நபிவழியில் நம் தொழுகை
தொடர் : 43
அபூஅப்தீர் ரஹ்மான்
“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
சென்ற இதழில் ‘ஸஃப்புக்குப் பின்னால் தனித்துத் தொழுபவரின் தொழுகைக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஸஃப்பில் இடமில்லாத போது, ஸஃப்பில் உள்ள ஒருவரை பின்னால் இழுத்து தம்மோடு வைத்துக் கொண்டு தொழ வேண்டும் என்ற வகையில் வந்துள்ள அறிவிப்புகளின் நிலை* எனும் தலைப்பின் தொடர்:
ஸஃப்புக்கள் நிறைவான பிறகு வருபவர், தம்மோடு சேர்ந்து நின்று தொழுவதற்காக ஸஃப்பிலுள்ள ஒருவரை (தம் பக்கம்) இழுத்துக் கொள்ள வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), தப்ரானி) இதன் அறிவிப்பாளர் தொடரிலும் பல கோளாறுகள் காணப்படுவதால் இவ்வறிவிப்பும் முறையானதல்ல என்று இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது ‘தல்கீஸுல் ஹபீர்’ எனும் நூலில் பாகம் 2, பக்கம் 37ல் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
ஆகவே போதுமான ஆதாரமின்றி மேற்காணும் பரகீனமான அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தாம் ஸஃப்புக்கு பின்னால் தனிமையாக நிற்க கூடாது என்பதற்காக தமக்கு எதிரில் முறையாக ஸஃப்பில் சேர்ந்து தொழுது கொண்டிருக்கும் ஒருவரைப் பிடித்து தம் பக்கம் இழுத்து தம் பக்கம் நிற்க செய்வது கூடாது. காரணம்: இவ்வாறு ஸஃப்பில் சேர்ந்து தொழுது கொண்டிருப்பவரை இழுப்பதால், நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃப்புகளில் உள்ள இடைவெளிகளை அடைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கும் போது, ஸஃப்பில் தாமே இடைவெளியை உண்டாக்கும் முறைகேடு ஏற்படுகிறது.
மேலும் அவர் முதலாம் ஸஃப்பு-வாசியாக இருப்பாரானால் முதல் ஸஃப்பில் நின்று தொழுவதால் அவருக்கு கிடைக்கவிருக்கும் அதிகப்படியான நன்மையில் பாதிப்பை உண்டாக்கும் நிலையும் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி, இழுக்கப்படும் அம்மனிதர் விபரம் அறியாதவராயிருப்பின் கைகலப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனவே ஸஃப்புக்குப் பின்னால் தனித்து நிற்க வேண்டி உள்ளது என்பதற்காக, தமக்கு எளிதில் ஸஃப்பில் சேர்ந்து தொழும் ஒருவரை தன் பக்கம் இழுத்து தம்மோடு நிற்க செய்து கொள்வதற்கு முறையான ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதோடு இது முறைகேடான செயல் என்பதையும் அறிகிறோம்.
மஃரிபுத் தொழுகையில் இமாமுடன் கடைசி ரகாஅத்தை அடைந்து கொண்டவர் எஞ்சியவற்றை எவ்வாறு தொழ வேண்டும்?
இவர் இமாம் ஸலாம் கொடுத்தவுடன் எழுந்திருந்து சூரத்துல் பாத்திஹாவையும், மற்றொரு சூராவையும் ஓதி விட்டு, ருகூஃ சுஜுதுகள் செய்து பின்னர் நடு இருப்பில் அமர வேண்டும். பிறகு எழுந்து மற்றொர ரகாஅத்து தொழ வேண்டும். அப்போதும் சூரத்துல் பாத்திஹாவுடன் மற்றொரு சூராவையும் ஓதி விட்டு, ருகூஃ, சுஜுதுகள் செய்து கடைசி இருப்பு இருந்து ஸலாம் கொடுக்க வேண்டும்.
இதன் விபரங்கள் பின்வருமாறு :
இமாமுடன் தாம் தொழுதது இமாமுக்கு மூன்றாவது ரகாஅத்தாக இருப்பினும் அவரைப் பின்பற்றி இவருக்கு அது முதலாவது ரகாஅத்தே ஆகும்.
” உங்களுக்கு (இமாமுடன்) கிடைத்தவற்றைத் தொழுதுக் கொண்டு வடுபட்டவற்றைப் பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.” (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
என்ற ஹதீஸுக்கேற்ப, முறைப்படி தமக்கு விடுபட்டுள்ள இரண்டு ரகாஅத்துக்களையும் அவற்றில் அடங்கியுள்ள இரண்டு சூரத்துல் பாத்திஹா, அவற்றுடன் சேர்த்து ஓத வேண்டிய இரண்டு சூராக்கள். நடுஇருப்பு ஆகியவை அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டியிருப்பதால் அவர் எழுந்துத் தொழும்போது, ஒரு ரகாஅத்து தொழுதவுடன் உட்கார்ந்து ஒரு இருப்பு இருந்துவிட்டால், விடுபட்ட நடு இருப்பு கிடைத்து விடுகிறது.
இவ்வாறே தாம் எழுந்துத் தொழும் இரண்டு ரகாஅத்துக்களிலும், சூரத்துல் பாத்திஹாவுடன் மற்ற சூராக்களையும் சேர்த்து ஓதிவிட்டால் விடுபட்ட இரண்டு சூரத்துல் பாத்திஹாவும், அவற்றுடன் சேர்த்து ஓத வேண்டிய இரண்டு சூராக்களை ஓதும் வாய்ப்பும் கிடைத்து விடுகிறது.
இமாமுடன் தாம் சேர்ந்து தொழும்போது தாம் இருந்துள்ள கடைசி இருப்பு, அதில் ஓதிய அத்தஹிய்யாத்து முதலியவை அனைத்தும், தாம் இமாமைப் பின்பற்றியமைக்காக, இமாம் செய்வதுப் போல் அவரைப் பின்பற்றியவரும் செய்தாக வேண்டும் என்ற ஹதீஸின் அடிப்படையில் உபரியாக செய்யப்பட்டவையே அன்றி, அதற்கும் தாம் விடுபட்டவற்றை பூர்த்தி செய்வதற்காக எழுந்து தொழும் தொழுகையோடு சம்பந்தப்படுத்தக்கூடாது.
இவ்வாறே இஷாத் தொழுகையில் இமாமுடன் கடைசி ரகாஅத்தை அடைந்துக் கொண்டவர். மஃரிபு தொழுகையில் கடைசி ரகாஅத்தை இமாமுடன் அடைந்துக் கொண்டவர்ப் பற்றி, மேலேக் கூறப்பட்டதுப் போன்றே அனைத்தையும் தொழுதுவிட்டு தாம் மூன்று ரகாஅத்துக்கள் எழுந்து தொழ வேண்டியிருப்பதால் தமது கடைசி ரகாஅத்தில் சூரத்துல் பாத்திஹாவை ஓதிக் கொள்ள வேண்டும்.
சில ரகாஅத்துக்கள் விடுவட்டவராக இமாமைப் பின்பற்றித் தொழுதுப் கொண்டிருப்பவர், தமக்கு விடுபட்டவற்றை எழுந்து தொழும்போது ‘அத்தஹிய்யாத்தை ஓத வேண்டியிருப்பதால், இமாமுடன் கடைசி இருப்பில் தாம் இருக்கும்போது எந்த அளவு அத்தஹிய்யாத்து ஓத வேண்டும்?
இந்நிலையில் உள்ளவர் இமாமுடன் தாம் கடைசி இருப்பில் இருக்கும்போது, அவசரமின்றி மெதுவாக அப்துஹு வரஸுலுஹீ வரை ஓத வேண்டும் என்பதாக சிலரும் அப்துஹு வரசூலூஹு வரை ஓதிவிட்டு, அடுத்துள்ள ஸலவாத்தை இமாம் ஸலாம் கொடுக்கும் வரை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகச் சிலரும் கூறுகின்றனர்.
இவர்களின் இத்தகைய கூற்றுக்கெல்லாம் ஹதீஸின் வாயிலாக எவ்வித ஆதாரமும் இல்லை. இவர் இமாமுடன் தொழுபவராயிருப்பதால், தமது இமாமைப் பின்பற்றி அவர் ஓதுவதுப் போல் அத்தஹிய்யாத்து, ஸலவாத்து, துஆ ஆகியவற்றை இறுதி வரை ஓதுவதற்கு ஹதீஸில் எவ்விதத் தடையுமில்லாதிருக்கும் போது மேற்காணும் இப்பிரச்சனைக்கே இடமில்லை என்பதை அறிகிறோம்.
இமாம் ருகூஃவில் இருக்கும்போது தொழுகையின் முதல் தக்பீராகிய “தக்பீர்தஹ்ரீமை’ மட்டுமே கூறிக்கொண்டே ருகூஃவில் சேர்ந்துக் கொள்வதன் நிலை:
நாங்கள் சுஜுது செய்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் (தொழுகைக்கு) வந்தால் நீங்களும் “ஸஜ்தா செய்துக் கொள்ளுங்கள்.. ஆனால் அதை (அந்த ஸஜ்தாவை தொழுகையின்) கணக்கில் சேர்த்து விடாதீர்கள். ஒருவர் ருகூஃவை (இமாமுடன்) அடைந்துக் கொண்டார் (மற்றொரு அறிவிப்பில் அந்த ரகாஅத்தை அடைந்துக் கொண்டார் என்றும் உள்ளது.) (அபூ ஹுரைரா(ரழி) ஹாக்கிம், அபூதாவூத்)
ஒருவர் நிலையிலோ, ருகுஃவிலோ, சுஜுதிலோ என்னைக் கண்டால் நான் இருந்துக் கொண்டிருக்கும் அதே நிலையில் என்னுடன் தொழுகையில் சேர்ந்துக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஒரு அன்சாரி சஹாபியின் முலம், அப்துல் அஜீஸ் பின் ரஃபீஃ என்பவர் அறிவித்துள்ளார், சுனனு ஸயீதிபின் மன்சூர்)
மேற்காணும் இவ்வறிவிப்புகளின்படி ஒருவர் இமாமை எந்த நிலையில் கண்டாலும் அவருடன் அதே நிலையில் சேர்ந்துக் கொள்ளலாம். ஆனால் ருகூஃவில் சேர்ந்துக் கொண்டால் மட்டுமே அதை ஒரு ரகாஅத்தாக கணக்கிட முடியும். என்பதை காணுகிறோம்.
இமாம் ருகூஃவில் இருக்கும்போது அவருடன் சேரக் கூடியவர்கள் தொழுகையின் பர்ளாகிய முதல் தக்பீரை நின்ற நிலையில் கூறிவிட்டுத் தான் இமாமுடன் சேர வேண்டுமே தவிர, தக்பீரைக் கூறிக்கொண்டே ருகூஃவில் சேருவது கூடாது என்று என்று சிலர் கூறுகிறார்கள்.
மற்றும் சிலர் தக்பீர் தஹ்ரீமாகிய முதல் தக்பீரையும், ருகூஃவுக்கு தக்பீரையும் கூறித்தான் ருகூஃவில் சேர வேண்டும் என்கிறார்கள். இவர்களின் இக்கூற்றுக்குப் போதுமான ஆதாரங்கள் ஹதீஸில் இல்லை.
இமாமுடன் சேர்ந்து தொழுதுவிட்டு, தமக்கு விடுபட்டவற்றை எழுந்து தொழுதுக் கொண்டிருக்கும் ஒருவரை மற்றொருவர் பின்பற்றித் தொழுவதுக் கூடுமா?
ஜமாஅத்தோடு தொழ வந்த ஒருவருக்கு ஜமாஅத்து கிடைக்கவில்லை இந்நிலையில் அந்த ஜமாஅத்தோடு தொழுது விட்டு, தமக்கு விடுபட்ட ரகாஅத்துக்களை ஒருவர் எழுந்துத் தொழுது கொண்டிருக்கிறார். தாம் ஜமாஅத்தோடு சேர்ந்துத் தொழ வேண்டும் என்பதற்காக எழுந்து தொழுதுக் கொண்டிருக்கும் ஒருவரைப் பின்பற்றித் தொழுதால் நிச்சயமாக பின்பற்றித் தொழுதவரின் தொழுகை கூடிவிடும். அதற்கு அவர் இவ்வாறுத் தொழுது கொண்டிருக்கும் நபருடைய வலப்புறத்தில் நின்று கொள்வது முறையாகும். இமாமுடன் விடுபட்டவற்றை எழுந்து தொழுது கொண்டிருக்கும் அந்த மனிதர் தாம் இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நிய்யத்தை செய்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆயினும் அவ்வாறு நிய்யத்து செய்துக் கொள்வது நல்லது.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழ வைத்து முடித்தப் பிறகு, ஒருவர் அங்கு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி காலத்தாமதத்திற்கான காரணம் கேட்க, அதை அவர் கூறி விட்டு மொழுவதற்கு நின்று விட்டதா’ அப்போது இவருடன் வேர்ந்து தொழுது இவருக்கு உதவி செய்வோர் உங்களில் எவரும் இல்லையா? என்று கேட்டார்கள். உடனே ஒருவர் எழுந்து அவருடன் நின்று தொழுதார். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்)
இதில் ஒருவர் தொழுதுக் கொண்டிருக்கும் போது மற்றொருவர் அவரைப் பின்பற்றித் தொழுதுள்ளார். ஆனால் அவர் தமது தொழுகையின் ஆரம்பத்தில், தான் இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நீர் நிய்யத்து செய்துக் கொள்ளும் என்றுக் கூறவுமில்லை. ஆகவே ஒருவர் தானம் இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நிய்யத்தைச் செய்ய வேண்டும் என்பதற்கு ஹதீஸ்களின் வாயிலாக ஆதாரம் இல்லை என்பதை அறிகிறோம்.