நமது நிருபர் பாலதிய்யா தரும்
நாட்டு நடப்பு
திருச்சியில் சென்ற ஈதுல் அழ்ஹா(தியாகப்) பெருநாள் தொழுகை இரயில்வே ஜங்ஷன் அருகில் சரியாக காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ ஆர்வமுள்ள எல்லா முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் அங்கு கூடினர். அதில் இயக்கப் பெயரில் உழைப்பவர்களும், இயக்கப் பெயர்களை மறுப்பவர்களும் அடங்குவர். குர்ஆன், ஹதீஸ்களின்படி பத்திரிக்கை நடத்துபவரும், குர்ஆன் ஹதீஸை மக்களுக்கு போதிப்பதையே தனது தொழிலாகக் கொண்டவருமான, மப்ஊத் என்ற அத்தொழிலுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவருமான ஒரு மதனி மவ்லவி அப்பெருநாள் தொழுகை நடத்தி பயான் செய்தார்.
தியாகப் பெருநாளான அன்று அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப தனது அன்பு மகனை அறுக்க முன் வந்த இப்றாஹீம்(அலை) அவர்களின் சரித்திரத்தைச் சுருக்கமாகக் குறிப்பிட்டார். அது முக்கியமல்ல. இஸ்மாயில்(அலை) அவர்களை இப்றாஹிம்(அலை) அறுத்தார்கள், அறுத்தார்கள், அறுக்கவே முடியவில்லை”. இது அவர் கூறியக் கூற்று. இவர் இக்கருத்தை குர்ஆன், ஹதீஸ்களில் எங்கிருந்து எடுத்தாரோ? அல்லது முன்பழக்க தோஷத்தால் மறக்க முடியாமல் வெளி வந்ததோ? வாசகர்கள் குர்ஆன் வசனங்கள் 37:102-105 ஐ பார்வையிட்டு இவரது கூற்றை சரிகாணுங்கள்.
இவரது பயானில், இமாம் தனது விரல்களால் சமிக்ஞைக் காட்டிக் கொண்டு துஆ ஓத அனைவரும் ஆமின் சொல்ல வேண்டும் என ஒரு பலஹீனமான ஹதீஸின், ஆதாரத்தின் அடிப்படையில் அவரது ரசிகர்களை ஆமின் போட வைத்தார். இதுப் போல இவரது ஊகங்களையும் பலஹீனமான ஹதீஸ்களையும் மறுத்து குர்ஆன், ஹதீஸ்களை ஆதாரங்களாகக் கொண்ட கருத்துக்களை எடுத்து வைக்கும் ஒரு சாரரையே ஜாஹில்(மடையர்)கள் எனவும் வசைப்பாடினார்கள்.
நபித்தோழர்களின் வேறு நபித்தோழர்களால் ஆட்சேபனை செய்யாமல் இருந்தால் அதனையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ளலாமென்ற புதுக்கண்டுப்பிடிப்பையும் வெளியிட்டார். குர்ஆன், ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பிரசாரம் செய்யும் இவருக்கு எங்கிருந்து இப்படி பேச ஆதாரம் கிடைத்ததோ? நபித்தோழர்கள் விஷயத்தில் குர்ஆன், ஹதீஸைப் பார்க்க தேவையில்லையா? வாசகர்களே, இதே இதழில் ஹதீஸ்களில் இடைச்செருகலானவையும், பலஹீனமானவையும் என்ற ஆக்கத்தை பார்வையிடவும்.
தியாக(ஈதுல் அழ்ஹா) பெருநாள் தொழுகையை இவ்வளவு காலத் தாமதப்படுத்தி காலை 7.30 மணிக்கு நிறைவேற்றுவதுக் கூடாது. பஜ்ர் நேரம் முடிந்த 40 நிமிடங்களில் நிறைவேற்றி விட வேண்டும் எனக் கூறினார். வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் தாமதித்து காலை 7.30 மணிக்கு நடந்த தொழுகையை இமாமாக நின்று நடத்தி வைக்கவும், அதனை ஒட்டி சிறப்பு பயான் செய்யவும் அழைக்கப்பட்டிருந்த இந்த மதனி மவ்லவி ஒரு தக்பீராவது கூறியிருப்பாரா? என்பது சந்தேகமே! நேராக சென்று தொழுகையை ஆரம்பித்தார். ஈதுல் அழ்ஹா தொழுகையை காலையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கூறிய இந்த மவ்லவி, தான் பங்கேற்கும் இந்த தொழுகைக்கு 5 நிமிடங்களேனும் முன்வந்திருக்க கூடாதா? வாசகர்கள் அல்லாஹ்வின் அருள் வசனம் 61:2ஐ பார்வையிட்டு இம்மதனியின் சொல், செயலை கணித்துக் கொள்வார்களாக!
இவரிடம் சந்தேகங்களைக் கேட்ட சில நபர்களும் விளக்கம் தராமல், முல்லாக்களின் மரபையொட்டி இன்ன இன்ன புத்தகங்களை விலைக் கொடுத்து வாங்கிப் படிக்கும்படிக் கூறி தனது இயக்க புத்தகங்களை விலைக் கொடுத்து வாங்கிப் படிக்கும்படிக் கூறி தனது இயக்க நூல்களுக்கான விளம்பரத்தையும் செய்வனே செய்தார். நல்ல SALES MAN!
விழுப்புறத்தில் ஒரு பெரிய வால்போஸ்டர். ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஒட்டி இருந்தனர். அதில் ரஜினியின் போட்டோவிற்கு அருகில் பெரிய எழுத்துக்களில் மின்னிய பெயர் நம்மை நிற்க வைத்தது. படித்தோம். M.A ரஜினி இப்றாஹீம். இப்றாஹீமுக்கு ரஜினியின் மீதுள்ள பக்தி தான் என்ன! அழுவதா! சிரிப்பதா? விசாரித்தோம். முஹம்மது அலிக்குப் பிறந்து, முஹம்மது இப்றாஹீம் எனப் பெயரிட்டவராம் இவர். ரஜினியை ஆராதிப்பதில் தீவிரவாதியாம். ரஜினிக்காக தனது இன்னுயிரையும் தரத் தயங்க மாட்டாராம். எனவே தனது பெயரில் இருந்த ‘முஹம்மதை’ அகற்றி விட்டு ரஜினி மீதுள்ள தன் பக்தி துலங்க அப்பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டாராம்.
முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்துக்கள் அனைவரும் மில்லதே இப்றாஹீம் (குர்ஆன் வசனங்கள் 2:103,135, 16:120,123, 22:78) என அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான். நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த சிறப்புமிக்க ஸலவாத்திலும், இப்றாஹீம்(அலை) அவர்களை சிறப்பித்து உள்ளார்கள். இதனை நாம் தொழுகையிலேயே ஓதி வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் தன் அருமை மகனுக்கும் இப்றாஹீம் எனப் பெயரிட்டார்கள். இவ்வளவு சிறப்புமிக்கப் பெயரான இப்றாஹீமை சினிமா நடிகர் ரஜினியுடன் இணைத்துள்ளார். அவரது உண்மை பெயரிலிருந்து ஒரு நபியின் பெயரை, அதுவும் அவர் யாருடைய உம்மத்துக்களில் ஒருவரோ அந்நபியின் பெயரைக் களைந்து விட்டு ரஜினி என்ற சினிமா நடிகரின் பெயரை இணைத்துள்ளார்.
இவரது இச்செயலுக்கு காரணம் என்ன? அவரதுப் பெற்றோர் அவருக்கு ஒழுங்கான மார்க்க அறிவு தராமையல்லவா? நமது நபிகளின் மகத்துவத்தையும், அவரவர் பெயர்களுக்குரிய பொருளையும், சிறப்பினையும் பொதுமக்கள் மார்க்க விஷயத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் மவ்லவி வர்க்கமோ, அவரது பெற்றோரோ, அவரது மஹல்லாவாசிகளோ அவருக்கு அறிவிக்காமை தான் என்றால் மிகையாகுமா?
இந்நிலைத் தொடர வேண்டுமா? சிந்தியுங்கள் சீர்படுங்கள்.
**************************
நெருப்புக் கடிவாளம்!
“ஒருவரிடத்தில் அவர் அறிந்திருக்கும் ஒரு விஷயம் பற்றி கேட்கப்பட்டு அதை அவர் எடுத்துக் கூறாது, மறைத்து விடுவாராயின், அவருக்கு மறுமை நாளில் நெருப்பு கடிவாளம் போடப்படும்.” என்று நபி(ஸல்) அவார்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரழி) அபூதாவூத், திர்மீதி, அஹ்மத், ஹாக்கிம்