ரழி), அபூதாவூத்)

எனவே செருப்பில் அசுத்தமான பகுதியை மண்ணில் தேய்ப்பதன் மூலம் சுத்தம் செய்துக் கொள்ளலாம் என்பதை அறிகிறோம்.

ஐயம் :    நகத்தை வெட்டிக் கொள்வதற்கும், தொப்புளுக்குக் கீழ்ப்பாகத்திலுள்ள உரோமங்களை அகற்றிக் கொள்வதற்கும்  ஏதேனும் முறை உண்டா?

தெளிவு: இப்னு உமர்(ரழி) அவர்கள் பதினைந்து தினங்களுக்கு ஒரு முறைத் தமது நகத்தை வெட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு மாதத்திற்கு ஒரு முறை தமது தொப்புளுக்குக் கீழ்ப்பாகத்தின் உரோமங்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள். (நாஃபிஉ(ரழி), அதுபுல் முஃப்ரது, புகாரீ)

இவ்வறிவிப்பில் காணப்படும் நடைமுறை நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அனைத்தினையும் நடைமுறைப்படுத்துவதில் மற்றவரைப் பார்க்கினும் ஆர்வமிக்கவராய்த் திகழ்ந்த இப்னு உமர்(ரழி) அவர்களுடையதாகும். ஆனால் நகம் வெட்டுதல், மீசையைக் கத்தரித்தல் முதலியவற்றை நாற்பது தினங்களுக்கு அதிகமாக பிற்ப்படுத்துவதுக் கூடாது. நகம் வெட்டுதல், மீசையைக் கத்தரித்தல், அக்குல் உரோமங்களை அகற்றுதல், தொப்புளுக்கு கீழ் உள்ளப் பகுதியின் உரோமங்களை அகற்றுதல் முதலியவற்றை 40 தினங்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாது என்று எங்களுக்கு வரையறுக்கப்பட்டிருக்கிறது. (அனஸ்(ரழி) முஸ்லிம்)

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் தினசரி சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதி வந்தார்களா?” அவ்வாறு அவர்கள் ஓதவில்லை என்றால் நாம் இப்போது சுப்ஹு தொழுகையில் “குனூத்” ஓதுவது சரியா?     பி.எம்.கே. ஷாஹுல் ஹமீது, ஜித்தா.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் தினசரி எந்த தொழுகையிலும் தொடர்ந்து குனூத் ஓதவில்லை. எவருக்கேனும், நல்ல துஆவோ; அல்லது தீய துஆவோ செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டும் சில நேரங்களில் ஓதுவார்கள் என்பதாகவே ஹதீஸ்களில் காணுகிறோம். அவர்கள் தினசரி சுப்ஹு தொழுகையில் தொடர்ந்து ஓதி வந்தார்கள் என்பதாக வந்துள்ள அறிவிப்பு முறையானது அல்ல. இதன்படி தினசரி சுப்ஹு தொழுகையில் குனூத்து ஓதுவதைத் தவிர்துக் கொள்வதே முறையாகும்.

ஐயம் : வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின்போது இமாம் மிம்பரில் ஏறிய பிறகு சுன்னத்து தொழலாமா?       பி.எம்.கே. ஷாஹுல் ஹமீது, ஜித்தா.

தெளிவு : ஜும்ஆத் தொழுகைக்கு முன் சுன்னத்து என்று எதுவுமில்லை. ஆனால் இமாம் மிம்பரில் ஏறிய பிறகு வருபவரும் அதற்கு முன்பே வந்தவரும் தஹிய்யத்துல் மஸ்ஜித்” என்னும் பள்ளியின் காணிக்கைத் தொழுகை 2 ரகாஅத்துக்கள் தொழ வேண்டும். என்பதாக நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஒரு முறை வெள்ளிக்கிழமை நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்கும்போது “சுலைக்குல்கதஃபானீ(ரழி) அவர்கள் வந்து தாம் தொழுவதற்கு முன்னர் அமர்ந்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, நீர் இரண்டு ரகாஅத்து தொழுது விட்டீரா? என்றார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். அதற்கு அவர்கள் எழுந்து அவ்விரு ரகாஅத்துக்களையும் தொழுதுக் கொள்வீராக  என்றார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)

உங்களில் ஒருவர் இமாம் ‘குத்பா’ ஓதிக் கொண்டிருக்கும்போது வந்தால் அவர் இரண்டு ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்வாராக! மேலும் அவற்றை சுருக்கிக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)

மேற்காணும் அறிவிப்புகளின் மூலம் வெள்ளிக்கிழமை இமாம் ‘குத்பா’ ஓதிக் கொண்டிருக்கும்போது வருபவர் கூட ‘தஹிய்யத்துல் மஸ்ஜித்’ ஓதிக் கொண்டிருக்கும்போது வருபவர் கூட ‘தஹியத்துல் மஸ்ஜித் பள்ளியின் காணிக்கை என்ற வகையில் இரண்டு ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்வது விசேஷம் என்பதை அறிகிறோம். ஜும்ஆவின் பர்ளுக்கு முன்னால் சுன்னத்து என்று எதுவும் இருந்திருக்குமானால் அதைத் தொழும்படி அல்லவா கூறியிருப்பீர்கள்? அவ்வாறு அவர்கள் குறிப்பிட்ட அந்நேரத்தில் சுட்டிக்காட்டாமல் இருந்திருப்பதே ஜும்ஆவுக்கு முன்னால் ஜும்ஆவின் ‘முன் சுன்னத்து’ என்ற வகையில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

ஐயம் : ஜட்டிப் போன்ற அரைகுறை ஆடைகளை அணிந்துக் கொண்டு தமது தொடை திறந்த நிலையில் குளிக்கும் பழக்கத்தையுடைய ஓர் இமாமைப் பின்பற்றித் தொழுவதுக் கூடுமா?      பி.எம்.கே. ஷாஹுல் ஹமீது, ஜித்தா. 

தெளிவு : முன் பின் துவாரப் பகுதிகள் நீங்குதலாக முட்டுக்காலுக்கு மேலுள்ள பகுதிகளை மறைத்துக் கொள்வது விசேஷமும், பேணுதலுமாகும். ஆனால் அதுக் கட்டாயக் கடமையாக மறைத்தாக வேண்டும் என்பதல்ல. சந்தர்ப்பத்தில் திறந்திருப்பதால் குற்றமென்று கூற முடியாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒரு சமயம் தமது முட்டுக்காலுக்கு மேலுள்ள பாகம் திறந்த நிலையில் அமர்ந்திருந்ததாக ஸஹீஹான ஹதீஸ்கள் உள்ளன. அதிகப்படியான விபரத்திற்கு அந்நஜாத் 1988, ஏப்ரல் இதழில் நபிவழியில் நம் தொழுகை பகுதியைப் பார்க்க!

மேலும் எத்தகையோரை எல்லாம் பின்பற்றித் தொழுவது ஆகும் என்ற விபரங்களை அந்நஜாத் 1990, ஜுன் இதழ் நபிவழியில் நம் தொழுகை பகுதியை பார்க்க!

பொதுவாக ஒரு இமாம் எவ்வளவு பெரிய தவறு செய்யும் தன்மையுடையவராக இருப்பினும் அவரது அத்தவறு அவரைப் பின்பற்றித் தொழும் எவருடைய தொழுகையிலும் பாதிப்பை உண்டாக்காது.

ஐயம் : மஃரிப் தொழுகைக்கு பாங்கு கூறியவர் தான் இகாமத் சொல்ல வேண்டுமா?     தார்ஷா,  செட்டிக்குளம்    

தெளிவு : பாங்கு சொன்னவர் தான் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்ற அறிவிப்பு அபூதாவூத், திர்மிதீ போன்ற நூல்களில் இருப்பினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துர்ரஹ்மான் பின் ஜியாதில் அஃப்ரீக்கி எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றிருப்பதால் இவ்வறிவிப்பு பலஹீனமாகி விடுகிறது.

ஆகவே மஃரிபு தொழுகைக்கோ, மற்ற எந்த தொழுகைக்கோ சொன்ன அதே மனிதர் தான் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.

ஐயம் : பர்ளு தொழுகை முடிந்தவுடன் இடம் மாறித்தான் சுன்னத்து தொழ வேண்டுமா?      மதார்ஷா, செட்டிக்குளம்.    

தெளிவு : பாங்கு தொழுகை முடிந்தவுடன் வேறு இடத்தில் தான் மற்ற தொழுகைகள் தொழ வேண்டும் என்பதில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எப்படியும் தொழுதுக் கொள்ளலாம்.

ஐயம் : இன்னா அல்ஜல்னாஹு ஓதிவிட்டு, வய்லுல்லிக் குல்லி ஓதக் கூடாதா? முன் ஓதிய சூராவை விட பின் ஓதும் சூரா பெரியதாக இருக்கக் கூடாதா?
மதார்ஷா, செட்டிக்குளம்                

தெளிவு: நபி(ஸல்) அவர்கள் ளுஹருடைய முதல் இரு ரகாஅத்திலும் சூரத்துல் பாத்திஹாவையும் வேறு இரு சூராக்களையும் பின் இரு ரக்ஆத்தில் சூரத்துல் பாத்திஹாவை (மட்டும்) ஓதிக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் அவர்கள் ஓதுவதை எங்களுக்கு கேட்கும்படி ஓதுவார்கள். முதல் ரகாஅத்தை நீட்டும் அளவு, இரண்டாம் ரகாஅத்தை நீட்ட மாட்டார்கள். இவ்வாறே அஷ்ரிலும் சுப்ஹீலும் செய்வார்கள். (அபூ கதாதா (ரழி) புகாரீ, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாளிலும், ஜும்ஆவிலும் ஸப்புஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக்க ஹதீஸுல்  காஷியஹ் (எனும் சூராக்களை) ஓதிக் கொண்டிருந்தார்கள். பெருநாளும் ஜும்மாவுடன் ஒரே நாளில் ஒன்று சேரும் போதும் இரு தொழுகைகளிலும் இவ்விரு சூராக்களையே ஓதுவார்கள்.
(நுஃமானுபின் பஷீர்(ரழி), முஸ்லிம்)

பொதுவாக நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரகாஅத்தை விட முதலாம் ரகாஅத்தை நீட்டுவார்கள். என்று அபூகதாதா(ரழி) அவர்களின் நாளில் ஒன்று சேரும் போதும் இரு தொழுகையிலும் இவ்விரு சூராக்களையே ஓதுவார்கள்.    (நுஃமானுபின் பஷீர்(ரழி), முஸ்லிம்)

பொதுவாக நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரகாஅத்தை விட முதலாம் ரகாஅத்தை நீட்டுவார்கள். என்று அபூகதாதா(ரழி) அவர்களின் அறவிப்பில் காணப்பட்டாலும், அடுத்துள்ள நுஃமானுபின் பஷீர்(ரழி) அவர்களின் அறிவிப்பில் முதல் ரகாஅத்தில் சிறிய சூராவையும் 2ம் ரகாஅத்தில் பெரிய சூராவை ஓதியுள்ளதைப் பார்க்கிறோம். ஸப்பி ஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் சூராவில் 19 ஆயத்துக்களும் ‘ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியஹ்’ எனும் சூராவில் 26 ஆயத்துக்களும் இருப்பதைக் காணுகிறோம்.

இவ்வாறே அபூஹுரைரா(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்டு புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஓர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுப்ஹு தொழுகையில் ‘அலீஃப் லாம், மீம் , தன்ஜீல் எனும் சூராவை இரண்டாம் ரகாஅத்திலும் ஓதியிருப்பதாக காணுகிறோம்.

இதில் முதல் ரகாஅத்தில் ஓதிய ‘அலிப், லாம் மிம் தன்ஜீல் எனும் சூராவில் 30 ஆயத்துக்களும் இரண்டாவது ரகாஅத்தில் ஓதிய ஹல் அதா அலல் இன்ஸான்’ எனும் சூராவில் 40 ஆயத்துக்களும் உள்ளன.

மேற்காணும் அறிவிப்பிலும் முதல் ரகாஅத்தில் சிறிய சூராவையும் 2ம் ரகாஅத்தில் பெரிய சூராவையும் ஓதியிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் அபூ ஸயீது(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்டு முஸ்லிமில் இடம் பெறும் ஓர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் முதல் 2 ரகாஅத்துக்களிலும் கூடுதல் குறையுதல் அன்றி சரி சமமாகவே ஓதித் தொழுதுள்ளார்கள் என்பதைப் பார்க்கிறோம். அதாவது நபி(ஸல்) அவர்கள் ளுஹருடைய முதல் இரண்டு ரகாஅத்திலும் 30 ஆயத்துக்களின் அளவு (சமமாக) ஓதுவார்கள்’.

ஆகவே நபி(ஸல்) அவர்கள் முதல் இரு ரகாஅத்துக்களிலும் சரிசமமாக ஓதியிருப்பதிலும், முதல் ரகாஅத்தில் குறைவாகவும் இரண்டாம் ரகாஅத்தில் கூடுதலாகவும் ஓதியிருப்பதைப் பார்க்கிறோம். அபூகாதாதா(ரழி) அவர்களின் ஹதீஸின் படி முதல் ரகாஅத்தில் கூடுதலாகவும், இரண்டாம் ரகாஅத்தில் குறைவாகவும் ஓதியிருப்பதையும் பார்க்கின்றோம். இவற்றிலிருந்து இவை அனைத்தும் ஆகும் என்பது தெளிவாகிறது.

எனவே தங்களின் கேள்வியில் உள்ளபடி முதல் ரகாஅத்தில் ஐந்து ஆயத்திக்களைக் கொண்டுள்ள ‘இன்னா அன்ஜல்னாஹு’வையும் இரண்டாம் ரகாஅத்தில் ஒன்பது ஆயத்துக்களைக் கொண்டுள்ள ‘வய்லுல்லிக்குல்லி” சூராவையும் ஓதித் தொழுவதற்கும் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின் அடிப்படையில் தாராளமாக ஆகும் என்பது தெளிவாகிறது.

ஐயம் : ‘ஹிலாறு’ என்ற பெயரில் ஒரு நபி இருந்துள்ளார்களா? இவர்கள் இன்று வரை உலகில் மரணிக்காமல் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்களா? இவர்களைப் பற்றிக் குர்ஆன் என்னக் கூறுகிறது? ஆதாரத்துடன் விளக்குக!      மீ. முஹம்மது முஹ்யத்தீன், கோவை

தெளிவு : ‘ஹிலுறு” எனும் பெயரின் சரியான உச்சரிப்பு புகாரியில் பெற்றிருப்பதுப் போல் ‘ஹிழிறு் என்பதாகும். இவர்கள் நபியாக இருந்துள்ளார்கள் என்பதை கீழ்காணும் வசனம் நிறுபிக்கின்றது.

பின்னர் இருவரும் வழி நடக்கலானார்கள். (வழியில்) ஒரு பையனை இருவரும் சந்தித்த போது அவர் அப்பையன் தலையைத் திருகிக் கொன்று விட்டார். (அப்போது மூஸா(அலை) அவர்கள் ) யாதொருக் கொலைக் குற்றமின்றி பரிசுத்தமான ஒரு ஜீவனைக் கொன்று விட்டீர்களே? என்றார்கள். (18:74)

 (இவையெல்லாம்) உமது ரப்புடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளனவையாகும். (இவற்றை நான் எனது காரியத்திற்காக (என் விருப்பத்திற்கு)ச் செய்யவில்லை என்றார்கள்.

 மேற்காணும் வசனத்தின் படி மூஸா(அலை) அவர்களுக்கும் ஹிழிறு(அலை) அவர்களுக்கும் நடந்த உரையாடலில், குற்றமற்ற சிறுவனைக் கொன்றதற்கு அந்த இடத்தில் மூஸா நபி காரணம் கேட்டதற்கு அவர்கள் இதை நான் தன்னிச்சையாக செய்யவில்லை என்றார்கள்.

இவ்வாறு அவர்கள் பதில் கூறி. அந்த பதிலை அல்லாஹுவின் தூதராகிய மூஸா(அலை) அவர்கள் சரி கண்டதில் இருந்தே அவர்கள் நபிதான் என்பது ஊர்ஜிதமாகிறது. ஏனெனில் நபி அல்லாது, அல்லாஹுவின் வேறு எவ்வளவு சிறந்த அடியாராக இருப்பினும் அவர் செய்த கொலைக்கு பகரமாக அவரைக் கொலை செய்வதைத் தவிர எவ்வித பரிகாரமும் கிடையாது.

இந்நிலையின் அல்லாஹுவின் தூதராகிய மூஸா(அலை) அவர்கள் தம் எதிரிலேயே கண்கூடாக நடந்த கொலைக்கு காரணம் கேட்ட அவர்கள், ‘இதை நான் என் இஷ்ட்டத்திற்கு செய்யவில்லை’ என்று அந்த மனிதர் பதில் கூறியதிலிருந்தே தாம் புரிந்துக் கொண்டு மூஸா(அலை) அவர்கள் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நபி அல்லாதவராக இருந்திருந்தால் கொலைக்குப் பதில் கொலை என்ற அடிப்படையில் நிச்சயமாக தாம் நபியாக இருப்பதால் அவரைக் கொலை செய்தே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே மேற்காணும் ஆதாரத்தை வைத்து, அவர்கள் நபி தான் என்பதை அறிகிறோம். மேலும் அவர்கள் இதுவரை மரணிக்காது உயிராக இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் போலியானவையாகவே உள்ளன. அவற்றில் ஒன்று கூட நம்பகமானதாக இல்லை.

நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி அவர்களைக் குளிப்பாட்டும் போது வந்த சஹபாக்களிடத்தில் ஏதோ ஹிழிறு அவர்கள் கூறியதாகக் கூறப்படும் விஷயம் உள்பட அவர்கள் உயிரோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற வகையில் கூறப்படும் விஷயங்கள் அனைத்தும் கப்ஸாவும், கதையளப்புமே தவிர வேறில்லை.

ஹிழிறு(அலை) அவர்கள் உயிருடனில்லை. மரணித்து விட்டார்கள் என்பதை ஆதாரங்களுடன் அந்நஜாத் மே 1986 இதழில் விளக்கியுள்ளோம்.

ஐயம் : இரண்டு சகோதரிகளின் மகளுக்கும் மகனுக்கும் இவ்வாறே இரண்டு சகோதரர்களின் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்து கொள்வது கூடுமா?
மீ. முஹம்மது முஹ்யத்தீன், கோவை.

தெளிவு : தாராளமாகக் கூடும். செய்துக் கொள்ளலாம்.

ஐயம் : தக்பீர் தஹ்ரீமின் போது கைகளை உயர்த்திவிட்டு கைகளைக் கட்டாமல் கீழே தொங்கவிட்ட நிலையில் சூராக்களை ஓதிய பின் ருகூஃவுக்குப் போகிறார்களே, இவ்வாறு தொழுவதுக் கூடுமா?

தெளிவு : தொழுகையின் போது முதல் தக்பீர் கூறியவுடன் கைகளைத் தமது நெஞ்சின் மீது கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கே சரியான ஆதாரம் ஹதீஸின் வாயிலாக உள்ளது.

கைகளைக் கட்டாமல் கீழேத் தொங்கவிடவதற்கு அறவே ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை. தொப்புளுக்குக் கீழ், அல்லது தொப்புளுக்கு மேல் கட்டுவதற்கான ஹதீஸ்கள் அனைத்தும் பலஹீனமனவையாகவே உள்ளன. ஒருவர் தமது கைகளைக் கட்டாமல் தொங்க விட்ட நிலையில் தொழுது விட்டால் தொழுகை கூடிவிடும். நபி வழியை விட்ட குறை ஏற்படும்.

ஐயம் : இறந்தவர்களுக்காக குர்பானிக் கொடுப்பதுக் கூடுமா? அவ்வாறுக் கூடுமென்றிருந்தால் இறந்தவர்களுக்காக கத்தம், பாத்திஹா சாப்பாடு கூடும் என்று தானே அர்த்தம்.   –  அக்பர் சைக்கிள் ஸ்டோர், மதுரை.

தெளிவு: நான் அலி(ரழி) அவர்களிடம் இரண்டு கடாய்களை அறுத்து குர்பானி கொடுக்க கண்டேன். அப்போது அவர்களிடம் இது என்ன என்றுக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தமக்காக ஒரு கடாயை அறுத்து குர்பானி கொடுக்கும்படி வஸியத்துச் செய்துள்ளார்கள் (அதற்காக இவ்வாறு செய்கிறேன்) என்றார்கள். (ஹனஷ்(ரழி), அபூதாவூத், திர்மிதீ)

இவ்வறிவிப்பு ‘கரீபு’ ஒரு வழிச்சொல்லாக உள்ளது என்பதாக திர்மிதீ கூறுகிறார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஷரீக்’ என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர் முறையான மனன சக்தி இல்லாதவராக உள்ளார். மேலும் அவர் இதைத் தமக்கு ‘அபுல் ஹஸனாஃ’ என்பவர் எடுத்துக் கூறியதாகக் கூறுகிறார். அவரோ ஹதீஸ் கலாவல்லுநருக்கு மத்தியில் அறிமுகமில்லாதவராக உள்ளார். ஆகவே இந்த அறிவிப்பு பலஹீனமானதாக உள்ளது.

இதன்படி இறந்தவர்களுக்காக குர்பானிக் கொடுப்பதற்கு ஆதாரமில்லை என்பதாக அறிகிறோம். மேலும் உங்கள் கூற்றுப்படி கத்தம், பாத்திஹாவுக்கு இதிலிருந்து ஆதாரம் எடுக்கவும் முடியாது. இறந்தவர்களின் பெயரால் அல்லாது, இருப்பவர்கள் ஏழைகளுக்கு தாராளமாக சமைத்துப் போட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. அதை செய்யுங்களேன். அதற்காக இறந்துப் போனவர்களை ஏன் இழுக்கிறீர்கள்?

ஐயம் : தாய் மாமனை ஏன் திருமணம் செய்யக் கூடாது? காரணம் கூறவும்,     சந்திரா பேகம் சென்னை -74.

தெளிவு : உங்கள் சகோதரனின் புதல்வியும், உங்கள் சகோதரியின் புதல்வியும் உங்களுக்கு(மன முடிக்க) விலக்கப்பட்டவர்கள் என அல்லாஹு தனது அருள்மறை குர்ஆனில் (4:23) சட்டமாகக் கூறியுள்ளான். அல்லாஹுவுக்கல்லாது; ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.  (6:57)

ஒரு உண்மை முஸ்லிமுக்கு அல்லாஹிவின் ஆணை மட்டுமே காரணமாக போதுமானது. விஞ்ஞானரீதியான காரணங்கள் தேவைப்பட்டால் நல்ல குழந்தைப் பேறு மறுத்துவரை அணுகி கேட்கவும். அவரது கூற்று எப்படியிருப்பினும் அல்லாஹுவின் முடிவே இறுதியானது. அல்லாஹ் போதுமானவன்.

ஐயம் : மாதவிடாய் குளிப்புக்கு என்ன சொல்லிக்குளிக்க வேண்டும்?     சந்திரா பேகம் சென்னை -74.

தெளிவு : மாதவிடாய் குளிப்புக்கு எதுவும் ஓதிக் கொண்டு குளிக்க வேண்டும் என்பதற்கு குர்ஆனிலும்,  உண்மையான ஹதீஸ்களிலும் ஆதாரமில்லை. உடல் முழுவதும் நனையும் படிக் குளித்தாலேப போதுமானது.

ஐயம் : குர்ஆனை வைத்து சத்தியம் செய்யலாமா, இப்போது நடைமுறையில் கோர்ட்டில் குர்ஆனை வைத்து சத்தியம் வாங்கப்படுகிறது. செய்யலாமா? நமது மார்க்கம் அனுமதிக்கிறதா?   கே. முஹம்மது அலி, ஜித்தா

தெளிவு : குர்ஆனை மட்டுமல்ல. அல்லாஹுவைத் தவிர வேறு எதனைக் கொண்டும் சத்தியம் செய்தல் குர்ஆன் ஹதீஸ்படி ஆகாது, ஏனெனில் “அப்படியல்ல” என் ரப்பி (இரட்சகனி)ன் மீது சத்தயமாக! நிச்சயமாக அது (நியாயத் தீர்ப்பு நாள்) உங்களிடம் வந்தே தீரும் என (நபியே!) நீர் கூறுவீராக!  (அல்குர்ஆன் 34:3)

“அப்படியல்ல” என் ரப்பி (இரட்சகனி)ன் மீது சத்தயமாக! நிச்சயமாக (தீர்ப்பு நாளில்) எழுதப்படுவீர்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக    (அல்குர்ஆன் 64:7)

என்ற இறை வசனங்கள் மூலம் அல்லாஹுவின் மீது மட்டும் சத்தியம் செய்ய அல்லாஹு நபி(ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். அவ்விதமே சத்தியம் செய்ததை குர்ஆனில் பதிவு செய்து கடைசி நாள் வரை பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே தான் நபி(ஸல்) கூறினார்கள்:

எவன் அல்லாஹுவைத் தவிர வேறவற்றைக் கொண்டு சத்தியம் செய்கின்றானோ அவன் நிச்சயமாக அவன் இணைக் கற்ப்பித்தவனே ஆவான். அறிவிப்பு: இப்னு உமர்(ரழி), ஆதாரம் : திர்மிதீ, அஹ்மது, ஹாகிம்.

யாருக்காவது சத்தியம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டால், அவர் அல்லாஹுவைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். இல்லையானால் மெளனமாக இருந்து விடட்டும். அறிவிப்பு: இப்னு உமர்(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது.

நடைமுறையில் இப்போது கோர்ட்டில் குர்ஆன் மீது சத்தியம் வாங்குவது தவறாகும். அசத்தியத்தையும், முறையையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: பித்அத்தாக இருந்தாலும் அது நல்லதாக இருந்தால் அதனை செய்யலாமா? பித்அத் கூடாது என்பதற்கு குர்ஆனில் இருந்து காட்டமுடியுமா?
ஆமினா முகமது. பொன்மலை, கமருன்னிஸா,சென்னை-74

தெளிவு : ஈஸா(அலை) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு மணமுடிக்காமல் வாழும் துறவித்தனத்தை அல்லாஹ் சட்டமாக விதிக்கவில்லை. ஆனால் அவர்கள் அல்லாஹுவின் பிரியத்தை, பொருத்தத்தை நாடியே மார்க்கத்தில் இதனை நுழைத்தனர். இதன் மூலம் அல்லாஹுவின் பிரியத்தை, பொருத்தத்தைப் பெறலாம் என நினைத்தனர். அது நல்லதே என்றே நாடிக் கடைப்பிடித்தனர். கடைப்பிடிக்கின்றனர் இது தவறு என்பதையும் அவர்கள் பாவிகள் என்று அல்லாஹு எடுத்துரைப்பதைப்  பாருங்கள்.

மர்யமுடைய மகனார் ஈஸாவுக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம். அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இறக்கத்தையும், கிருபையையும் உண்டாக்கினோம். ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக (பித்அத்தாக) உண்டாக்கிக் கொண்ட துறவித் தனத்தை நாம் அவர்கள் மீது (சட்டமாக) விதிக்கவில்லை. அல்லாஹுவின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அதனை உண்டுப் பண்ணவில்லை) அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே உள்ளனர்.
(அல்குர்ஆன்  57:37)

‘பித்அத் என்பதே நன்மையை நாடி மார்க்கத்தில் நுழைக்கப்படும் நவீனமாகும். கெட்டதாக இருந்தால் அவனை பித்அத்தாக கொள்ள முடியாது. அதற்கு இந்த குர்ஆன் வசனம் ஆதாரமாக உள்ளது.  அழகிய முன்மாதிரி அல்லாஹுடைய தூதரிடமே உள்ளது.   (33:21)

தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்குத் தடுத்ததை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.    (59:57)

ஐயம் : அந்நஜாத்தைப் பற்றி பலர் தவறாக நினைக்கின்றார்கள். அதை எவ்வாறு நீக்குவது? பலர் குர்ஆன் ஹதீஸ்படி மட்டும் நடக்கும் சிலரைப் பார்த்து நஜாத்திப் போகிறான் பார்! வஹ்ஹாபி போகிறான் பார்! என்று கூறுகிறார்கள். இவர்களைப் பற்றி என்ன நினைப்பது?   M.Y அஹ்மது ஹிஜாஸ், புதுக்கல்லூரி, சென்னை-14
அய்யூப்கான், மேலக்கண்டார் கோட்டை  ஷிஹாபுதீன், அரியமங்கலம்

தெளிவு : அந்நஜாத்தைப் பற்றி பேசும் பலர் அந்-நஜாத்தையே படிக்காதவர்களாகத் தான் இருக்கிறார்கள். யாரோ, எவரோ அவர்கள் மதிக்கும் தலைவர்கள் அந்நஜாத்தைப் படிக்காதீர்கள் என்ற வாக்கு மூலத்தை, வேதவாக்காகக் கொண்டு செயல்படுவர் தான் இதனைப் படிக்காமலேயே விமர்சிக்கிறார்கள். அவர்கள் நல்ல பகுத்தறிவாளர்களாக இருந்தால் ஓரிரு இதழ்களைப் படித்தால் புரிந்துக் கொள்வார்கள். தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். அதனால் உருவாகும் ஐயங்களை அவர்கள் எழுதிவிட்டாலும், நீங்கள் எழுதுங்கள். நாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தருகிறோம். அல்லாஹ் நாடினால் அவர்கள் நம்மை விட வேகமான, விவேகமான முஸ்லிம்களாக ஆக முடியும். விதண்டாவாதங்களை வளர்க்காமல் குர்ஆன், ஹதீஸ்க்கருத்துக்களை மட்டும் நாம் எடுத்து வைத்தால், நிச்சயமாக இன்றில்லாவிட்டாலும் நாளை அவர்கள் விளங்கவே செய்வார்கள். நேர்வழிப் பெறுவார்கள்.

நாம் நம்மை ‘நஜாத்தி’ வஹ்ஹாபி’ எனக் குறிப்பிடாமலிருக்கையில் அவர்களாகவே அப்பட்டங்களைக் கொடுத்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். இப்பெயர்களை நாம் வரவேற்பதில்லை. முஸ்லிம்கள் என அழைக்கப்படுவதையே விரும்புகிறோம். எனவே தான் நாம் விரும்பாத, வரவேற்காத பிரிவினைப் பெயர்களால் அழைக்கின்றனர். அதற்காக வருந்த வேண்டாம். இப்பெயர்கள் எவ்வித தவறானப் பொருளையும் கொடுப்பதில்லை. நஜாத்தி, வஹ்ஹாப்பிக்கு பொருளறியாமல் அரபிப் பெயர்களால் நம்மைத் திட்டுவதாக நினைத்துக் கொண்டு துஆ செய்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களை பைத்தியக்காரர், சூனியக்காரர், கவிஞர், கட்டுக்கதைக்காரர் என்றெல்லாம் கெட்டப் பெயர்களால் அலட்சியமாக விட்டு விட்டு தங்களது இறைப்பணியில் மும்மரமாக ஈடுபட்டார்கள். அதைப் போல் நாமும் நமதுக் காரியத்தில் கண்ணாயிருப்போம்.

நஜாத்தி என்றால் ஈடேற்றம் பெற்றவன், வஹ்ஹாபி என்றால் வஹ்ஹாப் (அல்லாஹுவின் பெயர்களில் ஒன்று)புடைய ஆள் என்றுப் பொருள்ப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன்னை அல்லாஹ்வுடைய(வஹ்ஹாபி) ஆளாகவும் அதன் மூலம் ஈடேற்றம் அடைந்தவானகவும்(நஜாத்தியாக)வுமிருக்கவே விரும்புவான். நமக்கு ஈடேற்றம் கிடைத்தாக நாம் கூறவில்லை. நம்மை விமர்சிப்பவர்கள் நமக்கு ஈடேற்றம் கிடைத்து விட்டதாக ஈடேற்றம் பெற்றவன் (நஜாத்தி) என அழைப்பதை ஏன் அவமானமாகக் கருதுகிறீர்கள். அவர்களது அழைப்பை அல்லாஹு ஏற்று நமக்கு ஈடேற்றம் தரலாம் அல்லவா? எனவே  எவ்வித தவறான கருத்தையும் தராத, மாறாக துஆ செய்வதாக நினைத்துக் கொண்டு தீன் பணியில் ஈடுபடுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

ஐயம் : ஜும்ஆ தொழுகைக்குப் முன்பின் சுன்னத்துக்கள் உண்டா? ஜும்ஆவும், பெருநாளும் ஒன்று என்று சிலர் கூறுகிறார்களே அப்படியாயின் பெருநாள் தொழுகையைப் போன்று ஜும்ஆத் தொழுகைக்கும் சுன்னத்துக்கள் இல்லாமல் இருப்பது தானே முறை?    -எம் ஆர். இப்றாஹீம், ஈரோடு.

தெளிவு : ஜும்ஆவுக்கு முன் சுன்னத்து ஏதுவுமில்லை. ஆனால் ‘தஹிய்யத்துல் மஸ்ஜித்” பள்ளியின் காணிக்கை என்ற வகையில் இரண்டு ரகாஅத்து தொழுதுக் கொள்வது சுன்னத்து தான் அது, இமாம் குத்பா ஓதிக் கொண்டிருந்தாலும் தொழுக வேண்டும் என்பதாக ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜும்ஆ” பெருநாளைப் போன்றது என்றுக் கூறப்படுவதால் பெருநாளைப் போன்று ஜும்ஆவுக்கும் சுன்னத்து இல்லாதிருக்க வேண்டும். என்பது அவசியமில்லை. ஆகவே ஜும்ஆவுக்குப் பின்னால் சுன்னத்து உள்ளது. அதைப் பள்ளியில் தொழுதால் நான்காவும், வீட்டில் தொழுதால் இரண்டாகவும் தொழுவதே நபிவழியாவும்.

ஐயம்: குர்பானிக் கொடுக்க வசதியில்லாதவர், கடன்வாங்கி குர்பானிக் கொடுக்கலாமா? அதன் இறைச்சியில் சிறிதளவு தமக்கு வைத்துக் கொண்டு பெருமளவைத் தாம் சொந்த உபயோகத்திற்கு வைத்து கொள்வதுக் கூடுமா?     M.R. இப்றாஹீம், ஈரோடு

தெளிவு : குர்பானி வசதியுள்ளவர் தான் கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறதன்றி, அதற்காக கடன்வாங்கி கடனாளியாக வேண்டும் என்று கூறவில்லை. குர்பானி இறைச்சியை, பெருமளவைத் தமது சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொண்டாலும் மார்க்கம் அதைத் தடை செய்யவில்லை.

ஐயம் : அல்குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பு ஒன்றில் (22:78) வசனத்திற்கு அவன் தான் (அல்லாஹ் தான்) இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம் எனப் பெயரிட்டான். என்றும் அ.கா.அ. அப்துஸ்ஸமத்வின் வெளியீட்டில் ‘அவர் தான் இதற்கு முன்னர்

தெளிவு : (22:78) வசனத்தை முழுமையாகப் பார்த்தால் இதில் கோளாறு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது புரியும். நீங்கள் அல்லாஹ்வுடையப் பாதையில் முயற்ச்சிக்க  வேண்டியவாறு முயற்ச்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தெடுக்கின்றான். இந்த மார்க்கத்தில் உங்களுக்கு யாதொரு கஷ்ட்டத்தையும் அவன் ஏற்ப்படுத்தவில்லை. (இது) உங்கள் பிதா இப்றாஹீம் உடைய மார்க்கமாகும். அவன் தான் இதற்கு முன்னர் உங்களுக்கு ‘முஸ்லிம்கள் எனப் பெயரிட்டுள்ளான்.”

மேற்காணும் வசனத்தில் அல்லாஹ் நம்மைத் தனது பாதையில் முழுமையாக முயற்ச்சிக்க வேண்டும் என்று கூறுகையில், இவ்வாறெல்லாம் நாம் முழுமையாக முயற்சி செய்ய வேண்டும் அதற்காகவே அவன் நம்மைத் தேர்ந்தெடுத்தாகக் கூறி விட்டு, தமது மார்க்கத்தில் யாதொரு கஷ்ட்டத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்று தான் கூறும் போது நபி இப்றாஹீம்(அலை) அவர்ளை நாம் நினைவு கூறும் வகையில் இது உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கம் என்று கூறி விட்டு பிறகு இவ்வளவு எல்லாம் செய்த நான் தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்றும் பெயர் வைத்தேன் என்பதாக தனது அடியார்களிடத்தில் பெருமிதமாகச் சொல்லிக் காட்டியுள்ளான்.

இவ்வாறு அல்லாஹ் தனது அடியார்களிடத்தில் தன்னைச் சிறப்பித்துக் கூறுகையில் இப்றாஹீம்(அலை) அவர்களை நமது மார்க்க அடிப்படையிலான  தந்தை என்பதாக எடுத்துக்காட்டிவிட்டு, பிறகு ‘முஸ்லிம்கள்” என்பதாக, தான் பெயர் வைத்த விஷயத்தையும் அவன் கூறியுள்ளான்.

இப்றாஹீம் நபி அவர்களைத் தந்தை என்று அவன் கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, தந்தை தானே மக்களுக்குப் பெயரிடும் பழக்கம் உள்ளது என்று கருதி, சரியான விளக்கமில்லாமல் சிலர் “இப்றாஹீம்(அலை) அவர்கள் உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று பெயர் வைத்தார்கள்’ என்று தவறாக பொருள் செய்துள்ளார்கள். ஆகவே அல்லாஹ் தான் ‘முஸ்லிம்கள் என்று உங்களுக்கு பெயர் வைத்தான் என்று பொருள் சொல்வதே முறையாகும்.

************************

சொர்க்கத்தின் வாடைக் கூடக் கிடைக்காது

ஒருவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி கற்கவேண்டியதொரு கல்வியை, உலக ஆதாயத்தை நாடி கற்பாரானால் அவர் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைந்துக் கொள்ள மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.       (அபூஹுரைரா(ரழி) அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜ்ஜா)

Previous post:

Next post: